இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பலநாடுகளில் வசிக்கும் பெண்கள் சந்தித்து கருத்துக்களை பரிமாறவும், விவாதங்களை முன்னெடுக்கும் தளமாக அமையும் பெண்கள் சந்திப்பின் 29 ஆவது தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி யேர்மனின் தலைநகரான பேர்லினில் நடைபெறவுள்ளது.
December
December
1. பேரினவாத அரசு என்ற வகையில் தமிழ், முஸ்லீம் மக்களிற்கும் உலகமயமாக்கலின் அடிமைகள் என்ற வகையில் முழு இலங்கை மக்களிற்கும் இலங்கை அரசு பொது எதிரி. 2. இலங்கை அரசு படுகொலைகள் உட்பட மிக மோசமான மனித உரிமைமீறல்களை மேற்கொண்டு உள்ளது. 3. நான் விபரம் தெரிந்த நாள் முதல் இலங்கை அரசையும், இயக்கங்களின் வன்முறைகளையும் மற்றும் பிராந்திய, சர்வதேச மக்கள் விரோத அரசுகளையும் எதிர்த்து வருகின்றேன்.
சைவர்கள் காலையில் எழுந்ததும் எரித்த சாணியை அள்ளிப் பூசுவது போல் கிறிஸ்த்தவர்கள் சாப்பிடுவதற்கு முன்னும், படுக்கைக்கு போக முன்னும், பிறகு ஒரு முக்கியமான காரியத்திற்கு முன்னும் செபம் சொல்லுவது போல் ஒவ்வொரு கட்டுரை எழுதும் போதும் மேலே குறிப்பிட்ட 3 விடயங்களையும் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் வாழ் நாள் முழுவதும் மக்கள் விரோதிகளை எதிர்த்து வந்தாலும் இலங்கை, இந்திய அரசின் உளவாளிகள் என்று ரூம் போட்டு யோசித்து ஒரு கட்டுரை எழுதி விடுவார்கள். ஆனால் இப்படியான பொய்க் குற்றச்சாட்டுக்களை வைக்கும் இணையங்களில் தான் புலிகளின் ஆதரவாளர்களும் மகிந்தாவின் ஆதரவாளர்களும் ஈழவிடுதல, மனிதாபிமானம், புரட்சி என்று கட்டுரைகள் எழுதி காமடி பண்ணுகின்றார்கள்.
கொழும்பில் நடக்கவிருக்கும் தமிழ் எழுத்தாளர் மகாநாடு குறித்து கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. இந்த மகாநாடு இலங்கை அரசினால் நடாத்தப்பட்டால் நிச்சயமாக எல்லோரும் எதிர்க்க வேண்டும். அல்லது அரசு சார்பானவர்கள் முன்னின்று நடாத்தினால் அதனை எதிர்த்தே ஆக வேண்டும். முருகபூபதி, ஞானசேகரன் போன்ற அமைப்பாளர்கள் இது இலங்கை அரசின் ஆதரவில் நடக்கவிருக்கின்ற மகாநாடு அல்ல என்று உறுதி கூறுகின்றார்கள். எழுத்தாளர்களினால் சுயாதீனமாக ஒழுங்கு செய்யப்படும் மகாநாட்டினை எதற்காக எதிர்க்க வேண்டும். போரினால் கருகிப் போய் புல் பூண்டு இல்லாத பாலையாய் இறுகிப் போயிருக்கும் தமிழ் சூழலில், மெல்லிதாக அரும்புகின்ற முளைகளை ஏன் முதலிலேயே கிள்ளிப் போட வேண்டும்.
இன்று இலங்கையில் இருக்கின்ற கொலைச் சூழலில் இந்த மகாநாடு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் தான் நடத்த முடியும். இலங்கையின் பாசிச அரசினை எதிர்த்துக் கொண்டு இவர்களால் இந்த மகாநாட்டினை இலங்கையில் நடத்த முடியாது என்பது எல்லோரும் அறிந்த யதார்த்தம். இலங்கை அரசினை நியாயப்படுத்திக் கொண்டு இந்த இலக்கிய நிகழ்வை நடத்தவில்லை என்பதன் அடிப்படையிலேயே இதை ஆதரிக்க வேண்டும். இலக்கியம் நாணயமானதாகவும், மக்கள் பக்கமும் நின்று தன்னை வெளிப்படுத்துமாயின் இன்றைய அராஜக சூழலில் அதுவே போதுமானது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கை அரசினைக் கணடிக்காமல் புடுங்கக் கூடாது என்று கூறுபவர்கள், இலங்கையில் போய் நின்று அதைச் சொல்ல முடியுமா?. வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள், இப்படியான சுயாதீனமான நிகழ்வுகளை கண்டித்து எழுதுபவர்கள் இவற்றினை இலங்கையில் போய் ஏன் செய்வது கிடையாது?.
