10

10

இங்கிலாந்தின் உலககிண்ண கனவை தகர்த்தார் டேரில் மிட்செல் – நியூசிலாந்து த்ரில் வெற்றி !

டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் அபு தாபியில் இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் அடித்தது. தாவித் மாலன் 30 பந்தில் 41 ஓட்டங்களும், மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 51 ஓட்டங்கள் சேர்த்தனர்.
3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ஓட்டங்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி, ஆடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர், 167 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்ட்டின் கப்தில் 3-வது பந்தில் வெளியேறினார். அடுத்த வந்த  கேன் வில்லியம்சன் 11 பந்துகளை சந்தித்து 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார்.
இதனால் நியூசிலாந்து 2.4 ஓவரில் 13 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் உடன், டேவன் கான்வே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.
இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்து அணி நெருக்கடிக்குள்ளானது. இந்த ஜோடி 13.4 ஓவரில் 95 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. டேவன் கான்வே 38 பந்தில் 46 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுதது வந்த கிளென் பிலிப்ஸ் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் உடன் ஜேம்ஸ் நீஷம் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவரில் 57 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதனால் இங்கிலாந்து வெற்றிபெறும் நிலை இருந்தது.
17-வது ஓவரை கிறிஸ் ஜோர்டான் வீசினார். இந்த ஓவரில் ஜேம்ஸ் நீஷம் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் நியூசிலாந்து அணிக்கு 23 ஓட்டங்கள் கிடைத்தது. ஆகவே, ஒரே ஓவரில் ஆட்டம் நியூசிலாந்து கைக்குள் வந்தது.
கடைசி 3 ஓவரில் 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை அடில் ரஷித் வீசினார். இந்த ஓவரில் நீஷம் ஒரு சிக்ஸ் விளாச, மிட்செல் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 41 பந்தில் அரைசதம் அடித்தார். இருந்தாலும் கடைசி பந்தில் ஜேம்ஸ் நீஷம் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 27 ஓட்டங்கள் விளாசினார்.
டேரில் மிட்செல் அதிரடி ஆட்டம் - நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி!
கடைசி 2 ஓவரில் நியூசிலாந்து அணிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கிறிஸ் வோக்ஸ் வீசிய இந்த ஓவரில் டேரில் மிட்செல் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் விளாசினார். கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட நியூசிலாந்து 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
டேரில் மிட்செல் 47 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

“கோலி ஆக்ரோஷமான வீரர். அவருடைய தலைமை இந்தியாவுக்கு அவசியம்.” – ஷேவாக் வலியுறுத்தல் !

இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) தலைவராக விராட் கோலி பணியாற்றி வந்தார்.தலைமை பொறுப்பு சுமையால் தனது துடுப்பாட்டத் திறன் பாதிக்கப்படுவதாக அவர் கருதினார். இதனால் 20 ஓவர் போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து மட்டும் அவர் விலகி உள்ளார்.

தற்போது முடிந்த 20 ஓவர் உலக கோப்பையோடு அவர் தலைவர் பதவியை துறந்தார். அதே நேரத்தில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோலி தொடர்ந்து தலைவர்  பதவியில் நீடிப்பார்.

20 ஓவர் தலைவர் பதவியில் இருந்து விலகினாலும், 20 ஓவர் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றதால் விராட் கோலியின் தலைமை பதவி குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தலைமை பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்படலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் டெஸ்ட், ஒருநாள் போட்டி தலைமை பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தலைமை பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று நான் நினைக்கிறேன். இது அவரது முடிவை பொறுத்தது. அணியில் ஒரு வீரராக விளையாட கோலி விரும்பினாலும், அது அவரின் முடிவுதான்.

விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை பெற்றுள்ளது. தலைமை பதவியில் அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர். ஆக்ரோ‌ஷமாக இருந்து அணியை வழி நடத்தினார்.

ஐ.சி.சி. போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்தும், அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் இருந்தது குறித்தும் இந்திய அணி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

இந்திய அணி கடைசியாக 2013 ஐ.சி.சி. போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது. அதன்பின் 8 ஆண்டுகளாக எதையும் வெல்லவில்லை. இதுகுறித்து நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும்.

