அகதி முகாமில் உணவின்றி எவரேனும் இறந்தால் ஐ.நா.வே முழுப்பொறுப்பு

mahinda_samarasinghe_.jpgவடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் எவரேனும் உணவின்றி பட்டினியால் உயிரிழந்தால் அதற்கான பொறுப்பை ஐ.நா.வே ஏற்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது. ஜெனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை தொடர்பான விசேட அமர்வின் போது இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை முன்வைத்தவர்களால் ஏற்கனவே ஒளிப்பதிவு செய்து கொண்டு வரப்பட்ட ஒளிநாடா மூலம் திரையில் பேசிய மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஐ.நா. வின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை, முகாம்களில் இருக்கும் சிறுவர்கள் உணவு மற்றும் போஷாக்கின்றி உயிரிழப்பதாகக் கூறினாரென கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அப்படி உணவு இல்லாமல் (முகாம்களிலுள்ள) எவரும் உயிரிழந்தால் அதற்கான பொறுப்பை (ஐ.நா.முகவரமைப்பான) உலக உணவுத் திட்டமே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், அவர்கள் தான் உணவு விநியோகத்திற்கான பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். அது மட்டுமல்லாது இலங்கை நிலைவரத்தை கூறி வேறு நாடுகளிடமிருந்து நிதியும் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் பணம் செலவிடுவதுமில்லை என்றும் அமைச்சர் சமரசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

எனினும், அப்படியான நிலைமைகள் எதுவும் முகாம்களில் இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேநேரம், இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக ஏற்றுக்கொண்ட மனித உரிமைகள் அமைச்சர் சமரசிங்க, இது தொடர்பிலும் ஐ.நா.வையே குற்றம் சாட்டினார்.

முகாம்களிலுள்ள கூடாரங்களில் அதிக எண்ணிக்கையானோர் தங்க வைக்கப்பட்டிருப்பதுடன், மலசலகூடத்திற்குக் கூட அங்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுவதாகவும் இவ்வாறான விடயங்களினால் அங்குள்ள மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக பிரதம நீதியரசர் தெரிவித்திருப்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட போது;

“நாமும் இதைத் தான் கூறுகிறோம். கூடாரங்களை அரசாங்கம் கொடுக்கவில்லை.

அரசினால் வீடுகளே வழங்கப்பட்டுள்ளன. ஐ.நா. வினால் தான் கூடாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கூடாரங்களைக் கொடுக்காமல் வீடுகளை வழங்குமாறு அரசாங்கம் சார்பில் ஐ.நா. விற்கு பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்திக் கூறப்பட்டு விட்டது. எனினும், வீடுகளை வழங்கினால் அது நிரந்தரமாகி விடுமென அவர்கள் காரணம் கூறுகின்றனர்.

எனவே, ஐ.நா.வின் பணிகளை விட அரசின் நடவடிக்கைகள் தரமுடையது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. சர்வதேச தரத்தைப் பேணுமாறு எம்மை வலியுறுத்தும் இவர்கள், அதை அவர்களது செயற்பாடுகளிலும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க பதலளித்தார்.

அது மட்டுமல்லாது, ஐ.நா. வுக்கும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் (ஐ.சி.ஆர்.சி.) இலங்கையில் வரையறையற்ற அனுமதி இருக்க வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட யோசனையை முற்றாக நிராகரித்து விட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுயாதீன நாடொன்றில் பிற அமைப்புகளுக்கு வரையரையற்ற அனுமதிக்கு இடமளிக்க முடியாதென்றும் அப்படிச் செய்தால் அது அடிமைப்படுவதாகி விடுமென்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை உதவிகளை ஏற்கத்தயாராக இருக்கின்ற போதிலும் அது இலங்கையின் தேசியக் கொள்கைக்கும், கட்டமைப்புக்கும் உட்பட்டதாகவே இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக விசேட அமர்வொன்றை நடத்த முயற்சித்த மேற்குலக நாடுகள் வழமையான சம்பிரதாயங்களை மீறி வெளிப்படைத் தன்மையின்றி நடந்து கொண்டதாக சாடிய மஹிந்த சமரசிங்க, இலங்கை விடயத்தில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற வலய நாடுகளை விட வேறு எங்கோ இருக்கும் நாடுகளுக்குள்ள அக்கறை என்னவென்றும் கேள்வியெழுப்பினார்.

