July

July

”இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த மக்களுக்கு அரசாங்கம் நட்ட ஈடு வழங்க வேண்டும்.” ததேகூ சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை!

Sivasakthi_Anandan_TNA”இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்கள் அனைவருக்கும் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்”, என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு செலவு திட்டம் மீதான உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ”இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும். அத்தோடு போரினால் உடல் உறுப்புக்களை இழந்தவர்களுக்கும் நட்ட ஈடு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”ஜே.வி.பியினருக்கு பொது மன்னிப்பு வழங்கியதைப் போல தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் முக்கியமானவர்கள் விடுதலை செய்ய்ப்பட்டுள்ளனர் ஆனால்,  அவர்களுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளின்றி பல வருடங்களாக சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட வேண்டும்” எனவும் சிவசக்தி ஆனந்தன் அவரது உரையில் குறிப்பட்டுள்ளார்.

வடமராட்சிக் கிழக்கு கிராம மக்கள் விரைவில் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

வடமராட்சிக் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த எற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாமுனை, செம்பியன்பற்று, தாளையடி, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, போக்கறுப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு மீள் குடியேற்றப்படவுள்ளனர். தங்கள் மீள்குடியமாவக்காக இதுவரை இம்மக்கள் பதிவு செய்யாமலிருந்தால் குடத்தனையில் இயங்கும் உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் உடனடியாக தங்கள் பெயர் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 15ஆம் திகதி மேற்படி பகுதி மக்கள் மீள்குடியேற்றப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பியோட்டம்!

புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் முகாமிலிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தப்பியோடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலநறுவை மாவட்டத்திலுள்ள வெலிகந்த கந்தகடுவ பகுதியிலுள்ள புனர்வாழ்வு முகாம் ஒன்றில் தொழில் பயிற்சிகளைப் பெற்று வந்த  முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் காரணமாக பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயெ கடந்த 30ஆம் திகதி அங்கிருந்து அவர் தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு முகாம்களிலுள்ளவர்களில் காயமுற்றவர்கள், நோயாளிகள் இராணுவப் பாதுகாப்புடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது வழமையானது. இவ்வாறான சூழ்நிலையிலேயே இவர் தப்பிச்சென்றுள்ளார்.

தப்பிச் சென்றவர் கிளிநொச்சியைச் சேர்ந்த 27 வயதான நித்தியானந்தன் ராசா என்பவர் எனவும், இவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக செயற்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தைப் பகுதியில் இராணுவம் திடீர் சோதனை

தமிழர்கள் அதிகம் வசிக்கும் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்றுக் காலை இராணுவத்தினரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெள்ளவத்தை கடற்கரை வீதிப் பகுதிகள் சோனையிடப்பட்டதோடு,  காலி வீதியில் வானங்களும் இடை மறிக்கப்பட்டு  சோதனையிடப்பட்டன. இச்சோதனை நடவடிக்கை காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் சிறிது பதற்றமடைந்த போதிலும் இந்நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சாத்தியமான அரசியல் தீர்வை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் – சபையில் அமைச்சர் டக்ளஸ்

dagi.jpgநடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு முயற்சிகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எஞ்சியுள்ள மக்களையும் மீளக்குடியமர்த்தி அவர் களின் வாழ்வாதாரத்திற்கான சகல ஏற்பாடுகளையும் விரைவுபடுத்த வேண்டுமென தெரிவித்த அமைச்சர், சரணடைந்தோர் மற்றும் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டோர் அனைவரையும் விடு விக்க வேண்டுமெனவும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரை யாற்றிய அமைச்சர் வடக்கின் மீள்கட்டமைப் பிற்காக நிதியுதவி வழங்கியுள்ள இந்திய அரசாங்கத்திற்கும் நன்றியினைத் தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரி வித்ததாவது, தமிழ் மக்களுக்கான அமைதி, சமாதானம், ஜனநாயகம், வாழ்வியல் மற்றும் அரசியல் சமவுரிமை ஆகியவையே எமது இலட்சியமாகும். அதற்கான கனவுகள் இன்று நனவாகி வருகின்றன.

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுதந்திரமாக செயற்படும் ஒரு சூழலில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அரசியலுரிமை குறித்து சிந்திக்க முடியும்.

அத்தகைய சூழலொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கித் தந்துள் ளார். அதற்காக அவருக்கு நன்றி கூறு வதுடன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மைக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலரும் ஜனாதிபதிக்கு இந்தச் சபையில் நன்றி கூறியதை வர வேற்கிறேன்.

