September

September

முஸ்லிம் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

school-girls.jpgநாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திங்கட்கிழமை (13) திறக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காகவும் நோன்பு விடுமுறைக்காகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி மூடப்பட்டது. மூன்றாம் தவணை ஆரம்பமாவதற்கு முன்பு சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இடம்பெற வேண்டுமென கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கமைய இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு சிரமதானமும் இடம்பெறுகிறது.

இதேவேளை, க. பொ. த. (உயர்தர) பரீட்சை விடைத்தாள் இரண்டாம் கட்டதிருத்தும் பணிகளும் நாளை 13ம் திகதி இடம்பெறுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இப்பணிகளுக்கென மூடப்படும் பாடசாலைகள் இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகுமெனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

யாழ். வடமராட்சியில் 11,000 பேரை மீள்குடியமர்த்தும் பணி ஆரம்பம்

யாழ். வடமராட்சியில் இடம்பெயர்ந் துள்ள சுமார் 11,000 பேரை மீளக் குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  யாழ். இராமாவில் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 365 குடும்பங்களைச் சேர்ந்த 1092 பேர் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராமசேவகர் பிரிவுகளில் மீளக் குடியமர்வுக்காக அழைத்துச் செல்லப் பட்டனர். இவர்களுக்குத் தேவையான தகரங்கள், சீமெந்து, உலர் உணவுகள், சமையல் உபகரணங்கள் என்பன நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள் மூலமாக இவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டதுடன், உடுத்துறை, சம்பியன்பற்று வடக்கு, சம்பியன்பற்று தெற்கு, ஆழிவளை, வத்துராயன், மருதங்கேணி கிராம சேவகர் பிரிவுகளுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

வன்னியில் 10,000 வீடுகள் கட்டும் பணிகள் இருவாரங்களில்

sri-lanka.jpgவடக்கில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கென இந்திய அரசின் உதவியுடன் 50,000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 வீடுகளை கட்டும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து 10,000 வீடுகளுக்கான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் நாளை 13ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ஆளுநரின் தலைமையில் வன்னி மாவட்ட அரச அதிபர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு பயனாளிகளை தெரிவு செய்யவுள்ளனர். 10,000 வீடுகளில் விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவ துடன் அங்கவீனமானவர்கள் இரண்டாவதாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணத்துக்கு 5000 வீடுகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு 5000 வீடுகள் என்ற அடிப்படையில் முதற்கட்டமாக 10,000 வீடுகள் கட்டப்படவுள்ளன.

பயனாளிகளை தெரிவு செய்த பின்னர் ஜனாதிபதி செயலணி முழுமையான அறிக்கையை இலங்கையிலுள்ள இந்திய தூதுவரிடம் கையளிக்கும். அதனைத் தொடர்ந்து துரிதகதியில் வேலைகள் ஆரம்பமாகும் என ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கூட்டம் யாழ். நகரில் நடைபெறவுள்ளது.

வட மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கூட்டத்தில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார். மேலும் வன்னி மாவட்டம் உட்பட வட மாகாண அரச அதிபர்கள் உட்பட வட மாகாண அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அறிஞர்களற்ற ஜாதியை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் கட்சி த.தே.கூட்டமைப்பு – பா உ பியசேன

Piyasena_M_MP_TNA தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன மனம்துறந்த தமிழ் சிஎன்என் இணையத்திற்கு வழங்கிய பேட்டி மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.

அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கியதன் பின்னர் தமிழ் சிஎன்என் இணையத்திற்கு  கூறுகையில் இலங்கையில் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு கட்சி என்றால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பே எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கே தான் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் 40 வருடங்களுக்கு முன் மலையகத் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களை தற்போது வடக்கு கிழக்கு மக்கள் அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு பொருட்படுத்ததாமல் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனா ஐக்கிய மக்கள சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாலேயே தான் அரசுடன் .இணைந்துள்ளதாக கூறுகின்றார். அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் அவருக்கு மேலதிக பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

பா உ பியசேன வின் இந்நேர்காணல் அருகில் உள்ள இணைப்பில் கேட்கலாம். அவர் எவ்வித அரசியல் மேல்பூச்சும் இன்றி சாதாரண மக்களின் மொழியிலேயே தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார். http://www.youtube.com/watch?v=Q1htJPT8IBM&feature=player_embedded

._._._._._.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூத்துக்களை வெளிப்படுத்துகின்றார் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன. அரசமைப்புத் திருத்தம் மீதான வாக்கெடுப்பின்போது அரசை ஆதரித்த அவர் அரசை ஏன் ஆதரிக்க வேண்டிய நிலை வந்தது? என்பதை விளக்கினார்.

