இலங் கையின் வடக்கே வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களில் மாணவர்கள் தமது படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்களில் கிட்டத்தட்ட 55 ஆயிரம் மாணவர்கள் இருப்பதாகவும், இவர்கள் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியில் பள்ளி செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆசிரியர்களும் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இடம்பெயர்ந்த மக்களைத் தங்க வைப்பதற்காக வவுனியா மாவட்டத்தில் உள்ள 18 பாடசாலைகளை மாணவர்கள் விட்டுக்கொடுத்துள்ளார்கள்.
இதனால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய மட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திலும், டிசம்பர் மாதத்திலும் நடத்தப்படுகின்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை என்பனவற்றை இந்த மாணவர்களுக்காகக் குறைந்தது இரண்டு மாதங்களாவது தள்ளிவைக்குமாறு வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்சினி ஒஸ்வெல்ட் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.