மனிதராலும் இயற்கையாலும் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்களின் மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் 7 வீத வளர்ச்சியை நோக்கி அதிகரித்துள்ளது. கைத்தொழில் துறையினரை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். ஏனைய பிரதேசங்களைப் போலவே யுத்தப் பாதிப்பு தேசங்களையும் அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

புத்தாக்குதல்களுக்கு ஊக்விப்பு வழங்தல், வாராந்தச் சந்தைகளை ஆரம்பித்தல், கைத்தொழில் துறைக்கு உரிய பயிற்சிகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. பனை வளம் எமது அமைச்சின் கீழ் உள்ளது. அதன் மூலம் அதனை நம்பியுள்ள கைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கற்பகம் விற்பனைக் கிளைகளை நாடளாவிய ரீதியில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கைதடி ஆராய்ச்சி நிறுவனத்தை மீளத் திறப்பதுடன் அதன் தலைமை அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சபையில் பேசுவதற்கு காதருக்கு தனது நேரத்தை கொடுத்தார் பிரதமர் தி.மு.

cadar.jpgஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதருக்கு வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்ற அக்கட்சி நேரம் ஒதுக்காததால், பிரதமர் டி.எம். ஜயரட்ன தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 15 நிமிடங்களை வழங்கினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கவை உரையாற்றுமாறு சமாநாயகர் அழைத்தார்.

அப்போது குறுக்கிட்ட காதர் எம்.பி, தமது கட்சியில் தமக்கு உரையாற்ற நேரம் ஒதுக்கவில்லையென்று சபாநாயகரிடம் முறையிட்டார். அப்போது, எந்தக் கட்சி  என்று எதிர்க் கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க, காதர் எம்.பி.யிடம் கேட்க, கோபமடைந்த அவர், ‘எமது கட்சி தான், உங்கள் கட்சி அல்ல’ என்று பதிலளித்ததோடு ஐ.தே.க தலைமை தொடர்பாகவும் காரசாரமாக விமர்சித்தார்.

அசின் நடிப்பதற்கு தடை?

asin.jpgஇலங்கை யில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்கக் கூடாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்ததையும் மீறி, இந்திப் படத்துக்காக இலங்கை சென்ற நடிகை அசினுக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிப் படங்களில் அசின் நடிப்பதற்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவை தென்னிந்திய திரைத்துறையினர் புறக்கணித்தனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்று அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான், அமீர்கான் உள்ளிட்டோரும் பங்கேற்கவில்லை.

மேலும் தமிழ் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், நடிகர் நடிகைகள் யாரும் படப்பிடிப்புக்காக இலங்கை செல்லக்கூடாது என்றும் பிலிம்சேம்பர், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டமைப்பு எடுத்த முடிவை இப்போது நடிகை அசின் மீறி இருக்கிறார்.

சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கும் ரெடி என்ற இந்தி படத்தில், அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக, அசின் இலங்கை சென்று இருக்கிறார்.  முதலில் மொரீஷியஸில் நடக்கவிருந்த படப்பிடிப்பு இது. ஆனால் ராஜபக்சே அரசு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக சல்மான்கானுக்கு கூறியது. மேலும் தமிழ் மக்கள் அனுமதிக்கப்படாத வடக்கு இலங்கையின் சில பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

கேரளாவை சேர்ந்த அசின், உள்ளம் கேட்குதே என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அதற்கு முன்பு வரை மலையாளம், தெலுங்கில் இரண்டாம் நிலை நாயகியாக ஓரிரு படங்களில் நடித்திருந்தார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி, போக்கிரி, கஜினி, தசாவதாரம் ஆகிய தமிழ்ப் படங்களின் மூலம் தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகி ஆனார். பிற மொழி படவுலகிலும் அவரை கவனிக்க ஆரம்பித்தனர்.  கஜினி (இந்தி) படத்தின் மூலம் மும்பை பட உலகுக்கு அசின் அறிமுகமானார். அவர் நடித்து அடுத்து வெளி வந்த லண்டன் ட்ரீம்ஸ் என்ற இந்தி படம் படுதோல்வி அடைந்தது.

வேறு புதிய படங்கள் எதுவும் இல்லாமல் சும்மா இருந்த அசின் கவனம் மீண்டும் தமிழ் பட உலகம் பக்கம் திரும்பியது. விஜய் நடிக்கும் காவல்காரன் என்ற படத்தில், அவர் கதாநாயகியாக ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் நடித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு மீண்டும் ரெடி படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இந்தி பட உலகில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்று கருதிய அவர், காவல்காரன் படத்தின் இயக்குநர் சித்திக்கிடம் கேட்டுக் கொண்டு, அந்த படத்தின் கால்ஷீட் தேதிகளை இந்தி படத்துக்கு கொடுத்து விட்டார். போகவேண்டாம் என்ற விஜய்யின் வேண்டுகோளையும் புறக்கணித்தார்.

