30

30

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள் !

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ள 17 நாடுகளும் இவை தான் !

ஒமிக்ரோன் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதுவரை நோய் பரவியுள்ள 17 நாடுகள் விவரம் வருமாறு:-

1. தென்ஆப்பிரிக்கா
2. ஹாங்காங்
3,. போட்ஸ்வானா
4. ஆஸ்திரேலியா
5. இத்தாலி
6. ஜெர்மனி
7. நெதர்லாந்து
8. இங்கிலாந்து
9. இஸ்ரேல்
10. பெல்ஜியம்
11. சுவிட்சர்லாந்து
12. கனடா
13. பிரான்சு
14. ஸ்பெயின்
15. போர்ச்சுக்கல்
16. டென்மார்க்

17. செக் குடியரசு

ஆடைத்தொழிற்சாலையின் மலசலகூடத்தில் இருந்து மீட்கப்பட்ட சிசு – 23 வயது யுவதி கைது !

புடலுஓயா நியங்கந்தர பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் மலசலகூடத்தில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு நேற்று (29) கிடைத்த தகவலின் பிரகாரம் ஆடைத்தொழிற்சாலையின் பின்புறம் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

“போர்க்காலங்களில் கூட நிம்மதியாக இருந்த மக்கள் ராஜபக்ஷக்களின் காலத்தில் படும்பாடு – எதிர்க்கட்சி கவலை !

“போர்க்காலத்தில் குண்டுகள் வெடிக்கும் என்று வெளியில் செல்வதற்கு அச்சமடைந்ததைப் போன்று, இப்போது வீட்டுக்குள் எப்போது எரிவாயு சிலிண்டர் வெடிக்குமோ என்று அச்சத்துடன் மக்கள் வாழ வேண்டியேற்பட்டுள்ளது.” என  எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு இந்த அரசால் தள்ளப்பட்டுள்ளது. போர் நிலவிய காலத்தில்கூட இந்தளவுக்கு வாழ முடியாத நிலைமைக்கு மக்கள் முகம்கொடுக்கவில்லை.

போர்க்காலத்தில் வீதிகளிலும், பஸ்கள் மற்றும் ரயில்களிலும் பயணிப்பதற்கு மக்களுக்கு எங்கே குண்டு வெடிக்குமோ என்று அச்சம் இருந்தது. அதேபோன்று இப்போது வீடுகளில் இருப்பதற்கும் அச்சமாக இருக்கின்றது. எப்போது எரிவாயு வெடிக்குமோ என்ற அச்சம் காணப்படுகின்றது. சமையல் எரிவாயு விலையைப் பாரியளவில் அதிகரித்து எரிவாயு குண்டையும் மக்கள் பக்கத்தில் அரச தரப்பினர் வீசியுள்ளனர்.

இதேவேளை, சகல பொருட்களின் விலைகள் தொடர்பாக கறுப்புச் சந்தை வியாபாரிகளுக்குத் தீர்மானம் எடுக்க அனுமதியளித்துவிட்டு தினசரி விலைகளைப் பாரியளவில் அதிகரிக்கின்றனர்.  இந்த அரசு வந்த நாள் முதல்  மக்களின் சமையல் அறைகளின் மீதே தாக்குதல் நடத்தியது. சம்பளத்தையும் வருமான வழிகளையும் தவிர மற்றைய அனைத்தினதும் விலைகளை அதிகரித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டில் 1,493 ரூபாவுக்குப் பெற்ற சமையல் எரிவாயு இப்போது 2 ஆயிரத்து 675 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிவாயு எந்த நேரத்தில் வெடிக்குமோ என்ற பயத்தில் இருக்க வேண்டியுள்ளது. போர்க் காலத்தில் வீடு திரும்பும் வரையில் வீதிகளில் ஏதாவது வெடிக்குமோ என்ற நிலைமை இருந்தது. இப்போதே வீட்டுக்குள் வெடித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒன்று எரிவாயு சிலிண்டனை வெளியில் வைக்க வேண்டும் இல்லாவிட்டால் வீட்டார் வெளியில் இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையின் பாரதூரத் தன்மையை சிறிதாக எடுக்க வேண்டாம் என்று கேட்கின்றோம்.

எரிவாயு சிலிண்டர்களின் பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்கின்றோம்” என்றார்.

வரலாற்றில் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் !

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது

மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட செங்கோலுடன் வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய மாநகர அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது

யாழில் 2013 இல் இடிக்கப்பட்ட மகப்பேற்று விடுதியை மீள அமைக்குமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை !

“2013 இல் இடிக்கப்பட்ட மகப்பேற்று விடுதி இன்னமும் கட்டப்படாது உரிய மகப்பேற்றுவிடுதியின்றி யாழ் போதானவைத்திய சாலை இயங்குகிறது  உடனடியாக இங்கு புதியமகப்பேற்று விடுதி அமைக்கப்படவேண்டும்.” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

இந்த நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான காலப்பகுதியில் தம்மை அர்ப்பணித்து சேவையாற்றும் வைத்தியதுறை சார்ந்தவர்களிற்கும் சுகாதார துறை சார்ந்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தலை சாய்த்து என் நன்றிகளையும் பாராட்டுகளையும் செலுத்த விரும்புகிறேன். குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டும் குறைந்த வசதிகளுடன் இயங்கும் வடக்கு கிழக்கு மாகாண சுகாதார்த்துறையினருக்கு எனது பெருமதிப்பை தெரிவிக்க விரும்புகிறேன் .