அவர் தமிழ் சி.என்.என் செய்திப் பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இருந்து முக்கிய விடயங்களை வாசகர்களுக்காக தொகுத்து தருகின்றோம்.

”தந்தை செல்வா செய்த மிகப் பெரிய பிழை தமிழ் தேசிய கூட்டமைப்பை ஸ்தாபித்தமைதான். ஏனெனில் அக்கட்சி சரியான தலைமைகளிடம் பின்னர் கையளிக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலம் காலமாக மக்களை ஏமாற்றி வருகின்றது. மக்களை சரியாக வழிநடாத்திச் செல்கின்றமைக்கான தலைமை கூட்டமைப்பில் இல்லை. உலகின் மிகப் பெரிய பயங்கரவாதக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான்.

தமிழினத்தைப் புதை குழியில் தள்ளிய- தள்ளிக் கொண்டிருக்கின்ற கட்சி இதுதான். இளைஞர்களை உசுப்பு ஏற்றி விட்டதைத் தவிர கூட்டமைப்பு எதைத்தான் செய்தது?

கூட்டமைப்பில் முக்கிய ஒரு பொறுப்பில் நான் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற முன்னரேயே ஜனாதிபதியின் காலில் விழுந்தாவது வன்னி மக்களையும், வே. பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் காப்பாற்றியிருப்பேன்.

ஆனால் கூட்டமைப்பினர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அழிய வேண்டும் என்று விரும்பினார்கள். மக்களையும், போராளிகளையும் அநியாயமாக கொன்று விட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிழையாக வழி நடத்தியவர்களும், புலிகளின் அழிவுக்கு காரணமானவர்களும் இக்கூட்டமைப்பினரே.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய என்னை இவர்கள் ஒருமுறை கூட நாடாளுமன்றில் பேச அனுமதித்தமை கிடையாது.இன்று அம்பாறை மாவட்டத்தில் ஏராளமான விதவைகள், வறியவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்து பார்த்தமையே இல்லை. முதிர்கன்னிகள் மலிந்து போய் விட்டார்கள். வேலை வாய்ப்புக்கள் எதுவும் இங்கு இல்லை.

சில வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் மத மாற்றம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க யாருமில்லை. ஆனால் கூட்டமைப்பினரோ அறிக்கைகளை மாத்திரம் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

வெளிநாடுகளில் விழாக்களில் கலந்து கொள்கின்றார்கள். கட்சியின் பெயர்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஆனால் அவர்கள் கூடிப் பேசும் போது ஆங்கிலத்தில்தான் கதைப்பார்கள். கூட்டமைப்பில் அறிஞர்கள், புத்திஜீவிகள் என்று யாராவது இருக்கின்றார்களா?.சம்பந்தன் ஆயினும் சரிஇ மாவை சேனாதிராசா ஆயினும் சரி, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆயினும் சரி, ஏன் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினராயினும் சரி வேறு ஒரு கட்சியில் வெற்றி பெறட்டும் பார்க்கலாம்.

சிந்தித்து வாக்களிக்க கூடிய வாக்காளர்கள் இல்லாமையால் தொடர்ந்தும் பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். கொழும்பிலிருந்து வெளியாகும் சில பத்திரிகைகள்தான் இவர்களை பெரியவர்கள் ஆக்குகின்றன.

அறிக்கைகளை மாத்திரம் விட்டுக் கொண்டிருக்கின்ற இவர்களால் இவர்களால் ஒரு குண்டூசியைக் கூட தமிழ் மக்களுக்கு கொடுக்க முடியாது. சிங்கள தேசம் தமிழர்களுக்கு நன்மைகளைக் கொடுக்க காத்திருக்கின்றது. ஆனால் பெற்றுக் கொள்ள கூட்டமைப்புத்தான் தயாராக இல்லை.

கூட்டமைப்பினர் வன்னி மக்களை அகதி முகாம்களில் சந்திக்க சென்றபோது ஒரு ரொபி பைக்கெற்றைக் கூட கொண்டு சென்றிருக்கவில்லை. வேண்டும் என்றே பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறாமல் சென்றிருந்தார்கள். தெரிந்துகொண்டே அப்படிச் செய்திருந்தார்கள்.அப்போதுதானே பிரச்சினைகள் வெடிக்கும்.

கூட்டமைப்பின் சிறிதரன் எம்.பி யுத்தத்தால் பாதிக்கக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சைக்கிள்களை கொடுத்து விட்டு போட்டோக்களில் பெரிதாக போஸ் கொடுக்கின்றார். பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் போடுகின்றார்.

