November

November

“இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் திட்டம் ஆரம்பம்.” – தொடக்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

“இலங்கைத் தமிழா்களின் நலன்காக்க தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும். இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவா்கள் அல்லர்.” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் 106 இடங்களில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக முதல் கட்டமாக ரூ. 142.16 கோடி மதிப்பில் 3 ஆயிரத்து 510 புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. இதைத் தவிர, முகாம்களில் ரூ.30 கோடியில் அடிப்படை வசதிகள், ரூ.12.41 கோடியில் உயா்த்தப்பட்ட பணக் கொடை, ரூ.4.52 கோடியில் கைத்தறித் துணிகள் என ரூ.225.86 கோடி மதிப்பிலான 12 வகையான நலத்திட்ட உதவிகள் செயற்படுத்தப்படவுள்ளன.

இதனடிப்படையில், வேலூா் மேல்மொணவூா் முகாமில் உள்ள 220 குடும்பங்களுக்கு ரூ. 8.91 கோடி மதிப்பில் புதிய வீடுகள் உட்பட ரூ.10.03 கோடி மதிப்பில் 11 நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடக்கிவைத்தாா்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“இலங்கைத் தமிழா்கள் என்பது ஒரு அடையாள சொல். மற்றபடி தமிழா்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான். இலங்கைத் தமிழா்கள் இனத்தால், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் ஒன்றுபட்டவா்கள்.

இலங்கையில் தமிழா்கள் பாதிக்கப்பட்ட காலம் முதலே அவா்களுக்காக குரல் கொடுத்துவரும் இயக்கம் திமுக. 1983ஆம் ஆண்டில் அவா்கள் முகாம்கள் அமைத்து பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனா். இந்த முகாம்கள் மோசமாக இருந்த நிலையில் ஏராளமான திட்டங்களை 1997இல் முன்னாள் முதல்வா் கருணாநிதி செயற்படுத்தியதால் தன்னிறைவு அடைந்தனா்.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் இலங்கைத் தமிழா்களுக்காக எந்த நன்மையும் செய்யப்படவில்லை. மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு மீண்டும் நல்வாழ்வுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. அகதிகள் முகாம்கள் என்பதை மாற்றி, இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்கள் என அறிவிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழா்களின் நலன் காக்க தி.மு.க.வும் தி.மு.க அரசும் எப்போதும் துணை நிற்கும். அவா்கள் ஆதரவற்றவா்கள் அல்லர். என்னை இலங்கை தமிழா்கள் உடன்பிறப்பாக நினைத்துக்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வர 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் உறுதி !

COP26 காலநிலை உச்சிமாநாட்டின் முதல் பெரிய ஒப்பந்தத்தில், 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் 2030ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரவும், மாற்றியமைக்கவும் உறுதியளித்துள்ளனர்.

உறுதிமொழியில் கிட்டத்தட்ட 19.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பொது மற்றும் தனியார் நிதி உள்ளது.

கனடா, பிரேஸில், ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா மற்றும் கொங்கோ ஜனநாயக குடியரசு ஆகிய நாடுகள் உறுதிமொழியில் கையெழுத்திடப்போவதாக தெரிவித்துள்ளன. இந்த நாடுகளில் 85 சதவீத காடுகள் உள்ளன.

சேதமடைந்த நிலத்தை மீட்டெடுக்கவும், காட்டுத்தீயைச் சமாளிக்கவும் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும் சில நிதி வளரும் நாடுகளுக்குச் செல்லும்.28 நாடுகளின் அரசாங்கங்கள் உணவு மற்றும் பாமாயில், சோயா மற்றும் கோகோ போன்ற பிற விவசாயப் பொருட்களின் உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து காடழிப்பை அகற்ற உறுதியளிக்கும்.

இந்த தொழில்கள் விலங்குகள் மேய்வதற்கு அல்லது பயிர்கள் வளர இடவசதி செய்ய மரங்களை வெட்டுவதன் மூலம் வன இழப்பை ஏற்படுத்துகின்றன.காடழிப்புடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் முதலீட்டை நிறுத்த உலகின் 30க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் உறுதியளிக்கும்.இந்த நடவடிக்கையை வல்லுநர்கள் வரவேற்றுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு முந்தைய ஒப்பந்தம், காடழிப்பை மெதுவாக்குவதில் தோல்வியடைந்தது.

மரங்களை வெட்டுவது காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது, ஏனெனில் இது வெப்பமயமாதல் வாயு CO2ஐ உறிஞ்சும் காடுகளை குறைக்கிறது.

கிளாஸ்கோவில் உலகளாவிய மாநாட்டை நடத்தும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், ‘பூமியின் காடுகளைப் பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் ஒரு முக்கிய ஒப்பந்தம் இதுவென’ கூறியுள்ளார்.

காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால் கிளாஸ்கோவில் இரண்டு வார உச்சிமாநாடு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை பெண்கள் மயங்கிய நிலையில் கிளி மருத்துவமனையில்!

