தேசம்நெற் இணையத்தில் ஓகஸ்ட் 13 முதல் “களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஓர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!” என்ற தலைப்பில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நேர்காணல் தொடர்பில் நேர்காணலை மேற்கொண்ட தம்பிராஜா ஜெயபாலனின் முகநூல் கடந்த ஒரு வாரமாக முழுமையாக முடக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நேர்காணலை வழங்கிய அசோக் யோகன் கண்ணமுத்துவின் முகநூல் பக்கத்திலும் குறிப்பிட்ட நேர்காணல் மட்டும் முடக்கப்பட்டது.
பெஸ்புக் – என்ற இந்த முகநூல் சமூகவலைத்தளத்தில் ஒரு போட்டியற்ற முற்றிலும் சர்வதிகார நிறுவனமாக வளர்ந்துவிட்டதன் எதிரொலியாக தன்னிச்சையாக முகநூல்களை தடைசெய்து வருகின்றது. இந்த தடைசெய்யும் முடிவுகள் பெரும்பாலும் மனிதர்களால் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக இம்முடிவுகளை கணணிகளே மேற்கொள்கின்றன. படங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும், சொற்களை அடையாளப்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் பதிவுகளை நீக்கியும் முகநூல்களைத் தடை செய்தும் வருகின்றனர். பெஸ் புக் பாவனையாளர்களின் பதிவுகளை வைத்து பல மில்லியன் லாபமீட்டும் இந்நிறுவனம் இப்பதிவுகளை கண்காணிப்பது தொடர்பிலோ அல்லது மற்றையவர்களுக்கு தீங்கு இழைப்பது தொடர்பிலோ குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தவில்லை என பெஸ்புக் பற்றிய பல்வேறு உள்வீட்டுத் தகவல்களையும் பொது மக்களுக்குக் கொண்டு வந்த பிரான்ஸஸ் ஹூயுஹன் தெரிவித்துள்ளார்.
முகநூல்களில் முதலாளித்துவம் எழுதினால் என்ன சோசலிசம் எழுதினால் என்ன தூஷணம் எழுதினால் என்ன அதன் மூலம் அந்நிறுவனம் வருமானத்தை ஈட்டிக்கொண்டிருக்கிறது. எமது பதிவுகளே அவர்களுடைய மூலதனம். ஆனால் எமது பதிவுகளை கண்காணிக்கும் வடிகட்டல்களில் அளவுக்கு மிஞ்சிய ஓட்டைகளை பெஸ்புக் கொண்டுள்ளது. கொலை மிரட்டல்களையும் தற்கொலைத் தூண்டுதல்களையும் தூஷணங்களையும் தங்குதடையின்றி பிரசுரிக்க அனுமதிக்கும் பெஸ்புக் சீருடையுடன் பிரபாகரனினதும் மாத்தையாவினதும் படத்தைக் கண்டால் துப்பாக்கிகளுடன் போராளிகளைக் கண்டால் அப்பதிவுகளை தடுக்கிறது முகநூல்களை முடக்குகிறது.
பெஸ்புக் உற்பத்தி சாதனங்களை தன் கையகப்படுத்திய இராட்சத நிறுவனம். அமெரிக்க ஜனாதிபதியையே தீர்மானிக்கின்ற வல்லமை பெஸ்புக்கிற்கு உண்டு. அரசுகளை ஆட்டிப்படைக்கின்ற அளவுக்கு எங்களைப் போன்றவர்களின் தரவுகளையும் பதிவுகளையும் வைத்து பெஸ்புக் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டுள்ளது. அரசுகளே அடிபணியும் போது தம்பிராஜா ஜெயபாலன் போன்றவர்கள் அற்பப்பதர்கள். உலகின் 20 சதவீதமான மக்கள் அண்ணளவாக 2 பில்லியன் பேர் பெஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். ஆகையால் உங்கள் பதிவுகளை பேஸ்புக்கை மட்டும் நம்பி பதிவிடவேண்டாம். உங்கள் முகநூல் முடக்கப்படும் போது உங்கள் பதிவுகளையும் நீங்கள் இழக்க வேண்டிவரும். அதிஸ்ட்ட வசமாக என்னுடைய பதிவுகள் பெரும்பாலும் தேசம்நெற் இணையத்தில் வெளியிடுவதால் எனது பதிவுகளை நான் இழக்கவில்லை. எனது பேஸ்புக் தேசம்நெற் இணையத்தை விளம்பரப்படுத்தவே.
என்னோடு பெஸ்புக்கில் மீண்டும் இணைய விரும்புபவர்கள் Theasm Jeyabalan இந்தப் பெயரில் என்னை அடையாளம் காணலாம்.