26

26

தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க தீர்மானம் !

நாய் இறைச்சிக்கு தடை விதிப்பது குறித்து சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.

தென் கொரியா நாட்டில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கம் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இதற்காக ஆண்டுக்கு சராசரியாக பத்து லட்சம் முதல் 15 லட்சம் நாய்கள் வரை கொல்லப்படுகின்றன.

இதற்கு விலங்கு உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்த சூழலில், தென் கொரியா அரசு நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து, அனைத்துத்துறை பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

100 ஆண்டுகளில் சுவீடனின் முதல் பெண் பிரதமர் – சில மணி நேரங்களிலேயே பதவி துறந்த சோகம் !

சுவீடன் நாட்டில் ஸ்டீபன் லேப்வென் என்பவர் பிரதமர் பதவி வகித்து வந்தார். அவர் சமீபத்தில் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் சோசலிச ஜனநாயக கட்சி தலைவர் பதவியை விட்டும் விலகினார். இதையடுத்து அந்த நாட்டின் புதிய பிரதமராக சோசலிச ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான மெக்தலினா ஆன்டர்சன் (வயது 54), நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த நாடு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி 100 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போதுதான் முதன் முதலாக ஒரு பெண் தலைவர் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இது வரலாற்று சாதனையாக அமைந்தது. அவரது தேர்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாடாளுமன்றத்தில் அவரது பட்ஜெட் தோல்வி கண்டது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பட்ஜெட் நிறைவேறியது. இதையடுத்து மெக்தலினாவின் சிறுபான்மை அரசுக்கு அளித்த ஆதரவை கிரீன் கட்சி அதிரடியாக விலக்கிக்கொண்டது.

அந்த நாட்டின் அரசியல் சாசன நடைமுமுறைப்படி கூட்டணிக் கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டால் அரசு பதவி விலகித்தான் ஆக வேண்டும். அந்த நடைமுறைப்படி மெக்தலினா பதவியை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து அவர் சபாநாயகர் ஆண்ட்ரியாஸ் நோர்லனிடம் தெரிவித்து விட்டார். இதை அவரே உறுதியும் செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘சட்டப்பூர்வ தன்மை கேள்விக்குள்ளாகும் ஒரு அரசை நான் வழிநடத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் சோசலிச ஜனநாயக கட்சியின் ஒரு கட்சி அரசை ஏற்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளேன்’’ என தெரிவித்தார்.

இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசியல் கட்சித்தலைவர்களுடன் தொடர்பு கொள்வேன் என்று சபாநாயகர் ஆண்ட்ரியாஸ் நோர்லன் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக நகரமான உப்சாலாவைச் சேர்ந்த மெக்தலினா, முன்னாள் நீச்சல் வீராங்கனை ஆவார். 1996-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் கோரன் பெர்சானின் அரசியல் ஆலோசகராக அரசியலில் நுழைந்தார். கடந்த 7 ஆண்டுகளாக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்தார். சுவீடன் நாடு தனது முதல் பெண் பிரதமரை பெற்றதை கொண்டாடுவதற்கு முன்பே அவரது பதவி விலகல், அந்த நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது..

“எமது வலிகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.” – சாணக்கியனிடம் உறவுகள் வேண்டுகோள் !

“சுகபோகங்களை தக்க வைப்பதற்காக எங்கள் கண்ணீரில் எவரும் அரசியல் செய்ய வேண்டாம். நாம் ஆரம்பத்திலிருந்தே அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதிக்கான இந்த போராட்டத்தை நீதியுடன் முன்னெடுத்து வருகின்றோம்.” என வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அறிக்கை...

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்க்ப்பட்டுள்ளதாவது ,

 

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த நாம் இலங்கை அரசாலும், அரச படைகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளைத் தேடி 1,735 நாட்களாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டும் எம்முடன் போராடிய உறவுகளில் நூற்றுக்கு மேற்பட்டவர்களை இழந்தும் உள்ள நிலையில் ஓரு முக்கியமான விடயத்தை தாயக, புலம்பெயர் உறவுகளுக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

4 வருடங்களையும் கடந்து தொடரும் எமது போராட்டத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், சர்வதேச சிறுவர் தினம், சர்வதேச மனித உரிமைகள் தினம் என பல நாட்களில் பாரிய பேரணிகளையும், போராட்டங்களையும் நடாத்தி சர்வதேசத்தின் கவனத்தை எம் போராட்டத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தோம்.

