June

June

மோதல் தவிர்ப்பு வலயத்தில் சேவையாற்றிய மருத்துவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்: யோர்மன் பிளெச்சர்

varatharaja2.jpgயுத்த வலயத்தில் கடமையாற்றிய மருத்துவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மருத்துவப் பேரவையின் தலைவர் டொக்டர் யோர்மன் பிளெச்சர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

வன்னிப் பகுதியில் கடமையாற்றிய மூன்று மருத்துவர்களில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றையவர் எங்கு இருக்கின்றார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை எனவும் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த மருத்துவர்கள் சட்டத்தரணிகள் ஊடாக தமது பக்க நியாயத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமென  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
உலகம் முழுவதிலும் மருத்துவ சேவைகளை ஆற்றி வரும் மில்லியன் கணக்கான மருத்துவர்களின் சார்பில் இலங்கை அரசாங்கத்திடம் தாம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது மனிதாபிமான விவகாரம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கும் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கும் தொடர்பில்லை: சிவ் சங்கர் மேனன்

manan.jpgஇந்தியா விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டமைக்கும் இலங்கை- இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கும் தொடர்பில்லையென இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் தெரிவித்தார். ‘இலங்கை-இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பாக முதலில் பேச்சுக்கள் நடைபெற்றனதான். ஆனால் அதனை நாம் பின்னர் கிடப்பில் போட்டுவிட்டோம். அதனைப் பின் தொடரவில்லை’ என சிவ்சங்கர் மேனன் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்ததில் ஒரு விடயம் இன்னமும் இறுதிப்படுத்தப்பட வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்ட அவர் சில வருடங்களுக்கு முன்னரே அந்த நடவடிக்கைகளை ஒத்துவைத்து விட்டதாகவும் தெரிவித்தார். பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்படாத போதும் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களுக்கு ஆயுதங்கள் தேவையெனக் கோரிக்கை விடுத்துவந்ததாகவும் அவர் கூறினார். அவற்றில் சிலவற்றை மாத்திரமே இந்தியா வழங்கியதாகவும் எஞ்சியவற்றை பாகிஸ்தான் உள்ளிட்ட ஏனைய நாடுகளில் பெற்றுக்கொண்டதாகவும் மேனன் சுட்டிக்காட்டினார்.

எனினும் இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா ரோடார்கள் 40 மில்லி லீற்றர் எ-70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை வழங்கியிருந்ததாக இந்திய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதேவேளை விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களுக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கியதாகத் தமிழகக் கட்சிகள் பல குற்றஞ்சாட்டியிருந்ததுடன் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தன

காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கியதை ரத்து செய்ய உச்சமன்று உத்தரவு

02supreme.jpgஇலங் கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தியதை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. ரசாங்கத்திற்குச் சொந்தமான இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் 90 சதவீதமான பங்குகள் தனியார் நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டிருந்தன.

இதனை எதிர்த்து இரண்டு அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர்களும், நவசமசமாஜக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே மேற்படி அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

தனியார் மயமாக்கப்பட்டதன் மூலம் சட்டத்திற்கு முரணான முறையில் செயற்படுத்தப்பட்டிருக்கிறதென அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் 90 வீத பங்குகளையும் உரிமத்தையும் அரசாங்கத்திற்கு வழங்க வேண்டுமென உச்சமன்று உத்தரவு பிறப்பித்தது.

குறிப்பிட்ட, மில்போர்ட் ஹோல்டிங்ஸ் பிறைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதலீடான ஆறு பில்லியன் ரூபாயை ஐந்து வருட காலத்திற்குள் மீளச் செலுத்திவிட வேண்டுமென்று உச்சமன்று தெரிவித்தது. தற்போது பணியாற்றும் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையினர் உடனடியாக அகற்றப்பட வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர்களை நியமிப்பதற்காக தகுதி வாய்ந்த ஒருவரை திறைசேரி நியமிக்க வேண்டுமென உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் ஜூன் 18க்குள் இந்த விடயம் பூர்த்திசெய்யப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளது.

இடைப்பட்ட காலத்தில் திறைசேரி இடைக்கால நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, நீதியரசர்கள் காமினி அமரதுங்க, கே. சிறிபவன் ஆகியோர் கொண்ட குழுமம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

அதேநேரம், கணக்காய்வாளர்களான ஏனர்ஸட், ஜங்க் ஆகியோரை நிறுத்துமாறும் உச்சமன்று தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் உரிமை பற்றிய தீர்ப்பையடுத்து அதன் ஊழியர்கள் நேற்று கூட்டுத்தாபனத்தின் முன்னால் கூடி ஆடிப்பாடி தமது வரவேற்பைத் தெரிவித்தனர்.