இதேநேரம், மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையை ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை சந்தித்த போது, இலங்கை தொடர்பில் அவர் செயற்பட்ட விதம் தவறென நேரடியாகவே கூறி விட்டதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அத்துடன், இலங்கை அரசாங்கத்திடம் ஆராயாமல் இலங்கை பற்றி கருத்து வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு உயர் ஸ்தானிகரிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்த அமைச்சர், மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகரின் அலுவலகமொன்றை இலங்கையில் ஏற்படுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாதென திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • msri
    msri

    ஒரு நாட்டின் பொறுப்பு மிக்க அமைச்சர் சொல்லும் “பிச்சைக்காரப் பதில்”

    Reply
  • மாயா
    மாயா

    ஏலாது போனா. ஆக்களை வெளிய விடுங்கள். அவர்கள் களவெடுத்தாவது சாப்பிட்டு உயிர்வாழ்வார்கள்.

    Reply
  • msri
    msri

    குடிகாரன் வீட்டு குடும்பம் போல உள்ளளது> மகிநதாவின் குடும்ப அரசும்! இரண்டுநாட்களுக்கு முன் மகிந்தா சொன்னார்: தஙகளால் முடியாததது எதுவுமில்லையென> மறுநாள் ஓர் அமைச்சர் ரணிலுக்கு சொல்கினறார் உலகில் கடன் தருபவர்கள் ஓருவரும் எங்களை நம்பி கடன் தருகின்றார்கள் அவர்களிடம் சொல்லி ஒருமாதிரி கொஞச கடன் வாங்கித் தாருங்கோ> என்ற பாவனையில்…இப்போ இந்த அமைச்சர் சொல்கின்றார்> அகதிமுகாம்களில் யாராவது இறந்தால்> உலக உணவுத் திட்டமே பொறுப்பு என> காரணம் நீங்களே சாப்பாடு போடுகின்றீர்கள் என> சொந்த வீட்டுப் பிரசைக்கு சாப்பாடு போட வக்கில்லை! உங்களுக்கு ஓர் அரசு! உங்களுக்கோர்அரசியல்!

    Reply
  • palli
    palli

    பின்னோட்டம் நல்லாய்தான் இருக்கு; ஆனால் நாம் அம்மணமாக நின்று கொண்டு கிழிந்த துணி உடுத்து இருப்பவனை நையாண்டி பண்ணலாமா???

    Reply
  • msri
    msri

    பல்லி! நாம் அம்மணமாகவில்லை! அம்மணமாக்கப் பட்டுள்ளோம்! அம்மணமாக்கியவர்களை> நையாண்டி செய்யவில்லை> உரிமையோடு கேட்கின்றோம் சாப்பாடு போட….

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஏன் அம்மணமாக்கப் பட்டோம்?? தம்மைக் காப்பாற்றுவார்கள் என நம்பிய கூட்டம், மக்களைக் காப்பாற்ற நினைக்காமல் தம்மை மட்டுமே எப்படிக் காப்பாற்றலாமென சிந்தித்து செயல்பட்டது. நம்பிய மக்கள் அநாதைகளாக்கப்பட்டு யாரை எதிரிகளென்று உருவேற்றப் பட்டார்களோ, அவர்களிடமே இன்று கையேந்தும் நிலை?? அன்று போராடும் போது இல்லாத உரிமை, இன்று கையேந்தும் போது மட்டும் எங்கிருந்து வந்தது?? கைத்தறி வேட்டி கட்டியிருந்தவனுக்கு, பட்டு வேட்டி ஆசை காட்டி, கடைசியில் இருந்த கோவணத்தையும் பறி கொடுத்த நிலை யாரால் ஏற்பட்டது??

    Reply
  • BC
    BC

    பார்த்திபன்
    உங்கள் கேள்விகள் புலம்பெயர் வீரர்களுக்கு சாட்டை அடி.

    Reply