இந்த மகாநாட்டினை காட்டி, மகிந்தா தான் தமிழர்களிற்கு உரிமை கொடுத்துள்ளேன் என்று தமிழ் நாட்டவர்களிற்கும், வெளி நாடுகளிற்கும் காட்டி விடுவாராம். தமிழ் படத்தில் எம். ஜி. ஆர். ஒரு தாடியை மட்டும் ஒட்டி விட்டு, மாறு வேடத்தில் போகும் போது எதிரிகள் எம். ஜி.ஆரை அடையாளம் தெரியாமல் குழம்புவது போல், மகிந்தா இந்த மகாநாட்டினைக் காட்டி தனது முகத்தினை உலக மக்களிற்கு மறைத்து விடுவாராம்.
தமிழ் மக்களை கொலை செய்யும் இலங்கை மண்ணில் இப்படியான நிகழ்வுகளை நடத்தக் கூடாது என்றால் தண்டகாரண்யாவிலும், காஸ்மீரிலும் – இந்தியாவிலோ அல்லது உலகம் முழுவதும் உயிர் உறிஞ்சும் அகிம்சையின் விளை நிலங்களான மேற்கு நாடுகளிலோ நடத்தினால் பரவாயில்லை என்பது தான் இவர்களின் தீர்வு.
இந்த மகாநாடு குறித்து ஆதாரங்கள் எதுவும் வைக்காமல் முதலில் எதிர்ப்புக் காட்டியவர் எஸ். பொன்னுத்துரை. அவரிற்கு நீண்ட காலமாக பிடித்திருக்கும் மார்க்சிய விரோதம் என்ற நோய் முற்றி பேய் ஆடுகின்றார். முருகபூபதி இடதுசாரி இதழான டொமினிக் ஜீவாவின் மல்லிகையில் தனது எழுத்து வாழ்வினை தொடங்கியவர் என்ற ஒரு காரணமே பொன்னுத்துரையிற்கு எதிர்ப்பதற்கு போதுமானது. போராட்டக் குழுக்களில் மார்க்சிய சிந்தனையுடன் உறவாடியவர்கள் மீண்டும் ஈழத்தில் கால் பதிக்க, இந்த மகாநாடு கூட்டுவதற்கு உடந்தையாக இருப்பார்கள் என அவர் கண்டு பிடித்திருக்கம் இன்னொரு காரணத்தினை வாசிக்கவே புல்லரித்துப் போகின்றது. தமிழ் வலதுசாரிகள் இந்த மகாநாட்டினை நடாத்துவதாக இருந்தால் அவரிற்கு எந்த விதமான பிரச்சினையும் இருந்திருக்காது.
உண்மையான படைப்பாளி தன் இனத்தின் தூங்கா விளக்காக இருப்பான் என்று அவர் எழுதுகின்றார். சகோதரப் படுகொலைகள் செய்த போது, முஸ்லீம் மக்களை அவர்கள் வாழ்ந்த மண்ணை விட்டு விரட்டிய போது, அப்பாவி சிங்கள மக்களை கொன்ற போது, வன்னி மண்ணில் தமிழர்களை பலி கொடுத்த போது எல்லாம் இவர்களின தூங்கா விளக்கும் எரியவில்லை பொன்னுத்துரையின் காண்டா மணியும் அடிக்கவில்லை.
பா. ஜேயப்பிரகாசம் போன்ற தமிழகத்து படைப்பாளிகளும் எதிர்க்கின்றார்கள். இலங்கை அரசு நடத்திய திரைப் படவிழாவை தோல்வி காணச் செய்தது போல் இந்த மகாநாட்டையும் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று அவர் எழுதுகின்றார். இலங்கை அரசு நடத்தியது என்பதற்காக மட்டுமல்லாது மூன்றாம் தர வணிக சினிமாவிற்க்கான விழா என்ற ஒரு காரணத்திற்காகவே அவை போன்றவற்றினை யார் நடத்தினாலும் எதிர்க்க வேண்டும். கோடம்பாக்கத்து வணிக சினிமாவும் தமிழ் எழுத்தாளர் மகாநாடும் ஒன்றல்ல.
இலங்கையிலிருந்து எந்த விதமான எதிர்ப்புக் குரல்களும் இது வரை எழவில்லை. இலங்கை அரசிற்கு எதிராக குரல் கொடுக்கும் புதிய ஜனநாயகக் கட்சி அதனது இலக்கியப் பிரிவான கலை இலக்கிய பேரவை போன்றவை இதனை எதிர்க்கவில்லை. இலங்கையில் இருந்து கொண்டு புலம் பெயர் இணையத்தளங்களில் எழுதுபவர்களும் இதனை எதிர்க்கவில்லை.
