14

14

‘வார்ட்’ தாழமுக்கம் இன்று காலை யாழ்ப்பாணத்தை கடந்து செல்லும். கடல் கொந்தளிப்புடன் காற்றின் வேகமும் அதிகரிக்கும்

rain2.jpgதிரு கோணமலைக்கு அப்பால் சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் காணப்படும் ‘வார்ட்’ தாழ முக்கம் இன்று (14ம் திகதி) அதிகாலையில் அல்லது காலை வேளையில் யாழ்ப்பாணத்தைக் கடந்து செல்லும் என்று வானிலை அவதான நிலையத்தின் பொறுப் பாளர் டி. ஏ. ஜயசிங்க ஆராய்ச்சி நேற்று தெரிவித்தார். இதன் விளைவாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் அதிக மழை பெய்யும் எனவும் அவர் கூறினார்.

இந்தத் தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் மன்னார் குடா கடல் பரப்பில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டிருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடந்த வெள்ளியன்று இந்த தாழமுக்கம் திருமலையிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உருவானது.

அது நேற்று முன்தினம் முதல் நகர ஆரம்பித்தது. நேற்று நண்பகலாகும் போது திருமலைக்கு 250 கிலோ மீட்டர் தூரத்தில் காணப்பட்டது. இது இன்று அதிகாலையில் அல் லது காலை வேளையில் யாழ். குடா நாட்டை அல்லது யாழ்ப்பாணத்திற்கு அருகில் கடந்து செல்ல முடியும். இதன் காரணத்தினால் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகா ணங்களில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படும். சில பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்றார்.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி குறிப்பிடுகையில், திருமலைக்கு அப்பால் தாழமுக்கம் காணப்படு வதால் இது குறித்து வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, வட மேல் மாகாண மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தேவை யான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இம் மாகாணங்களில் வாழுகின்ற வர்களுக்கு எஸ். எம். எஸ். மூலமும் இத்தாழமுக்கம் குறித்து அறிவுறுத்தப்பட் டுள்ளது.

நல்லமலை ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் பாரிய மண்சரிவு; 150 பேர் இடம்பெயர்வு

பதுளை நமுனுகுல பிரதேசத்திலுள்ள நல்ல மலை கிராம சேவகர் பிரிவிலிருக்கும் ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இம்மண்சரிவு காரணமாக 35 தோட்டக் குடியிருப்புக்களில் வசித்து வந்த 150 பேர் இடம்பெயர்ந்து நல்லமலை வித்தியாலயத்தில் தங்கி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் நிமல் பியசிறி பண்டார நேற்றுத் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்றாலும் இரண்டு தோட்டக் குடி யிருப்புக்கள் முழுமையாக சேதமடைந்தி ருப்பதாகவும், ஏனையவற்றில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இம்மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள இம்மண்சரிவு சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை இடம்பெற் றுள்ளது என்றும் அவர் கூறினார்.

கொழும்பு – இத்தாலி நேரடி விமான சேவை 16 இல் ஆரம்பம்

air-lanka.jpgகொழும்பில் இருந்து இத்தாலிக் கான நேரடி விமான சேவை நாளை மறுதினம் (16) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்தது.

இலங்கையில் அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதால் இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் அங்குள்ள இலங் கையர்கள் நேரடியாக இலங்கைக்கு வருகை தரும் வகையில் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வாரத்தில் இரு தினங்கள் புதிய விமான சேவைகள் நடைபெற உள்ளன.

மேற்குக் கரையில் பள்ளிவாசல் மீது தாக்குதல்; இஸ்ரேல் கண்டனம்

மேற்குக் கரையிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசலை உடைத்து சேதப்படுத் தியமைக்கெதிராக இஸ்ரேல் பிரதமர் பென் ஜெமின் நெதன்யாஹு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருமாறு பொலிஸாரைப் பணித்துள்ளார். கடந்த சனிக்கிழமை மேற்குக் கரையிலுள்ள பள்ளிவாசலை யூத கடும் போக்காளர்கள் உடைத்து சேதப்படுத்தினர். அங்கிருந்த புனித குர்ஆன் பிரதிகளையும் எரியுட்டினர்.

மேற்குக் கரையின் வட பகுதி நகரமான யாசுப் என்ற ஊரில் இச்சம்பவம் நடந்தது தொடர்ந்து இங்கு நிறுவப்பட்டு வந்த யூதக் குடியேற்றங்கள் முஸ்லிம்களின் எதிர்ப்பால் கைவிடப்படும் நிலைக்குச் சென்றது. குடியேற்றங்கள் நிறுத்தப்படவுள்ளமைக்கு ஆட்சேபனை தெரிவித்தே பள்ளிவாசலை யூதக் கடும் போக்காளர்கள் உடைத்தனர். இங்கு வந்த இஸ்ரேல் இராணுவத்தை நோக்கி பலஸ்தீனர்கள் கற்களை எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் ஜனாதிபதி சீமொன் பெரஸ் பாதுகாப்பு அமைச்சர் எஹுட்பராக் ஆகியோரும் இதை வன்மையாகக் கண்டித்துள்ளனர். வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் இஸ்ரேலின் புனித கொள்கைக்கெதிரான செயல் இதுவென இஸ்ரேல் ஜனாதிபதி சீமென் பெரஸ் குறிப்பிட்டார்.

