06

06

மக்கள் வங்கியை சீனா கறுப்புப்பட்டியலிட்டதால் இலங்கைக்கு ஏற்பட்ட சிக்கல் !

மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் உள்ளடக்கியதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாகவும் ,இதனால்  சர்வதேச நிறுவனங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த வங்கிக் கட்டமைப்பு குறித்து அவதானம் செலுத்தும் என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்கள் விநியோகம் செய்யப்படும்போது நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. இலகு தவணை முறையில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் செலுத்துவதற்கு முடியாத நிலை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் ஆசிய நிறுவனங்கள் இலங்கையுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய அச்சம் வெளியிட்டுள்ளன. மக்கள் வங்கி கறுப்பு பட்டியலில் இடப்பட்டுள்ளமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், அவ்வாறு செய்தால் சர்வதேச நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வது இலகுவாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் தொடர்பான பிரச்சினையினால் மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு – மட்டக்குளி தம்பதியினர் கைது !

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி குற்றத் தடுப்பு பிரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த தம்பதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு சடலத்தை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் லொறி ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எல்லைக்கிராமங்களின் வரலாற்று வழிபாட்டிடங்களை பாதுகாப்பது பற்றியும் சிந்திப்பார்களா அரச தரப்பு தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள்..?

யாழ்ப்பாணத்தின் தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரிமனை, சங்கிலியன் சிலை, யமுனா ஏரி உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க , யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் எடுத்துரைத்தார்.

இன்று (06.11.2021) காலை இடம்பெற்ற கள விஜயத்தின்போது, இவ்விடயங்கள் அவரால் அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டன.

இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளை கொண்ட யாழ்ப்பாண மாவட்டமானது, ஏராளமான தொன்மங்களை கொண்டுள்ளது.அவற்றை பாதுகாப்பது எமது மூதாதையருக்கும், அடுத்துவரும் சந்ததிக்கும் நாம் செய்யும் கடமை என இதன்போது அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

 

இது ஒருபுறமிருக்க , யாழ்ப்பாண வரலாறு பற்றி மட்டுமே சிந்திப்போர் வன்னி பெருநிலபரப்பின் வரலாற்றை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாய் தெரியவில்லை. வடக்கு தமிழர்களின் பூர்வீகமான வரலாற்று வழிபாட்டு நிலங்களும் கோயில்களும் (வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை) பௌத்தமயப்படுத்தப்படுவதாக தமிழர் அமைப்புக்கள் விசனப்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் தொல்லியல் திணைக்களத்தினர் தமிழ்மக்களுடைய வழிபாட்டு சின்னங்கள் என்ற நிலையை பொருட்படுத்தாது தொடர்ந்தும் மக்களுடைய வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு காவல்துறையினருடாக பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொண்டதாய் தெரியவில்லை. அரச தரப்புடன் உள்ள அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கூட இது தொடர்பில் பெரிதாக விசனப்பட்டதாக தெரியவி்ல்லை. காலாதி காலமாக எல்லைக்கிராமங்களின் நிலை தொடர்பில் எந்த அரசியல் தலைமைகளும் அக்கறைப்பட்டதில்லை. யாழ்ப்பாணத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ தமிழர் இருப்பை பாதுகாக்க எல்லைக்கிராம வரலாற்று வழிபாடுகளையும் பாதுகாப்பதும் அவசியம். இதன்  அவசியத்தை உணர்ந்து இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்காவிற்கு செல்லவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையவுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ள போதும் அதற்குரிய திகதியை இன்னும் தீர்மானிக்கவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும் இந்த விஜயத்தின்போது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் இராஜதந்திர கலந்துரையாடல் எதுவும் முன்னெடுக்கப்படாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது சட்ட நிபுணர்கள் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் சட்ட நிபுணர் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரும் வருகை தருவார்கள் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடனும், அமைச்சின் சட்ட நிபுணர்கள் குழுவுடனும் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச நகர்வுகள் மூலமாகவே எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற நிலையில் அதனை இலக்காக கொண்டு நகர்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

“கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடு ஒரு கண் துடைப்பு மாநாடு..” – சிறுமி கிரெட்டா துன்பர்க் ஆதங்கம் !

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாடு பெருந்தோல்வி எனக் கூறி சூழலியல் செயற்பாட்டாளரான கிரெட்டா துன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 1995-ம் ஆண்டிலிருந்து காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உச்சி மாநாடு நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற வேண்டிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டதால் இந்த ஆண்டு நடக்கிறது.

