16

16

11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை !

இராணுவ ஆட்சி நடந்து வரும் மியன்மாரில் இணையதள பத்திரிகை ஒன்றில் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அமெரிக்க பத்திரிகையாளரான டேனி பென்ஸ்டா். 37 வயதான இவர் கடந்த மே மாதம் இராணுவ ஆட்சியாளா்களால் கைது செய்யப்பட்டார். அவா் மீது தவறான தகவல்களை பரப்பி வன்முறையைத் தூண்டியது, சட்டவிரோத அமைப்புகளுடன் தொடா்பு கொண்டது, விசா மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இது தொடா்பான விசாரணையின் முடிவில், டேனி பென்ஸ்டருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த 12-ந்திகதி மியன்மார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் அங்கு பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டு ஊடகத்தினர் மீது வன்முறை கட்டவிழத்துவிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மியன்மாரில் இருக்கும் முன்னாள் அமெரிக்க தூதர் பில் ரிச்சர்ட்சன், பத்திரிகையாளர் டேனி பென்ஸ்டரை விடுவிப்பது குறித்து இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இதில் டேனி பென்ஸ்டரை விடுதலை செய்ய மியன்மார் அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு டேனி பென்ஸ்டர் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் அமெரிக்கா செல்வதற்கும் மியான்மர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இணைய வழியில் சந்தித்த உலகின் பொருளாதார வல்லரசுகளின் தலைவர்கள் – பழைய நண்பருக்கு வணக்கம் என ஆரம்பித்த சீனா !

உலகின் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகம், கொரோனா வைரஸ், ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகள் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடையே இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது.

தென்சீன கடல் பகுதியில் சீனா அத்துமீறி செயல்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இடையே சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டனில் அமெரிக்கா- சீனா உறவுகள் குறித்த தேசிய கமிட்டி கூட்டம் நடந்தது.

இதில் அமெரிக்காவுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய சீனா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் – சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி காட்சி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சீன ஜனாதிபதி கூறும்போது, “பழைய நண்பருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் உறவுகள் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.

ஜோபைடன் கூறும்போது, “நாடுகள் இடையேயான போட்டிகள் எளிமையாக, நேரடியானதாக இருக்க வேண்டும். அது மோதலாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வது சீன-அமெரிக்காவின் தலைவர்கள் என்ற முறையில் நமது பொறுப்பு என்று தோன்றுகிறது” என்றார்.

ஜின்பிங் பேசும்போது, “உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து சீனா-அமெரிக்காவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் உறவுகள் நேர்மறையான திசையில் முன்னோக்கி செல்கின்றன” என்றார்.

அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு உள்ள நிலையில் இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக்குங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை !

இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த அதே நேரம் 2000ஆண்டுகளுக்கு மேலான இலக்கண பாரம்பரியம் உடைய மொழிகளுள் ஒன்றாக தமிழ்மொழி தனிச்சிறப்பு பெறுகின்றது. எனினும் ஆட்சி நடவடிக்கைகள் தொடங்கி பல இடங்களில் தமிழ்மொழிக்கான அந்தஸ்து கிடைப்பதில்லை. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதியில் நடைபெற்ற 29 ஆவது தெற்கு மண்டல பேரவையின் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஸ்டாலினின் உரையை பொன்முடி வாசித்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியிருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகவும் பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ் இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக அறிவிப்பதுடன், திருக்குறளையும் தேசிய நூலாக பிரகடனப்படுத்த வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.