11

11

மட்டக்களப்பில் பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதல் நோயாளி மரணம்

swine-flu-2.jpgமட்டக் களப்பு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் புதன்கிழமை மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானைச் சேர்ந்த பாக்கியராசா (45 வயது) என்பவர் கடந்த 27 ஆம் திகதி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இவருடைய இரத்தம் களுத்துறையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இரத்த பரிசோதனை அறிக்கை மூலம் இவர் ஏ எச்1 என்1 என்ற வைரஸினால் பன்றிக்காய்ச்சல் பீடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்துள்ளார். இறந்தவரின் உடல் பாதுகாப்பான முறையில் தனிமைப்

படுத்தப்பட்டது.இந்த உடல் பன்றிக்காய்ச்சலினால் இறந்தவரின் உடல்அடக்கம் செய்யப்படும் விதிமுறைக்கு அமைய உறவினர்களிடம் கையளிக்காது நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதேவேளை,மட்டக்களப்பில் பன்றிக்காய்ச்சலால் ஒரு நோயாளி இறந்த நிலையில் மேலும் இந்த நோயாளர்கள் இருக்கலாமென அஞ்சப்படுகிறது.இந்நோயிலிருந்து மக்களை பாதுகாக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இதற்காக கருத்தரங்குகள், துண்டுப்பிரசுரங்களை வெளியிடல், பதாகைகளை அமைத்து மக்களை தெளிவுபடுத்த வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பெருமழை; வெள்ளம்; மக்கள் இடம்பெயர்வு – பரீட்சை நிலையங்களும் நீரில்

rain2.jpgஅம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் இடை விடாத அடைமழை காரணமாக கரையோரப் பிரதேச தாழ் நிலங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக 41800 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களினால் அம்பாறை அரச அதிபர் காரியாலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 6300 குடும்பங்களும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5150 குடும்பங்களும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 4500 குடும்பங்களும், கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் 4505 குடும்பங்களும, காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 3200 குடும்பங்களும், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4500 குடும்பங்களும், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 6100 குடும்பங்களும், பதியதலாவ பிரதேச செயலாளர் பிரிவில் 2700 குடும்பங்களும் வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் பிரிவில் 4750 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய வெள்ள நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு சமைத்த உணவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அம்பாறை மேலதிக அரச அதிபர் அசங்க அபயவர்த்தன தெரிவித்தார். தொடர்ந்து இம் மாவட்டத்தில் மழை பெய்து வருவதனால் இடம்பெயரும் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மழை வெள்ளம் காரணமாக பாடசாலைகள் வெள்ள நீரினால் நிரம்பியுள்ளன. பிரபல பாடசாலைகளான கல்முனை ஸாகிறாக் கல்லூரி, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, பொத்துவில் மத்திய கல்லூரி, சம்மாந்துறை, வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகள் வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளன.

இதன் காரணமாக க. பொ. த. (சா/த) பரீட்சைக்கு மேற்படி பரீட்சை மண்டபங்களாக பாடசாலைகளை பயன்படுத்துவதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அதிபர்களும், மேற்பார்வையாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலின் பின் உடனடியாக அரசியல் தீர்வு டில்லியில பசில்

basil-rajapaksa.jpgதமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றதும் உடனடியாக ஆரம்பிக்கப்படுமென இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் வியாழக்கிழமை உறுதியளித்திருக்கிறது. அத்துடன் அரசியல் தீர்வுக்கு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களுக்குரிய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுமென டில்லிக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரடங்கிய உயர் மட்டக்குழுவே இந்திய அரசுக்கு இந்த உறுதி மொழிகளை வழங்கியிருப்பதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை நேற்று வியாழக்கிழமை மாலை தெரிவித்தது.

அதேசமயம், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள சகல தமிழரும் ஜனவரி 10இல் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் இலங்கைத் தூதுக்குழு உறுதியளித்திருக்கிறது. இலங்கைத் தூதுக் குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தை சிறப்பாகவும் சுமுகமாகவும் இடம்பெற்றதாக இச்சந்திப்பின் பின்னர் நிருபர்களிடம் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

