19

19

பாகம் 16: சுழிபுரம் படுகொலையும் அதன் பின்னணியும்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 14 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 16:

தேசம்: 83 க்குப் பிறகான காலகட்டம், ஈழவிடுதலை அரசியலைப் பொறுத்தவரைக்கும் கடுகதி வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த அரசியல் தானே. அரசியல் நகர்வுகள் அல்லது அந்த அரசியல் சூழல் வேகமாக மாறிக் கொண்டிருந்தது. 84 இந்திராகாந்தி மரணம் அடைந்தார். அதற்குப் பிறகு இலங்கை ராணுவம் திட்டமிட்ட படுகொலைகளை மேற்கொண்டது. 15 பேர் கொல்லப்படுகிறார்கள். ஒதிய மலையில் கொல்லப்படுகிறார்கள். அதேபோல தமிழீழ விடுதலை இயக்கங்கள் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கினம். இன உணர்வு என்பது மிகக் கொதிநிலையில் இருந்த காலங்கள். இந்த காலப்பகுதியில் சகோதரப் படுகொலைகளும் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக, மிகவும் உக்கிரமாக பேசப்பட்ட படுகொலை, சுழிபுரம் 6 பேரின் படுகொலை. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது அனுதாபிகள் ஆறு பேர் கொல்லப்பட்டது. எந்தவிதமான விடயங்கள் இந்த படுகொலைகளை நோக்கி நகர்த்தி இருக்குது. அந்த நேரம் நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். யார் அந்த நேரம் புளொட்டுக்குப் பொறுப்பாக இருந்தது?

அசோக்: அந்த காலகட்டத்தில் தோழர் கேசவன் தளப் பொறுப்பாளராக இருந்தார். மாவட்ட பொறுப்பாளராக தோழர் நேசன் இருந்தவர். இராணுவப் பொறுப்பாளராக சின்ன மென்டிஸ் இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பின் தளத்திலிருந்து படைத்துறைச் செயலர் கண்ணன் யோதீஸ்வரனும் வந்து நின்றவர். 84 டிசம்பர் காலகட்டம் என்று நினைக்கிறேன், இந்த காலத்தில் சுழிபுரத்தில் உமாமகேஸ்வரனும் வந்து தங்கி இருந்தார்.

தேசம்: அதால தான் படைத்துறைச் செயலர் உட்பட முக்கியமான ஆட்கள் எல்லாம் வந்து நின்றவை…

அசோக்: அதற்கு முதலே படைத்துறைச் செயலர் கண்ணன் வந்துட்டார். வந்து தளத்தில் சந்திப்புகள் எல்லாம் செய்து கொண்டிருந்தவர். அதற்குப் பிறகுதான் உமாமகேஸ்வரன் வாறார். வந்து சுழிபுரத்தில் தான் தங்கி இருக்கிறார். அது ஒரு ரகசியப் பயணம் தான். யாருக்குமே சொல்லப்படாமல் வந்த ரகசியப் பயணம். கிளிநொச்சி வங்கி கொள்ளை நகையின் ஒரு பகுதியை உமாமகேஸ்வரன் தன் பாதுகாப்பில் யாழ்ப்பாணத்தில் புதைத்து வைத்திருந்தார். அதை எடுக்கவே இந்த ரகசிய பயணம். வந்த உமாமகேஸ்வரனுக்கான பாதுகாப்பை புளொட்டின் ராணுவப் பிரிவு சங்கிலி – கந்தசாமி தலைமையில் சுழிபுரத்தைச் சேர்ந்த ஆட்கள்தான் கொடுக்குறாங்க.

தேசம்: சுழிபுரம் அந்த நேரம் புளொட்டின் ஒரு கோட்டையாகவும் இருந்தது?

அசோக்: பூரண பாதுகாப்பாகவும் அந்த இடம்தான் இருந்தது. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 6 பையன்கள் சுவரொட்டி ஒட்ட போயிருக்கிறார்கள். அந்தப் பையன்களை இவங்கள் உளவு பார்க்க வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்து படுகொலை செய்து புதைசிட்டாங்க. யாருக்குமே தெரியாது. இந்தப் படுகொலை நடந்து இரண்டு மூன்று நாட்களில், தங்களின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இந்த மாணவர்களை காணவில்லை என்று சொல்லி புலிகள் தேட தொடங்கிட்டாங்க. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்புக்கு பொறுப்பாக இருந்தது திலீபன்.

