13

13

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு !

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (13) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மீனவர்கள் மீன்ப்பிடி நடவடிக்கைக்காக கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை அவதானித்து மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை மன்னார் பாலப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில் அவரை தேடும் பணி இடம் பெற்ற போதும் குறித்த பெண் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் கரை ஒதுங்கிய சடலம் அப் பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது.

இருப்பினும் குறித்த இளம் பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

அரசில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ள பங்காளிக் கட்சி !

லங்கா சமசமாஜக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக திஸ்ஸ விதாரண   தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்கள் குறித்து கலந்துரையாட சந்தர்ப்பத்தை கோரிய போதிலும் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் அதற்கு எந்த பதிலையும் வழங்கவில்லை.

இப்படியான நிலைமையில், அரசாங்கத்தின் கீழ் கூட்டணியில் இருக்க கூடாது என்பது தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், லங்கா சமசமாஜக் கட்சியின் அடுத்த அரசியல் சபைக் கூட்டத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பான யோசனையை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் இராணுவப் புரட்சியை விமர்சித்த அமெரிக்க ஊடகவியலாளருக்கு நேர்ந்த கதி !

அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவருக்கு மியன்மார் இராணுவ நீதிமன்றம் 11 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Myanmar court sentences American journalist to 11 years in prison

37 வயதான அமெரிக்கப் பத்திரிகையாளர் டன்னி ஃபின்ஸ்டர், மியன்மாரில் இராணுவப் புரட்சியை விமர்சித்த இணையத்தளத்தில் பணியாற்றினார்.

குடியேற்ற சட்டங்களை மீறியதாகவும், தவறான நடத்தை மற்றும் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“யாரையும் சும்மா விடக்கூடாது.” – ஆசிரியரின் பாலியல் கொடுமையால் பள்ளி மாணவி தற்கொலை !

தமிழ்நாடு கோவையில் பாலியல் தொல்லை கொடுத்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி,  ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் 2  படித்து வந்தார்.

நேற்று மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்ட மாணவி, பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் போலீசாருக்கு மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

தற்கொலைக்கு முன்பு மாணவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “யாரையும் சும்மா விடக்கூடாது.. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார், யாரையும் விடக் கூடாது” என்று கைப்பட எழுதியுள்ளார்..

போலீசார் விசாரணையில் மாணவிக்கு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்து உள்ளது. இதை தொடர்ந்து போலீசார்   ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவியின் வீட்டின் முன்பாக மாணவர்கள், பல்வேறு அமைப்புகள், சக மாணவர்களுடைய பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக போராட்டக்காரர்கள், ”மாணவி புகார் கொடுத்தும் பா,லியல் அத்துமீறலுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், மாணவியை மிரட்டி அக்குரூரத்தை மூடிமறைப்பு செய்து மாணவி தற்கொலை செய்ய முக்கிய காரணமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்படும் வரை மாணவி உடலை பெற்றுக்கொள்ளாமல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்” என்று தெரிவித்தனர். 12 மணி வரை கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் உக்கடம் சாலையில் மறியல் போராட்டத்தை தொடங்க இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! என பதிவு செய்துள்ளார்.

சந்திப்புக்கு தயாராகும் உலகின் இரு பொருளாதார வல்லரசுகளின் தலைவர்கள் !

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம், தற்போது தைவானுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பியது என பல்வேறு பிரச்சினைகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும், சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான யாங் ஜீச்சியும் சுவிட்ர்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் கடந்த மாதம் சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேசுவது என முடிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வரும் 15ம் திகதி காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேச உள்ளனர் என வெள்ளை மாளிகையின் செயலாளர் தெரிவித்துள்ளார். அப்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதியுயர் விருது பெறுவுள்ள இன்னுமொரு இலங்கை வீரர் !

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்தின் ஜென்னெட் பிரிட்டின், தென்னாப்பிரிக்காவின் ஷோன் பொலோக் ஆகியோர் ஐ.சி.சி.யின் ஹோல் ஒஃப் ஃபேம்க்கு தெரிவாகியுள்ளனர்.

இதற்கு முன்னர் இந்த பட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிக்கும் மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை மஹேல ஜயவர்தன பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பங்காற்றிய சிறந்த வீரர்களுக்கு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி கௌரவித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

After Kumar Sangakkara and Aravinda de Silva, Mahela Jayawardene questioned in Sri Lanka World Cup 2011 probe - Sports News

அரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த ஆளுந்தரப்பு – கூட்டமைப்பின் நிபை்பாடு என்ன..?

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எந்த அரசாங்கத்தோடும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அதற்காக கதவுகளை மூடியதில்லை என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விடுத்த அழைப்புக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கூட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் 13 சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியதாக சிறிதரன் கூறினார்.

“பஷில் ராஜபக்ஷ முன்வைத்தது சோமாலியாவின் வரவு செலவுத்திட்டம்.” – சஜித் பிரோதாச தாக்கு !

