08

08

ஆப்கானிஸ்தானில் வன்முறையால் பலியான நூற்றுக்கணக்கான குழந்தைகள் – யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை !

ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யுனிசெப் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதன் படி ,
கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குந்தூஸ் பகுதியில், போர்க்காலத்தில் பதுக்கிவைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்ததால் அக்குடும்பமே பரிதாபமாக பலியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த குண்டுவெடிப்பால் வேறு மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்.  தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் தினமும் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது பாஹிம் கூறுகிறார்.
பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு போர் குறித்து விளக்கிய யுனிசெப், ஆப்கானிஸ்தானில் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் இவ்வளவு குழந்தைகள் குண்டுவெடிப்பில் பலியானது கவலை அளிப்பதாக யுனிசெப்  கூறி உள்ளது. வறுமை, உணவுப் பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது.

விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் வாங் யாபிங் !

சீனா தனியாக தியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இங்கு சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் வாங் யாபிங் என்ற பெண் வீராங்கனையும் ஒருவர். நேற்று இரவு அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் சிறிது தூரம் நடந்தார்.

அவருடன் தலைமை விண்வெளி வீரர் ஷாய் சிகாங்கும் விண்வெளியில் நடந்தார்.

Astronaut Wang Yaping becomes first Chinese woman to walk in space -  SCIENCE Newsவாங் யாபிங் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனை ஆவார். ஆனால் முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை வாங் யாபிங் பெற்றுள்ளார்.

சில நிமிடங்கள் மட்டும் நடந்துவிட்டு பின்னர் அவர் விண்வெளி நிலையத்திற்கு திரும்பினார்.

வாங் யாபிங் சீன விமானப்படை வீராங்கனையாக இருந்து வந்தார். 2010-ம் ஆண்டு அவர் விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 41 வயதான நிலையில் அவர் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

3 நாட்களில் 8 மில். அமெ.டொலர் நஷ்டஈடு: தவறினால் சட்ட நடவடிக்கை – சீன நிறுவனம் எச்சரிக்கை

8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈட்டை கடிதம் கிடைத்து 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு சர்ச்சைக்குரிய சேதன உரத்தை விநியோகித்த சீன நிறுவனம் கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் மேலதிக பணிப்பாளரிடம் இருந்து இந்த நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.
குறித்த நஷ்டஈட்டு கோரிக்கைக் கடிதத்தில் QingdaoSeawin நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,

விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகளை மீறும் வகையில், சோதனை அறிக்கைகளை வௌியிடும் தரப்பிற்கும் பரிசோதனை அறிக்கைளை உண்மைக்கு புறம்பான விதத்தில் பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு உரிமை உள்ளது தெரிவித்துள்ளது.

இலங்கையானது, உடன்படிக்கைகளுக்கு கௌரமளிக்காமை மற்றும் அங்குள்ள மக்களை தவறாக வழி நடாத்திச் செல்கின்ற விடயம் தொடர்பில் தம்மால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. சீனாவின் நிறுவனமொன்று இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணங்கிகள் அடங்கிய சேதனப் பசளையை ஏற்றுமதி செய்ததாக கூறப்படும் பொய்யான அறிக்கை, அது தொடர்பில் உண்மை தெரியாத பலரையும் நுகர்வோரையும் தவறான திசைக்கு கொண்டுசென்று ஏற்றுமதி தொழில் முயற்சியாளர்களின் வர்த்தகத்திற்கு பாரிய இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய தாவர தனிமைப்படுத்தல் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்திற்கு அமைய, குறித்த உற்பத்தியில் Erwinia பக்டீரியா காணப்படுவதாக தெரிவிக்கப்படும் அறிக்கையில் எவ்வித உண்மையும் இல்லை. 600 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் 20 நிமிடங்களுக்கு கிருமி நீக்கம் செய்யப்படும் இந்த சேதன பசளையில், ஒருபோதும் Erwinia பக்டீரியா இருக்க முடியாது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஷிலின் கொரோனா பட்ஜெட்டுக்கு 102 தரப்பினரிடமிருந்து பரிந்துரைகள்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக 102 தரப்பினரிடம்பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய நிறுவனங்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் வரவு – செலவுத் திட்டத்துக்கான பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாவட்ட அரசியல் அதிகாரிகள், வெவ்வேறு தொழிற்சங்கள், வர்த்தக அமைப்புக்கள், இறக்குமதியாளர்கள், இளம் அமைப்புக்கள், தேயிலை, தேங்காய், ஆடை, மரக்கறி, பழங்கள், உணவு, மீன் உள்ளிட்ட தொழிற்துறைச் சார்ந்தவர்கள், தகவல் தொழிநுட்பம், இரத்தினம் மற்றும் தங்க ஆபரணத் தொழிற்துறை நிபுணர்கள், உள்ளிட்ட 102 தரப்பினரிடம் இவ்வாறு பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பட்டினியால் எவரும் சாகவில்லை: விலையேற்றம் பெரிய விடயமல்ல – பெரமுன எம்.பி ரஞ்சித் பண்டார

