17

17

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா !

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000-ம் ஆண்டு 156 லட்சம் கோடி டொலராக இருந்தது. அது 2020-ம் ஆண்டில் 514 லட்சம் கோடி டொலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனா காரணமாக இருந்துள்ளது.

இதன் மூலம் சீனா நாட்டின் சொத்து மதிப்பு அதி வேகத்தில் அதிகரித்து இருக்கிறது. உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினராக சீனா ஆவதற்கு முன்பு 2000-ம் ஆண்டில் அந்நாட்டின் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி டொலராக இருந்தது.

2020-ல் சீனாவின் சொத்து மதிப்பு 120 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதனால் உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 90 லட்சம் கோடி டாலராக உள்ளது. உலகின் மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கு மேல் 10 நாடுகளிடம் மட்டுமே உள்ளது.

மேலும் உலகின் பணக்கார நாடுகளான சீனா, அமெரிக்கா ஆகியவற்றின் சொத்துக்களில் மூன்றில் இரண்டு மடங்கு 10 சதவீத குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகின் சொத்து மதிப்பில் 68 சதவீதம் ரியல் எஸ்டேட்டில் உள்ளது. மற்றவைகள் உட்கட்டமைப்பு, இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் மிகக் குறைவாகவே அறிவு சார் சொத்துக்கள், காப்புரிமைகளில் உள்ளன.

பிரித்ததானியாவில் மனைவியை குத்திக்கொலை செய்த இந்தியவம்சாவளி நபர் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

பிரித்தானியாவில் மனைவியைக் குத்திக் கொலை செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த அனில் கில் (47) மற்றும் அவரது மனைவி ரஞ்சித் கில் (43) ஆகியோர் பிரித்தானியாவின் மில்டன் கினிஸ் நகரில் வசித்து வந்துள்ளதுடன், இருவருக்கும் மதுபானம் மற்றும் போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும் ஒன்றாக போதைப்பொருள் பயன்படுத்தும்போது, போதைப் பொருள் வழங்கும் ஆண் நபருக்கும், தனக்கும் உள்ள தொடர்பு குறித்து ரஞ்சித் கில், அவரது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அனில் கில், கூரிய ஆயுதத்தைப் பயன்படுத்தி அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலத்தைப் போர்வையில் சுற்றி அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் அவர் வீசி சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்து அயலவர்கள் அளித்த முறைப்பாடுக்கமைய, அனில் கில்லை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலதிக விசாரணையில் மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்ததுடன், அதில் அனில் கில் குற்றவாளி என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதற்கமைய, குற்றவாளியான அனில் கில் குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு !

மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் 1-ந்திகதி அந்த நாட்டு இராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்தது.

அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். ஆங் சான் சூகி, மட்டுமின்றி முன்னாள் அதிபர் வின் மைன்ட் மற்றும் மியான்மர் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆகியோர் மீதும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றதும், இதனை ஏற்க மறுத்த ராணுவம் புரட்சி செய்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.