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலிருந்து மயங்கிய நிலையில் பணியில் இருந்த சில பெண்கள் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு வைத்தியசாலையில் இருந்து தகவல் வந்ததையடுத்து அக்குடும்பத்தினர் வைத்திய சாலைக்கு விரைந்துள்ளனர். மாலை இரண்டு மணி முதல் இரவு பத்துமணி வரையான நேரத்தில் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களே கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இதுவரை தேசம்நெற் க்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

பிரேசிலில் வங்கிக்கொள்ளையில் ஈடுபட்ட 25 பேரை சுட்டுக்கொன்ற பொலிஸார் !

பிரேசில் நாட்டின் மினாஸ் ஜெராயிஸ் நகரின் பிரதான சாலையில் பல்வேறு வங்கிக் கிளைகள் மற்றும் ஏ.டி.எம் மையங்கள் உள்ளன. நேற்று அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் வங்கிகளுக்குள் சென்று  கொள்ளையடிக்க முயன்றது.
வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 25 பேர் பலி – குறியீடுதகவலறிந்து அங்கு வந்த போலீசார் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொள்ளையர்களும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சண்டையில் 25 கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற இயந்திர துப்பாக்கிகள், துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் குண்டு துளைக்காத ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையில், விடுமுறையில் வங்கிகளை கொள்ளையடிக்க இந்த குழு திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது என போலீசார் தெரிவித்தனர்.

கோட்டபாயராஜபக்ஷவை கைது செய்யுங்கள் – கிளாஸ்கோ நகரில் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் !

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள கிளாஸ்கோ நகரில் உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் சர்வதேச பருவ நிலைமாற்ற மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ கிளாஸ்கோ நகருக்கு சென்றுள்ளார். அவருடைய வருகைக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

2009-ம் ஆண்டு நடந்த இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்த கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக இங்கிலாந்து முழுவதிலும் இருந்து தமிழர்கள் கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மற்ற வெளிநாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களும் அங்கு வந்து குவிந்துள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ஷ கொலை குற்றவாளி என விமர்சிக்கும் விளம்பர பதாகைகள், லேசர் ஒளி காட்சிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளதால் கிளாஸ்கோ நகரில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

கோத்தபாய ராஜபக்ஷ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் நடந்தன. கோத்தபய ராஜபக்சே செய்த படுகொலைகள் தொடர்பாக ஸ்காட்லாந்து பத்திரிகைகளிலும் பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன.

பதவிகளை பணயம் வைத்துள்ளோம் – பதறுகிறார் அமைச்சர் கம்பன்பில

பதவிகளை பணயம் வைத்து நானும் எனது குழுவினரும் போராடி வருகின்றோம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய சட்ட அபிவிருத்தி அதிகார சபையை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது பங்காளிகளுடன் உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபடாத காரணத்தினாலேயே, அரசாங்கத்தின் பிரச்சினைகள் வெளியில் பேச வேண்டி இருந்தது. தற்போதைய அரசாங்கம் 16 கட்சிகளின் கூட்டமைப்பாகும். உள்ளக பேச்சுவார்த்தைகள் இல்லாத போது பிரச்சினைகள் நிரம்பி வழியும். பதவிகளை பணயம் வைத்து நானும் எனது குழுவினரும் போராடி வருகிறோம். எங்களை விரட்டினால் அந்தப் பதவிகளைப் பெற்றுவிடலாம் என நினைத்தவர்களே எம்மை அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு கோருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

வயல் வரம்பில் நடக்கத் தெரியாதவர் விவசாய அமைச்சர் – மைத்திரி காட்டம்

விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை தொடர்பில் நான் கூறும் கருத்துக்களை அரசாங்கம் செவிமடுப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.
பகமூன பிரதேசத்தில் விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்தளவிற்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. விவசாயிகள் தொடர்பில் இந்த அரசாங்கத்துடன் எத்தனை தடவைகள் பேசினாலும் அரசாங்கம் அதனை செவிமடுப்பதில்லை. விவசாயத்துறை அமைச்சர் வயலில் உள்ள வரம்புகளில் கூட செல்லத் தெரியாதவராவார். சில இராஜாங்க அமைச்சர்கள் என்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளால் என்னால் பொலன்னறுவை மாவட்டத்திற்கு செல்ல முடியாதுள்ளது என்று கூறினேன். இதனை அடிப்படையாகக் கொண்டே குறித்த இராஜாங்க அமைச்சர்கள் என்னை விமர்ச்சிக்கின்றனர். எனினும் அவற்றை நான் கவனத்தில் கொள்வதில்லை. நான் விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்க மாட்டேன். சேதன உரத்தினைப் பயன்படுத்தி விவசாயத்தினை மேற்கொள்வதற்கு விவசாயிகளை பழக்கப்படுத்த வேண்டும் என்றார்.