20

20

“பிரபாகரன் சாகவேண்டிய நிலைக்கு அவனே தனக்குதானே குழி தோண்டிவிட்டான்.” – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் !

என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை. நான் பிரபாகரனையே பழிவாங்கவில்லை.  மாறாக அவரது மரணத்தில் பரிதாபம் ஏற்பட்டது என அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அழிவுகள், இழப்புக்கள், இடம்பெயர்வுகள் எமக்கு வந்திருக்காது. மேலும் பல மடங்கு முன்னுற்றகரமான வாழ்க்கையில் நாங்கள் இருந்திருப்போம். கெடுகுடி சொற்கேளாது என்பது போல அது அப்படியே போய்விட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலும்கூட சந்திரகுமார் எம்மோடு சேர்ந்து கேட்டிருந்தால் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவருடன் சேர்ந்து கேட்டால் இங்கு வாக்கு விழாது என யாரோ கூறியிருந்த நிலையில் அவர் அதற்கு எடுபட்டு போய்விட்டார். அது அவருடைய விதி. அந்த விதியை மதியால் வெல்ல முடியும் என்று நான் நம்புகின்றேன். ஆனால் அவருக்கு அது முடியாமல் போய்விட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் தொழிலோடு சம்மந்தப்பட்டது மாத்திரமல்லாது, சமுர்த்தி உள்ளடங்கிய சகல வேலைகளையும் மேற்பார்வை செய்யவும், அதனை கண்காணிக்கவும் வழிநடத்தவும் விரும்புகின்றேன். அது எனக்குரிய சட்ட கடமைகளாகவும் இருக்கலாம். எனக்குரிய அரசியல் கடமைகளாகவும் இருக்கலாம்.

உங்களுடைய வாழ்வாதாரமும், வாழ்க்கையும் முன்னேறியது போல, தொடர்ச்சியாக மக்கள் இந்த சமுர்த்தி உதவி திட்டங்களில் தங்கியிருக்காமல், யாரையும் எதிர்பார்க்காமல் தங்களுடைய கால்களில் தங்கியிருக்க வேண்டும். பிரதமரின் பிறந்தநாள், ஜனாதிபதியின் பதவியேற்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் இடம்பெற்ற மத நிகழ்வுகளை மக்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

துரதிஸ்டவசமாக எங்களுடைய தமிழ் அரசியல் எங்களுடைய பிரதேசங்கள் எல்லாவற்றையும் சூனியமாக்கப்பட்டுள்ளது. எனக்கும் அரசுக்கும் உள்ள புரிந்துணர்வுக்கூடாகதான் இவ்வாறான வாய்ப்புக்களை உங்களிற்கு பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருந்தது. அந்த வகையில் இவ்வாறான மக்கள் கடமைகளை முன்னெடுப்பதற்கு, நீங்கள் எனக்கு பக்க பலமாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்க வேண்டும்.

என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை. நான் பிரபாகரனையே பழிவாங்கவில்லை. என்னை எத்தனையோ தடவை கொலை செய்ய முற்பட்டவன். என்னுடன் இருந்தவர்களை கொன்றவன். என்னுடன் இருந்தவர்களை காயப்படுத்தியதுடன், துரத்தியவன், கடத்தியவன். அவன் இறந்த முறை சம்மந்தமாக எனக்கு பரிதாபம்தான் ஏற்பட்டது. இவ்வாறு அவர் சாகவேண்டிய நிலைக்கு அவனே தனக்குதானே குழிதோண்டிவிட்டான் என பரிதாபம் ஏற்பட்டது.

நான் உங்களிடம் எதிர்பார்ப்பது சட்ட கடமைகள், மக்கள் கடமைகளை மாத்திரமே. நீங்கள் எல்லோரும் பெரும்பாலும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள். இந்த பகுதி மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். குறிப்பாக சமுர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக.மாத்திரமல்ல, ஏனைய அமைச்சர்களுடைய வேலைத்திட்டங்களுடன் சேர்த்து நான் அதை மேற்கொள்ள விரும்புகின்றேன்.

இன்றைய கலந்துரையாடலிற்கு சில உத்தியோகத்தர்கள் வருகை தரவில்லை. அவர்கள் வருகை தராமைக்கான காரணத்தை விளக்கமாக பெற்று தர வேண்டும். எனக்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை. இருந்தாலும் வீம்பு பண்ணினால் நான் அவர்களை இடம் மாற்ற வேண்டி வரும். இது எனது சட்டபூர்வமான மக்கள் கடமை.