அமெரிக்கா முஸ்லிம் நாடுகளிடையே உறவில் புதிய ஆரம்பம் வேண்டும்: அதிபர் ஒபாமா

obamaspeech.gifஅமெரிக் காவுக்கும், உலகெங்கும் உள்ள முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு புதிய ஆரம்பம் வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் அதிபர் ஒபாமாவின் உரைக்கு பெருத்த கரகோஷத்துடனான வரவேற்பு கிடைத்தது.

கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய இந்த உரையில், அமெரிக்காவும், இஸ்லாமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, நீதி, முன்னேற்றம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் பொது அடிப்படைகளை அவை பகிர்ந்துகொள்பவை என்று ஒபாமா கூறியிருக்கிறார்.

முஸ்லிம்கள் பற்றிய மோசமான விம்பத்துக்கு எதிராக தான் போராடுவேன் என்று உறுதி கூறிய ஒபாமா அவர்கள், அதேவிடயத்தை அமெரிக்கா பற்றிய கருதுகோள் குறித்து முஸ்லிம்களும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  ஒரு நாட்டின் மீது மற்றுமொரு நாட்டினால், எந்த வகையான அரசாங்க முறைமையும் திணிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், ஆனால், அரசாங்கங்கள் அந்த நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

‘ருவென்டி-20’ உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இன்று இங்கிலாந்தில் ஆரம்பம்

t20-world-cup.jpgஐ.சி.சி. ருவென்டி-20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது. கிரிக்கட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இத்தொடரில் மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் டெஸ்ட் அந்தஸ்துப் பெற்றுள்ள 9 நாடுகளுடன் புதிதாக ஸ்கொட்லாந்து,  அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.

இந்த 12 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 27 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் முதலில் நடைபெறும் 24 லீக் போட்டிகளில் 12 அணிகளும் கலந்துகொள்ளும். லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.

இந்த சுற்றுக்குத் தெரிவாகும் 8 அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டியிடும். சுப்பர் 8 முடிவில் 2 பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.  இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி லண்டன்,  லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. லண்டன், லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐ.சி.சி. ருவென்டி-20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்திய அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீள் குடியேற்றுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் – அநுர பிரியதர்ஷன

anura_priyadarshana_yapa4.jpgஇரண்டாம் கட்டமாகவே இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை; மீள் குடியேற்றுவது குறித்து முடிவு செய்யப்படும். அதற்கு முன்னர்  வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். இந்தியாவில் அகதிகளாக உள்ள எமது மக்களை மீள அழைத்து தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவது குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது. இந்தியாவில் அகதிகளாக உள்ள மக்களும் எமது நாட்டு மக்களே.அவர்களை நாம் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும். முதலில் வட பகுதியை அபிவிருத்தி செய்து வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவர். 180 நாட்களுக்குள் அந்த மக்களை மீள்குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. வடபகுதியை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி செயலணிக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு இதனூடாக அப்பகுதி துரிதமாக முன்னேற்றப்படும்.

இந்தப் பணிகள் நிறைவடைவதோடு இந்தியாவில் அகதிகளாக உள்ள எமது நாட்டவர்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றார். 

அகதி முகாமில் உணவின்றி எவரேனும் இறந்தால் ஐ.நா.வே முழுப்பொறுப்பு

mahinda_samarasinghe_.jpgவடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் எவரேனும் உணவின்றி பட்டினியால் உயிரிழந்தால் அதற்கான பொறுப்பை ஐ.நா.வே ஏற்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது. ஜெனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை தொடர்பான விசேட அமர்வின் போது இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை முன்வைத்தவர்களால் ஏற்கனவே ஒளிப்பதிவு செய்து கொண்டு வரப்பட்ட ஒளிநாடா மூலம் திரையில் பேசிய மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஐ.நா. வின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை, முகாம்களில் இருக்கும் சிறுவர்கள் உணவு மற்றும் போஷாக்கின்றி உயிரிழப்பதாகக் கூறினாரென கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அப்படி உணவு இல்லாமல் (முகாம்களிலுள்ள) எவரும் உயிரிழந்தால் அதற்கான பொறுப்பை (ஐ.நா.முகவரமைப்பான) உலக உணவுத் திட்டமே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், அவர்கள் தான் உணவு விநியோகத்திற்கான பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். அது மட்டுமல்லாது இலங்கை நிலைவரத்தை கூறி வேறு நாடுகளிடமிருந்து நிதியும் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் பணம் செலவிடுவதுமில்லை என்றும் அமைச்சர் சமரசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

எனினும், அப்படியான நிலைமைகள் எதுவும் முகாம்களில் இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேநேரம், இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக ஏற்றுக்கொண்ட மனித உரிமைகள் அமைச்சர் சமரசிங்க, இது தொடர்பிலும் ஐ.நா.வையே குற்றம் சாட்டினார்.

முகாம்களிலுள்ள கூடாரங்களில் அதிக எண்ணிக்கையானோர் தங்க வைக்கப்பட்டிருப்பதுடன், மலசலகூடத்திற்குக் கூட அங்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுவதாகவும் இவ்வாறான விடயங்களினால் அங்குள்ள மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக பிரதம நீதியரசர் தெரிவித்திருப்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட போது;

“நாமும் இதைத் தான் கூறுகிறோம். கூடாரங்களை அரசாங்கம் கொடுக்கவில்லை.