தேசம்: திலீபன் அப்ப உங்கட பேனா நண்பர்…

அசோக்: திலீபன் பேனா நண்பர் இல்லை. புலிகளில் இருந்த என் பேனா நண்பியின் மூலம் ஏற்பட்ட உறவு. இது பற்றி முன்னர் கதைத்திருக்கிறன். எங்களிட்ட தனிப்பட்ட உறவு இருந்தது, கதைப்பம் பேசுவோம். தனிப்பட்ட பிரச்சனை எல்லாம் கதைக்கக் கூடிய உறவு ஒன்று இருந்தது. திலீபனின் மூத்த அண்ணன் ஒருவர் புளொட்டில் பின் தளத்தில் இருந்தவர். பிற்காலத்தில் திலீபன் பற்றி விமர்சனங்கள் வரும்போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, இவனா என்று சொல்லி. அந்தக் காலகட்டத்தில் திலீபனிடம் வித்தியாசமான குணாதிசயங்கள் இருந்தது. திலீபன் அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாக இருந்தவர்.

சுழிபுரம் பக்கம் போன இந்த மாணவர்களை காணவில்லை என்றவுடன், இவங்களுக்கு சுழிபுரம் புளொட் ஆட்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது. அவங்க கைது செய்திருப்பாங்க என்ற சந்தேகம் இவங்களுக்கு வந்து விட்டது. அந்த நேரம் உமாமகேஸ்வரன் அங்க வந்து நிற்கிறது இவங்களுக்கு தெரியாது.

தேசம்: திலீபன் ஆட்களுக்கு…

அசோக்: ஒம். உண்மையிலேயே அவர்கள் உளவு பார்க்க போக வில்லை. சுழிபுரத்தை அண்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சேர்ந்த பையன்கள் அவர்கள். விக்டோரியா கொலேஜ்சில் படித்துக் கொண்டிருந்தவர்கள். சுவரொட்டி ஒட்டுவதற்காகத்தான் போய் இருக்கிறார்கள். அவங்களுக்கு உமாமகேஸ்வரன் வந்து நிற்கும் விடயம் எதுவுமே தெரியாது.

பிறகு யாழ்ப்பாண யுனிவர்சிட்டியில் மாணவர்கள் மத்தியில் இப்பிரச்சனை வருகின்றது. யுனிவர்சிட்டியைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளில் ஒன்று இருந்தது என்ன என்றால், பிரச்சனை என்றால் கதைக்கலாம். உரையாடல் தளம் ஒன்று இருந்தது எல்லோர் மத்தியிலும். அப்போ திலீபன் ஆட்கள் வந்து கதைக்கிறார்கள், சுழிபுரம் பகுதிகளுக்கு சுவரொட்டி ஒட்ட போன மாணவர்களைக் காணவில்லை என்று சொல்லி. முகுந்தன் வந்து நிற்பதை இந்த நேரத்தில அவர்கள் அறிந்து விட்டனர். அப்ப அவங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. புளொட்தான் கைது செய்திருக்கும் என்று.

சுழிபுரம் புளொட் ஏரியா. அதற்குள் இவர்கள் சென்று விசாரிக்க முடியாது. என்னைத்தான் சென்று விசாரிக்க திலீபனும், கிட்டுவும் கூப்பிடுகிறார்கள். நான், சுழிபுரம் போய் விசாரித்து விட்டு வாரன் என்று இவர்களிடம் சொன்னேன். தாங்களும் வருவதாக சொன்னாங்க. நானும், திலீபனும், கிட்டுவும் அங்கு போகின்றோம். புளொட் ராணுவம் வளைத்து நிற்கிறது. சித்தன்கேணி கோயிலடியில் சந்தியில சென்ரி நின்ற ஆட்களை கேட்டதும், அப்படி யாரும் வரவில்லை என்று சொல்லிப் போட்டாங்க. ரெண்டு பக்கமும் பெரிய வாய்த்தர்க்கம். புளொட் காரங்க மிக மோசமாக நடந்து கொண்டாங்க. இவங்களை கூட்டி வந்ததற்கு என்னையும் பேசினாங்க. நான் இடையில நின்று சமாதானப்படுத்தி திலீபனையும், கிட்டுவையும் கூட்டிட்டு வந்துட்டேன். வரும்போது அவங்க சொன்னாங்க, அவர்களுடைய கதைகள் பேச்சிலிருந்து புளொட் தான் ஏதோ செய்திருக்கு என்று தாங்க நம்புவதாக. அவங்கள் ஒரு முடிவுக்கு வந்துட்டார்கள் புளொட் தான் ஏதோ செய்து விட்டது என்று…