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

Rahuman Janமே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழான ‘வியூகம்’ சஞ்சிகையின் வெளியீடு ரொறன்ரோவில் நேற்று (நவம்பர் 12ல்) இடம்பெற்றது. (மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்) பல்வேறு அரசியல் தளங்களில் இருந்தும் வந்திருந்த 100 பேர் வரை கலந்துகொண்ட இந்நிகழ்வில் விவாதக் களத்திற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது’ என்றும் ‘அதன் ஆரம்பமே வியூகம்’ என்றும் ரகுமான் யான் தெரிவித்தார். (தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்) இந்நிகழ்வில் தேவானந்தன், கௌசலா ஆகியோர் வியூகம் பற்றிய மதிப்பீட்டை மேற்கொண்டனர். நிவேதா பெண்ணியம் தொடர்பாகவும், சேனா தேசியம் தொடர்பாகவும் வியூகம் இதழை மதிப்பீடு செய்தனர். வந்திருந்தவர்கள் வியூகத்தின் வருகையை எதிர்பார்ப்புகளுடன் எதிர்கொண்டனர்.

தீப்பொறி இயக்கத்தின் கோட்பாட்டு இதழாக வெளிவந்த ‘உயிர்ப்பு’ சஞ்சிகைக்குப் பின் ஏற்பட்டு இருந்த அரசியல் செயற்பாடுகளுக்கான வெற்றிடத்தை தங்களது சுயவிமர்சனத்துடன் மே 18 இயக்கமும் அதன் கோட்பாட்டு இதழான வியூகமும் நிரப்ப முற்பட்டுள்ளது. மே 18 இயக்கத்தின் தோற்றமும் வியூகம் சஞ்சிகையின் வெளியீடும் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் அரசியல் ஆர்வலர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.

இளம் தலைமுறையைச் சேர்ந்த நிவேதா இளம்தலைமுறையினருடைய கருத்துக்களை உள்வாங்க வேண்டியதன் அவசியத்தை அங்கு வலியுறுத்தினார். வியூகம் இதழின் வரவை வரவேற்றுப் பேசிய நிவேதா, இந்த நிகழ்வில் கூட தன்னை பேசுவதற்கு அழைத்தவர்கள் தனது கணவரினூடாகவே அதனை அணுகியதாகச் சுட்டிக்காட்டினார். தமிழீழ விடுதலை இயக்கங்களில் பெண்களின் நிலை பற்றியும் குறிப்பிட்ட நிவேதா விடுதலை இயக்கங்களின் மத்திய குழுவில் ஒரு சில பெண்கள் இருப்பதால் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது என்றும் தெரிவித்தார். தமிழ் தேசியம் பற்றிப் பேசிய சேனா தேசியம் சம்பந்தமான கேள்விகளை எழுப்புவதற்கான தருணமாக இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் போராட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சபையில் இருந்தவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். ‘மே 18 ற்குப் பின்னர் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான தளம் ஒன்று உருவாகி இருக்கின்றது’ என்ற அடிப்படையில் ஈஸ்வரகுமார் கருத்து வெளியிட்டார். ‘தேசிய விடுதலை இயக்கங்களின் வரலாறுகளில் தவறுகள் நிகழ்ந்துள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் அது நிகழ்ந்துள்ளது. ஆனால் இவற்றுக்குள்ளேயே நின்றுவிடாமல் அதனைக் கடந்து செல்ல வேண்டும்’ என்ற கருத்துப்பட நடராஜா முரளீதரன் கருத்துத் தெரிவித்தார். 

ரொறன்ரோவில் இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து லண்டனின் புறநகர்ப் பகுதியில் நவம்பர் 20ல் வியூகம் சஞ்சிகையின் வெளியீடும் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. லண்டனைத் தொடர்ந்து பாரிஸ் மற்றும் சூரிச் நகர்களிலும் இதன் வெளியீட்டை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.

Related Articles:

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்

நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

(குறிப்பு: கனடா நிகழ்வு பற்றிய குறிப்பு அந்நிகழவில் கலந்து கொண்ட ஒருவரின் தகவலில் இருந்து பெறப்பட்டது. மேலதிக விபரங்களை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தயவு செய்து பதிவு செய்யவும்.)

