November

November

லங்கன் பிரிமியர் லீக் 2020 – காலி கிளேடியட்டரின் புதிய தலைவராகிறார் அப்ரிடி! 

LPL கிரிக்கெட் போட்டி தொடரின் காலி க்ளேடியேடர்ஸ் அணிக்கு தலைவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சஹிட் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

குறித்த அணிக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க தலைவராகா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் LPL தொடரில் இருந்து விலகுவதாக அவர் அண்மையில் அறிவித்திருந்தார் .

மேற்படி அணியின் உப தலைவராக பானுக ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

உலகின் முன்னிலை வீரர்கள் பங்கேற்கும் ATP Finals டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு முன்னேறினார் ரஃபேல் நடால் !

உலக டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் (Rafael Nadal) அரையிறுதிக்‍கு முன்னேறியுள்ளார்.

உலகின் முன்னிலை வீரர்கள் 8 பேர் பங்கேற்கும் ATP Finals டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகின்றது.

வீரர்கள் இரு பிரிவுகளாக பிரிக்‍கபட்டு விளையாடி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஒன்றில், உலக தரவரிசையில் 2ஆம் இடத்திலுள்ள ஸ்பெயின் ரஃபேல் நடால், கிரேக்‍க வீரர் Stefanos Tsitsipas-ஐ எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-4, 4-6, 6-2 என்ற செட்கணக்‍கில் வெற்றிபெற்று அரையிறுதிக்‍கு முன்னேறியுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில், ரஷ்ய வீரர் Daniil Medvedev-வை, ரஃபேல் நடால் எதிர்கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

லங்கா பிரீமியர் லீக்2020 – Jaffna Stallions அணியின் உரிமையாளர்களில் ஒருவராகிறார் Microsoft Ventures நிறுவனத்தின் நிறுவுனர் !

2020ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் வரும் நவம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகின்றது. டிசம்பர் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடர், ஹம்பாட்தோட்டை, சூரியவௌ மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ள மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் யாழ்ப்பாண பகுதியை மையப்படுத்தி கலந்து கொள்ளும் Jaffna Stallions அணியின் உரிமையாளர்களில் ஒருவராக  Microsoft Ventures நிறுவனத்தின் நிறுவுனரும், அமெரிக்காவின் Seattle மாநிலத்தை தளமாகக் கொண்டியங்கும் தொழில்முனைவருமான Rahul Sood,  இணைந்துள்ளார்.

Jaffna Stallions அணியின் வளர்ச்சியிலும் சர்வதேச ரீதியாக அதனைப் பிரபலப்படுத்துவதிலும் Rahul Sood முக்கிய பங்காற்றவுள்ளார் .

இது தொடர்பாக  Jaffna Stallions அணியின் பிரதம மூலோபாய அதிகாரியான (Chief Strategy Officer) ஆனந்தன் ஆர்னல்ட் குறிப்பிடும் போது “Jaffna Stallions அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக Rahul Soodஐ வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சர்வதேச வர்த்தகத்திலும், புதிய தொழில் முயற்சிகள் ஆரம்பிப்பதிலும் அவருக்கு இருக்கும் அனுபவம் எங்களிற்கு பயனுள்ளதாக இருக்கும். எங்களது அணியை சர்வதேச ரீதியாக பிரபலப்படுத்துவதிலும் அதன் வளர்ச்சியிலும் Rahul Sood அளப்பரிய பங்காற்றுவார்” என தெரிவித்துள்ளார். .

இதே நேரம் , இந்தத் தொடருக்கான ஒளிபரப்பாளர்கள் உரிமையைப் பெற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளின் பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை சுயாதீனத் தொலைக்காட்சியான ஐ.ரி.என்., இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ், பாகிஸ்தானின் ஜியோ மற்றும் பி.டி.வி (Geo and PTV) ஆகிய அலைவரிசைகள் உரிமையைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காளி பூஜையில் கலந்து கொண்ட “ஷாகிப் அல் ஹசனை துண்டாக வெட்ட வேண்டும்“ என கொலை மிரட்டல் !