தேசம்: திலீபனும், கிட்டுவும் ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க

அசோக்: ஓம். பிறகு தோழர் கேசவனிடம் நான் போய் நடந்த முழு கதையும் சொன்னேன். அந்த நேரம் கேசவன் சொன்னார், புளொட் கைது செய்திருக்காது, எதுக்கும் நான் சுழிபுரம் போய் விசாரித்து கொண்டு வாரேன் என்று சொல்லி, சுழிபுரம் போனவர். போயிட்டு வந்து சொன்னார், புளொட் கைது செய்யல என்றுதான் சொல்லுறாங்கள் என்று. அந்த நேரம் படைத்துறைச் செயலர் கண்ணனும் சுழிபுரம் போய் விசாரிக்கின்றார். அவரும் வந்து, கேசவன் தோழர் சொன்ன மாதிரியே சொல்கிறார். அப்ப கொந்தளிப்பான காலகட்டம். மக்களுக்கு, எங்க தோழர்களுக்கு இச் சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்த துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிட வேண்டும் என்று சொல்லி கண்ணன், நேசன் எல்லாருடைய முடிவோடையும் துண்டு பிரசுரம் ஒன்று அடிக்கப்படுது, ஒன்றுபட்டு செயற்படுவோம் என்ற தலைப்பில.

தோழர் கேசவன்தான் அந்த துண்டுப் பிரசுரத்தை எழுதுகின்றார். அதன்ற உள்ளடக்கம் இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. காணாமல் போன மாணவர்கள் தொடர்பான விடயத்தில், புளொட்டிக்கு எந்த சம்பந்தமும், தொடர்புகளும் இல்லை என்றும், இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் எழுதப்பட்டதாக நினைக்கிறன்.

தேசம்: அந்த துண்டுப் பிரசுரம் வரேக்க அவர்களுடைய உடல் எடுக்கப்பட்டுட்டுதா?

அசோக்: இல்லை இல்லை. அந்த நேரம் எதுவுமே தெரியாது. என்ன நடந்தது என்றே தெரியாது. அந்த காலகட்டத்தில் தான் இந்த துண்டுப் பிரசுரம் வருகிறது. நாங்களும் உண்மையாவே நம்புறோம் புளொட் செய்ய வில்லை என்று.

பிறகு உடல் தோண்டி எடுக்கப்படுது. உமாமகேஸ்வரன் பின் தளம் போனதற்குப் பிறகு, அந்த இடங்களெல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் போகுது. பிறகு நாய்கள் கடற்கரையில் மோப்பம் பிடித்து தோண்டிய இடத்தில் உடல்கள் காணப்படுது. ஈபிஆர்எல்எஃப் தோழர்களும் பார்த்திருக்கிறாங்க அவங்கதான் படங்கள் எடுத்தார்கள் என்று சொன்னார்கள்.

