லண்டனில் அரசியல், சமூக, கலை, இலக்கிய, நாடகச் செயற்பாடுகளில் நன்கு அறியப்பட்ட குட்டி என்று எல்லோராலும் வாஞ்சையுடன் அறியப்பட்ட தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் இன் இதயத்துடிப்பை, மருத்துவக்குழவினர் இன்று (நவம்பர் 23, 2021) அதிகாலை இரண்டுமணியளவில், அவருக்கு வழங்கப்பட்ட செயற்கை உயிராதரவுக் கருவியை நிறுத்தி, முடிவுக்கு கொண்டு வந்தனர். அவருடைய 52 வயது வாழ்க்கையின் அத்தியாயம் முடிவுக்கு வந்தபோது அவருடைய மனைவியும் குழந்தைகளும் நீண்ட நாள் நண்பனாகிய நானும் உடனிருந்தோம்.
சஞ்சீவ்ராஜ் உடைய வாழ்கையின் ஒரு பக்கத்தை பெரும்பாலும் அனைவரும் அறிவோம். அரசியலில் அதீத ஆர்வமும் ஈடுபாடும் உடையவர். தீப்பொறி குழவினருடன் மூன்று தசாப்தங்களாக புலம்பெயர் மண்ணில் மிக நெருங்கிப் பணியாற்றியவர். தீப்பொறியின் வெளியீடுகளாக வெளிவந்த உயிர்ப்பு, வியூகம் சஞ்சிகைகளின் வெளியீட்டில் முன்நின்று செயற்பட்டவர். தோழர் ரகுமான் ஜானுடைய நூல் வெளியீடுகளிலும் முன்நின்று செயற்பட்டவர்.
லண்டனில் வெளிவந்த ஈழபூமி பத்திரிகையில் இயக்குநர் புதியவன் ராசையா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். அத்தோடு பிற்காலத்தில் வெளியான வெளி பத்திரிகையை வெளியிடுவதில் புதிய திசைகள் அமைப்போடு நெருக்கமாகச் செயற்பட்டவர்.
லண்டனில் தற்போது தனக்கெனத் தடம்பதித் தமிழர் தகவல் என்ற தகவல் தொகுப்புக்கான எண்ணத்தை தமிழில் முதலில் உருவாக்கிய செயற்பாட்டாளர்களில் இவரும் ஒருவர். அன்றைய தமிழர் தகவல் மிக வெற்றிகரமாக இயங்கியது.
லண்டனின் தென் கிழக்கில் இசைக்குழவை உருவாக்கி இசை நிகழ்ச்சிகள் மூலம் வருமானத்தைப் பெற்று பொதுச்சேவைகள் பலவற்றைச் செய்த முன்னோடிகளில் இவரும் ஒருவர்.
நாடக இயக்குநர் க பாலேந்திராவின் தமிழவைக்காற்றுக் கழக நாடகக் குழவுடன் சில தசாப்தங்களாகவே இவர் இணைந்து பணியாற்றி வந்திருக்கின்றார். அத்தோடு கலை, இலக்கிய செயற்பாட்டாளர்களுடனும் தன்னை இணைத்துக்கொள்வார். ஆரம்ப காலங்களில் புலம்பெயர் தேசங்களில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்புக்கள், பெண்கள் சந்திப்புக்கள், அரசியல் நிகழ்வுகளில் இவர் தன்னையும் இணைத்துக்கொண்டவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக விளையாட்டுக்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர்.
யாழ் கொக்குவிலைச் சேர்ந்த இவர் ஆரம்பக் கல்வியை அப்பகுதியிலும் அதன் பின் இடைநிலைக் கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும் பயின்று இந்துவின் மைந்தனானவர். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தில் சஞ்சீவ்ராஜ் தன்னை எப்போதும் ஒரு மையப் புள்ளியாக தக்க வைத்துக்கொண்டவர்.
இவருடைய நெருங்கிய வட்டத்தில் இல்லாவிட்டாலும் அரசியல், சமூக, கலை, இலக்கிய, நாடகச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இவர் நன்மதிப்பொன்றைத் தக்க வைத்தவர். பொதுவாக வீட்டுக்கு வெளியே நல்ல நண்பர். சமூக அக்கறையாளன். தீவிர செயற்பாட்டாளன். ஒரு முற்போக்காளன். ஆனால் இவற்றையெல்லாம் உளப்பூர்வமாக இவர் நம்பினாரா என்பது பற்றி வெவ்வேறு தரப்பினருக்கு வெவ்வேறு அபிப்பிராயங்கள் உள்ளது.
தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் எவ்வாறு சமூகத்தின் முன் தன்னை முன்நிறுத்த முயன்றாரோ அதனை அவரால் சாதித்துக்கொள்ள முடியவில்லை. அவருடைய இறுதிக்காலங்கள் மிகவும் வேதனையானவை. ஆனால் அவரோடு சேர்ந்து பயணித்தவர்கள், அவருடைய இந்துவின் மைந்தர்கள் மற்றும் கல்லூரிகளின் நண்பர்கள், சமூக, கலை, இலக்கியச் செயற்பாட்டாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள்: சஞ்சீவ்ராஜ் எவ்வாறு சமூகத்தின் முன்தன்னைக் காட்ட முயன்றாரோ அதனை அவருடைய வாழ்வுக்குப் பின் செய்துகாட்ட முன்வருவதே நாங்கள் சஞ்சீவ்ராஜ்க்கு செய்யக்கூடிய அஞ்சலியாக இருக்கும்.
அந்த வகையில் அவருடைய நினைவாக ஏதும் செய்ய விரும்பினால் பணத்தையும் பொருளையும் வீண்விரயம் செய்யாமல், சஞ்சீவ்ராஜ் தனது வாழ்க்கையை எதனால் இழந்தாரோ அந்த மது அடிமைத்தனத்திற்கு எதிராக புலம்பெயர் தேசத்திலும் தாயகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளைச் செய்ய வேண்டும். விழிப்புணர்வுப் பிரசுரங்கள், நூல்கள், தமிழ் சமூகத்தில் மது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வுகள், மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான செயற்திட்டங்கள் ஆகியவற்றிலேயே கூடிய கவனத்தைச் செலுத்த வேண்டும்.
சஞ்சீவ்ராஜ் உடைய வாழ்வின் பெரும்பங்கை மதுஉட்கொண்டுவிட்டதால் அவரது மனைவி பிள்ளைகள் மதுபோதைக்கு எதிரான விழ்ப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு சஞ்சீவ்ராஜ் இன் ஆத்மசாந்தியடையச் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
ஆகையால் அவருக்கு அஞ்சலி கையேடுகளைத் தயாரிப்பதற்குப் பதிலாக மதுபோதைக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசுரங்கள், கையேடுகள், படைப்புகளைக் கொண்டுவந்து இன்னுமொருவர் இன்னுமொரு குடும்பம் இவ்வாறு பாதிப்படையாமல் காப்பாற்றப்பட வேண்டும்.