பங்களாதேஷ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்டம் தொடர்பாக அவரை அணுகியதை மறைத்ததால் ஓராண்டு தடைபெற்றார். தற்போது அந்த தடை முடிந்ததால் வங்காளதேச அணிக்கு திரும்ப பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற காளி பூஜையில் கலந்து கொண்டார். அதன்பின் தன்னுடைய முகநூல் கணக்கில் நேரடி காணொளி மூலம் முஸ்லீம் உணர்வை புண்படுத்தியதாக மோசின் தலுக்தெர் என்பவர் ஷாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஷாகிப் அல் ஹசனை துண்டாக வெட்ட வேண்டும் என அந்த நபர் கோபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பயிற்சி மேற்கொள்ளும் அவருக்கு வங்காள தேசம் கிரிக்கெட் சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. காளி பூஜைக்கு முன்னதாக நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இது முஸ்லீம்களின் உணர்வை புண்படுத்துவதாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டிகளிலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகல் !

இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். முன்னதாகவே இந்தப்போட்டிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட கொரோனா தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட இப்போட்டிகள் இம்மாதம் 27 ஆம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் LPL போட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். கண்டி டஸ்கர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த கெயில், சொந்தக் காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற IPL போட்டியில் பங்கேற்ற கெயில், பஞ்சாப் அணிக்காக 7 ஆட்டங்களில் விளையாடி 288 ஓட்டங்களை எடுத்தார்.

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று : பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி !

உலகக் கிண்ணக்  காற்பந்து தகுதிச்  சுற்று போட்டிகளில் பிரேஸில், ஆர்ஜென்டினா அணிகள் வெற்றி பெற்றன. 22ஆவது உலகக் கிண்ணக் காற்பந்துப்  போட்டி கத்தாரில் 2022ஆம் ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான தென்அமெரிக்க கண்டத்துக்குரிய அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 5ஆவது இடம் பிடிக்கும் அணி ‘பிளே-ஆப்’ சுற்று மூலம் வாய்ப்பை பெற முடியும்.

இந் நிலையில் உருகுவே தலைநகர் மோன்ட் வீடியோவில் நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சம்பியனான பிரேஸில் அணி, 2 தடவை சம்பியனான உருகுவேயை எதிர்கொண்டது.குறித்த போட்டியில் பிரேஸில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.

மற்றொரு போட்டியில்  முன்னாள் சம்பியனான ஆர்ஜென்டினா அணி, பெருவை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை சாய்த்தது.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப்போட்டி அணிகள் எவ்வாறு தெரிவு செய்யப்படும்? – வெளியிட்டது ஐ.சி.சி !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடர்ச்சியாக  நடைபெற்று வருகின்கிறது. இதன்படி ,மொத்தம் உள்ள 9 அணிகளும் உள்ளூர், வெளிநாடு அடிப்படையில் குறைந்தது 6 தொடர்களில் பங்கேற்க வேண்டும்.

இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.

இதுவரை நடந்த போட்டியின் அடிப்படையில் இந்தியா 360 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 292 புள்ளிகளுடனும், நியூசிலாந்து 180 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் 166 புள்ளிகளுடனும் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

கொரோனா வைரஸ் திடீரென ஏற்பட்டதால் பல்வேறு தொடர்கள் ரத்து செய்யப்பட்டன. டெஸ்ட் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இதனால் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஐ.சி.சி. புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புள்ளிகளின் சதவீத அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான அணிகளை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சதவீத அடிப்படையில் ஆஸ்திரேலியா 82.2 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 75 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 60.83 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று – பிரேசில் நட்சத்திர வீரா் நெய்மா் விலகல் !

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் இருந்து பிரேசில் அணியின் நட்சத்திர வீரா் நெய்மா் காயம் காரணமாக விலகியுள்ளாா்.

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் பிரேசில் அணி, உருகுவே அணியுடன் அடுத்த வாரம் மோதுகிறது. இந்த நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மா் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உருகுவேக்கு எதிரான தகுதிச்சுற்றில் இருந்து விலகியுள்ளாா். சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மைன் அணிக்காக விளையாடியபோது நெய்மருக்கு காயம் ஏற்பட்டது.

இதுதொடா்பாக பிரேசில் கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பிரேசில்-உருகுவே இடையிலான தென் அமெரிக்க தகுதிச்சுற்றில் நெய்மா் விளையாடமாட்டாா்’ என குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து பிரேசில் அணியில் நெய்மருக்குப் பதிலாக பெட்ரோ சோ்க்கப்பட்டுள்ளாா்.