தேசம்: நான் நினைக்கிறேன் அந்த நேரம் ஈபிஆர்எல்எஃப் இல் இருந்த கொன்ஸ்ரன்ரைன் இப்ப லண்டனில் இருக்கிறார். அவர் அந்த காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் ஈழமுரசில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அந்தப் படத்தை அவர்தான் எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அசோக்: எனக்கு நல்ல ஞாபகம், இந்த சம்பவம் நடந்ததற்கு பிறகு, நான் நீர்வேலி என்ற கிராமத்தில் இருந்தன். திலீபன் என்னை தேடி வந்தவர். அதுக்கு முதல் திலீபன் கிட்ட நான் சொல்லிட்டேன் மாணவர்கள் காணாமல் போனதுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று. ஆனால் அவங்களுக்கு சந்தேகம் இருந்தது. அப்ப திலீபன் என்னை கண்டதும் அழத் தொடங்கிட்டார். படத்தை காட்டி சொன்னார், இப்ப என்ன சொல்லுறீங்க? நீங்கள்தான் செய்திருக்கிறீர்கள். சுழிபுரத்தில் தான் தோண்டி எடுக்கப்பட்டு இருக்கு என்று சொல்லி. எதுவுமே கதைக்கல நான். என்ன கதைக்க முடியும்? கதைக்க வார்த்தையும் வரல. ரெண்டு பேருக்குமான உறவு அதோட முடிந்து போயிட்டது. இறந்து போன மாணவர்களை புலிகளின் மாணவர் அமைப்பினுள் கொண்டு வந்தது திலீபன்தான். இவங்களோடு நெருக்கமாகவும் இருந்துள்ளார்.

தேசம்: இந்த திலீபன் தான் பின்னாட்களில் உண்ணாவிரதம் இருந்தவர்?

அசோக்: உண்ணாவிரத திலீபன். பிற்காலத்தில் திலீபனுடைய வாழ்க்கை முறையும் வேறயா போயிட்டுது. டெலோ அழிப்பில் முன்னுக்கு நின்றவர் என்டு சொல்லி பயங்கர குற்றச்சாட்டுகள்.

தேசம்: அப்போ எப்ப உங்களுக்கு தெரியும் இதில் புளொட் ஈடுபட்டது என்று சொல்லி?

அசோக்: சுழிபுரத்துக்குள்ள தானே இது நடந்திருக்கு. எனக்கு டவுட் வந்துட்டுது இவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லி. அன்றைக்கு கிட்டு, திலீபனுடன் நடந்த உரையாடல் ஆரோக்கியமாக இருக்கல. இவங்கள் நிதானமாக கதைத்தவங்கள். புளொட் ஆட்கள் அதுல நடந்துகொண்ட முறை சரியான பிழை. அப்பவே கொஞ்சம் சந்தேகம் இருந்தது.

தேசம்: யார் யார் அதில் சார்பாக உரையாடலில் ஈடுபட்டது.

அசோக்: அதுல சங்கிலி உட்பட பெரிய குழு. அவங்களோட பெயர் ஞாபகம் இல்லை இப்போது. எப்படி நீ இவங்கள கூட்டிட்டு வருவாய், எங்க ஏரியாக்குள்ள புலிகளை எப்படி கூட்டிட்டு வருவாய் என்று சொல்லி என் மீது படு கோபம். மிக மோசமாக நடந்துகொண்டனர். அப்ப அவங்களை பொறுத்தவரை புளொட்டின்ட ஏரியா, இவங்களை எப்படி கூட்டிட்டு வரலாம் என்றுதான். மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்கள்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் மீரான் மாஸ்டர் எல்லாம் அங்கு முன்னணியில் இருந்த உறுப்பினர்கள் என்று நினைக்கிறேன். இது சம்பந்தமாக நீங்கள் யாருடனாவது கதைத்தீர்களா?

அசோக்: பிற்காலத்தில் மீரான் மாஸ்டரை நான் இங்க பாரிசில் சந்தித்தேன். அப்ப அவர் நோர்வேயில் இருந்தவர். எனக்கு மீரான் மாஸ்டரும் அதில் சம்பந்தப்பட்டவர் என்று படுகோபம் இருந்தது. அவரை சந்திக்கவே நான் விரும்பவில்லை. பிறகு பிரண்ட்ஷிப்பா சந்திக்கலாம் என்றுதான் சந்தித்தேன்.சந்தித்த இடத்தில் சுழிபுரம் தொடர்பான கதை வந்தது. மிக மறுத்தார் அவர். சம்பவம் நடந்த இடத்தில் அவர் இருந்திருக்கிறார். சங்கிலி கந்தசாமி ஆட்களோடு சண்டை பிடித்திருக்கிறார்.

தேசம்: சம்பவம் நடந்த நேரத்திலா?

அசோக்: ஓம். அவருக்கு அவர்கள் அப்பாவி பையன்கள் என்று தெரியும்.

தேசம்: அவருடைய மாணவர்களா?