பசியில் இருக்கின்றவர்களுக்கு சைக்கிள்களைக் கொடுத்து என்ன பயன்? இன்னமும் மக்கள் இவர்களை தலைவர்களாக எண்ணிக் கொண்டிருக்கின்றமை எனக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது. மக்களின் நிலை கண்டு தினமும் தூக்கமில்லாமல் தவிக்கிறேன். அழுகின்றேன்.

மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்கிற நோக்கோடுதான் அரசை ஆதரிக்கின்றேன். நிச்சயமாக அரசின் அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றமையில் தொடர்ந்தும் பாடுபடுவேன்.”

உட்பூசலை தீர்க்காவிட்டால் தனித்து செயற்படுவதாக ஐ.தே.கவின் 25 எம்.பிக்கள் அறிவிப்பு

unp_logo.jpgஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் தான் உட்பட 25 ஐ. தே. க. எம்.பிக்களும் பாராளுமன்றத்தினுள் தனித்து செயற்படப் போவதாக தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார். இதற்கென ஐ. தே. கட்சித் தலைமைக்கு ஒரு வாரம் காலக்கெடு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னடைந்து போயுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை பலம் வாய்ந்த ஒரு எதிர்க்கட்சியாக கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்றும் இதற்கென கட்சி உறுப்பினர்கள் அணி திரண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். எனது முயற்சி எமது கட்சியை கட்டியெழுப்புவதே தவிர ஆளும் தரப்பில் சென்று அமர்வதல்ல எனவும் கூறினார். உங்களுடன் இவ்வாறு இணைந்து கொண்டுள்ள ஐ. தே. க. உறுப்பினர்கள் யார் யார் என கூற முடியுமா? என கேட்டபோது.இல்லை எவருடைய பெயரையும் கூறமுடியாது. எனினும், நாம் எமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை பாராளுமன்றத்தில் ஒருமித்து செயற்படுவோம். தனியாக எமது குழு அமரும் என்றும் குறிப்பிட்டார்.

ஐ.நா. உச்சி மாநாட்டில் ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாடு எதிர்வரும் 20ம் திகதி முதல் 22ம் திகதி வரை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளதுடன், மிலேனிய அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் இம்முறை மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் 65வது பொதுச் சபை அமர்வுகள் எதிர்வரும் 14ம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளன. அதனைத் தொடர்ந்து 20ம் திகதி சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. அமைச்சர்களின் பொது விவாதங்களுக்கான அமர்வுகள் செப்டெம்பர் 23ம் திகதி ஆரம்பமாகும்.

இம்முறை உச்சி மாநாட்டில் மில்லேனிய அபிவிருத்தி இலக்குகள், காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட நாடுகளின் மீளமைப்பு மற்றும் வலுப் படுத்தல், பாதுகாப்பு சபை மறுசீராக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

இந்தியாவின் உதவியுடன் பெருந்தோட்ட கிராமம் மத்திய, ஊவா மாகாணங்களில் முதற்கட்ட செயற்பாடு

sri-lanka.jpgமலையகத் தோட்டப் புறங்களில் உள்ள ‘லயன்’ குடியிருப்புகள் அனைத்தையும் இல்லாதொழித்து தனித்தனி வீடுகளைக் கொண்ட கிராமங்களாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் வீடுகளைக் கொண்ட கிராமத்தைத் தனியாகவும் தொழில்புரியும் தோட்டத்தைத் தனியாகவும் அடையாளப்படுத்துவதற்கு திட்டமிட்டுச் செயற்படுத்தவுள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார். தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக் குடியிருப்பு முறையை இல்லாதொழிக்கும் திட்டத்திற்கு முதற்கட்டமாக இந்தியா ஆறாயிரம் வீடுகளை நிர்மாணித்து வழங்கவுள்ளது. இதில் முதன் முதலாக ஊவா மற்றும் மத்திய மாகாண தோட்டங்களில் ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுமென்று பிரதியமைச்சர் சிவலிங்கம் குறிப்பிட்டார்.

தற்பொழுது தொழிலாளர் குடியிருப்புகளும் தோட்டமும் ஒன்றாகவே உள்ளன. இதனால், அவர்களின் வாழ்விடமும் தோட்டம் என்றே அடையாளப்படுத்தி அழைக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் அந்த நிலையை மாற்றி வாழ்விடம் அமையும் கிராமத்தை வேறாகவும் தேயிலை, இறப்பர் தோட்டங்களை வேறாகவும் அழைக்கும் விதத்தில் ஏற்பாடுகளைச் செய்யவுள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

‘நான் இந்தத் தோட்டத்தில் வாழ்கிறேன் என்பதை இல்லாமற் செய்து நான் இந்தக் கிராமத்திலிருந்து அந்தத் தோட்டத்திற்கு வேலைக்குப் போகிறேன் என்று சொல்லும் நிலையை உருவாக்குவோம்’ என்று கூறிய அமைச்சர் தோட்டங்கள் ஆங்கிலப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும் 90% தமிழ்ப் பெயர்கள் உண்டென்றும் அந்தத் தமிழ்ப் பெயர்களில் தொழிலாளர்களின் கிராமங்கள் அழைக்கப்படுமென்றும் விளக்கினார்.