இப்படியான போராட்டங்களின் போது அரசுக்குத் துணை போகும் தீய சக்திகளாலும், போராட்டத்தை தம் கையிலெடுக்க முயலும் பிரமுகர்களாலும் எமக்கு தடைகள் ஏற்படுத்தப்படுவது வழமை. அத்தடைகளெல்லாம் எமக்கு ஆதரவு தர திரண்டிருக்கும் பொதுமக்களின் பங்களிப்புடன் அவற்றை முறியடித்திருக்கின்றோம்.

உதாரணத்துக்கு 25.02.2019 இல் “எமக்கு ஓ.எம்.பி வேண்டாம்” என்ற முடிவை சர்வ தேசத்துக்கும், ஐ.நா விற்கும் அழுத்தி ஆணித்தரமாகச் சொல்வதற்காக பாரிய பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பேரணி செல்லும் வழியில் சில அடிவருடிகளால் எமது கோசத்துக்கு எதிர்க்கருத்தில் கோசமிடப்பட்டதோடு ஒலிவாங்கி வயர்கள் பிடுங்கி எறியப்பட்டு ஊடகவியலாளர் ஒருவரும் தாக்கப்பட்டார். ஆனால் ஒரு சில நிமிடங்களில் எமது மக்களின் உதவியுடன் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பேரணி தன் இலக்கை நிறைவு செய்து பெரு வெற்றியடைந்தது.

இதே போன்று 30.08.2020 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று பாரிய பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத் தலைவிக்கு நீதிமன்றால் இதில் பங்குபற்றுவதற்கான தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்த நிலையில் அம்பாறை மாவட்டத் தலைவியினால் இப் பேரணி வழி நடத்தப்பட்டது. இந்நிலையில் இப்பேரணியை முன்னேற விடாது பாதை மூடப்பட்டது. இந்நேரத்தில் எமது பேரணிக்கு ஆதரவு தர திரண்டிருந்த பொது மக்களாலும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மற்றும் வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள் என அனைத்துத் தரப்பினராலும் மூடப்பட்ட பாதை உடைத்து எமக்கு வழி சமைத்துத் தரப்பட்டது. எமது போராட்டம் வெற்றிகரதாக நிறைவேறியது.

இங்கு கௌரவ சாணக்கியனதும் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களதும் செயற்பாடானது அவர்கள் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை. மக்களின் வாக்குகளால் தான் அவர்கள் பாராளுமன்ற கதிரையில் அமரும் பெரும் பேறையும் பல வரப்பிரசாதங்களையும் பெற்றார்கள். ஆனால் இவற்றை தொடர்ந்து அனுபவிக்கும் பேராசையில் வலி சுமந்த எங்கள் போராட்டத்தை வலியே என்னவென்று தெரியாத இவர்களைப் போன்றவர்கள் கையில் எடுப்பதையோ, உரிமை பாராட்டுவதையே எம்மால் அனுமதிக்க முடியாது. தமது சுகபோகங்களை தக்க வைப்பதற்காக எங்கள் கண்ணீரில் எவரும் அரசியல் செய்ய வேண்டாம். நாம் ஆரம்பத்திலிருந்தே அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதிக்கான இந்த போராட்டத்தை நீதியுடன் முன்னெடுத்து வருகின்றோம். எந்த பாராளுமன்ற உறுப்பினரோ, அல்லது அரசியல் கட்சியோ அல்லது தனி நபரோ அல்லது எமது சங்கம் தவிர்ந்த வேறு அமைப்புக்களோ எமது போராட்டத்துக்கு உரிமை கோர முடியாது. கோரவும் கூடாது என்று கண்டிப்புடன் தெரிவிக்கின்றோம்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் புலம்பெயர் தேசத்தில் குறிப்பிட்ட எமது போராட்டத்தை தான் நடாத்தியதாக தெரிவித்த கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை எங்கள் உறவுகளுக்கு உறுதிபடத் தெரிவிப்பதோடு அவரின் இக் கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எம் உறவுகளுக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் உங்கள் ஆதரவை கோரி நிற்கின்றோம்.

“யுத்தத்தின்போது இறந்தவர்களை நினைவுக்கூறுவதில் எந்த தவறும் இல்லை.” – எதிர்க்கட்சி

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதென்பது உலக நடைமுறை. அதில் எவ்வித தவறும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிரணியின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மட்டுமன்றி 2005 இல் வந்த அரசாங்கம், 2010 இல் வந்த அரசாங்கம் என அனைத்து அரசாங்கங்களும், சர்வதேசத்துடன் பகைமையையே வளர்த்துக் கொண்டன. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த 2012 முதல் 2015 வரையான காலப்பகுதியில் எமது நாட்டுக்கு எதிராக மூன்று பிரேரணைகள் ஐ.நா.வில் நினைவேற்றப்பட்டன.

2015 இல் அவர் ஜனாதிபதியாக இருந்திருந்தால், நாம் பொருளாதாரத் தடைக்கு முகம் கொடுத்திருப்போம். இதனால்தான் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே, அன்று ஜனாதிபதித் தேர்தலை வைத்தார். பின்னர் நாம் ஆட்சிக்கு வந்தவுடன், மஹிந்த ராஜபக்ஷவையும் காப்பாற்றிக் கொண்டே 4 அரை வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தோம். சர்வதேசத்துடனும் ஒன்றித்து பயணித்தோம்.

இன்று மீட்டும் இந்த அரசாங்கம் பழைய போக்கையை கடைப்பிடித்து வருகிறது. சர்வதேசம் இன்று மீண்டும் எமது நாடு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. இதில் பிரதானமாக நாட்டின் சிவில் நிர்வாகம் இராணுவத்தின் கைகளில் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனத்தன்மையை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 19 ஐ இல்லாதொழித்து 20 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்தமையினால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கம் அக்கரைச் செலுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாம் ஆட்சியில் இருந்தக் காலத்தில் தேசியக் கீதத்தைக்கூட தமிழில் இசைத்தோம். இதனாலேயே நாம் சர்வதேசத்தினால் பாராட்டப்பட்டோம். சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படும் ஒரு அரசாங்கத்திற்கு எந்தக் காரணம் கொண்டும் சர்வதேசத்தின் ஆதரவு கிடைக்காது என்பதை இந்த அரசாங்கம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அத்தோடு, ஊடக சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், யுத்தத்தின்போது இறந்தவர்களை நினைவுக்கூற தடை செய்யப்பட்டுள்ளமைக்கும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும். இதற்கெல்லாம் அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும்.

அதேநேரம் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பாகவும் சர்வதேசம் சில நிபந்தனைகளை விதித்துள்ளன. அவர்களின் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையாகவே காணப்படுகின்றன.

அரசாங்கத்தினால் இவற்றை நிறைவேற்ற முடியும். இதுதொடர்பாக அரசாங்கம் திருத்தங்களையேனும் கொண்டுவந்தால் நாம் முழுமையான ஆதரவினை வழங்குவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அகதிகளாகவுள்ள தமிழர்களை இலங்கையில் குடியமர்த்த முழு ஒத்துழைப்பையும் தருவேன் – டக்ளஸ் தேவானந்தா