அசோக்: நான் நினைக்கிறேன் அவருக்கு தெரிந்த மாணவர்களாக இருக்கலாம். இவர் பயங்கரமாக சண்டை பிடித்து இருக்கிறார், செய்யக்கூடாது என்று சொல்லி. அப்ப சங்கிலி மற்ற ஆட்கள் எல்லாம் இவரை சுட வெளிக்கிட்டு இருக்கிறார்கள். இந்த இடத்தை விட்டுப் போ, இல்லாவிட்டால் உன்னையும் சுட வேண்டி வரும் என்று சொல்லி இருக்காங்க. இவரை வெளியேற்றிப் போட்டுத்தான் இந்த சம்பவங்கள் நடந்திருக்கு. மீரான் மாஸ்டர் இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும்போது நான் நம்பவில்லை. ஆனால், பிற்காலத்தில் வேற ஆட்கள் இந்த சம்பவம் பற்றி கதைக்கும் போது, இப்படி மீரான் மாஸ்டர் சண்டை பிடித்தவர் என்று சொல்லியும், அதில் மீரான் மாஸ்டருக்கு தொடர்பில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் மீரான் மாஸ்டர் அதில் தொடர்பு என்று சொல்லித்தான் வதந்தி. மீரான் மாஸ்டருக்கு பிடிக்காதவர்கள் அந்த குற்றச்சாட்டை பரப்பிவிட்டுட்டாங்கள்.

தேசம்: இந்தப் படுகொலை விஷயத்தில் உமா மகேஸ்வரன் அந்த பகுதியில் இருந்ததால்தான் இது நடந்தது என்று சொல்லப்படுது. அவர்கள் விசாரிக்கப்பட்டு சுடப்பட்டு, மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு, அவர்களது உடல்களும் வெட்டப்பட்டு இருந்திருக்கு. அது இலங்கை ராணுவம் செய்கின்ற கொடுமையிலும் பார்க்க மிக மோசமான கொடுமை.

அசோக்: பயங்கரமாக சித்திரவதை செய்து தான் கொலை செய்திருக்கிறார்கள். இந்த சித்திரவதை மனோபாவம் ஒரு விடுதலை இயக்கத்தில் இருக்கிறது என்பதே பெரிய அதிர்ச்சியான விஷயம்தான். இதுதான் காலப்போக்கில் பயிற்சி முகாம்களில் சித்திரவதை செய்வதற்கு காரணமாக இருந்திருக்கு. உண்மையிலேயே இந்த நபர்களை பார்த்தீர்களென்றால், இவங்கள் எப்படி புளொட்டுக்குள்ள வந்தார்கள் என்றே தெரியாது. சங்கிலியை கொண்டு வந்தது சந்ததியார். வவுனியாவில் கடையில வேலை செய்து கொண்டிருந்தவர். இவங்கள் சண்டியர்கள் ஆக இருந்தார்களேயொழிய…

தேசம்: கொண்டு வாறத்துல பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு அரசியல் விழிப்புணர்வும் கொடுக்கல.

அசோக்: என்னதான் அவங்கள் பிழையான திசையிலிருந்து வந்தாலும் கூட, அவங்களை அரசியல் கல்வி ஊட்டி, நல்வழிப்படுத்தி இருக்கலாம். புளொட்டினுள் கொலைகளையும், சித்திரவதைகளையும் செய்த நபர்கள் பலர் தோழர் சந்ததியாரினால் இயக்கத்தினுள் கொண்டு வரப்பட்டவங்க. இதைப்பற்றி முன்னமே சொல்லி உள்ளேன். இவர்கள் தனிநபர் விசுவாசிகள் ஆக்கப்பட்டு, பிற்காலத்தில் முகுந்தனால் பயன்படுத்தப்பட்டார்கள். சங்கிலி கந்தசாமியோட பழகின ஆட்களை காலப்போக்கில் சந்திக்கும்போது தனிப்பட்ட வகையில் மிக நல்லவர் என்று தானே சொல்கிறார்கள். ஆனால் அவர் மிகக்கொடூரமான கொலை கார மனுஷனாக இருந்திருக்கார் . உளவியல் சார்ந்த நோயாகவே போயிட்டுது இந்த கொலைகள்.