பிரபாகரனையே பழிவாங்காத எனக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. கோபத்தில் சும்மா கதைப்பதேயன்றி மற்றபடி எனக்கு அந்த நோக்கம் இல்லை. நீங்கள் எந்தளவுக்கு எந்தளவு முன்வந்து பங்களிக்கின்றீர்களோ, அந்தளவு தூரம் இந்த சமூகத்தை முன்னோக்கி கொண்டு வரலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

“புலிகளிடம் இருந்து முஸ்லீம்களை காப்பாற்றிய சமத்துவமான தலைவர் மகிந்தராஜபக்ச ஆவார்.” – நீதி அமைச்சர் அலிசப்ரி !

இந்த நாட்டு முஸ்லிம்களை அன்று புலிகளின் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியவர் தான் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 76 ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு நல்லாசி வேண்டி கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட துஆப்பிரார்த்தனை நடைபெற்றது.

புத்த சாசன அமைச்சின் வழிகாட்டலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திணைக்களத்தில் தலைவர் இப்ராஹிம் அன்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த 14 வருடங்களாக நான் அவருடன் சேர்ந்து வேலைசெய்து வருகின்றேன். எனது செயல்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றனர். அவர் சகல இன மக்களையும் சமமாக பார்க்கக்கூடிய ஒருவர். மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் ஆட்சியை ஏற்றபோது இலங்கையின் மூன்றில் இரண்டு பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

குறிப்பாக வடக்கு மாகாண முஸ்லிம்களை விடுதலைபுலிகள் பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு குறுகிய கால அறிவித்தல் மூலம் வெளியேற்றினார்கள். இவ்வாறு வெளியேற்றியவர்களை, பயங்கரவாதத்தை ஒழித்து மீண்டும் தங்களது சொந்த பிரதேசங்களுக்கு செல்லக்கூடிய நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் மூலம் அவர் சிறந்த தலைமைத்துவத்தை வழிநடத்தக்கூடிய தலைவராகக் காணப்படுகின்றார்.

சிலர் கூறினார்கள் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது அவர்கள் கேட்பதை கொடுத்து பிரச்சினையை தீர்க்குமாறு. இப்படிப்பட்ட நிலையிலேயே பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி கொடுத்தவர். முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமைகளால் எல்லா முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் சிறந்த முடிவுகளை எடுத்து தீர்த்து வைத்துள்ளார்.

ஓட்டமாவடியில் இடம் ஒதுக்குவதில்கூட அவரின் ஒத்துழைப்பு கிடைத்தது. உதிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களை ஏனைய சமூகத்தினர் சந்தேகத்துடன் பார்த்து வருகிறார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கான நிலைமையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.´ என்று நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இவ் விசேட துப் பிரார்த்தனையை பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் கலாநிதி ஹசன் மௌலானா நிகழ்த்தினார்.

காணாமலாக்கப்பட்டோருக்கு மரண சான்றிதழ் கொடுக்க ஓ.எம்.பி (office On Missing Persons) முயற்சி !

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விருப்பம் இன்றி அவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்வதற்காக ஓ எம் பி அலுவலக செயற்பாடுகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(20) காலை 11.45 மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தினார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இன்று 1718 ஆவது நாளாக நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நேரத்திலே நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் சர்வதேசத்துக்கும் அவசரமும் அவசியமானதுமான ஒரு தகவலை தெரிவிக்கவே இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தோம். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அதாவது ஓ எம் பி அலுவலகத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளாத அலுவலகம் எங்களை பதிவு செய்ததாக கூறி அதாவது காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் தகவல் அடிப்படையில் தங்களுக்கு மிகுதி தகவல்களையும் வழங்குமாறு மக்களுக்கு கடிதங்கள் அனுப்பிவருகின்றனர்.

இது தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்திலே கடிதங்கள் வந்து கொண்டிருக்கிறது.நாங்கள் இந்த ஓ எம் பி அலுவலகத்திலே எந்த ஒரு தகவலையும் பதிவு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு இது ஒரு பொய்யான தகவலாக வைத்துக்கொண்டு மக்களிடம் இருந்து தகவலை ஏற்று எமக்கான மரணச்சான்றிதழ் இழப்பீடுகளை வழங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் செய்வதற்கு முனைகின்றனர்.

இதில் மக்கள் மிகவும் அக்கறையாக இருக்கவேண்டும். அதாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களாகிய நீங்கள்.நாங்கள் இந்த முறைப்பாடுகளை செய்யவில்லை என்பது உங்களுக்கு தெளிவாக தெரிகின்ற காரணத்தினால் அவர்கள் எங்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்குவதற்காக எமது பதிவுகளை அவர்கள் ஏற்றுக்கொண்டதாக அவர்கள் நிக்கிறார்கள்.