2013 இல் இடிக்கப்பட்ட மகப்பேற்று விடுதி இன்னமும் கட்டப்ப்டாது உரிய மகப்பேற்றுவிடுதியின்றி யாழ் போதானவைத்திய சாலை இயங்குகிறது . உடனடியாக இங்கு புதியமகப்பேற்று விடுதி அமைக்கப்படவேண்டும்.

மேலும்  வடக்கு சுகாதார துறை  மிகுந்த ஆளணிப்பற்றாக்குறையுடன் இயங்குகிறது . இவை உடனடியாக நிரப்பட்ட வேண்டும்.குடிசன வளர்ச்சிக்கேற்றப் புதிய ஆளணி உருவாக்கப்படவேண்டும். எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைக்கு உட்பட்ட வைத்த்திய சாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவேண்டும் .வடக்கில் பல வைத்தியசாலைகள் வைத்தியர்களோ தாதியர்களோ இல்லாமல் இயங்குகிறது. இது உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.” போன்ற விடயங்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

“பொருட்களின் விலை அதிகரிப்பை நிறுத்த முடியாது.” – நிதி அமைச்சர் பசில்

இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களினுடைய விலைகள் வேகமாக உயர்ந்துகொண்டிருக்கின்றன. மத்திய தரத்திலான குடும்பங்கள் ஓரளவுக்கு இதை சமாளிக்கக்கூடியனவாக உள்ள போதும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களின் நிலை மிகப்பரிதாபமாக உள்ளது. பொருட்களின் விலை மட்டும் உயர்கிறதே தவிர மக்களுடைய சம்பளம் அதே அளவில் இருப்பதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அண்மையில் மலையக மக்கள் இதை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். எல்லா பொருட்களினுடைய விலையும் அதிகரித்துள்ள நிலையில் பல தரப்பினரும் இது தொடர்பில் எதிர்ப்பபை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் , பொருட்களின் விலை அதிகரிப்பை நிறுத்த முடியாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

ஆனால், பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாதவாறும், மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்காமல் பார்த்துக் கொள்வதாகவும் அவர் அமைச்சரவையில் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கூடிய அமைச்சரவையில் நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி – 204 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை !

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி, தனது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நிறைவின் போது 1 விக்கெட்டு இழப்பிற்கு 113 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனையடுத்து, இன்று தனது இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி  அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய பெத்தும் நிச்சங்க 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வீரச்சாமி பெருமாள் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

அவ்வணி சார்பாக கிரேக் பிரத்வைட் 22 ஓட்டங்களுடனும் என்க்ருமா பொன்னர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று மழை காரணமாக தாமதமாக ஆரம்பமாகிய போது இலங்கை அணி தொடர்ந்தும் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியது.

மதிய இடைவேளையில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனை அடுத்து தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் மேற்கிந்திய தீவுகள் அணி 135 ஓட்டங்கள் பின்னிலையில் 9 விக்கெட்கள் கைவசம் இருக்க 3 ஆம் நாள் ஆட்டத்தை நாளை தொடரவுள்ளது.

இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகவுள்ள கஞ்சா !

கஞ்சா ஏற்றுமதிக்குத் தேவையான சட்டத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைத்து அங்கீகாரம் பெற உள்ளதாகச் சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி இன்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஏற்றுமதிக்கு மட்டுமே அனுமதி பெறப்படும் என்றும் அவர் தெரி வித்துள்ளார்.

“மேற்குலகின் கடன் பொறியிலிருந்து இலங்கையை சீனாவே பாதுகாத்தது.” – சீன தூதரகம்

உகண்டாவின் விமானநிலையத்தை சீனா தன்வசப்படுத்தி கொள்வதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவையாகும் எனத் தெரிவித்துள்ள சீனத் தூதரகம், ‘கடன்பொறி’ என்பது முற்றுமுழுதாக மேற்குலக காலனித்துவத்தினால் கட்டியெழுப்பப்பட்டதோர் கருத்தியலாகும் என்றும் சுட்டிக்காட்டியது.

உகண்டா அரசாங்கம் சீனாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தமுடியாத நிலையிலிருப்பதன் காரணமாக அந்நாட்டிற்குச் சொந்தமான ஒரேயொரு சர்வதேச விமானநிலையம் தற்போது சீனாவின் வசமாகியிருப்பதாக அண்மையில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இது குறித்து உகண்டா சிவில் விமானசேவை அதிகாரசபையின் ஊடகப்பேச்சாளர் வியன்னே எம்.லுக்யா அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக விளக்கமளித்திருந்தார்.

‘சீனாவிடம் பெற்ற கடனுக்குப் பதிலாக எமது ‘என்ரெபே’ சர்வதேச விமானநிலையத்தை வழங்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

நாட்டின் தேசிய சொத்தை உகண்டா அரசாங்கம் வேறு தரப்பினருக்கு வழங்காது. இத்தகைய சம்பவம் இடம்பெறாது என்பதை நாம் ஏற்கனவே கூறியிருப்பதுடன் தற்போது மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம்.

ஆகவே விமானநிலையத்தை சீனாவிடம் வழங்குவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை’ என்று அவர் அந்த விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது அப்பதிவை மேற்கோள்காட்டி இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் கடந்த 2017 ஆம் ஆண்டில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவதன் ஊடாக அதற்குத் தேவையான டொலரைத் திரட்டுவதற்குத் தீர்மானித்தபோது, மேற்குலகின் ‘கடன்பொறியிலிருந்து’ இலங்கையை சீனா பாதுகாத்ததாக அந் நாட்டுத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.