இலங்கையில் எழுபதுகளில் இருந்த தேசிய முதலாளித்துவ அரசினது உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல் என்னும் கொள்கைகளை பயன்படுத்தி இலக்கியத் துறையிலும் பெரிய அளவில் புத்தகங்கள் சஞ்சிகைகள் வெளிவந்தன. தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையினை சித்தரிக்கும் நூல்கள் வெளியாகின. யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, மலையகம் போன்ற பிரதேசத்து வாழ்வுகளை மண்ணின் மனத்துடன் வெளிக் கொண்டு வந்தார்கள். சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு நூல்கள் மொழி மாற்றம் பெற்றன. யாழ்ப்பாணத்து கிராமத்தினையும், முதிர் கன்னியர்களின் அவல வாழ்வினையும் சித்திரமாய் தீட்டிய நித்திய கீர்த்தியின் “மீட்டாத வீணை”; நெடுந்தீவு இரத்தமும், சதையுமாக உலவவிட்ட செங்கை ஆழியனின் “வாடைக்காற்று”; வன்னிக் காட்டு வேட்டையையும், விவசாயத்தையும் தமது ஊரிற்கு வெளியே நடக்கும் எதுவும் தெரியாது இயற்கையோடு வாழும் மக்களின் கதையினை பாலமனோகரனின் “நிலக்கிளி”யும்; தமிழ் இளைஞனும் சிங்கள யுவதியும் காதலித்து இன மத வேறுபாட்டை புறம் தள்ளிய கதையை அருள் சுப்பிரமணியத்தின் “அவர்களிற்கு வயது வந்து விட்டது” நாவலும் வெளிக் கொண்டு வந்தன. இத்தகைய எழுச்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு இப்படியான நிகழ்ச்சிகள் முன்முயற்சியாக அமைய வேண்டும்.
போர்க்காலச் சூழலில் அன்னையர் முன்னணி, பிரஜைகள் குழு போன்ற பல அமைப்புக்களை மக்கள் தோற்றுவித்தனர். மக்கள் தமது பிரச்சினைகளிற்கு இவற்றிற் கூடாக தீர்வு காண முயன்றனர். விடுதலைப் போராட்டத்தினை பலாத்காரமாக மொத்த குத்தகைக்கு எடுத்திருந்த புலிகள், இச்சுயாதீன அமைப்புக்களையும் உள்வாங்கினர். இதனால் இவ்வமைப்புக்கள் தமது சுய செயற்பாடுகளை இழந்தன. அத்துடன் இவை புலிகளின் அமைப்புக்கள் என குற்றம் சாட்டப்பட்டு இலங்கை அரசினாலும், இந்திய கூலிப் படைகளாலும் சுலபமாக அழிக்கப்பட்டன. இனியாவது பொதுத்தனத்தில் எழுகின்ற மக்கள் சார்ந்த சுயாதீனமான போக்குகளை வளர்த்தெடுப்பதற்கு முன்வர வேண்டும். தேவையில்லாமல் எதிர்ப்பதன் ழூலம் அவற்றை அரசின் பக்கம் தள்ளி விடுகின்ற கடந்த கால போக்கினை நிறுத்த வேண்டும்.
“சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாத மண்ணில் பாறை பிளந்து பயன் விளைவிப்பான்” என்று எங்களது மகாகவி பாடியது போல, இலங்கையின் பாசிச அரசை வன்முறையினால் மக்களின் மீது அதிகாரம் செய்யும் ஆட்சியை இலங்கை மக்கள் நிச்சயமாக ஒரு நாள் உடைத்தெறிவார்கள். நேர்மையுடன் மக்களால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு எழுகின்ற சுயாதீனமான முயற்சிகள் அதற்க்கான ஒரு தூண்டுதலைக் கொடுக்கும். “எச்சிறு புல்லும் அதன் இயல்பினில் முழுமை” என்ற சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை வரிகளை வரலாறு மீண்டும் மீண்டும் எழுதிச் செல்லும்.
Related Articles:
யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வீதி நாடகங்கள் நடத்தப்படவுள்ளன. யாழ். சமூக மேம்பாட்டு மையம் இதனை மேற்கொண்டுள்ளது.
பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு 15 நாட்களுக்கு இச்செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கிராமங்கள் தோறும் நடைபெறவுள்ள இவ்வீதி நாடகங்களூடாக பெண்களுக்ககெதிரான வன்முறை, பாதுகாப்பு, மற்றும் மேம்பாடு குறித்த பல கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை தென்மராட்சியில் பல இடங்களில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சாட்யமளிக்கவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இவர் எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பில் வைத்து சாட்சியமளிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சாட்சியமளிக்கவுள்ளதாக ஆணக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பில் நடைபெற்றுவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், முன்னாள் அரச அதிகாரிகள், சமயப்பிரதிநிதிகள், சமூகப்பிரதிநிதிகள் எனப்பலர் சாட்சியமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் இம்மாதம் நடைபெறவிருந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் டி.எம்.ஜயரட்ணவினால் திறந்து வைக்கப்பட்ட இந்நகிழ்வில் பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய தேயிலைக் கூட்டுத்தபனத்தின் தலைவர் பண்டார. வடமாகாண செயலாளர் ஆ.சிவசுவாமி தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் உட்பட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
20 வருங்களின் பின்னர் இப்பொலிஸ் நிலையம் மீண்டும் கிளிநொச்சியில் அதே இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. எண்பதுகளில் பல இயக்கங்களினால் இந்த பொலிஸ் நிலையம் பல தடைவைகள் தாக்குதல்களுக்குள்ளாயிருந்து. பின்னர் பொலிஸ் இராணுவ கூட்டு முகாமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் எண்பதுகளின் நடுப்பகுதியில் இப்பொலிஸ் நிலையத்துடன் அதற்கு முன்பாகவுள்ள மைதானம், பிரதேச செயலகம், நூலகம் உட்பட்ட பகுதிகள் இராணுவ முகாமாக விஸ்தரிக்கப்பட்டது.
இரண்டாயிரமாம் ஆண்டிற்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் காவல்துறை தலைமையகமாக இயங்கியது. தற்போது புலிகளால் கட்டப்பட்ட பொலிஸ் நிலையக் கட்டடம் முற்றாக தகர்க்கப்பட்டு புதிய வடிவில் இப்பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக வன்னியில் பல நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக பூநகரியில் உள்ள நெற்செய்கை மேற்கொள்ளபட்ட வயல் நிலங்கள் முற்றாக வெள்ளத்துள் மூழ்கியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தொடாந்து நெற்பயிர்கள் வெள்ளத்துள் மூழ்கியிருந்தால் அவை அழிவடைந்து போகக்கூடிய ஆபத்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மழையினால் குளங்களில் உள்ள நீர் நிரம்பி மேவிப்பாய்ந்து வருவதாலேயே இந்நெல்வயல்களில் வெள்ளம் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் வான் கதவுகள் நேற்று திறந்து விடப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 115 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரம் பெற்ற இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றமைக்காக இவர்களுக்கு 1.8 மில்லின் ரூபா அபாராதம் விதிக்கப்பட்டது.
கிளிநொச்சிப் பகுதிகளில் தற்போது மின்சார விநியோகம் விரிவாக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை மின்சார சபையினர் கடந்த ஒரு வாரகாலமாக மேற்கொண்ட நடவடிக்கையின் போதே சட்டவிரோத மின்பாவனையாளர்கள் பிடிப்பட்டனர்.
தென்மராட்சி மீசாலை புத்தூர் பகுதியில் இராணுவச்சிப்பாய் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் நோக்கி வீதியில் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்றை இரும்புக்கம்பி ஒன்றினால் தாக்கினார் எனவும், பின்னர், அவ்வழியாகச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றையும் தாக்கினார் எனவும் இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடமையிலிருந்த படைச்சிப்பாய் ஒருவர் அவரைத் தடுக்க முற்பட சிப்பாய் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மற்றுமொரு இராணுவச்சிப்பாய் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவ்விளைஞர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து படையினரே அவ்விளைஞனின் உடலைக் கொண்டு சென்று சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
உயிரிந்த இளைஞர் மீசாலையைச் சோந்த துரைரட்ணம் துஸ்யந்தன் (வயது 25) எனவும் இவர் ஒரு மனநோயாளி எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் அண்டு நிறைவடைந்து, புதிய கல்வியாண்டிற்குப் புதிய மாணவர்கள் பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களிடம் பாடசாலை அனுமதிக்கு பணம் அறவிடும் பாடசாலை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண கல்விப்பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் போது நிதி அறவிடும் அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் ஆதாரத்துடன் முறையிட்டால் அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் பாடசாலை அதிபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர் பணியிலிருந்தும் இடைநிறுத்தப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் போது எவ்விதமான பணத்தையும் பெற்றோர்கள் செலுத்தத் தேவையில்லை எனவும், பெற்றோர்கள் இவ்விடயத்தில் அவதானமாக செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை ஆகிய பிரதேசச் செயலர் பிரிவுகளில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள இப்பிரதேசங்கள் வெள்ளத்தால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்துள்ள ஆயிரம் குடும்பங்களும் தற்போது பாடசாலைகளிலும் பொதுக் கட்டடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மக்களுக்கு தற்போது சமைத்த உணவுகளும் மற்றும் உலருணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.