தமிழ் நடிகர்-நடிகைகள் யாரும் இலங்கை சென்று நடிக்கக் கூடாது என்ற கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறி, அசின் இலங்கை சென்று இந்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நடிகர் சங்க செயலாளர் ராதாரவியிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்து, ராதாரவி கூறியதாவது:

“கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை அசின் மீறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி கூட்டமைப்புடன் கலந்து பேசிக் கொண்டுள்ளோம். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க தடை விதிப்பது குறித்து முடிவு செய்வோம்?” என்றார்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி: நடிகை விஜயசாந்தி கைது

vijaya.jpgதெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை விஜயசாந்தி நேற்று கைது செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை வெட்டிக் கொல்வேன் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

வன்முறையை தூண்டும் வகையில் விஜயசாந்தி பேசியிருக்கிறார். இதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று விஜயசாந்தி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் படியும் தேர்தல் ஆணையம் பொலிஸாருக்கு தெரிவித்திருந்தது. இதனையடுத்து விஜயசாந்தி கைது செய்யப்பட்டார். சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

ஆந்திராவில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 12 சட்ட சபை தொகுதிகளுக்கும் எதிர்வரும் 27ந் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணைக்குழு அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 30ந் திகதி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.பி. நடிகை விஜயசாந்தி முன்னிலையில் பல்வேறு கட்சித் தொண்டர்கள் தெலுங்கானா கட்சியில் சேரும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயசாந்தி தனி தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கடுமையாக விமர்சித்து, தெலுங்கானா மாநிலத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை வெட்டி கொல்வேன் என்று ஆவேசமாக பேசினார். இது பற்றி தேர்தல் ஆணைக் குழுவுக்குப் புகார்கள் வந்தன.  இதையடுத்து தேர்தல் ஆணைக்குழு விஜயசாந்திக்கு விளக்கம் கேட்டு அழைப்பாணை அனுப்பியது. அதில் தேர்தல் விதி அமுலில் இருக்கும் போது அதை மீறி வன்முறையை தூண்டும் வகையில் பேசி இருக்கிaர்கள். உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? இதற்கு 4ம் திகதிக்குள் (இன்று) நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலும் விஜயசாந்தி வீடு உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதி பொலிசுக்கும் விஜயசாந்தி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டது. அதன்படி பஞ்சாரா ஹில்ஸ் பொலிஸார் விஜயசாந்தி மீது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்தனர். அவரை உடனடியாக கைது செய்யவும் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் விஜயசாந்தியை கைது செய்ய பொலிஸார் முயன்றனர். ஆனால் தொண்டர்கள் நடத்திய அமளியால் கைது நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்டார்.

பிரேசில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் தற்கொலை

neda.jpgஉலக கோப்பை தொடரில் “கால்பந்து இமயம்’ பிரேசில் சரிந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. பயிற்சியாளர் துங்காவின் தவறான தேர்வு முறை, தற்காப்பு பகுதியின் பலவீனம், தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை கையாளாதது போன்றவை பிரேசில் அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

இத்தொடர் துவங்கும் முன் பிரேசில் அணி பயிற்சியாளர் துங்கா சில தவறான முடிவுகளை கையாண்டார். அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த ரெனால்டினோ, அட்ரியானோ, டியாகோ,  அலெக்சாண்ட்ரோ பாடோ, மார்சிலோ போன்ற வீரர்களை தேர்வு செய்ய மறுத்தார். சூழ்நிலைக்கு ஏற்ப ஆடும் ஆற்றல் படைத்த இவர்களை நீக்கியது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. குறைந்தபட்சம் ரொனால்டினோவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால்,  ஒழுக்கம் தான் முக்கியம் என்று கூறி,  அவரை சேர்க்க மறுத்தார். விளைவு…?

முன்னணி வீரர்கள் இல்லாத பிரேசில் அணி, நெதர்லாந்தை சமாளிக்க முடியவில்லை.கடந்த 2002ல் கோப்பை வென்ற பிரேசில் அணி, 2006ல் காலிறுதியுடன் நடையை கட்டியது. இம்முறையும் காலிறுதியுடன் வெளியேறியுள்ளது. இனி 2014ல் பிரேசிலில் நடக்க உள்ள 20வது உலக கோப்பை தொடரில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரேசில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹெய்தி நாட்டை சேர்ந்த 18 வயதான இவர், பிரேசில் வெளியேறிய விரக்தியில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட இவர், ஓடும் கார் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மௌலவி நியாஸ் இன்று காலை காலமானார்.

niyaz.jpgஜனாதிபதி யின் முஸ்லிம் விவகாரங்களுக்கான ஆலோசகர் மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத் (கபூரி) 57ஆவது வயதில்  இன்று காலை காலமானார். 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி தலவாக்கலையில் பிறந்த மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார். இலங்கையின் தலைசிறந்த சன்மார்க்க அறிஞர்களில் ஒருவரான மௌலவி நியாஸ் முஹம்மத், கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்டார்.

பௌத்த,இந்து மதத்தலைவர்களின் மதிப்பை பெற்றிருந்த மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத், தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்துக்காக பாடுபட்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.தேசகீர்த்தி, தேசமான்ய, கீர்த்திஸ்ரீ, சாம மான்ய, தேசபந்து போன்ற பல விருதுகள் ஏனைய சமூகங்களினால் வழங்கப்பட்டு பலமுறை இவர் கௌரவிக்கப்பட்டார். இலங்கையின் வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிங்கள மொழியில் தஃவா பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.