29

29

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகுகிறார் அர்ஜுன ரணதுங்க !

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இன்றுடன் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அறிவித்துள்ளார்.

அதற்கான கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடம் அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அந்நிய செலாவணி மற்றும் தங்க கையிருப்பு பற்றிய தகவல்களை தாருங்கள்.” – ரணில்

நாட்டின் தற்போதைய அந்நிய செலாவணி மற்றும் தங்க கையிருப்பு பற்றிய தகவல்களை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை நாடாளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

தற்போது நாம் எதிர்கொள்ளும் அந்நியச் செலாவணி பிரச்சினை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் எண்ணெய் மற்றும் நிலக்கரி வாங்குவது பற்றி பேசப்பட்டது. ஆனால், அந்நிய செலாவணி இல்லையென்றால், மற்ற நாடுகளுக்கு எவ்வாறு பணம் செலுத்துவது என்றும் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பினார்.

நாட்டில் எரிபொருள் இல்லாதமையினால் எதிர்காலத்தில் மின்சார துண்டிப்பு ஏற்படக்கூடும் என்றும் இந்த நிலைமை ஏற்பட்டால், மக்கள் எவ்வாறு நெருக்கடியை எதிர்கொள்வது என்பது குறித்த ஒரு திட்டம் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த நிலைமை தொடர்ந்தால் 2022 மார்ச் மாதத்திற்குள், உணவுப் பற்றாக்குறையுடன் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என ரணில் விக்ரமசிங்க எச்சரித்தார்.

ஸ்பேஸ் எக்ஸ் ன் Starlink இணையச் சேவை இலங்கையிலும் – பேச்சுவார்தைகள் ஆரம்பம் !

Starlink இணையச் சேவையை நாட்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு  தனது டுவிட்டர் செய்தியில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் பூர்வாங்க கலந்துரையாடல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலின் போது, ​​ஒழுங்குபடுத்தும் விடயங்கள் மற்றும் இந்தச் சேவைகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள் தொடர்பாக முதன்மையாக கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி கீழ்வருமாறு:

 

12 வயது மகளுடன் சேட்டை விட்ட நபரின் காதை அறுத்துதள்ளிய தந்தை – கிளிநொச்சியில் சம்பவம் !

மகளிடம் சேட்டை விட்டவரின் காதை தந்தை ஒருவர் அறுத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தருமபுரம் பகுதியில் நேற்றைய தினம் (28) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உறவினர்கள் இல்லாத போது 12 வயது மதிக்கத்தக்க மகளிடம் சேட்டை புரிந்தவரின் காது அறுக்கப்பட்டுள்ளதுடன், கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் தருமபுரம் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் வெட்டப்பட்ட வாள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வென்றது இந்திய விவசாயிகளின் ஓராண்டு கால போராட்டம் – வேளான் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம் !

இந்தியாவில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். மேலும், முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஒத்திவைப்புக்கு பிறகு, மக்களவையில் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. அப்போது, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் போரட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் பலத்த போராட்டத்துக்கு இடையே வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையையும் சபாநாயகர் நிராகரித்தார்.

மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராடி வந்த நிலையில், கடந்த 19-ம்திகதி அன்று 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்து அதன் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபாய் – இலங்கையில் நீரை தவிர அனைத்திற்கும் விலையேற்றம் !

தற்போது பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், 450 கிராம் பாணை குறைந்தபட்ச விலையாக 100 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பாரியளவில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக அச்சங்கத்தின் தலைவரான என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இரு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் மாத்திரமே உள்ளன. அந்த நிறுவனங்கள் தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய, டொலர் பிரச்சினையை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக நேற்று ஒரு கிலோகிராம் கோதுமை மா உள்ளூர் சந்தையில் 18.50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோதுமை மாவின் விலை ரூ.8 அல்லது ரூ.10 ஆக உயர்த்தப்பட்டது.ஒரு மாதத்துக்கு முன்னர் கோதுமை மா நிறுவனங்கள் ரூ.10 விலையை உயர்த்தின.

நீரை தவிர, பாண் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானம் !