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைள் தொடர்பில், சென்னையில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று (26) இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்து சென்று இந்தியாவில் தங்கியிருக்கின்றவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக பிரதி உயர்ஸ்தானிகரினால் கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ள இலங்கையர்களுக்கு பயண ஏற்பாடுகளை இலவசமாக வழங்குவதற்கும் பொருட்களை எற்றிவருவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த பிரதி உயர் ஸ்தானிகர், அழைத்து வரப்படுகின்றவர்களின் செலவுகளுக்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் முதல் கட்டமாக தலா 30,000 ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், அடுத்த வருடம் சுமார் 7000 குடும்பங்களை அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், அழைத்து வரப்படுகின்றவர்களின் பூர்வீகப் பிரதேசங்களில் சர்வதேச தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த முயற்சிகளை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கு வருவதற்கு விரும்புகின்ற இலங்கையர்கள், தங்களுடைய பூர்வீக இடங்களில் மீள்குடியேறி இயல்பு வாழ்கையை தொடர்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்ததுடன் குறித்த விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பூரணமான ஒத்துழைப்பு தனக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் சிறப்பு முகாம்ங்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கபட்டிருக்கின்றவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த மாதம் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டபோது சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினரின் உறவினர்கள் தன்னை சந்தித்தமையை சுட்டிக்காட்டியதுடன், அதுதொடர்பாக ஏற்கனவே இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், சட்டவிரோத தொழில் முறையினால் ஏற்பட்டு வருகின்ற பாதிப்புக்கள் தொடர்பாகவும் மாற்றுத் தொழில்முறைகளை தெரிவு செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான வேலைத் திட்டம் ஒன்றினை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயுமாறும் பிரதி உயர் ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரனிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ராஜபக்ஷக்களின் ஆட்சியால் ஒவ்வொருவர் வீட்டிலும் வெடிகுண்டுகளை வைத்துக்கொண்டிருக்கிறோம்.” – முஜிபூர் ரஃமான்

சமையல் எரிவாயு கொள்கலன் எப்போது வெடிக்கும் என்ற அச்சத்தில் இலங்கை மக்கள் வாழ்ந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஃமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர், இந்த ஆபத்தான சூழலை ராஜபக்ச அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு கொள்கலன் எப்போது வெடித்துச் சிதறும் என்ற அச்சத்துடன் மக்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர். இன்று நாட்டில் ஐந்து எரிவாயு கொள்கலன்கள் வெடித்துச் சிதறியுள்ளன. இது எவ்வாறு வெடித்தது. இவ்வளவு காலமும் இத்தகைய அனர்த்தத்தினை மக்கள் எதிர்கொள்ளவில்லை.

இந்த ராஜபக்ஸ அரசாங்கம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடி வருகின்றது. இன்று சகல வீடுகளிலும் எப்போது வெடிக்கும் என்ற நிலை தெரியாத அளவிற்கு, எரிவாயு கொள்கலன் என்னும் வெடி குண்டை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.

இதற்கான முழுப்பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். ஆகவே இந்த ஆபத்தான சூழ்நிலையை நிறுத்துவதற்கு அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதாக கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண்களை அவமதித்தால் 3 மாதகால அமர்வுக்கு தடை விதியுங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி

“நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் பெண்களை அவதூறாக அல்லது இழிவாகப் பேசுவாராயின் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து 3 மாதங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் இருந்து இடைநிறுத்த வேண்டும்.” இவ்வாறு மக்கள் சக்தி அமைப்பின் செயலாளர் பிரியந்த விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உலகளவில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் வாய்மூல அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நாட்டின் உயர்பீடமான நாடாளுமன்றத்திலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இது பெரும் பாதிப்புக்கு வழிவகுக்கும்.

உலகளாவிய ரீதியாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக துன்புறுத்தல்களும், வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதற்கு எதிராக 1991ஆம் ஆண்டு வுமன்ஸ் க்ளோபல் லீடர்ஷிப் இன்ஸ்ரிடியூட் எனப்படும் செயற்பாட்டாளர்களால் அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்பின்னர் நவம்பர் 25ஆம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது. இதற்கமைய நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 16 நாட்களுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படும்.

பாலின ரீதியான வன்முறைகளைத் தடுப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரால் யுனிடெக் என்ற அமைப்பின் ஊடாக 2030ஆம் ஆண்டுக்குள் வன்முறைகள், துன்புறுத்தல்கள், சித்திரவதைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

வெடித்துச்சிதறிய எரிவாயு சிலிண்டர் – 19 வயதுடைய பெண் பலி !