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவுசெலவு திட்டத்தை குறுகியகால நீண்டகால திட்டங்கள் எதுவும் இல்லாத சோமாலிய பாணியிலான வரவுசெலவுதிட்டம் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வர்ணித்துள்ளார்.

நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள வரவுசெலவு திட்டம் தொடர்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர்,

இந்த வரவுசெலவுதிட்டம் மக்களை ஏமாற்றியுள்ளது. இந்த ஆவணம் மக்களை வேண்டுமென்றே மறந்துள்ளதுடன் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் விசுவாசிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவுசெலவு திட்டத்தை குறுகியகால நீண்டகால திட்டங்கள் எதுவும் இல்லாத சோமாலிய பாணியிலான வரவுசெலவுதிட்டம். மக்கள் முன்னேற்றகரமான வரவு செலவுதிட்டத்தை எதிர்பார்த்தார்கள் ஆனால் அவர்களிற்கு கிடைத்தது ஒரு வெற்றுப்பொய்.

பொதுமக்கள் ஜனரஞ்சகமான வரவுசெலவுதிட்டத்தை எதிர்பார்த்தார்கள் ஆனால் அவர்களிற்கு கிடைத்தது முற்போக்கு தன்மையற்ற வெறுமை. இந்த வரவுசெலவு திட்டம் எந்த கட்டமைப்பும் அற்றது.

வரவுசெலவுதிட்ட பற்றாக்குறையை குறைப்பதற்கான நடவடிக்கை எதனையும் இவர்கள் அறிவிக்கவில்லை. வாழ்க்கை செலவு அதிகரிப்பை பணவீக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்த அறிவிப்பு எதுவுமில்லை.  பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் எதுவுமில்லை விவசாயிகளின் நிலையை உயர்த்துவதற்கான பொறிமுறை எதனையும் அறிவிக்கவில்லை வருமானத்தை உழைப்பதற்கான திட்டம் எதுவுமில்லை இது சோமாலிய பாணியிலான வரவு செலவுதிட்டம் இதுவாகும்.

இந்த வரவுசெலவுதிட்டம் மக்களை ஏமாற்றியுள்ளது,இந்த ஆவணம் மக்களை வேண்டுமென்றே மறந்துள்ளதுடன் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் விசுவாசிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

300 மில்லியனை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் – காணாமல் போனோரை கண்டுபிடித்து தாருங்கள். !

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஸ்ட ஈடு வழங்குவதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடயத்தில் நீதி நிலை நாட்டப்பட வேண்டுமே தவிர நிதி தேவையில்லை.” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

போர் முடிந்து கடந்த 12 வருடகாலமாக எமது உறவுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே போராடி வருகின்றோம். எமக்கு நிதி தேவையில்லை என்பதை இந்த நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் எப்போதோ நாம் தெட்டத்தெளிவாக கூறிவிட்டோம்.

எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு.  அதற்காகவே வெயில் மழை பாராது வீதிகளில் இருந்து போராடி வருகின்றோம்.  வரவு செலவுத்திட்டத்தில் காணாமல் போன குடும்பங்களுக்காக 300 மில்லியன் அரசால் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எமக்காக இந்த நிதி ஒதுக்கப்படவில்லை.

இது காணாமல் போன எமது உறவுகளை சாட்டாக வைத்துக்கொண்டு தமது சிங்கள மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்த நிதியினை ஜனாதிபதி ஒதுக்கியிருக்கின்றார் என்பதே எமது நிலைப்பாடு.

எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். வரவுசெலவு திட்டத்தில் 300 மில்லியன் ஒதுக்கப்பட்டமையை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். என்றார்

“பசில் ராஜபக்ஷவின் வரவு செலவுத்திட்டம் மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.” – சிங்கள ராவய குற்றச்சாட்டு !

“நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.” என சிங்க ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டிற்கு பாரியளவில் வருமானத்தைத் தரும் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அக்கட்சியின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டு மக்கள் தமது பிரச்சனைக்கு தீர்வாக புதிய ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் அமையும் என எதிர்பார்த்திருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே. நாட்டின் ஜீவனோபாயமாகக் காணப்படும் விவசாயத்தை வலுப்பெறச் செய்யும் வேலைத்திட்டங்கள் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் காணப்படவில்லை.

அதேவேளை உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ள நிலையில் ஊழியர்களுக்கான ஊதிய அதிகரிப்பு இடம்பெறாமை பாரிய பிரச்சினையாகும்.

மக்கள் இன்று வாழ முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரவுசெலவுத் திட்டம் மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளதாக நாம் பார்க்கிறோம். கொரோனா காரணமாக உலக நாடுகள் பொருளாதார ரீதியாக பாரிய வீழ்ச்சியினைக் கண்டுள்ள போதிலும் இலங்கை அதனை சமாளித்து வருகின்றது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.