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

இதன்காரணமாக மன்னார் மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் நாடாளுமன்றில் இன்று முற்பகல் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வடக்கில் மாத்திரமின்றி நாட்டின் பல பகுதிகளில் இந்தப் பிரச்சினை காணப்படுவதாக குறிப்பிட்டார். அத்துடன் வடக்கில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“சம்பளம் குறைவு – செலவு அதிகம்.” – மலையக தோட்டத்தொழிலாளர்கள் போராட்டத்தில் !

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று (29.12.2021) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றதோடு, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேயிலை மலையில் காணப்பட்ட நான்கு அடி, மூன்று அடி கொண்ட வளர்ந்த புற்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

தோட்ட நிர்வாகம் தற்போது வேலை நாட்களை குறைத்துள்ளதாகவும், தேயிலை செடிகளை பராமரிப்பதிலிருந்து கைநழுவி விட்டதால் தேயிலை மலைகள் காடாகி காணப்படுவதுடன், தொழிற் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இத் தொழிலாளர்கள் அரசாங்கத்தால் தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நிர்வாகம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக இருந்தால் கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால் நிர்வாகத்தால் நிர்ணயக்கப்படும் கொழுந்தினை பறிக்க முடியாத சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

அத்தோடு, தேயிலை செடிகளில் கொழுந்தின் விலைச்சல் பாரிய சரிவை ஏற்பட்டதன் காரணமாக 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலையில் அதற்கு குறைவாக கொழுந்து பறித்தால் ஒரு கிலோவுக்கு 40 ரூபா வீத சாரத்தில் சம்பள கணக்கு முடிப்பதால் மாத வருமானம் மிகவும் குறைவடைந்துள்ளதோடு, குடும்ப செலவினை கட்டுப்படுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தங்களது ஆதங்களை வெளிப்படுத்தினர்.

மேலும், திடீரென கோதுமை மாவின் விலையை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தாம் ஒவ்வொரு நாளும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உட்கொள்வதால் விலை அதிகரிப்பு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தோட்ட நிர்வாகமும் தேயிலை மலைகளுக்கு உரம், மருந்து தெளித்தல், துப்பரவு செய்தல் போன்ற காரியங்களை செய்வதில்லை.

இவ்வாறான நிலைமையால் தாம் சொல்லல்லா துயரங்களை அனுபவித்து வருவதாக இவர்கள் தெரிவிப்பதுடன், அரசாங்கம் தமது பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை எனவும் மலையக அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்குகளை பெறுவதற்கு வருவதாகவும், இனி வாக்கு கேட்டு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்ததுடன் தமக்கு உடனடியாக நல்ல தீர்வினை பெற்றுத் தர சம்மந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

முன்னாள் அரசியல் கைதியை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு !

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா- தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரையே, எதிர்வரும் 01.12.2021 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரசியல் கைதிக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக,  எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு 12 ஆம்  மாதம் 01 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு கெப்பிட்டல் கட்டடம் நாரயன்பிட்ட முகவரியில், 3ஆம் மாடிக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தொடர்ந்தும் அதிகரிக்கும் சிலிண்டர் வெடிப்புக்கள்.” – நாடாளுமன்றில் ஏற்றுக்கொண்ட இராஜாங்க அமைச்சர் !

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் தற்போது அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

இது தொடர்பில் பல அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும், அவை இந்த வாரத்தில் வழங்கப்பட உள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மூன்று விசாரணை அறிக்கைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சு அல்லது நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு உண்மைகளை மறைக்க எந்த காரணமும் இல்லை என்றும் அவர்கள் தகவல்களை வழங்குவார்கள். நிலைமையை தணிப்பதே தமது நோக்கமாகும். 2015 ஆம் ஆண்டு முதல் இது போன்ற 233 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வெள்ளிக்கிழமை இரு மாதிரிகள் விசாரணைக்கு அனுப்பப்பட்டதாகவும், சனிக்கிழமையன்று ஒரு அறிக்கை கிடைத்ததாகவும், அது மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மதிப்பாய்விற்கு அனுப்பப்பட்டது. இரத்தினபுரி, குருநாகல், கம்பஹா, காலி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து 12 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று அறிக்கைகள் பெறப்பட்டு, மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் இந்த விடயம் தொடர்பில் குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.