உலக அளவில் கார்பன் உமிழ்வு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து இந்த மாநாட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை 5 அறிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 6-வது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மாநாடு பெருந்தோல்வி என சூழலியல் செயற்பாட்டாளரான கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:

காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் ஒரு வார காலமாக உலகத் தலைவர்கள் வெற்றுப் பேச்சை பேசியுள்ளனர். இந்த மாநாடு படுதோல்வி என்பதை யாருக்கும் சொல்லித் தெரியத் தேவையில்லை. இது ஒரு கண் துடைப்பு மாநாடு. விஞ்ஞானிகள் காலநிலை மாற்றம் தொடர்பாக அறிவியல் ரீதியாக முன்வைக்கும் உண்மைகளை உலகத் தலைவர்கள் புறந்தள்ள முடியாது. அதுபோலத் தான் அவர்கள் எங்களையும் புறக்கணிக்க முடியாது. உண்மையில் தலைவர்கள் வழிநடத்துபவர்களாக இல்லை. இப்படித்தான் தலைமை இருக்கிறது என்பது வேதனை.” எனவும் இவ்வாறு அவர் பேசினார்.

கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) இவர் சுவீடன் நாட்டைச் சார்ந்த உலகின் பருவநிலை காக்க போராடும் 15 வயதேயான பெண் ஆவார். இவர் துவங்கிய பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம் (School strike for the climate) என்ற இயக்கம் உலக பிரசித்தி பெற்றது. இவர் டைம்ஸ் பத்திரிக்கையின் “உலகின் நபர் 2019” என தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எதிர்வரும் 19 ஆம் திகதி !

எதிர்வரும் 19 ஆம் திகதி நீண்ட சந்திர கிரகணம் நிகழும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது மூன்று மணித்தியாலம், 28 நிமிடங்கள், 23 வினாடிகள் நீடிக்கும் என்றும், இது 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதன்போது, நிலவின் மேற்பரப்பு 97 சதவீதம் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும். குறிப்பாக வட அமெரிக்க பிராந்தியத்துக்கு  இந்தச் சந்திர கிரகணம் தென்படும் என்றும்,  2100 ஆம் ஆண்டு வரை மீண்டும் இது போன்றதொரு நீண்ட சந்திரக் கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா கணித்துள்ளது.

எதிர்வரும் எட்டு தசாப்தங்களில் மேலும் 179 சந்திர கிரகணங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சராசரியாக ஒரு வருடத்திற்கு இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி இவ்வருடத்துக்கான சந்திர கிரகணம் நிகழும் நிலையில், அடுத்த வருடம் மே 16 ஆம் திகதி மற்றுமொரு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

இந்தியாவை அச்சுறுத்தும் சீகா வைரஸ் – குறுகிய காலத்தில் 50க்கும் அதிகமானோர் பாதிப்பு !

ஏற்கனவே உலகை கொரானா வைரஸ் கடுமையாக ஆட்டுவித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனா தாக்கத்தின் விளைவுகள் உலகின் எல்லா நாடுகளிலும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. தடுப்பூசிகள் – மருந்துகள் என பல அறிமுகப்படுத்தப்பட்ட போதும் கொரோனா பரவும் வீரியம் குறைவதாயில்லை.  கொரோனா அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. அண்மைய மாதங்களிலேயே இந்தியா ஓரளவுக்கு மீண்டெழ ஆரம்பித்துள்ள நிலையில் அங்கு சீகா வைரஸ் (Zika Virus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், இதுவரை 66 பேருக்கு சீகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த மதம் 23 ஆம் திகதி கான்பூரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவருக்கு சீகா வைரஸ் பாதிப்பு இருந்தமை கண்டறிப்பட்டது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர், அண்டை வீட்டார் என பலருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் இதுவரை 66 பேருக்கு சீகா வைரஸ் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 45 ஆண்கள் மற்றும் 21 பெண்கள் சீகா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகலில் கடிக்கக்கூடிய எய்டஸ் வகை கொசுக்களால் சீகா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. வெப்ப வலயங்கள் மற்றும் துணை வெப்ப வலய பகுதிகளில் அவ்வப்போது பரவி வரும் சீகா வைரசின் பிறப்பிடம் உகண்டா ஆகும். அங்கு கடந்த 1947-ல் முதன் முதலில் குரங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் 1952-ல் உகண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களிடமும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

கடந்த 1960 முதல் 1980 வரை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இந்த வைரஸ் 2007-க்கு பிறகு தொற்று நோயாக உருவெடுத்தது. 2015-ல் பிரேசிலில் பல முறை இந்த தொற்று பரவியது. அங்கிருந்து பிற நாடுகளுக்கும் பரவியது.தற்போதுவரை 86 நாடுகளில் இந்த வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

டெங்குவை பரப்பும் ஏடிஸ் நுளம்புகள் மூலம் இந்த வைரசும் பரவுகிறது. தொற்று பாதித்தவர்களுக்கு இலேசான காய்ச்சல், தோல் தடிமன், தசை-மூட்டு வலி, கண் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு மூளை மற்றும் நரம்பு கோளாறுகளும் ஏற்படும். ஆனால் பெரும்பாலும் தொற்று பாதித்த பலருக்கும் அறிகுறிகள் தென்படாது.