நாங்கள் இதில் கவனமாக இருப்பதோடு ஓ எம் பி அலுவலகத்திடம் நாங்கள் பலதடவைகள் கூறினோம் இந்த அலுவலகம் எங்களுக்கு தேவையில்லை நீங்கள் எந்த பதிவுகளையும் செய்ய வேண்டாம் என்று,  இருப்பினும் அவர்கள் காணாமல் போனவருடைய புகைப்படம், காணாமல் போனவருடைய அடையாள அட்டை,  காணாமல் போனவருடைய பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சகல தகவல்களையும் கோருகின்றனர். நாங்கள் மடையர்கள் அல்ல.

இந்த தகவல்கள் அனைத்தையும் தருவதற்கு. நாங்கள் இப்போதும் ஆணித்தரமாக கூறுகிறோம், எமக்கு இந்த ஓ எம் பி அலுவலகம் தேவையில்லை.  ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருக்கிறார் காணாமல் போனோருக்கு தான் மரணச்சான்றிதழ் வழங்க தயாராகவுள்ளதாக,  சர்வதேசத்திலே கூறியுள்ள இந்த நிலையில் அதை சந்தர்ப்பமாக வைத்து ஓ எம் பி அலுவலகம் பாதிக்கப்பட்ட எம்மிடமிருந்து தகவலை பெற்று எமக்கு மரணச்சான்றிதழ் தருவதற்கு முனைகின்றார்கள் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சோமாலியாவில் உணவு , நீரின்றி தவிக்கும் 20 இலட்சம் மக்கள்.” – ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

சோமாலியாவில் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதிய உணவு மற்றும் குடிநீரின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சோமாலியாவில் தொடர்ந்து நான்காவது பருவமாக, இந்த ஆண்டும் போதிய அளவுக்கு மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறவில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அங்குள்ள நீர் நிலைகளில் அதிவேகமாக நீர் குறைந்து வறட்சி அதிகரித்து வருகிறது.

சுமார் ஒரு இலட்சம் பேர் உணவு, குடிநீர், தங்கள் கால்நடைகளுக்கான உணவு ஆகியவை இல்லாமல் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.

அடுத்த ஆண்டு, சுமார் 80 லட்சம் பேர் உணவுப் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. சோமாலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் கடுமையான வறட்சி, வெள்ளம், பூச்சிகள் பயிரை அழிப்பது போன்ற பிரச்சனைகளையும் சோமாலிய மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

விடுதலைப்புலிகளை அழித்ததால் உங்களிற்கு கிடைத்தது என்ன..? – நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் கேள்வி !

விடுதலைப்புலிகளை அழித்ததால் உங்களிற்கு கிடைத்தது என்ன என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

தமிழர்களை அழித்தீர்கள். இன்று முஸ்லீம்கள் இலக்காகியுள்ளனர். அடுத்ததாக உங்கள் சொந்த இனமே பலியாகும்.  கடந்த காலத்தை சிந்திக்காது போனால் இனியும் இது ஐக்கிய இலங்கையாக இருக்காது. ஒற்றையாட்சி சிந்தனை தொடர்ந்தால் நாடு பூஜ்ஜியமாக மாறும்.

இலங்கை ஒற்றையாட்சி சிங்கள பௌத்த நாடு என்ற சிந்தனையில் ஏனைய இனத்தவர்களை எதிரியாக கருதும் மனநிலையில் ஆட்சியாளர்கள் இனியும் பயணிப்பாளர்கள் என்றால் ஒருபோதும் இலங்கை நாடாக மீள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

“எனது வீட்டிலும் சமையல் எரிவாயு இல்லை.” – நாடாளுமன்றில் சொல்லி கவலைப்பட்ட எம்.பி !

சமையல் எரிவாயு மற்றும் பெற்றோல் நெருக்கடி தொடர்பில் நேற்று (19) பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்ட போது தனது வீட்டிலும் சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கருத்து தெரிவித்துள்ளார்.

தனது வீட்டிலுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரும் தீர்ந்து விட்டதாகவும், இதுவரையில் சமையல் எரிவாயு கிடைக்கவில்லை என்றும் அவர் சபையில் கூறினார்.

“தமிழ் மக்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.” – நாடாளுமன்றில் பிள்ளையான் !

“மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி வருகின்ற மகாவலி திட்டத்தின் செயற்பாடுகள் முன்மொழியப்படும் போது, அதில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.” என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன்  தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றில் உரை நிகழ்த்திய போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் உரை நிகழ்த்திய அவர்,

இந்த நாடாளுமன்றத்தில் வடக்கு, கிழக்கை மையப்படுத்தும் எம்.பி.க்கள் எல்லோரும் கடும் போக்கான தொனியில் தான் தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் நான் நோட்டிஸ் ஒட்டி, முதலமைச்சராகி இன்று எம்.பி.யாகவுள்ளேன். அரசாங்கத்துடன்தான் இணந்து செயற்படுகின்றேன். எனவே அரசாங்கம் எங்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும்.

குறிப்பாக இந்தக் கடும் போக்கானவர்களுக்கு தீனி போடுகிற அளவிலே அரச நிர்வாகம் செயற்படக்கூடாது. அரசாங்கத்துடன் இணைந்துள்ள எங்களின் தனித்துவமான அரசியலை வளர்த்தெடுக்கக்கூடிய சூழலை அரசாங்கம் உருவாக்கித்தர வேண்டும்.

அத்தோடு, மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி வருகின்ற மகாவலி திட்டத்தின் செயற்பாடுகள் முன்மொழியப்படும் போது, அதில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்

இலங்கையில் டெல்டா துணைபிறழ்வு – தமிழர் பகுதிகளுக்கு ரெட் அலேர்ட் !

இலங்கைக்கே சொந்தமான கொவிட் டெல்டா துணை பிறழ்வொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே இந்த புதிய துணை பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். B. 1.617.2.28 என்ற புறழ்வு இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது அதன் துணை புறழ்வாக B. 1.617.2.104 அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு புறழ்வுகளும் ஒரே சந்தர்ப்பத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், B. 1.617.2.28 என்ற வைரஸ் புறழ்வானது, மேல் மாகாணத்திலேயே அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், B. 1.617.2.104 என்ற வைரஸ் புறழ்வானது வடக்கு, வடமத்திய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலேயே அதிகளவில் பரவியுள்ளது.

இலங்கையில் B. 1.617.2.104 வைரஸ் புறழ்வினால் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், B. 1.617.2.28 வைரஸ் புறழ்வினால் 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார். இவை தமது ஆய்வு கூடத்திற்கு கிடைக்கின்ற மாதிரிகளின் ஊடாக மாத்திரமே நடத்தப்பட்ட பரிசோதனை பெறுபேறுகள் என அவர் கூறுகின்றார்.

டெல்டா பிறழ்வை விடவும், மாறுப்பட்ட தாக்கத்தை இந்த வைரஸ் துணை பிறழ்வுகள் செலுத்தும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார். துணை புறழ்வுகள் பரவுகின்றமையினால், தடுப்பூசியின் செயற்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது எனவும், தடுப்பூசிகள் சரியான பெறுபேறுகளை வழங்கும் எனவும் அவர் கூறுகின்றார்.

இலங்கையர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துகின்றமையினால், இந்த புறழ்வுகள் குறித்து அச்சம் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

நியூசிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா !

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் சேர்த்தது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 21 பந்தில் 34 ஓட்டங்கள் சேர்த்தார். டேரில் மிட்செல் 28 பந்தில் 31 ஓட்டங்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் அறிமுக வீரர் ஹர்சல் பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 154 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பதிலாடத் தொடங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.2 ஓவரில் 117 ஓட்டங்கள் குவித்தது. கேல்.எல். ராகல் 46 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 65 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 36 பந்தில் 1 பவுண்டரி, 5 சிக்சருடன் 55 ஓட்டங்கள் அடித்து வெளியேறினார். அப்போது இந்தியா 15.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் அய்யருடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அவர் வந்த வேகத்தில் 2 பந்தில் 1 ரன் எடுத்து சவுத்தி பந்தில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் அய்யர் உடன் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். 18-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும்  ரிஷாப் பண்ட் இமாலய சிக்ஸ்ருக்கு தூக்க, இந்தியா 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றி 2-0 என முன்னிலையில் உள்ளது. ரிஷாப் பண்ட் 6 பந்தில் 12 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 11 பந்தில் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை பெறுகிறார் கமலாஹாரிஸ் !

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவருக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக   கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும்.
இந்நிலையில், ஜனாதிபதிக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை அதிபர் கமலா ஹாரிசிடம் அதிபர் ஜோ பைடன் ஒப்படைக்க  உள்ளார் என்ற தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.