வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் மக்களின் தேவைகள் குறைபாடுகளை இனங்கண்டு இதனைத் தீர்த்து வைப்பது அரசாங்க அதிபர்களினது பொறுப்பாகுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான நாடளாவிய மாவட்டச் செயலாளர்களின் மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் புதிய சிந்தனை, வினைத் திறமையுடனான செயற்பாடுகள் மூலமே சிறந்த அரச நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப முடியுமென குறிப்பிட்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு செயற் பட்டதாலேயே பல வெற்றிகளைச் சந்திக்க முடிந் துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மாவட்டச் செயலாளர்களின் மாநாடு முதற்தடவையாக இம்முறை யாழ். மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நேற்றும் ஆரம்பமாகி இரண்டு நாள் நிகழ்வாக இடம்பெறுகிறது. இம்மாநாட்டில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன் நாடளாவிய சகல மாவட்டச் செயலாளர்களும் இதில் பங்கேற்கின்றனர்.