முகாம்களிலுள்ள தமிழர்கள் சகல ஜனநாயக உரிமைகளையும் கொண்டிருப்பதாகவும் அவர்கள் வாக்களிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தொடர்பாக கேட்கப்பட்டபோது பதிலளித்த பசில் ராஜபக்ஷ, “நாம் மிகவும் உறுதியான புரிந்துணர்வுடன் உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இந்த இலக்கு குறித்து கவனத்தில் எடுப்பதாக உறுதியளிக்கிறோம். அரசியல் தீர்வுக்குத் தேவையான சகல அரசியலமைப்பு ரீதியான திருத்தங்களும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இந்திய அரசின் நலன் சார்ந்த சகல விடயங்களிலும் இலங்கை இந்தியாவுடனேயே நிற்கும். இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளிலும் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே இலங்கை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, அதேசமயம் இச்சந்திப்பின்போது, தனது பாதுகாப்பு தொடர்பான கவலைகள், அக்கறைகள் தொடர்பான விடயங்கள் எதனையும் இந்திய அரசாங்கம் எழுப்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என த.தே.கூ. முடிவு

tna.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று முன்தினம் மீண்டும் கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்ந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டன. தேர்தலை பகிஷ்கரித்தல், தனி வேட்பாளர் நிறுத்துதல், வாக்கு சீட்டை செல்லுபடியற்றதாக்குதல், யாராவது ஒரு வேட்பாளரை ஆதரித்தல், தீர்மானம் எடுக்கும் முடிவை மக்களிடமே விட்டு விடுவது உட்பட பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் தேர்தல் பகிஷகரிப்பு, தனி வேட்பாளர் நிறுத்துதல்,வாக்கைச் செல்லுபடியற்றதாக்குதல் ஆகிய யோசனைகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி கைவிடப்பட்டுள்ளன எனத் தெரிய வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்பு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுடன் பேச்சுவார்ததைகளை நடத்துவது என்றும் அதன் பின்னர் இத்தேர்தல் தொடர்பாக மீண்டும் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் முடிவெடுத்துள்ளனர்.

மாற்றுச் சிந்தனைக்கு வழிவிடுமா துருப்பிடித்த தமிழ்த் தேசியம். : யூட் ரட்ணசிங்கம்

Mahinda Rajaparksa and Sarath Fonsekaமீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தல், தமிழ்பேசும் மக்கள் தம் வாக்குமூலம் பேசவேண்டிய நேரம், எதிர்த்தரப்பிலே இரண்டு இனவாத அரசியலின் பிரதிநிதிகள். இவர்கள் தமிழ்பேசும் மக்களின் அரசியல் எதிரிகள் மட்டுமல்ல மக்களைக் கொன்று குவித்த இரு கொலைகாரர்கள்.

சிங்களத் தேசிய இனவாதத்துக்கும் தமிழ்த் தேசிய இனவாதத்துக்கும் இடையில் நடந்த கொடூரமான போரில் செத்து மடிந்தன ஏதுமறியா அப்பாவி உயிர்கள். அதை முன்னின்று நடாத்தியவர்களும் வேடிக்கை பார்த்தவர்களுமே இன்று களமாட காத்திருக்கின்ற காவல் தெய்வங்கள். ஜனநாயகம் தத்தெடுத்த தவப்புதல்வர்கள். இவர்கள் ஜனாதிபதியாக வேண்டுமென்று களம் இறங்கியிருக்கிறார்கள்.

1) இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
2) இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

இவர்கள் இருவரையும் தராசிலே போட்டால் தராசின் முள் எந்தப் பக்கமும் சாயாது. (பகுத்தறிவு இல்லாவிட்டாலும் அந்தமுள் தன் பண்பிலிருந்து மாறாது) களநிலை இப்படியிருக்க தமிழ் பேசும் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவில்லாது நிலை தடுமாறி நிற்கிறார்கள்.

போர்க்களத்திலே சந்தித்த பெரும் சவால்களையெல்லாம் முறியடித்து வெற்றி கொண்டவர் என்ற வீராப்புடன் சரத் பொன்சேகாவும், போர் சூழ்ந்த வேளையில் எத்தனையோ அரசியல் சவால்களையெல்லாம் எதிர் கொண்டு இந்தப் போரை வென்று முடித்தவர் என்று உரிமை கோரும் மகிந்தாவும் சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமானவர்களாகக் காணப்படுகிறார்கள். பெரும்பான்மை இனத்தின் வாக்குகள் இரண்டாக பிரிந்து போகும் நிலை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்ற வேளை வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மீண்டுமொருமுறை களத்திற்காக காத்து நிற்கின்றன.

தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒன்றாக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாவது வாக்கெடுப்புக்கு போகவேண்டிய நிலை ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர் கூறுகின்றனர். (அதாவது 50% க்கு குறைவான வாக்குகளைப் பெற்றால் எந்த ஒரு நபரும் ஜனாதிபதியாக முடியாது. ஜனாதிபதியாக வேண்டுமாயின் 50%க்கு அதிகமான வாக்குகள் பெறவேண்டும்)

களநிலை இப்படியிருக்க தமிழ் பேசும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழ் பேசும் மக்களுக்கு இன்று ஓர் தலைமை இல்லை. இருக்கின்ற அத்தனை அரசியல் கட்சிகளும் ஏதோ ஒரு கூறு மக்களையும் பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப் படுத்திக்கொண்டு நிற்கிறார்கள்.

தமிழ் பேசும் மக்கள் ஒரு பிரதிநிதியை நிறுத்தி வாக்குகளை ஓரிடத்தில் குவிப்பார்களேயானால் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் சுற்றுக்கு போகவேண்டிய நிலையை உருவாக்கும். அப்படியான நிலை உருவாகுமேயானால் அது சிங்கள பெரும்பான்மை மக்களுக்கும் அதன் அரசியல் தலைவர்களுக்கும் ஏன் உலகத்திற்குமே ஓர் செய்தியைச் சொல்லும்.

அந்த வேளையில் தமிழ் பேசும் மக்கள் தமது தரப்பின் அரசியல் கோஷங்களை முன் வைக்கக் கூடிய களநிலையைத் தோற்றுவிக்கும். ஓர் நிரந்தரமான தீர்வை நோக்கிய பேச்சை உருவாக்கக்கூடிய அரசியல் சூழலை உருவாக்கக்கூடும்.

இந்த அரசியல் சூழலை ஏற்படுத்துவதற்கான அரசியல் முன்னெடுப்பை மேற்கொள்ளும் அரசியல் திராணி தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உண்டா? சம்பந்தனுக்கு தமிழ் பேசும் மக்களை ஒரு புள்ளியில் ஒன்று சேர்க்கும் அரசியல் திறனும் நேர்மையும் இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் எதற்காக மீண்டும் மீண்டும் அதே குட்டையில் ஊறிய மட்டைகளை களத்திற்கு எடுத்து வருகிறார்கள்?

ஏன் இந்த தமிழ் அரசியல் சற்று வேறுபட்ட கோணத்தில் சிந்திக்கக் கூடாது? சம்பந்தனால் இதை செய்ய முடியாது என்று கண்டுகொண்டால் ஓர் மாற்று அரசியல் திட்டத்தை வகுப்பதுதானே ஓர் முஸ்லீம் பிரதிநிதியை நிறுத்தி அவரை ஆதரியுங்கள் என்று கேட்கலாம். ஓர் மலையக வேட்பாளரை கொண்டுவந்து நிறுத்தலாம். புலிகளுக்கு வக்காலத்து வாங்கியிருந்தாலும்கூட இன்றுவரை தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் விக்கிரமபாகுவை ஆதரிக்கலாம் அல்லது புலிகளை ஆதரிக்காத சிங்கள இடதுசாரியான சிறிதுங்க ஜெயசூரியவை ஆதரிக்கலாம்.  அதன்மூலம் அவர் கையைப் பலப்படுத்தலாம், சிங்கள மக்களின் முற்போக்கானவர்களின் ஆதரவை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள இது உதவலாம்.

எதற்காக மீண்டுமொருமுறை தமிழர் வாழ்வை பாழ்படுத்துகின்ற அரசியல் முன்னெடுப்புகளை செய்கிறார்கள்? தமிழர் வாழ்வில்  எத்தனை தடவைகள் இப்படியான வாய்ப்புகள் கிடைத்தன? தமிழர் வாழ்வை தமதாக்கிக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் தம் மக்களின் வாழ்வை வளப்படுத்த இப்படியான வாய்ப்புகளை பயன்படுத்தினார்களா?

தழிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் அதன் வரலாறு காணாத அழிவு வரையில் தமிழ் பேசும் மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. புலிகளின் தலைமை தலைவரின் சுயநலபோக்கினால் இப்படிக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் குழப்பியடிப்பதிலும் வெளிநாட்டு சக்திகள் மத்தியில் நம்பிக்கையீனத்தை உருவாக்குவதிலும் குறியாக இருந்தார்களே தவிர கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதையும் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் அரசியல் ஸ்திரத்தையும் கொண்டிருக்கவில்லை.

