21

21

சிறுபான்மை அரசாங்கம் ஒன்றை அமைக்க எதிர்க்கட்சி தயார் !

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப சிறுபான்மை அரசாங்கம் ஒன்றை அமைக்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் தனது தனிப்பட்ட கருத்தை வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சியாகிய நாம் இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. ஜனாதிபதி பதவியும் பிரதமர் பதவியும் கிடைத்தால் சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க தயாராக உள்ளோம். அந்த சவாலை ஏற்றுக்கொள்ள முதுகெலும்பு இருக்க வேண்டும். பாராளுமன்றத்தில் இன்னும் நாட்டின் முன்னேற்றத்திற்காக எதுவும் நடக்கவில்லை. எதிர்க்கட்சியாகிய நாம் இந்த நேரத்தில் சவாலை எதிர்கொள்ள வேண்டும். எப்போது ஆட்சியை கைப்பற்றினாலும் வீழ்ச்சியடைந்த நாட்டையே பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.

“நமது நாடு திவாலாகிவிட்டதாக மறைமுகமாக கூறிவிட்டோம். இந்த நிலையிலும் முட்டாள்தனமான அரசாங்கத்தை அமைந்துள்ளனர். இம்முறை B அணியை விளையாட அனுப்பியுள்ளனர்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் ரூபா வரை உயரும் ஒரு கிலோ பருப்பின் விலை !

எதிர்வரும் மே மாதத்துக்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி புதிய சிந்தனைக்கு அவசியம்!லிற்றில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் த ஜெயபாலன் !

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி புதிய சிந்தனைக்கு அவசியமானது. தவிர்க்க முடியாதது என லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் கிளிநொச்சியில் லிற்றில் எய்ட் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையில் தெரிவித்தார்.

 

கடந்த பல பத்து ஆண்டுகளாக தேவையற்ற ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்து நூகர்வுக் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கியதன் விளைவே இந்தப் பொருளாதார நெருக்கடி எனத் தெரிவித்த த ஜெயபாலன் மாட்டுப் பாலை குடிக்காமல் அந்தப்பாலை குறைந்தவிலையில் நியூசிலாந்தில் உள்ள நெஸ்டல் கொம்பனிக்கு விற்று கூடிய விலைக்கு அங்கர் பால்பவுடரை வாங்கிக் குடிக்க ஆரம்பித்ததன் முடிவும் தான் இந்நிலைக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வு லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.

 

அவர் தனதுரையில் இச்சான்றிதழ்கள் கற்கையின் முற்றுப்புள்ளி அல்ல என்றும் சேர் ஐசாக் நீயூட்டன் குறிப்பிட்டது போல் நாம் கற்ற ஒரு துளிக்கல்விக்கான அத்தாட்சி மட்டுமே என்றும் கல்லாதது சமுத்திரத்தின் அளவானது என்பதைச் சுட்டிக்காட்டினார். பெறுபேறுகள், சான்றிதழ்கள், பட்டங்கள் அல்ல கல்வி எனக் குறிப்பிட்ட அவர், கல்வி என்பது அவற்றையும் கடந்தது எனத் தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளாக கிளிநொச்சியில் இயங்கி வரும் லிற்றில் எய்ட் அமைப்பின் 2022ம் ஆண்டின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் ஏப்ரல் 10இல் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. 200 பேர் மட்டுமே கொள்ளக் கூடிய மண்டபத்தில் 350 பேர்வரை கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். 250 மாணவர்கள் கணணி வன்பொருள் கற்கை, கணணி மென்பொருள் கற்கை, வடிவமைப்பு, தையல் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் டிப்ளோமா கற்கைகளைப் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

“ஆசிர்வாதம் பெறுவதற்கு எவரும் விகாரைகளுக்கு வந்துவிடாதீர்கள்.”- புதிய அமைச்சர்களுக்கு சோபித தேரர் எச்சரிக்கை !

புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது. எனவே, ஆசிர்வாதம் பெறுவதற்கு எவரும் விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் யோசனை முன்வைத்தார்கள். அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனவே, புதிய அமைச்சரவையை நாம் ஏற்கமாட்டோம். ஆசிர்வாதம் பெறுவதற்கு விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம். 20 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும். பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் சார்ஜண்ட்க்கு நேர்ந்த கதி !

காலி முகத்திடலில் போராட்ட களத்துக்கு சீருடையுடன்சென்று அதற்கு ஆதரவு தெரிவித்த பொலிஸ் சார்ஜண்ட் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குட்டிகல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவந்த பொலிஸ் சார்ஜன்ட் டப்ளியூ.எம்.அமரதாச (30158) காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட களத்திற்கு சென்றிருந்தார்.

இதுதொடர்பில்,

அவர் கடந்த 14 ஆம்திகதி பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, துறைமுக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். இதனையடுத்து, மறுநாள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் பின்னணியில் மூன்று அமைச்சர்கள் – அம்பலப்படுத்திய நளின் பண்டார !

கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக நடவடிக்கையில் 3 ஆயுதங்களின் ஊடாக 90 ரவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போராட்டத்திற்கு முந்தைய நாள் இடம்பெற்ற சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தலைமையிலான கூட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டாம் என்றே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அப்படியிருக்க போராட்டத்தின் போது எவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்துமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன என்பவரே உத்தரவிட்டுள்ளார்.