அரசினால் வீடுகளே வழங்கப்பட்டுள்ளன. ஐ.நா. வினால் தான் கூடாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கூடாரங்களைக் கொடுக்காமல் வீடுகளை வழங்குமாறு அரசாங்கம் சார்பில் ஐ.நா. விற்கு பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்திக் கூறப்பட்டு விட்டது. எனினும், வீடுகளை வழங்கினால் அது நிரந்தரமாகி விடுமென அவர்கள் காரணம் கூறுகின்றனர்.

எனவே, ஐ.நா.வின் பணிகளை விட அரசின் நடவடிக்கைகள் தரமுடையது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. சர்வதேச தரத்தைப் பேணுமாறு எம்மை வலியுறுத்தும் இவர்கள், அதை அவர்களது செயற்பாடுகளிலும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க பதலளித்தார்.

அது மட்டுமல்லாது, ஐ.நா. வுக்கும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் (ஐ.சி.ஆர்.சி.) இலங்கையில் வரையறையற்ற அனுமதி இருக்க வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட யோசனையை முற்றாக நிராகரித்து விட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுயாதீன நாடொன்றில் பிற அமைப்புகளுக்கு வரையரையற்ற அனுமதிக்கு இடமளிக்க முடியாதென்றும் அப்படிச் செய்தால் அது அடிமைப்படுவதாகி விடுமென்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை உதவிகளை ஏற்கத்தயாராக இருக்கின்ற போதிலும் அது இலங்கையின் தேசியக் கொள்கைக்கும், கட்டமைப்புக்கும் உட்பட்டதாகவே இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக விசேட அமர்வொன்றை நடத்த முயற்சித்த மேற்குலக நாடுகள் வழமையான சம்பிரதாயங்களை மீறி வெளிப்படைத் தன்மையின்றி நடந்து கொண்டதாக சாடிய மஹிந்த சமரசிங்க, இலங்கை விடயத்தில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற வலய நாடுகளை விட வேறு எங்கோ இருக்கும் நாடுகளுக்குள்ள அக்கறை என்னவென்றும் கேள்வியெழுப்பினார்.

இதேநேரம், மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையை ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை சந்தித்த போது, இலங்கை தொடர்பில் அவர் செயற்பட்ட விதம் தவறென நேரடியாகவே கூறி விட்டதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அத்துடன், இலங்கை அரசாங்கத்திடம் ஆராயாமல் இலங்கை பற்றி கருத்து வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு உயர் ஸ்தானிகரிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்த அமைச்சர், மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகரின் அலுவலகமொன்றை இலங்கையில் ஏற்படுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாதென திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ளவர்களில் மாணவர்கள் தமது படிப்பைத் தொடர முடியாத நிலை

Wanni_War_Welfare_Campஇலங் கையின் வடக்கே வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களில் மாணவர்கள் தமது படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்களில் கிட்டத்தட்ட 55 ஆயிரம் மாணவர்கள் இருப்பதாகவும், இவர்கள் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியில் பள்ளி செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆசிரியர்களும் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இடம்பெயர்ந்த மக்களைத் தங்க வைப்பதற்காக வவுனியா மாவட்டத்தில் உள்ள 18 பாடசாலைகளை மாணவர்கள் விட்டுக்கொடுத்துள்ளார்கள்.

இதனால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய மட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திலும், டிசம்பர் மாதத்திலும் நடத்தப்படுகின்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை என்பனவற்றை இந்த மாணவர்களுக்காகக் குறைந்தது இரண்டு மாதங்களாவது தள்ளிவைக்குமாறு வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்சினி ஒஸ்வெல்ட் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டமைப்பு தனது கோரிக்கைகளை சமர்ப்பிக்கத் தயார் – ஸ்ரீகாந்தா

srikanthaa.jpgஅனைத்துக் கட்சி மாநாட்டுக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்று ஜனாதிபதியினால் விரைவில் முன்வைக்கப்படுமானால் தமிழ்மக்கள் சார்பில் நாம் எமது கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். இவ்வாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடு குறித்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் 6 வெளிநாட்டு பிரஜைகள்

இலங்கை யுத்த வலயத்திலிருந்து இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள பொதுமக்களுடன் ஆறு வெளிநாட்டு பிரஜைகளும் சிக்கியுள்ளதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.

மூன்று அவுஸ்திரேலியர்களும், பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் நோர்வே நாடுகளை சேர்ந்த தலா ஒருவருமாக ஆறு பிரஜைகள் இவ்வாறு நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளனர்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆறு வெளிநாட்டுப் பிரஜைகளே இவ்வாறு சிக்கியுள்ளதாகத் தெரிவித்த மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணினார்களா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.