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தினால் எவரும் பட்டினியால் உயிரிழக்கவில்லை. சீனி, அரிசி ஆகிய பொருட்களின் விலை அதிகரிப்பு பெரியதொரு விடயமல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (7 ) இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது,மக்களிடமிருந்து அரசாங்கம் நிவாரணம் பெற வேண்டும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிடவில்லை. மக்கள் மீது சுமை செலுத்தாத வகையில் வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டது ஊடகங்களில் திரிபுப்படுத்தப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அத்தியாவசிய பொருட்களை கட்டுப்படுத்தும் காலத்தில் நாம் தற்போது இல்லை. வர்த்தமானி ஊடாக வர்த்தகர்களை கட்டுப்படுத்த முடியாது. அதன் காரணமாக தான் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட விலைக்கமைய விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருக்கும் சூழல் காணப்படுகிறது. வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட்டு சந்தையில் போட்டித்தன்மையான சூழல் தற்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்டால் கடந்த 2 வருட காலமாக முழு உலகமும் உற்பத்தி துறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் போலியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது பயனற்றது. பொருட்களின் விலையை நிர்ணயித்தால், சந்தையில் பொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும். எதிர்பார்க்காத அளவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் எவரும் உயிரிழக்கவில்லை.சீனி,அரிசி,சீமெந்து ஆகியவை பெரும் பிரச்சினையல்ல அவற்றை காட்டிலும் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. கொவிட்-19 தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்தற்கு அரசாங்கத்திற்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.

தடுப்பூசிகளால் கிடைக்கும் பாதுகாப்பு 6 மாதங்களில் கடும் வீழ்ச்சி! – ஆய்வில் தகவல்

கொரோனாவுக்கு எதிரான பைசர், மொடர்னா மற்றும் ஜோன்சன் அன் ஜொன்சன் ஆகிய 3 தடுப்பூசிகளினாலும் ஏற்படும் பாதுகாப்பானது கடந்த 6 மாதங்களில் சடுதியாகக் குறைவடைந்துள்ளது என ஆய்வினூடாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மருத்துவ நிறுவனமொன்று முன்னெடுத்த ஆய்விலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பைசர், மொடர்னா மற்றும் ஜோன்சன் அன் ஜொன்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகளினாலும் கிடைக்கப்பெறும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வில் குறித்த அமெரிக்க நிறுவனத்தினால் சுமார் 8 இலட்சம் பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் உடலில் வைரசுக்கு எதிராக போராடக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு காணப்படுகிறது என்பது இந்த ஆய்வில் பரிசீலிக்கப்பட்டது.

அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் 86.9 சதவீதமாகக் காணப்பட்ட பைசர் தடுப்பூசியின் பாதுகாப்பு 6 மாதங்களில் 43 சதவீதமாகவும், 89 சதவீதமாகக் காணப்பட்ட மொடர்ணா தடுப்பூசியின் பாதுகாப்பு 6 மாதங்களில் 58 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் 86.4 சதவீதமாகக் காணப்பட்ட ஜொன்சன் அன்ட் ஜொன்சன் தடுப்பூசியின் பாதுகாப்பு 6 மாதங்களில் 13 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்த 3 தடுப்பூசிகளாலும் கொவிட் வைரசுக்கு எதிராக கிடைக்கப் பெறும் பாதுகாப்பானது 86 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகக் குறைவடைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கருத்துத்தெரிவிக்கையில்,

தடுப்பூசிகளால் பெற்றுக் கொள்ளப்படும் பாதுகாப்பு குறைவடைகிறது என்று கிடைத்துள்ள அறிவித்தல் சிறந்ததொன்றல்ல.

பைசர் மற்றும் மொடர்ணா ஆகிய தடுப்பூசிகள் இலங்கையில் கனிசமாளவானோருக்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டவர்களுக்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிதல் என்பவற்றை ஆய்வை முன்னெடுத்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பாரதூரமாக எச்சரிக்கின்றோம். உலகில்
காணப்படுகின்ற முன்அனுபவம் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம் என்றார்.