இரு நாடுகளிடையே போட்டிகளில் வென்றாலும், உலக அளவிலான போட்டியை வெல்லும்போதுதான் மக்கள் நினைவு வைத்திருப்பார்கள். அதே நேரத்தில் கடினமான இந்த கால கட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் பெண் கல்வி உரிமை போராளி மலாலா !

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.  இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா, பல மாத சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறினார்.

பிறகு, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த மலாலா, பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி,  2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேலும், மலாலா, பெண் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு உதவும் வகையில், தனது பெயரில் நிதி நிறுவனம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார். பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார்.

இந்நிலையில், இங்கிலாந்து பிர்மிங்காமில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று எளிய முறையில் அசார் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார்.

திருமண பந்தத்தில் இணைந்தாா் அமைதிக்கான நோபல் வெற்றியாளா் “மலாலா“ - தமிழ்வின்
தனது திருமண நிகழ்வு குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “இன்று என் வாழ்வின் பொன்னான நாளாகும். அசாரும், நானும் வாழ்க்கையில் இணைய முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம்.
எங்கள் நிக்கா குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் பிர்மிங்காமில் உள்ள வீட்டில் நடந்தது. உங்களது ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள் ” என்று குறிப்பிட்டிருந்தார்.

“தேசியப்பட்டியலில் 50 வீதம் பெண்களுக்கு வேண்டும்.” – அமைச்சர் உதய கம்மன்பில

“தேசியப்பட்டியலில் 50 வீதம் பெண்களுக்கு வேண்டும்.” என புதிய ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான நாடாளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கூடியபோதே புதிய ஹெல உறுமய இந்தப் பரிந்துரையை முன்வைத்தது.

புதிய ஹெல உறுமய கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசேட குழு முன்னிலையில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிடுகையில், போஸ்டர் பிரசாரங்கள் தொடர்ந்தும் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

தேர்தல்களின்போது வேட்பாளர்கள் செலவு செய்யும் பணத்தின் அளவுக்கான வரையறையொன்றை ஏற்படுத்தல், தேர்தல் முடிவடைந்து மூன்று மாதங்களுக்குள் செலவுகள் குறித்த விபரங்களைப் பகிரங்கப்படுத்தல் மற்றும் நன்கொடைகளுக்கான மூலங்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியை நியமிப்பதற்கான தடவைகள், தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் செய்தல் போன்ற விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால. டி. சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், மதுர விதானகே, சாகர காரியவசம், குறித்த குழுவின் செயலாளரும் நாடாளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹண தீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

“ஜனாதிபதி கோத்தாபாயராஜபக்ஷ சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க மாட்டார்.” – இரா.சாணக்கியன்

“ஜனாதிபதி கோத்தாபாயராஜபக்ஷ சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க மாட்டார் என்பதெல்லாம் எமக்குத் தெரியும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஒரே நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என நாம் கேட்கின்றோம். எம்மைப் புறக்கணித்தால் நாம் வேறு எங்கு செல்வது? எனவே ஜனாதிபதியிடம் நாம் எதனையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்ன செய்வார் என்பது எமக்கும் தெரியும். ஜனநாயகத்தை பாதுகாக்க மாட்டார் என்பதும், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க மாட்டார் என்பதெல்லாம் எமக்குத் தெரியும்.

நாட்டில் இன்று ஒருபுறம் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தமது விவசாயத்தை ஏதேனும் ஒரு விதத்தில் முன்னெடுக்க முடியும். ஆனால் மக்களுக்கே பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது.

அடுத்த ஆண்டுக்குள் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நட்டஈடு கொடுத்துவிட்டு மக்களுக்கு ஏற்படும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு எவ்வாறு தீர்வு கொடுப்பது?

மக்களுக்கு ஒரு வேளை உணவு கிடைக்காவிட்டால் ஏற்படும் நிலை என்ன என்பது சகலருக்கும் தெரியும். அடுத்த ஒரு வாரத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். இதனை எவரும் மறுக்க முடியாது. இந்த நெருக்கடியில் கறுப்பு சந்தையின் தேவை அதிகரிக்கும். மக்களும் கறுப்புச் சந்தையை நாடும் நிலைமை ஏற்படும்” என்றார்.