லண்டனில் வியூகம் வெளியீடு:

December 20, 2009 Sunday

4:00pm to 9:00pm

Shiraz Mirza Hall
76a Coombe Road
Norbiton
KT2 7AZ

லண்டனில் வியூகம் வெளியீடும் கலந்துரையாடலும் அரசியல் ஆர்லர்களிடையேயான கருத்துப் பரிமாற்றத்திற்கான நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதால். பல்வேறு அரசியல் பின்னணிகளில் இருந்தும் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் தற்போதைய அரசியல் சூழல் அதுதொடர்பான விவாதங்களும் இடம்பெறவுள்ளது.

சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: – சரத் பொன்சேகா : பொன்சேகாவின் கூற்று உண்மைக்கு புறம்பானது – அமைச்சர்கள்

sarath1_koththapaja.jpgஇலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வன்னியில் இறுதிகட்ட யுத்தத்தின் கடைசி மூன்று நாட்கள் தமக்கு தொடர்புகள் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நடந்த சமயத்தில் களத்தில் நின்ற இராணுவத் தளபதிகளுடன் தொடர்பில் இருந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் மூலம் தனக்கு இந்த விபரங்கள் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள், நோர்வே மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன், சமாதான செயலக பிரதானி புலிதேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் மற்றும் சிரேஸ்ட இராணுவ தளபதி ரமேஸ் ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரும் படையினரிடம் சரணடையப்போவதை அறிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பசில் ராஜபக்ச பின்னர், கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரிவித்துள்ளார்.  இதன்படி கடந்த மேமாதம் 17 ஆம் திகதி, அதிகாலை, இந்த மூன்று தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் பசில் ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு தரப்பு ஆலோசனையின்படி வெள்ளையாடை அணிந்து சரணடைவதற்காக வந்துள்ளனர். இதன் போதே கோத்தபாய ராஜபக்ச, 58 வது படையணித்தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வாவுக்கு எந்த ஒரு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சரணடைய அனுமதிக்கவேண்டாம் அவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் கூற்றை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதுடன், வன்மையாகக் கண்டிக்கிறது. சரத் பொன்சேகாவின் இந்த கூற்றானது நாட்டுக்கும், படை வீரர்களுக்கும், மக்களுக்கும் இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என்று இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சரத் பொன்சேகாவின் இந்த கூற்று மிகவும் பாதகமும், பாரதூரமானதுமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, சுற்றாடல் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, பொலிமா அதிபர் மஹிந்த பாலசூரிய, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் உரையாற்றுகையில், ‘தற்பொழுது மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வரும் இதே சரத்பொன்சேகா தனக்கு ஜுலை மாதம் 10ம் திகதி அம்பலாங்கொடையில் வழங்கப்பட்ட கெளரவிப்பு நிகழ்வில் உரையாற்றும்போது கூறியதாவது:-

“நான் படை வீரர் என்ற வகையில் அவ்வப்போது தேவையான உத்தரவுகளை பிறப்பித்து யுத்தத்தை வெற்றிகொண்டேன். படை வீரர்களிடம் சரணடைய வரும் எவரையும் ஒன்றும் செய்ய வேண்டாம் என எனக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. குளிர் அறையிலிருந்து சொல்பவர்களின் உத்தரவை ஏற்கவில்லை என்றார்”. எனவே அன்று அவ்வாறு கூறிய இதே சரத் பொன்சேகா இன்று தனது இராணுவ உடையை களைந்த பின்னர் அரசியல் இலாபத்துக்காக மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதுபோன்ற மாறுபட்ட கருத்துகளை வெளியிடுவதன் மூலம் இந்த நாட்டையும் படை வீரர்களையும் காட்டிக்கொடுப்பதுடன், அவர்களுக்கு பாரிய துரோகம் இழைக்கின்றார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரபாகரனின் பெற்றோர், ஜோர்ஜ் மாஸ்டர், தயா மாஸ்டர் மற்றும் ஐந்து டாக்டர்கள் தான் வெள்ளைக் கொடிகளை காண்பித்த வண்ணம் படையினரிடம் சரணடைய வந்தவர்கள். அவர்கள் கொல்லப்படவில்லை. இன்னும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுற்றாடல் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க உரையாற்றுகையில், அரசியல் இலாபங்களை கருத்திற்கொண்டு இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான பல கதைகளை சரத் பொன்சேகா வெளியிடலாம். இது சரத் பொன்சேகாவினதும் அவரது பின்னணியில் உள்ளவர்களினதும் பாரிய சூழ்ச்சியாகும். இதற்கு நாங்கள் ஒருபோதும் சிக்கிக்கொள்ளப் போவதில்லை. நல்ல விடயங்களை நான்தான் செய்தேன் என்று பொறுப்பேற்கும் பொன்சேகா, தவறுகள் இருப்பின் அதனையும் பொறுப்பேற்க வேண்டும். இதுவே சரியான முறையாகும். லைபீரியா ஜனாதிபதி சார்ள்ஸ் டைலருக்கும் அந்த நாட்டு தளபதி இதுபோன்ற ஒரு சூழ்ச்சியையே செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மிலேனியம் சிட்டி சம்பவத்தைவிட பாரதூரமான காட்டிக்கொடுத்தல் – பொன்சேகாவின் கூற்று குறித்து விமல் வீரவன்ச கருத்து