வரலாற்றில் பார்த்தோமானால் இப்படிப்பட்டவர்கள் தனிப்பட்ட வகையில் தங்களைச் சார்ந்தவர்களுக்கு நல்லவர்களாக பண்பானவர்களாகத்தான் இருந்திருக்காங்க. இது ஒருஉளவியல் சார்ந்த பிரச்சனை. புளொட்டில் பலர் கொடுர சாடிஸ்டுகளா இருந்திருக்காங்க. உண்மையில இதை அமைப்பு சார்ந்த பிரச்சனையாகத்தான் பார்க்க வேணும். ஆயுத இயக்கங்கள் அரசியல் சித்தாந்த மார்ச்சிய வழிகாட்டல் இல்லாமல், அரசியல் கல்வி இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறையில்லாமல், இயக்கம் நடாத்த வெளிக்கிட்டால் இப்படி பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

தேசம்: இந்தப் படுகொலை தொடர்பாக மத்திய குழுவில் பேசப்பட்டிருக்கா?

அசோக்: விவாதம் எல்லாம் நடந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்று சொல்லி. ஏனென்றால் சங்கிலி கந்தசாமி மத்திய குழுவில் இருக்கிறார் தானே.

தேசம்: வேற யார் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஆட்கள்.

அசோக்: வெங்கட் என்று நினைக்கிறேன். மத்திய குழுவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கல.

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் – 18 பேர் வரை சுட்டுக்கொலை செய்த இராணுவம் !

ஆப்பிரிக்க நாடான சூடானில் 1989-ம் ஆண்டு முதல் ஒமர்-அல்-பசீர் அதிபராக இருந்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இராணுவ புரட்சி நடத்தப்பட்டு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.அதன்பிறகு இராணுவமே அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்களை கொண்ட புதிய ஆட்சியை அமைத்தது. அதன் பிரதமராக அப்துல்லா காம்டோக் இருந்து வந்தார்.
கடந்த மாதம் 25-ந்திகதி அந்த அரசையும் இராணுவம் கலைத்தது. நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கு சூடான் மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். வீதியில் இறங்கி போராடினார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டது. ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முக்கிய தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கார்ட்டூம், கசாலா, டோங்கோலா, வாட்மடானி, ஜெனினா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கலவரம் வெடித்துள்ளது. அவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து இராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.
இதனால் கலவரத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 18 பேர் உயிரிழந்தனர். ராணுவத் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து பல இடங்களிலும் கலவரம் நடந்து வருகிறது.

லண்டனின் தென்கிழக்கில் தீப்பரவல் – இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட நால்வர் பலி !

தென்கிழக்கு லண்டனின், பெக்ஸ்லிஹீத் ஹாமில்டன் சாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மரணமாணவர்கள் இலங்கையர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் மரணித்தவர்கள் அராலி வடக்கை சேர்ந்தவர்கள் என்றும் திருகோணமலை மற்றும் லண்டனில் வாழ்வதாகவும் சில முகநூல் பதிவுகள் தெரிவிக்கின்றன.

நேற்று வியாழக்கிழமை (18.11.21) லண்டன் நேரம் 20:30 மணியளவில் பெக்ஸ்லிஹீத்தின் ஹாமில்டன் சாலையில் உள்ள  வீட்டின் முதல் மாடியில் இருந்து இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் மீட்கப்பட்டனர், ஆனால் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே மரணித்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் காலில் காயம் அடைந்த ஒருவர் உட்பட இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று காவற்தறையினர் தெரிவித்தனர்.

One of the windows has blackened glass in it while the other has been completely blown out during the horror blaze last night

அக்கம்பக்கத்தினர், குழந்தைகள் அலறுவதைக் கேட்டதாகவும், தீப்பிழம்பில் மூழ்கிய தனி மாடி வீட்டிற்கு வெளியே ஒரு கலக்கமடைந்த நிலையில் ஒருவரைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது உண்மையிலேயே ஒரு பயங்கரமான சம்பவம், இது வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாகவும், இந்த கடினமான நேரத்தில் தங்கள் எண்ணங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் உள்ளன என LFB கமிஷனர் அண்டி ரோ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தத் தீவிபத்தில் மரணமானவர்கள் அராலி வடக்கை பிறப்பிடமாகவும், திருகொணமலை மற்றும் லண்டன வதிவிடமாகக் கொண்டவர்கள் என சமூகவலைத்தளப்பதிவுகள் தெரிவித்துள்ளன. எனினும் தீயில் மரணித்தவர்கள் குறித்து லண்டன் காவற்துறையினர் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவில்லை.