பொலன்னறுவை வெலிகந்த பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் நேற்று(வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெலிகந்த, சந்துன்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஆயிஷா குமுதுனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 13ஆம் திகதி குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது வீட்டில் வேறு எவரும் இல்லாத நிலையில் அயலவர்கள் அவரை உடனடியாக வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அண்மையில் கொண்டுவரப்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய அதிகாரிகள் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

“வெளிநாட்டு உள்ளாடைகள் தொடர்பில் வெட்கப்படுங்கள்.” – வியாழேந்திரன்

உள்ளாடைகளுக்குக் கூட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை குறித்து வெட்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எம்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

எமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்படுத்த இம்முறை வரவு செலவு திட்டத்தினூடாக திட்டமிடப்பட்டுள்ளது.அரிசி உட்பட சிறுதானியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதில் இருந்து மீளவே இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 14,021 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

நாடுகள் முன்னேற கிராமங்கள் முன்னேற்றப்பட வேண்டும். கொரோனாவால் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. உள்ளாடைகளுக்குக் கூட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை குறித்து வெட்கப்பட வேண்டும்.  எமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயத்தை முன்னேற்ற  5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறையுடன் தொடர்புள்ள ஏனைய அமைச்சுக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து முன்னேற்ற வேண்டும். காணிப்பிரச்சினைகளை கால இழுத்தடிப்பின்றி விவசாய நடவடிக்கைகளுக்கு  பாதிப்பின்றி முன்னெடுக்கும் வகையில் வழங்குமாறு  அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பணித்துள்ளார்.

விவசாய முன்னேற்றத்துக்கு  72,492 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் ஜனாதிபதி போன்றோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. ஆனால்  எதிர்கால சந்ததியின் உருவ பொம்மைகளே எரிக்கப்படுகின்றன. இரசாயன பசளை பயன்பாட்டால் பாடசாலை மாணவர்களுக்குக் கூட புற்றுநோய் ஏற்படுகிறது.

ஒருநாட்டின் வருமானம் வரி, வெளிநாட்டு முதலீடு, அந்நியச்செலாவணி என்பன ஊடாகக் கிடைக்கிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்துறை குறித்து நிதி அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார். ஒவ்வொரு கிராமங்களையும் ஒவ்வொரு துறைசார் உற்பத்திக் கிராமங்களாக முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை முன்னேற்றுவதற்காக வீதி கட்டமைப்பு,குளம், அணைக்கட்டு என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பாரபட்சமின்றி அனைத்து வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

எமது அமைச்சின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உழுந்து, பயறு, இஞ்சி உற்பத்தியை மேம்படுத்தி   மனைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

கிண்ணியா படகு விபத்து – நகரசபை தவிசாளர் எனது உறவினர் என்பதற்காக இந்த விசாரணைகளுக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை !

அரசாங்கம் குறிஞ்சாக்கேணி பாதை சேவையைச் செய்ய நடவடிக்கை எடுக்காமல் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தமையே அனர்த்தத்துக்குக் காரணம் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா படகு விபத்து குறித்து மேலும் பேசிய அவர்,

குறிஞ்சாக்கேணி பாலம் பொதுமக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு சுமார் 9 மாதங்களாகின்றன. எனினும், இந்த மக்களுக்கான மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை அரசு இதுவரை செய்யவில்லை. மக்கள் படும் கஷ்டங்களைப் போக்க பிரதேச சபை, நகர சபை தவிசாளர்கள் துணை செய்தார்கள். இது தவறென்றால் இரண்டு தவிசாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.

குறிஞ்சாக்கேணிப் பாலம் மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடின்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வந்தனர். மக்கள் எதிர்நோக்கும் இந்தக் கஷ்டங்களைப் போக்க கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் முதலாவது பாதைச் சேவைக்கு உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுத்தார்.

நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான மாணவர்களும் இதனூடாகப் பயணஞ் செய்வதால் இன்னொரு பாதைச் சேவை அவசியப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு நகரசபைத் தவிசாளரின் அனுமதியுடன் மற்றுமொரு பாதைச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் செய்திருக்க வேண்டும். நகரசபை தவிசாளர் எனது உறவினர் என்பதற்காக இந்த விசாரணைகளுக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை என்பதைப் பகிரங்கமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனினும் பிரதேச சபைத் தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர் என்பதால் அவர் ஆரம்பித்த பாதை சேவை குறித்து இங்கு மறைக்கப்படுவதை அல்லது பேசாமல் விடப்படுவதை அனுமதிக்க முடியாது.

விசாரணை நியாயமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு வீதியோ அல்லது பாலமோ புனரமைக்கப்படுமாயின் அதற்கான மாற்று வீதியை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.