பெட்ரோ 2018, செப்டம்பரில் பிரேசில் அணிக்காக தோ்வு செய்யப்பட்டாா். ஆனால், முழங்கால் பிரச்னை காரணமாக அறிமுக ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்தாா். அதன்பிறகு இப்போது பிரேசில் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளாா். பிரேசில் அணியின் பின்கள வீரரான மெனினோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவா் வெனிசுலா மற்றும் உருகுவே அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளாா்.

விடுதலைப்புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்க கூடாது – இந்தியா வேண்டுகோள் ?

பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது என பிரித்தானியாவிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்தியத் இந்தியாவின் நெய்தி ஊடகங்கள் பல  தெரிவித்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா! - jaffnavision.com

2000ஆம் ஆண்டளவில் பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இணைத்தது. யுத்தம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இலங்கையில் எந்த விதமான வன்முறைகளும் இடம்பெறாததையடுத்தும் புலிகள் அமைப்பின் தடையை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த நிலையில் புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சும் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கக்கூடாதென இந்தியா. பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது தடவையாக ஐ.பி.எல் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது மும்பை – தொடரின் விருதுகள் பற்றிய முழுமையான விபரங்கள் இதோ !

ஐ.பி.எல்2020 இன் இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களான மார்கஸ் ஸ்டோய்னிஸ் (0), தவன் (15), ரகானே (2) சொற்ப ஓட்டங்ககளில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.  அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் (65ஓட்டங்கள்), ரிஷ்ப் பண்ட் (56ஓட்டங்கள்) சிறப்பாக விளையாட டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 பந்துப்பரிமாற்றங்களில் 7 இலக்குகள் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் அடித்தது.
மும்பை இந்தியன்ஸ்க்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்
பின்னர் 157 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டி காக் 12 பந்தில 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4.1 பந்துப்பாரிமாற்றங்களில் 45 ஓட்டங்கள் விளாசியது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் 36 பந்தில் அரைசதம் விளாசி மறுமுனையில் சிறப்பாக விளையாடினார் ரோகித் சர்மா.
டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்அடுத்து வந்த இஷான் கிஷனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மும்பை அணி வெற்றியை நோக்கி சென்றது. 17.2ஆவது பந்துப்பரிமாற்றத்தில்  அன்ரிச் நோர்ஜே வீசிய பந்தில் ரோகித் சர்மா 68 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணிக்கு 22 பந்தில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த பொல்லார்ட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.
ஆனால் 18-வது பந்துப்பரிமாற்றத்தில்  முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். ஸ்கோர் சமமான நிலையில் ஹர்திக் பாண்ட்யா 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குருணால் பாண்ட்யா ஒரு ஓட்டம் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 18.4 பந்துப்பரிமாற்றத்தில் 5 இலக்குகள் இழப்பிற்கு 157  ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருது மும்பை அணியின் டிரெண்ட் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற டிரெண்ட் போல்ட்
இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல் கோப்பையை ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இஷான் கிஷன் 19 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.
இந்த லீக் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவிக்கும் துடுப்பாட்ட வீரருக்கு செம்மஞ்சள் தொப்பியும், அதிக இலக்குகள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு ஊதா  தொப்பியும் வழங்கப்படும்.
அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் கே.எல் ராகுல் 14 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 670 ஓட்டங்கள் குவித்து செம்மஞ்சள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
17 போட்டிகளில் 30 இலக்குகள் வீழ்த்திய ரபாடா ஊதா தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
மேலும் விருது பெற்றவர்கள்:
வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) – தேவ்தத் படிக்கல் (ஆர்.சி.பி)
ஃபேர் பிளே விருது – ரோகித் சர்மா (மும்பை)
கேம் சேஞ்சர் விருது – கேஎல் ராகுல் (பஞ்சாப்)
சூப்பர் ஸ்டிரைக்கர் விருது – பொல்லார்டு (மும்பை)
அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது – இஷான் கிஷண் – (மும்பை- 30 சிக்சர்)
பவர் பிளேயர் விருது – டிரெண்ட் போல்ட் (மும்பை)
மதிப்பு மிகுந்த வீரர் – ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்)