எரிந்து கொண்டிருக்கும் உலகின் நுரையீரல் !

பிரேசில் நாட்டில் உள்ள அமேசன் மழைக்காடுகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக பரப்பளவில் அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டை விட அழிந்த அமேசான் மழைக்காடுகளில் விகிதம் 22 சதவீதம் ஆகும். 2006க்கு பிறகு அதிகபட்சமாக, 2020-21ம் ஆண்டில் 13,235 சதுர கிமீ மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பருவநிலை உச்சிமாநாட்டின் போது 2030 ஆம் ஆண்டிற்குள் காடு அழிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதியளித்த பல நாடுகளில் பிரேசிலும் ஒன்று. இந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்குவதையே, இந்த காடு அழிப்பு புள்ளிவிவரம் காட்டுகிறது.
அமேசன் காடுகளில் சுமார் மூன்று மில்லியன் வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் ஒரு மில்லியன் பழங்குடியின மக்கள் உள்ளனர். புவி வெப்பமடைதலின் வேகத்தை குறைப்பதில் அமேசான் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், பிரேசிலின் அதிபராக போல்சனரோ பதவியேற்ற பிறகே இவ்வளவு அழிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் மந்திரி ஜோகிம் லீட் கூறுகையில், இந்த தரவு நமக்கு முன் உள்ள சவாலை உணர்த்துவதாகவும், இந்த குற்றங்கள் தொடர்பாக நாம் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். அதேசமயம், கடந்த சில மாதங்களின் நிலைமையை இந்த தரவு சரியாக பிரதிபலிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
போல்சனரோ ஆட்சியின் கீழ் அமேசான் காடுகளை அழிப்பது அதிகரித்துள்ளது. மழைக்காடுகளில் விவசாயம் மற்றும் சுரங்க நடவடிக்கைகளை போல்சனரோ ஊக்குவிக்கிறார் எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சுமத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் ஒரு வருட போராட்டத்தின் முன்பு அடிபணிந்தது இந்திய அரசு – மீளப்பெறப்பட்ட வேளாண்சட்டங்கள் !

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை மீளப் பெறுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

குறித்த சட்டங்களை மீளப்பெறுமாறு வலியுறுத்தி டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் விவசாயிகள் சுமார் ஓராண்டு காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின்போது சிலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று(19) விசேட உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் விளங்கப்படுத்த முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் மீளப்பெற முடிவு செய்துள்ளோம்.

இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் மீளப் பெறுவதற்கான நடைமுறையை ஆரம்பிப்போம். எனவே, விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

600 ஆண்டுகளின் பின்னர் தோன்றும் நீண்டநேர சந்திர கிரகணம் – இலங்கையர்களுக்கு சோகமான தகவல் !

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது.

இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32 இற்கு ஆரம்பமாகி, 3 மணித்தியாலங்களும், 28 நிமிடங்களும் நீடிக்கும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த சந்திர கிரணத்தின் முழுமையான காலம் ஆறு மணித்தியாலங்களும், ஒரு நிமிடமுமாகும்.

இந்த சந்திர கிரகணம் இலங்கையில் தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பொலினிசியா, அவுஸ்ரேலியா மற்றும் வடகிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் இது தென்படவுள்ளது.

புத்தாக்க அரங்க இயக்கம் 2021 சிறந்த நாடக அமைப்பிற்கான விருதையும் ரூபாய் ஒரு லட்சம் பரிசையும் வென்றது!

