01

01

பதவிகளை பணயம் வைத்துள்ளோம் – பதறுகிறார் அமைச்சர் கம்பன்பில

பதவிகளை பணயம் வைத்து நானும் எனது குழுவினரும் போராடி வருகின்றோம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய சட்ட அபிவிருத்தி அதிகார சபையை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது பங்காளிகளுடன் உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபடாத காரணத்தினாலேயே, அரசாங்கத்தின் பிரச்சினைகள் வெளியில் பேச வேண்டி இருந்தது. தற்போதைய அரசாங்கம் 16 கட்சிகளின் கூட்டமைப்பாகும். உள்ளக பேச்சுவார்த்தைகள் இல்லாத போது பிரச்சினைகள் நிரம்பி வழியும். பதவிகளை பணயம் வைத்து நானும் எனது குழுவினரும் போராடி வருகிறோம். எங்களை விரட்டினால் அந்தப் பதவிகளைப் பெற்றுவிடலாம் என நினைத்தவர்களே எம்மை அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு கோருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

வயல் வரம்பில் நடக்கத் தெரியாதவர் விவசாய அமைச்சர் – மைத்திரி காட்டம்

விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை தொடர்பில் நான் கூறும் கருத்துக்களை அரசாங்கம் செவிமடுப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.
பகமூன பிரதேசத்தில் விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்தளவிற்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. விவசாயிகள் தொடர்பில் இந்த அரசாங்கத்துடன் எத்தனை தடவைகள் பேசினாலும் அரசாங்கம் அதனை செவிமடுப்பதில்லை. விவசாயத்துறை அமைச்சர் வயலில் உள்ள வரம்புகளில் கூட செல்லத் தெரியாதவராவார். சில இராஜாங்க அமைச்சர்கள் என்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளால் என்னால் பொலன்னறுவை மாவட்டத்திற்கு செல்ல முடியாதுள்ளது என்று கூறினேன். இதனை அடிப்படையாகக் கொண்டே குறித்த இராஜாங்க அமைச்சர்கள் என்னை விமர்ச்சிக்கின்றனர். எனினும் அவற்றை நான் கவனத்தில் கொள்வதில்லை. நான் விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்க மாட்டேன். சேதன உரத்தினைப் பயன்படுத்தி விவசாயத்தினை மேற்கொள்வதற்கு விவசாயிகளை பழக்கப்படுத்த வேண்டும் என்றார்.