தொற்று பரப்பும் நுளம்பு கடித்த 2 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். இது ஒரு வாரம் வரை நீடிக்கும். அதேநேரம் கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும். அல்லது பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்தான மூளை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிறவி நோய்கள் ஏற்படும்.

இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் இன்னும் ஆய்வு கட்டத்திலேயே உள்ளன. எனவே கொசுக்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதே வைரசை தடுக்கும் சிறந்த வழிமுறையாகும்.

கடவுச்சீட்டுக்காக குவியும் மக்கள் – திணரும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் !

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், நாளாந்தம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு ​​கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு – மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்க கிரீன் கார்ட் லொட்டரிக்காக, கடவுச்சீட்டுக்களைப் பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,800 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

பொதுவான சேவையின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,000 விண்ணப்பங்களும் பெறப்படுகின்றன.

தந்தை,மகள் தகாத உறவால் பிறந்த மூன்றுநாள் சிசுவை கொலை செய்த சோகம் – கிழக்கில் சம்பவம் !

கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசு பொலிஸாரினால் நேற்று (05.06.2021) சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியில் இருந்து குறித்த சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

குறித்த பகுதிக்கு சந்தேக நபருடன் விரைந்த பொலிசார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து குறித்த பகுதியில் வீசப்பட்ட சிசுவை மீட்டெடுத்தனர்.

தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த குழந்தையையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் உயிரிழந்​த சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதனை அடுத்து அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசு எடுத்துச் செல்லப்பட்டது. மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளாந்த கூலி தொழிலாளியான குறித்த சந்தேக நபர், இரண்டாவது திருமணம் செய்தவர் என்பதுடன் தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

“ராஜபக்ஷக்களின் அரசை மக்கள் விளக்குமாறால்தான் அடித்து விரட்டுவார்கள்.” – ஹர்ஷ டி சில்வா ஆதங்கம் !

“சரியான வருமானம் இல்லையென்றால் நாளை இந்த நாட்டு மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் இறப்பார்கள். அப்படியென்றால் இந்த ராஜபக்சக்களின் பொருளாதார முகாமைத்துவம் எங்கே? ” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சரியான வருமானம் இல்லையென்றால் நாளை இந்த நாட்டு மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் இறப்பார்கள். அப்படியென்றால் இந்த ராஜபக்சக்களின் பொருளாதார முகாமைத்துவம் எங்கே? சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் கொண்டுவந்த வேலைத்திட்டங்கள் எங்கே? என்ன ஆனது? யார் இதன் தலைவர்? யார் இவற்றைச் செய்வது?

வர்த்தமானிகளை வெளியிட்டது பந்துல குணவர்தன, அந்த வர்த்தமானிகளை இரத்து செய்தது யார்? பந்துல இரத்துச் செய்தாரா? பஸில் ராஜபக்ச இரத்துச் செய்தாரா? என்பது எமக்குத் தெரியாது. சிக்கலான , ஆட்சி செய்ய முடியாத, பொருளாதார முகாமைத்துவம் இல்லாத, எந்தவொரு தூரநோக்கும் இல்லாத, பணியாற்ற முடியாத முழுவதுமாக தோல்வியடைந்த ஓர் அரசு இது என்பதால் நாட்டு மக்கள் பாரிய குழிக்குள் விழுந்துள்ளார்கள்.

இவர்களுக்குத் தலையில் ஏதும் பிரச்சினையா? இவர்கள் எம் மக்களை உண்ண வழியில்லாத நிலைமைக்கு ஆளாக்கிவிட்டார்கள். இதில் இன்னும் சாப்பிடச் சொல்கின்றார்கள். மக்கள் எப்படி உண்பார்கள்? சரியாக உண்பதற்கு மக்களுக்கு பணம் இல்லை. மோசமான ஒரு நிலை எமக்கு உருவாகியுள்ளது. இவர்கள் எம் மக்களை ஏமாற்றி விட்டார்கள். விவசாயிகள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் ஏமாற்றி வாக்குகளையும் பெற்றுக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது எமக்கு தெரியாது, எங்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்றும் சொல்லும் நிலைக்கு அரசு விழுந்துவிட்டது.

முடிந்தால் செய்யுங்கள்; இல்லையென்றால் செல்லுங்கள். இப்படியே இன்னும் கொஞ்சம் காலம் செயற்படுவீர்கள் என்றால் மக்கள் விளக்குமாறால்தான் அடித்து விரட்டுவார்கள். மக்களுக்கு அந்த அளவுக்கு இந்த அரசின் மீது வெறுப்பு உண்டாகிவிட்டது. அப்படியான ஒரு கீழ் மட்டத்திற்கு இந்த அரசு விழுந்துவிட்டது” என்றார்.