சிறந்த தமிழ் நாடக அமைப்பிற்கான 2021 சிவஜோதி ஞாபகார்த்த விருதை புத்தாக்க அரங்க இயக்கம் வென்றெடுத்தது. இவ்விருதுடன் ரூபாய் ஒரு இலட்சம்நிதியும் அவ்வமைப்பின் ஸ்தாபகர்களான எஸ் ரி குமரன் எஸ் ரி அருள்குமரன் சகோதரர்களிடம் கையளிக்கப்பட்டது. இன்று நவம்பர் 18 வயித்தீஸ்வரன் சிவஜோதியின் 50வது பிறந்ததினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கலும் அவருடைய ‘என் எண்ண ஓட்டத்தில் …’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலும் வைத்தே இவ்விருது அறிவிக்கப்பட்டது. இவ்விருது அறிவிப்பை எழுத்தாளர் கருணாகரன் அறிவிக்க நாடகக் கலைஞரும் அருட்தந்தையுமான சி யோசுவா விருதை வழங்கினார்.

ஒரு ஆளுமையை அவனது மறைவுக்குப் பின் நினைவு கூருவதும் அவனின் செயற்பாடுகளைக் கொண்டாடுவதும் தான் அவனுக்கு அளிக்கக்கூடிய உயர்ந்தபட்ச கௌரவம் என்று வ சிவஜோதியின்யின் பள்ளித் தோழனும் லிற்றில் எய்ட் அமைப்பின் ஸ்தாபகருமான த ஜெயபாலன் காணொளியூடாக நிகழ்வில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் சிவஜோதி ஒரு பன்முக ஆளுமையாக இருந்தாலும் நாடகத்துறையில் அதீத நாட்டத்தைக் காட்டியமையினால் சிறந்த நாடக அமைப்பிற்கு அல்லது நாகக் கலைஞருக்கு ஆண்டுதோறும் விருது வழங்குவது என்ற தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு சைவப் பாரம்பரியத்தில் இருந்து வந்த வ சிவஜோதி சமூகத்தின் பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் குரல்கொடுத்து வந்தவன் என்றும் அதேயடிப்படையில் புத்தாக்க அரங்க இயக்கமும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் தங்கள் படைப்புகளை உருவாக்கி வருவதால் அவர்களுக்கு இவ்விருதை வழங்குவதில் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சிவஜோதி எழுதிய கட்டுரைகளை அவருடைய துணைவி ஹம்சகௌரி சிவஜோதி தொகுத்திருந்த ‘என் எண்ண ஓட்டத்தில்…’ என்ற நூலும் வெளியிடப்பட்டது. நூலுக்கான வெளியீட்டுரையை சிவஜோதியின் நண்பனும் சிரேஸ்ட்ட கிழக்கு மாகாண கலை கலாச்சார ஆய்வாளர் குணபாலா வழங்கினார். சிவஜோதியின் தந்தை நூலைப் பெற்றுக்கொண்டார். மதிப்பீட்டுரையை ஆசிரியரும் மக்கள் சிந்தனைக் கழகத்தைச் சேர்ந்தவருமான க விஜயசேகரன் வழங்கினார்.

ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சி இதயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பதில் நீதிபதியும் தேசிய கலை இலக்கிய பேரவையின் முக்கியஸ்தருமான சோ தேவராஜா சிறப்புரை வழங்கினார். சிவஜோதி என்ற ஆளுமையின் உருவாக்கத்தில் சோ தேவராஜாவுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு சந்திரகுமார் சிவஜோதியின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

லிற்றில் எய்ட் மாணவர்கள் 75 பேருக்கான பள்ளிச் சீருடைகளை சிவஜோதி கல்வி கற்ற விக்ரோரியாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பில் சி குணபாலா திருமதி சிவஜோதியிடம் கையளித்தார். கொழும்பு எம் எம் மனேஸ்மன்ற் சேர்விஸஸ் பிரைவேட் லிமிடட் லிற்றில் எய்ட் மாணவர்களுக்கு வேண்டிய அப்பியாசக் கொப்பிகளை வழங்கினர்.

லிற்றில் எய்ட் உடன் இணைந்து மக்கள் சிந்தனைக் கழகமும் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வை ஆசிரியரும் மக்கள் சிந்தனைக் கழகத்தவருமான ப தயாளன் தொகுத்து வழங்கினார்.

கோவிட் நெருக்கடி காலநிலையிலும் சமூக இடைவெளியைப் பேணி 200 பேர்வைர இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிவஜோதியின் நினைவுகளை மீட்டனர்.