தற்போது நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை இன்றிருக்கும் நிலையிலிருந்து ஒருபடி மேலே கொண்டுசெல்ல இந்தத் தேர்தல் உதவுமா என்று பார்ப்பதும் அப்படி இருக்குமாயின் அதற்கான முயற்சிகளைச் செய்யத் தவறுவது தனது சுயநலம் கருதி பிரபாகரன் போராட்டத்தைச் சிதைத்தற்கு ஒப்பாகும்.

ஆகவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை குறைந்தபட்சம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்தலாமா? அப்படியாயின் அது எவ்வாறு என்பதை சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

தமக்குக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டு தவறவிட்டு பழியை எதிரியின் மீது சுமத்துவதால் என்ன பயன்?

சர்வதேசம் இன்று இலங்கையின் அரசியலை உன்னிப்பாக அவதானித்து வருகின்ற வேளை ஜனாதிபதித் தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு தள்ளப்படுமேயானால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் கோஷத்தை முன்வைக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக இது அமைந்துவிடக்கூடும்.

உலகம் முழுவதும் மாவீரர்தினம் கொண்டாடி மகிழ்வதைவிட உருப்படியான அரசியல் முன்னெடுப்புக்களை செய்வதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்.

இன்று தமிழ் மக்களுக்கு 13வது திருத்தச்சட்டத்தை விட அதிகமானவற்றைத் தருவதாக முன்னுக்குப்பின் முரணாக பேசுகின்ற நேரம், தேர்தலின் வெற்றி யாருக்கு என்று தெரியாது இடைநடுவில் நின்றுபோகுமேயானால் அதன்பின் ஏற்படும் பேச்சுவார்த்தை மேசையில் பதின்மூன்று என்ன பதினைந்தே தருவோம் என்று கூறுகின்ற நிலையை உருவாக்கும் காலம் சிலவேளைகளில் உருவாகிவிடும்.

அந்த நிலையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் நகர்வுகளை உடனடியாக தொடங்க வேண்டிய காலத்தில் இன்று நாம் உள்ளோம். 35 ஆண்டு காலம் புஜத்தை நம்பி அரசியல் செய்த நாம் இனியாவது புத்திசாலித்தனமான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு அந்த மக்களுக்கு ஓர் நிம்மதியான தூக்கத்தை கொடுக்கக் கூடிய ஓர் நிரந்தரத் தீர்வை நோக்கி செயல்படுவோம்.

இந்த தேர்தலைத் தவறவிட்டால் மீண்டும் 6 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டி வரும். ஏற்கனவே 60 ஆண்டு காலம் இப்படியே காத்திருந்து காத்திருந்து கழிந்தது.

கடந்த 60 ஆண்டு காலம் அகிம்சைவாதிகளும் ஆயுததாரிகளும் வைக்கோல் போரிலே படுத்திருக்கும் நன்றியுள்ள மிருகம் போல் நடந்து கொண்டார்கள். அதே அரசியலை அழியவிடாது பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக சிலர் இப்போதும் செயல்படுகிறார்கள்.

செயல்படுவது ஒன்றும் தப்பில்லை, இவர்களால் உருப்படியான எதையாவது தமிழ் பேசும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதுதான் அன்றும் இன்றும் இவர்கள் முன் விடைதேடி விரிந்து கிடக்கும் வினா.
 
தனிமனிதனில்  அரசியலைப் பார்ப்பதும் பின் தனி மனிதனை பழிவாங்கும் அரசியலை முன்னெடுப்பதுமாக தமிழ் அரசியல் நகர்ந்தது கடந்த காலங்களில். இப்போதும் இராணுவத் தளபதியைக் கொண்டுவந்து மகிந்தாவை பழிவாங்க வேண்டுமென்று பேச்சுத் தொடங்கிவிட்டது.

சரத்பொன்சேகா ஜனாதிபதியானால் அரசாட்சி இராணுவ மயப்படுத்தப்பட்டு முழுநாடே புத்தமயமாகும் என்று தெரிந்தும் கூட ஒரு தனி மனிதனை பழிவாங்கும் அரசியலுக்காக அலுவல் பார்க்கிறார்கள்.

“எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்” என்று அதற்கும் ஒரு விளக்கம். இம்முறையும் தமிழர் வாழ்வு சுடு சட்டியிலே இருந்து துள்ளி அடுப்பிலே வீழ்ந்த கதையாகவே முடியும்.