மிலேனியம் சிட்டி காட்டிக் கொடுத்தல் சம்பவத்தைவிட மிகவும் பாரதூரமான காட்டிக் கொடுத்தலை ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா செய்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மற்றும் படைவீரர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தும் சர்வதேச சதியின் ஒரு அங்கமாகவே சரத் பொன்சேகா தற்பொழுது செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். சர்வதேச சதியின் ஒரு ஒப்பந்தக்காரராக பொன்சேகா இலவசமாக செயற்படுவது தெளிவாகியுள்ளது என்றும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார். விமல் வீரவன்ச இங்கு மேலும் உரையாற்றுகையில்:-

சர்வதேச சமூகத்திற்கு எமது தலைவர்கள் மீதும், படைவீரர்கள் மீதும் குற்றஞ்சுமத்துவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. களங்கத்தை ஏற்படுத்தும் நோக்குடனே சரத் பொன்சேகா ஒப்பந்தக்காரராக செயற்படுகின்றார். சரத் பொன்சேகா தற்பொழுது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எந்த ஒரு வேட்பாளரும் தனக்குள்ள வாக்குகளை தக்கவைத்துக் கொண்டு மேலதிக வாக்குகளை பெறும் முயற்சிகளையே மேற்கொள்வார்கள். ஆனால் சரத் பொன்சேகாவின் இந்த கூற்று அவருக்கு எந்த வாக்கு அதிகரிப்பையும் கொடுக்கப்போவதில்லை. இதன் மூலம் வாக்கு வங்கியை பெறுவதைவிட தனது ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயற்படுவதே முக்கியம் என்று தெளிவாகி தெரிகிறது.

அரச உயர் அதிகாரிகள் ஓய்வு பெறுவது வழக்கம். ஆனால் அவ்வாறு ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஓய்வை பெற்றுக்கொண்டு அடுத்த நாளே அரசியலுக்கு வந்ததில்லை. எமது நாட்டில் அரச உயர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று அடுத்த நாளே ஜனாதிபதி வேட்பாளராக வந்த முதல் நபர் சரத் பொன்சேகாவாகும். சாதாரணமாக அரசியலுக்கு வரவிரும்பும் எவரும் தனது அரசியல் பயணத்தின் ஆரம்பத்தை ஜனாதிபதி வேட்பாளர் என்று ஆரம்பிப்பதில்லை.

மாகாண சபையிலிருந்தே ஆரம்பிப்பர். ஆனால் சரத் பொன்சேகா படிப்படியாக அரசியலில் நுழையாமல் திடீரென ஜனாதிபதி வேட்பாளராக ஏன் வந்தார் என்று கேள்வி எழும்பியது. இவருக்குப் பின்னர் சர்வதேச சதியும் ஒரு குழுவின் அழுத்தமும் இருக்கின்றமை தெளிவாக தெரிகிறது. பொன்சேகாவின் இது போன்ற கூற்றானது, மேலே பார்த்து தனக்குத் தானே எச்சில் துப்புவது போன்ற செயலாகும்.

பொன்சேகாவிடம் கேட்டுக் கொள்கின்றேன். உங்களுக்கு முடியுமான பொய்களை சொல்லி வாக்குகளை கேளுங்கள்.  ஆனால் தாய் நாட்டிற்காக செயற்பட்ட ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், படைவீரர்களுக்கோ அபகீர்த்தி ஏற்படும் வகையில் எந்த பொய்யான தகவல்களையும் வெளியிட வேண்டாம். அதற்கு மாறாக அரசியல்வாதிகளான எங்கள் மீது எந்த பொய்க்குற்றச்சாட்டுக்களையும் முன்வையுங்கள் என்றார்.

நாட்டையும், படைவீரர்களையும் காட்டிக் கொடுக்கும் நோக்குடன் முன்னு க்கு பின்னர் மாறுபட்ட தகவல்களை வெளி யிட்டு வரும் சரத்பொன்சேகாவை நம்பி மக்கள் எவ்வாறு வாக்குகளை வழங்குவது என்றும் இவரை எவ்வாறு ஜனாதிபதி ஆக்குவது என்றும் விமல் வீரவன்ச இங்கு கேள்வி எழுப்பினார்.