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் 9105 குடும்பங்கள் பாதிப்பு !

9105 குடும்பங்களைச் சேர்ந்த 30,228 நபர்கள் யாழ்ப்பான மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் ஊடக சந்திப்பு இன்று (10) மதியம் ஒரு மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்த மழை காரணமாக 243 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானது. மிகக்குறுகிய காலத்திலேயே மழைவீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கின்றது. வயல் நிலங்கள் பலவும் வெள்ளப் பாதிப்புக்குள்ளனதாக அறியமுடிகின்றது. வெள்ள நிலைமை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 9105 குடும்பங்களைச் சேர்ந்த 30,228 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவைத் தவிர்ந்த ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே இந்த தரவுகள் கிடைத்திருக்கின்றன.

எவ்வாறிருப்பினும் 86 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இடம்பெயர்ந்தவர்கள் என்றவகையிலே 6 தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ள நிலையில் 92 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கால நிலை சீரடைந்து வருவதன் காரணமாக நாளைய தினம் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என நான் கருதுகின்றேன் என்றார்.

“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்களுக்கு இடம் – யார் அவர்கள்..?

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், திருமதி. யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனா்.

கலகொட அத்தே ஞானசார தேரர் ததலைமையில் “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் இடமல்ல.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

அரசாங்கம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் இடமல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

அரசாங்கம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு பொருத்தமான சூழலை உருவாக்குவதாக தெரிவித்த அவர் தாம் ஆரம்பத்தில் 65,000 பட்டதாரிகளுக்கு வேலைகளை வழங்கியதாகவும், தகுதியானவர்களின் விவரக்குறிப்பை பார்க்கும் போது, ​​பெரும்பான்மையானவர்கள் அழகியல் பிரிவில் படித்தவர்கள் அல்லது வெளியக பட்டதாரிகளாகவுள்ளனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இவ்வாறான நபர்கள் அரச துறைக்கு நன்மை தருவார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

துரதிஷ்டவசமாக அனைத்து அரசாங்கங்களும் அரச துறையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள போதிலும், அது அரச சேவையின் வினைத்திறனுக்காகவும் பொருளாதாரத்திற்கு நன்மையளிக்குமா என்றும் ஜனாதிபதி மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈ.பி.டி.பி ஆதரவுடன் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர் அப்பாத்துரை தெரிவு !

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர் அப்புத்துரை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் முன்னாள்  தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் காரைநகர்  பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

காரைநகர்  பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு இன்று (புதன்கிழமை) உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில்  இடம்பெற்றது

குறித்த அமர்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் பாலச்சந்திரன் போட்டியிட இருந்த போதிலும் அவருக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு அளிக்காத நிலையில் சுயேச்சை குழு கட்சியை சேர்ந்த ஒருவர் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டு ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவுடன் சுயேட்சை குழு  உறுப்பினர் அப்புத்துரை  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தவிசாளர் தெரிவு விசேட அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நடுநிலை வகித்துள்ளனர்

காரைநகர்  பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மூன்று உறுப்பினர்களும் சுயேட்சை குழுவில் மூன்று உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டு உறுப்பினர்களும்,ஈபி டி பியில் இருவரும்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் ஒருவரும் உள்ள நிலையில் ஈபிடிபியின் ஆதரவுடன் சுயேட்ச்சை குழுவானது தவிசாளர் பதவியினை கைப்பற்றியுள்ளது.

முடிவுக்கு வருகிறது ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு போராட்டம் – வெளியாகியுள்ள அறிவிப்பு !

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு ஒரே கட்டமாக தீர்வு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஆசிரியர் ‘அதிபர்கள்’ சங்கத்திற்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதிபர்-ஆசிரியர்   சம்பளப் பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு வழங்கப் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அதிபர்-ஆசிரியர் வேதன பிரச்சினைக்கு மூன்று கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு வழங்கப் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு வருகிறது என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன