September

September

Operation Loan Shark கிழக்கு லண்டன் ஈஸ்ற்ஹாமில் தமிழர் சிலர் கைது!!!

Operation_Loan_Shark‘ஒப்ரேசன் லோன் சார்க்’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ்  ஈஸ்ற்ஹாமில் சில தமிழர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொருளாதார ரீதியில் பலவீனமான நிலையில் பொருளாதார அறிவு குறைந்தும் வேறு வழிகளில் பொருளாதார உதவியைப் பெற முடியாதவர்கள் சில தனிப்பட்டவர்களிடம் இருந்து கடன் (லோன்) பெறுகின்றனர். வங்கிகள் போன்ற நிறுவனங்களிலும் பார்க்க அதிகப்படியான வட்டிக்கு கடன்பெறுகின்ற இவர்கள் இக்கடனை மீளச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தங்கள் கடன் அதற்கான வட்டி மாதாந்தம் கிடைக்கத் தவறும் பட்சத்தில் கடன் வழங்கியவர் பல்வேறு அழுத்தங்களையும் மிரட்டல்களையும் கடன் வாங்கியவர்கள் மீது செலுத்துகின்றனர். இதற்கு வன்முறையும் பயன்படுத்தப்படுகின்றது. இந்தக் கடன் மற்றும் அதனுடன் தொடர்பான பிரச்சினைகளை பொலிஸ் பிரிவின் ‘ஒப்பிரேசன் லோன் சார்க்’ கையாண்டு வருகின்றது.

சில மாதங்களாக லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற ஈஸ்ற்ஹாம் பகுதியில் ஒப்பிரேசன் லோன் சார்க் நடவடிக்கையில் சில தமிழர்களும் வர்த்தக நிறுவனங்களும் மாட்டியுள்ளனர். வட்டி மகேஸ், கணக்காளர் தர்மலிங்கம் போன்றவர்கள் இந்த ஒப்ரேசன் லோன் சார்க் நடவடிக்கையில் சில மாதங்களுக்கு முன்பாக மாட்டிக் கொண்டனர். இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.

இந்தப் பொலிஸ் நடவடிக்கையின் உதவியால் நாடு முழுவதும் 13500 பேரின் 25 மில்லியன் பவுண்கள் பெறுமதியான சட்ட விரோதமான கடன்கள் இல்லாமற் செய்யப்பட்டு உள்ளது என இந்நடவடிக்கைக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

லண்டன் குரலில் இச்செய்தி வெளியான பின் லண்டன்குரல் உடன் தொடர்பு கொண்ட திருமதி தர்மலிங்கம் தனது கணவர் தவறான தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் மீது எவ்வித வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். தனது கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை எனக் காணப்பட்டு அவரூடைய பெயர் மீது இருந்த களங்கம் நீக்கப்பட்டதாகவும் திருமதி தர்மலிங்கம் தெரிவித்தார். தனது கணவர் தற்போது தொடர்ந்தும் கணக்காளராகப் பணியாற்றி வருவதாகவும் அவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

ஈஸ்ற்ஹாமில் இது தொடர்பான மற்றுமொரு வழக்கு தற்போது நடந்து கொண்டுள்ளது. இவ்விசாரணை வழக்கு இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்ஹாமில் வதியும் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த நடராஜா என்பவர் மீதே ஒப்ரேசன் லோன் சார்க் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். நாடராஜா வட்டிக்குப் பணம் கொடுத்ததாகவும் அது பற்றி கடன் பெற்ற ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து நடராஜா ஏப்ரல் 2010ல் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின் மறுநாளே விடுவிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.

இவர் தீபம் தொலைக்காட்சி சித்திரா நாடகம் மூலம் அறியப்பட்டவர். இந்நாடகத்தில் இவரது மனைவியும் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்கள் இவ்வழக்குத் தொடர்பான காரணங்களுக்காக பரவலாக அறியப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் பற்றித் தெரியவருவதாவது புகார் வழங்கியவர் நிதி நெருக்கடியில் இருந்த போது தனது இரண்டாவது வீட்டை  வாடகைக்கு வழங்கி முகாமைத்துவம் செய்ய அதனை செலெக்ற் புரொப்பற்டீக்கு வழங்கி உள்ளார். அதன் மூலம் ஏற்பட்ட நட்பினால் தனது நிதி நெருக்கடிக்கு செலக்ற் புரப்பற்டீயின் உரிமையாளர் வி ஜே போஸை அணுகியுள்ளர். அதற்கு முன்னர் சிறு சிறு உதவிகளைச் செய்துவந்த போஸ் தற்போது கேட்ட 5000 பவுண் உதவியை வழங்க முடியாதுள்ள நிலையை விளக்கி உள்ளார். ஆனால் தனது நிதிநெருக்கடியை வலியுறுத்தி வற்புறுத்திக் கேட்கவே வி ஜே போஸ் நடராஜாவை அறிமுகப்படுத்தினார்.

நிதி நெருக்கடியில் இருந்தவர் நடராஜாவுக்கு அறிமுகமில்லாதவராகையால் நடராஜா ஆரம்பத்தில் பணத்தை வழங்கத் தயங்கினார். பின்னர் நகைகயை பொறுப்பு வைத்து 5000 பவுண்களைப் பெற்றுக்கொண்டார். இப்பரிமாற்றம் இடம்பெற்றது 2007ல்.

இந்தப் பரிமாற்றத்தில் நடராஜா கைது செய்யப்படுவதற்கு அண்மை வரை கடனைப் பெற்றுக் கொண்டவருக்கு வழங்க வேண்டிய வீட்டு வாடகையில் இருந்து 150 பவுண்களை செலக்ற் புரப்பற்டீஸ் கழித்து வந்துள்ளது.

மாதங்கள் ஓடியது. தவணைகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்தது. இந்நிலையில் கடனைப் பெற்றுக் கொண்டவர் செலக்ற் புரப்பற்டீஸிடம் வாடகை முகாமைத்துவத்திற்கு வழங்கிய வீட்டை அவர்களிடம் இருந்து மீளப் பெற்றுக்கொண்டார். மாதாந்தம் வழங்கிய 150 பவுண்கள் நடராஜாவுக்கு செல்வது தடைப்பட்டது. கடனை மீளளிக்காத பட்சத்தில் நகைகள் விற்கப்படும் என கடன் பெற்றவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இறுதித் தவணையும் வழங்கப்பட்டது.

இறுதித் தவணை வழங்கப்பட்ட அன்று ஏப்ரல் 2010ல் ஹைஸ்ரீற் நோத்தில் உள்ள செலக்ற் புரப்பற்டீஸ், லக்ஸ்மி ஜிவலர்ஸ், மற்றும் நடராஜா வீடு ஆகிய இடங்களை ஒரே நேரத்தில் முற்றுகையிட்ட ஒப்ரேசன் லோன் சார்க் பொலிஸார் அங்கிருந்த ஆவணங்கள் பதிவேடுகள் சிலவற்றை குற்றப் புலனாய்வு விசாரணைகளுக்காக எடுத்துச் சென்றனர். நடராஜாவும் கைது செய்யப்பட்டார்.

இவ்வட்டிக்கடன் விவகாரத்தில் கடன் பெற்றவரிடம் பொறுப்பாகப் பெற்றுக்கொண்ட நகைகள்  லக்ஸ்மி ஜீவலர்ஸில் விற்கப்பட்டதாக புகார் செய்யப்பட்டு இருந்ததாகவும் அதனாலேயே லக்ஸ்மி ஜீவலர்ஸ் இவ்விவகாரத்தில் தொடர்புபட்டதாகவும் தெரிய வருகின்றது.

இப்பின்னணியில் வழக்குத் தொடர்கின்றது.

தீர்ப்பு: பிரசவத்தின் போது ஏற்பட்ட மரணத்திற்கு கிங்ஸடன் வைத்தியசாலை பிரசவ பகுதி ஊழியர்களோ அல்லது நிர்வாகமோ பொறுப்பல்ல.

Kingston_Hospitalசுகதேகி யான ஆண் குழந்தையொன்றை கிங்ஸ்ரன் வைத்தியசாலையில் பிரசவித்த தாய் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக இறந்தமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுள்ளது. சிறிலங்கா போக்குவரத்து இணைப்பாளர் சசித்ரா கலேலுவ (38) பிராங் அவன்யூ நியுமெய்டனில் வசிக்கும் இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 25ம் திகதி 1 மணியளவில் இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து மரணமானார். மரணவிசாரணை அதிகாரி டொக்டர் பீற்றர் எலியாஸ் வாக்கு மூலத்தை நெறிப்படுத்தினார்.  திருமதி சசித்ரா கலேலுவவின் மரணத்தைப் பற்றிய முழு விபரங்களையும் விளக்கினார். அந்நேரம் சசித்ரா கலேலுவவின் கணவரும் பிரசன்னமாயிருந்தார்.

லண்டன் தென்மேற்கு மரணவிசாரணை அதிகாரியின் விசாரணையின் போது டொக்டர் மற்றும். பிரசவ வைத்திய நிபணர், பதிவாளர் போனறோர் குழந்தையின் பிரசவத்திற்கு சுகாதார முறைப்படி கருவிகளை பாவித்ததைத் தெளிவு படுத்தினர்.

ஓர் பாதூரமான விசாரணை இந்த மரணம் தொடர்பாக நடந்துள்ளது. டொக்ரர் அந்த நோயாளியின் பெண்ணுறுப்பில் உள்ள ஒரு சிறு நரம்பு இரத்த ஓட்டமின்றி தடைப்பட்டதை விசாரணையின் போது தெரிவித்தார். இந்த முறைப்பாட்டின் முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என டொக்டர் எலியாஸ் சசித்திரா கலேலுவவின் கணவரை வினவிய போது, இந்த விசாரணை முடிவை மாற்றியமைக்க முடியுமென்று தான் எண்ணவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் அவர்  ஒரு தாதி மாணவியை இரத்தம் ஏற்றுவதற்கு உடனடியாக அதனைக் கொண்டு வரும்படி அழைத்தபோது அவர் 35 நிமிடங்கள் கழித்தே கொண்டு வந்துள்ளார். எப்படி இருப்பினும் இறுதித்தீர்ப்பில் கிங்ஸடன் வைத்தியசாலை பிரசவ பகுதி ஊழியர்களோ அல்லது நிர்வாகமோ பொறுப்பல்ல. இங்கு நடைபெற்ற விசாரணையில் கடும் தண்மையை கருத்தில் கொண்டு தனிப்பட்ட முறையில் சமாதானமாகின்றோம் எனத்தெரிவித்தார். கிங்ஸடன் வைத்தியசாலை பேச்சாளர் தமது ஆழந்த அனுதாபங்களை திருமதி கலேலுவ குடும்பத்தினருக்கு தெரிவித்ததுடன் இது ஒரு துரதிஸ்ட விதமான சம்பவம் என்றும் தெரிவித்தார்.

நோயாளிகளின் பராமரிப்பும், பாதுகாப்பும் முன்னுரிமையிலும் நம்பிக்கையிலுமே தங்கியுள்ளது. ஜனவரி மாதம் இவ்வைத்தியசாலை நிர்வாகம் இத்தவறுக்கும், பாதுகாப்பின்மைக்கும் மன்னிப்புக் கேட்டது.

13 வயதுச் சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்!

ரூரிங்கில் இருந்து மிற்சம் செல்லும் 280ம் இலக்க பஸ்ஸில் எறிய சிறுவன் ஒருவனை நபரொருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். யூன் மாதம் 22ம் திகதி பகல் 12.05 மணிக்கு நடைபெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பஸ் நிறுத்தத்தில் வைத்து குறித்த நபர் சிறுவனின் முழங்காலில் கையை வைத்தபடி உரையாடியுள்ளார். பின் சிறுவன் பிகர்ஸ்மார்ஸ் என்ற இடத்தில் இறங்கிய போது அவனைப் பின்தொடர்ந்து அவனின் மறைவிடத்தைத் தடவி ‘இது பெரியதா’ எனக்கேட்டுள்ளார். இச்சிறுவனுடன் நட்பு கொள்ள விரும்பவதாகவும், சிறுவன் அவனது வேலையை முடித்துவிட்டுத் திரும்பும் வரை தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.  பயத்தில் அச்சிறுவன் சத்தமிட்டு தனது உறவினர் ஒருவரை உதவிக்கு அழைத்தபோது அம்மனிதர் ஓடிவிட்டார்.

ஆறடி உயரம். 30 வயது மதிக்கத்தக்க அம்மனிதரின் நடை உடையை அவதானித்த போது அவர் ஓர் இலங்கையராக இருக்கலாம் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் இலங்கையரா என்பது உறுதியாகவில்லை. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக உறவில் உள்ள ஆண்கள் இவ்வாறான பாலியஸ் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவது தற்போது வெளிவருகின்றது. 

கடைக்காரருக்கு நாமம் இட்ட போன்காட் முகவர்!!!

Phone_Cardsலண்டனில் குறிப்பாக கிழக்கு லண்டனில் கடைகளுக்கு போன் காட்டுகளை விநியோகிக்கும் மொத்த விநியோக முகவர் கடைகளுக்கு போன் காட்டுகளை விற்றுவிட்டு தனது நிறுவனத்தை சட்டப்படி வங்குரோத்தாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.

நியூஹாம் கவுன்சிலின் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த இம்முகவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போன் காட் மொத்த விநியோகத்தில் ஈடுபட்டு வருபவர். ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரீற் நோத்தில் கடையும் வைத்துள்ள இவர் அனுபவமற்ற தனது உறவுக்காரர் ஒருவரின் பெயரில் நிறுவனம் ஒன்றைப் பதிவு செய்து அதனூடாகவே வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதனால் சட்டப்படி இச்செயல்களுக்கு அவர் பொறுப்புடையவர் அல்ல.

நீண்ட காலம் இவர் போன் காட் மொத்த விநியோகத்தில் இருந்தமையால் இவருக்கு பெரும் தொகைக் கடன்களை போன் காட் நிறுவனங்கள் வழங்கி இருந்தன. ஆனால் இவர் சில்லறை வியாபாரிகளுக்கு முற்பணம் பெற்றுக் கொண்டே போன் காட்டுகளை விநியோகித்து இருந்தார். ஆனால் போன் காட் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
தங்களுக்கு வரவேண்டிய கொள்முதல் பணம் வராததால் போன்காட் நிறுவனங்கள் இம்முகவருக்கு வழங்கிய போன் காட்களை பயன்படுத்த முடியாதவாறு செய்தனர். இதனால் ஏற்கனவே முற்பணம் செலுத்தி போன் காட்களைப் பெற்றுக்கொண்ட பல நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் பல நூற்றுக் கணக்காண ஆயிரக் கணக்கான பவுண்களை இழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் தங்கள் வியாபாரத்தில் மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சில்லறை வியாபாரிகள் நூற்றுக் கணக்கான ஆயிரக் கணக்கான பவுண்களை இந்த போன் காட் மோசடியில் இழந்துள்ளமையால் மிகவும் நொந்து போயுள்ளனர்.

‘பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தது போலாகியது இந்த போன் காட் விடயம்’ என்கிறார் ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரீறில் போன் காட் விற்கும் ஒரு நடுத்தர வயதானவர். ‘இப்பொழுது போன் காட் வியாபாரத்தில் போட்டி அதிகம். நாங்கள் ஒரு நாள் முழுக்க இதில் நின்றாலும் நாளாந்த வாழ்க்கைச் செலவுக்கே உழைப்பது காணாது. ஆனால் இப்ப எனக்கு ஒரு மாத உழைப்பே பறிபோய்விட்டது’ என்று விரக்தியுடன் தெரிவித்தார் அவர்.

கடந்த 8 மாதங்களில் டெங்குக் காய்ச்சலினால் 208 பேர் பலி

dengue.jpgஇலங் கையில் கடந்த 8 மாதங்களில் டெங்குக் காய்ச்சலினால் 208 பேர் பலியாகியுள்ளனர்; 28 ஆயிரத்து 955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

கொழும்பில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 52 பேர் பலியாகியுள்ளதோடு 4965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் டெங்கு நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

schools.jpgஇரண்டாம் தவணை விடுமுறையின் பின் தமிழ், சிங்கள பாடசாலைகள் இன்று (07) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. க.பொ.த. (உ/த) பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் மூன்றாம் கட்டம் இடம்பெறும் பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்படும் எனினும் க. பொ. த. (உ/த) பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் முதல் கட்டமும் 5 ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை இடம்பெறும் பாடசாலைகள் எதிர்வரும் 13 ஆம் திகதியும் க. பொ. த. (உ/த) பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் 2 ஆம் கட்டம் இடம்பெறும் பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படும்.

அதேவேளை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பிக்க ப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த. (உ/த) பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் முதல் கட்டம் இடம்பெற்ற பாடசாலைகள் வருமாறு: கொழும்பு றோயல் கல்லூரி, ஆனந்தாக் கல்லூரி மற்றும் டி. எஸ். சேனநாயக்க கல்லூரி, கம்பஹா பண்டாரநாயக்க மகா வித்தியாலயம், களுத்துறை மகா வித்தியாலயம், கண்டி கிங்ஸ்வுட் வித்தியாலயம், பெண்கள் உயர் பாடசாலை, காலி வித்தியாலோக வித்தியாலயம்.

இவ்வருடத்தில் மேலும் 500 பஸ்களை தருவிக்க அமைச்சரவை அனுமதி

இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்த வருடத்தில் மேலும் 500 பஸ்களை தருவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இ.போ.ச தலைவர் எம். டி. பந்துசேன தெரிவித்தார். இதில் முதற் கட்டமாக நூறு பஸ்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து தவணை அடிப்படையில் பணம் செலுத்தி பஸ்களை கொள்வனவு செய்ய உள்ளதாக கூறிய அவர் அதிக வருமானம் ஈட்டக் கூடிய வீதிகளில் அவற்றை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை டிப்போக்களில் திருத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ள பஸ்களை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் திட்டமொன்று போக்குவரத்து அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 25 பஸ்கள் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா இன்று

nallur.jpgநல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா இன்று 7ம் திகதி காலை ஏழு மணியளவில் நடைபெறுகிறது. தற்போதைய சுமுகமான சூழ்நிலையில் நாடெங்கும் இருந்து பெருந்தொகையான மக்கள் நல்லூர்க் கந்தன் உற்சவத்துக்கு வருகை தந்திருப்ப தனால் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை யாழ். மாநகர சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

குடிநீர், மலசல கூட வசதிகள் என்ப வற்றையும் மாநகர சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினர் முக்கியமான சில இடங்களில் மருத்துவ முகாம்களையும் அமைத்துள்ளனர். பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நல்லூர் ஆலயத்தின் மேற்கு வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியால யத்தில் திருவிழாக் காலத்திற்கான தற்கா லிக பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் விசேட சேவைகளை நடத்துகின்றன.

தென் இலங்கையில் உள்ள பெருமளவு வர்த்தக நிறுவனங்கள் தங்களின் வர்த்தகப் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் ஆலய வீதிகளில் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன. தாகசாந்தி நிலை யங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு

அரசியலமைப்பின் 18வது திருத்த த்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதென இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. அமைச்சர்கள் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர உட்பட அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகட்சிகளின் தலைவர்கள் இதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் இவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருப்பினும் இந்தத் திருத்தத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மக்களின் குறைபாடுகளை தீர்த்து வைப்பது அரச அதிபர்களின் பொறுப்பு

jhon.jpgவடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் மக்களின் தேவைகள் குறைபாடுகளை இனங்கண்டு இதனைத் தீர்த்து வைப்பது அரசாங்க அதிபர்களினது பொறுப்பாகுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான நாடளாவிய மாவட்டச் செயலாளர்களின் மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் புதிய சிந்தனை, வினைத் திறமையுடனான செயற்பாடுகள் மூலமே சிறந்த அரச நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப முடியுமென குறிப்பிட்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு செயற் பட்டதாலேயே பல வெற்றிகளைச் சந்திக்க முடிந் துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மாவட்டச் செயலாளர்களின் மாநாடு முதற்தடவையாக இம்முறை யாழ். மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நேற்றும் ஆரம்பமாகி இரண்டு நாள் நிகழ்வாக இடம்பெறுகிறது. இம்மாநாட்டில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன் நாடளாவிய சகல மாவட்டச் செயலாளர்களும் இதில் பங்கேற்கின்றனர்.