வாழமலை, சமுத்திரவள்ளி, சமரவள்ளி, தெய்வானை, மண்வெட்டி, லெட்சுமி, கல்மதுரை, பூப்பனை என்று பல்வேறு தமிழ்ப் பெயர்களில் தோட்டங்கள் அழைக்கப்படுகின்றன. இந்தத் தமிழ்ப் பெயர்களைக் கிராமங்களுக்குச் சூட்டுவதோடு தோட்டங்களை ஆங்கிலப் பெயரில் அழைக்க முடியும் என்று குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம் உதாரணமாக கல்மதுரை கிராமத்திலிருந்து ஸ்ரோனிகிளிப் தோட்டத்திற்குத் தொழிலுக்குச் செல்கிறேன் என்ற நிலையைத் தோற்றுவிப்போம் என்று மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்திய அரசினதும் இலங்கை அரசினதும் முழுமையான ஒத்துழைப்புடன் மலையகத் தோட்டப் புற மக்களின் வாழக்கை முறையை முற்றாக மாற்றியமைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்குமென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கு இளைஞர்களுக்கு இத்தாலி வேலைவாய்ப்பு – அமைச்சர் முரளி

murali00000.jpgகிழக்கு மாகாண இளைஞர்களுக்கும் இத்தாலியில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இலங்கையிலுள்ள இத்தாலிய தூதுவரை தூதரகத்தில் சந்தித்துப் பேசிய பிரதியமைச்சர் முரளிதரன் கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்தும் பேச்சு நடத்தினார்.

இலங்கையில் தற்போது சமாதான சூழல் நிலவுவதையடுத்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு செல்லலாம் என இத்தாலி அரசு தனது பிரஜைகளு க்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதியமைச்சர் முரளிதரனின் சந்திப்பு அமைந்திருந்தது.

வருடாந்தம் இத்தாலி அரசு இலங்கைக்கு வழங்கும் 3000 வேலைவாய்ப்புக் கான கோட்டாவை 2011ம் ஆண்டு சற்று அதிகரித்து தருவதாகவும் இதில் கிழக்கு மாகாணத்துக்கு கூடுதல் முன்னுரிமை வழங்குவதாகவும் இத்தாலிய தூதுவர் ரூபன்ஸ் அனா ஸடேல் பிரதி யமைச்சர் முரளிதரனிடம் உறுதியளித்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கில் வேலையற்ற இளைஞர், யுவதிகள் பெருந்தொகையானோர் இருப்பதாக குறிப்பிட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களுக்காகவே இத்தாலி தூதுவரிடம் இந்த வேண்டுகோளைச் செய்ததாக குறிப்பிட்டார்.

அத்துடன் வெளிநாட்டு அமைச்சின் ஒப்புதலுடன் இத்தாலி பெரகுவா , சேரு பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களுக்கு கற்பதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்படுவதாகவும் எதிர்வரும் 2011 பெப்ரவரி மாதம் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளவுள் ளதாகவும் இத்தாலிய தூதுவர் பிரதியமைச்சரிடம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

பாண் விலை 3 ரூபாவினால் அதிகரிப்பு

bread.jpgஒரு இறாத்தல் பாணின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் விதத்தில் இந்த அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் நேற்று அறிவித்தது.

மாவின் விலை அதிகரிப்பு, போக்குவரத்து செலவின் வரி அறவீடு போன்றன இந்த பாண் விலை அதிகரிப்புக்கு காரணம் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என். ஜே. ஜயரட்ன தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுமுன் அமைச்சர் ஆறுமுகன்

இலங்கை தொழிலாளர் காங்கிஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எதிர் வரும் 13ம் திகதி திங்கட்கிழமை கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கின்றார்.

கொழும்பு ஏழு ஹோட்டன் பிளேஸிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் திங்கட்கிழமை பிற்பகல் 1.30 இற்கு அமைச்சர் தொண்டமான் சாட்சியமளிப்பார். மேலும் மனிக் டி சில்வா, காந்தி நிலையத்தின் பிரதிநிதி ஆகியோருக்கும் அன்றைய தினம் சாட்சியமளிக்கின்றனர்.