அவருக்கு அந்த உத்தரவை வழங்குமாறு கோரியது பொலிஸ்மா அதிபரோ அல்லது சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களோ அல்ல. ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவரே கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை நான் பொறுப்புடனேயே தெரிவிக்கின்றேன்.

கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களே இவ்வாறு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு குறித்த பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் பயணிக்கவுள்ள அரசாங்கம் !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டுசெல்லும் முன்மொழிவு இன்று (21) பிற்பகல் பாராளுமன்ற குழு அறை இலக்கம் 1 இல் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் அவர்கள் முன்மொழிந்தார்.

அந்த முன்மொழிவிற்கு அனைத்து உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி ஏகமனதாக ஆதரவளித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் யூ.கே.சுமித் அவர்கள் முன்மொழிவை உறுதிசெய்தார்.

எதிர்வரும் வாரங்களில் மக்களுக்கு தேவையான துரித நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.

ஒருசில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக இதன்போது கருத்து தெரிவித்த வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்கள் தெரிவித்தார். அதேபோன்று எரிவாயு (கேஸ்) பிரச்சினையையும் ஒருசில வாரங்களுக்குள் தீர்க்க முடியும் என கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரன அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேறி பெற்றுக்கொடுத்த ஆரதவிற்கு கட்சியின் சகல உறுப்பினர்களும் நன்றிகளை தெரிவித்தனர்.

புதிய அமைச்சர்கள் எதிர்கால நடவடிக்கைகளை வலுவாக முன்னெடுத்து செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதாக உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

அரசாங்கத்தை சீர்குலைக்கும் பொய்ப் பிரசாரங்களின் மூலம் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் அரசாங்கத்தை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ பிரதமரிடம் நம்பிக்கை வெளியிட்டனர்.

அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும் உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ சபாநாயகரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற சபாநாயகரின் செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன, பிரதமரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பிரியந்த ரத்னாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் பூர்த்தி – சஜித் பிரேமதாச வழங்கியுள்ள உறுதி !

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கொலை செய்யப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு, இன்றைய தினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடையுடன் நாடாளுமன்றத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமாக அனைவரையும் தண்டிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,

“3 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத் தாக்குதலில் நாம் எமது உறவுகளை இழந்தோம். இந்த பயங்கரவாத் தாக்குதலால் நாடு என்ற ரீதியில் நாம் பல பாதிப்புக்களை எதிர்கொண்டோம்.

இந்த நேரத்தில், கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் நாம் ஒன்றைக் கூறிக்கொள்கிறோம்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் பாரபட்சம் பாராது சட்டநடவடிக்கை எடுப்போம் என்றும் அவர்களுக்கு உச்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்வோம் என்றும் பேராயருக்கு நாம் எழுத்துமூலமாக இவ்வேளையில் அறியத்தருகிறேன்.

இன்று ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்கள், பேராயர் மற்றும் எதிர்க்கட்சியாக எமக்கு என அனைவருக்கும் சந்தேகம் இருந்துக்கொண்டேதான் உள்ளது.

இதுதொடர்பான உண்மைகள் இன்னமும் வெளிவரவில்லை. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் பொது மக்களுக்கு காண்பிக்கவில்லை. இதனை நாடாளுமன்ற இணையத்தில் வெளியிடவேண்டும் என நான் இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சூழ்ச்சியொன்று இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்திருந்தார். இதனை கண்டுபிடிக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் பிரதான கடமையாகும். உண்மைகள் வெளிவர வேண்டும். உண்மைகளை பேச வேண்டும்.

எனது தந்தையும் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றில்தான் கொல்லப்பட்டார். அன்று எனக்கு இருந்த மனநிலை, இன்றும் என்னுள் இருக்கிறது. இதனால், ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

எனவே, இவர்களை கருத்திற்கொண்டு தகவல்களை மறைத்துக்கொண்டிருக்காமல், வெளிப்படையாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதுதொடர்பாக புதிய விசாரணையை அரசாங்கம் நடத்த வேண்டும். இதில் கொழும்பு பேராயர் உள்ளிட்ட கத்தோலிக்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களை உள்வாங்க வேண்டும்.

இந்த விடயத்தில் நாம் யாரையும் பாதுகாக்கவே, காப்பாற்றவோ முற்படக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம். – ரஷ்யா அறிவிப்பு !

அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்த வரைவு அறிக்கையை உக்ரைனிடம் அளித்துள்ளதாகவும், அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக, ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:

அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முற்றிலும் தெளிவான மற்றும் விரிவான விளக்கங்களுடன் வரைவு அறிக்கையை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளோம். தற்போது முடிவு அவர்களின் கைகளில் உள்ளது.

அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு உக்ரைன் தான் காரணம். முன்னர் ஒப்புக் கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து உக்ரைன் விலகி வருகிறது. பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த உக்ரைன் விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.

இலங்கையை மீட்க அவசர உதவிகள் – கைகொடுக்க முன்வரும் சீனா !

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் நெருக்கடிகளிலிருந்து இலங்கை மக்கள் மீள்வதற்காக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா தீர்மானித்துள்ளது.

 

இலங்கைக்கான சீன தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை அறிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படுவதாகவும், வழங்கப்படும் உதவிகள் குறித்த தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த உதவிகளை சீன வெளிவிவகார அமைச்சும் சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் ஒன்றிணைந்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.