June

June

அவசரகாலச் சட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

06arliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் செலுத்தப்பட்டன.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள்  வாக்களிப்பின் போது சபையில் இருக்கவில்லை. 

யசூசி அகாசி நலன்புரி நிலையங்களுக்கு விஜயம்

yasusiakasi.jpgயப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று (09.06.2009) வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற அவர் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை பார்வையிட்டுள்ளார். அங்கு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக ஆராய்த அவர் மக்களின் குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டுள்ளார். இவரின் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான இரு பிரேரணைகள் மீதான விவாதம் இன்று

parliament.jpgமத்திய மாகாண சபைக்கு உட்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற இரண்டு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக மத்திய மாகாணசபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு பிரேரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை இந்தச்சபையின் விவாதத்துக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ் கணேஷன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

இன்று தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது பாரிய பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச சம்பளமே கிடைத்து வருகின்றது. இதனால், தோட்டத் தொழிலாளர் சமூகம் தொடர்ந்து பல்வேறுவகையில் ஏனைய சமூகங்களை விட பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது. இந்த நாட்டுக்கு பொருளாதார வளத்தினைப் பெற்றுத்தருகின்ற தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளவுயர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

ஆகவே தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளவுயர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டுமென்பதை மத்திய மாகாணசபையின் ஊடாக அழுத்தமொன்றைக் கொண்டு வருவதற்குத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக மத்திய மாகாணசபையில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளேன்.

அத்துடன், அரசாங்கத்தின் எந்தவொரு வறுமை நிவாரணமும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. உலக வங்கி தனது அறிக்கையொன்றில் மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் 32 வீதமான வறுமையுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அரசாங்க வரவுசெலவுத்திட்டப் பிரேரணையிலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்குச் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படாதுள்ளமை பாரியதொரு அநீதியாகும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர்களும் சமுர்த்தி நிவாரணத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவதற்கு மத்திய மாகாணசபையின் ஊடாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொண்டு வரும் வகையில் மேலும் ஒரு பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளேன். ஆகவே, இந்தப் பிரேரணைகளை மத்திய மாகாணசபையில் நிறைவேற்றுவதற்கு கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் முன்வரவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டதற்கு “சிங்கள பாரம்பரியமே’ அடிப்படைக் காரணம்

06srilanks_chief_judge.jpgவடக்கு, கிழக்கு மாகாணங்களை தனித் தனியே பிரிப்பதற்கான தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியதற்கு காரணம், மாகாணங்களின் சிங்கள பாரம்பரியத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாலேயே என்று பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்திருக்கிறார். திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இது தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர் பிராந்தியத்தில் இருந்த சிங்கள பாரம்பரியத்தை கவனமாக ஆராய்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். 1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் வட, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என தெரிவித்து 2006 இல் வட, கிழக்கு இணைப்பை உயர் நீதிமன்றம் தனித்தனியே பிரிப்பதற்கு தீர்ப்பை வழங்கியிருந்தது.

ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. ஆகிய அரசியற் கட்சிகள் தாக்கல் செய்த மனுவை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. வடக்கிலும், கிழக்கிலும் சோமாவதி மற்றும் சேருவில போன்ற பௌத்தமத இடங்களை அபிவிருத்தி செய்வதில் சிங்கள மக்கள் மிக நீண்டகாலமாக தொடர்புபட்டிருந்தனர் என்று சரத் என். சில்வா தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பதவிக் காலத்தை பூர்த்திசெய்துள்ள சரத் என் சில்வா இந்தக் கருத்தை தெரிவித்ததாக பி.பி.சி. செய்திச்சேவை குறிப்பிட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக பல கட்டிடங்களை பிரதம நீதியரசர் வைபவ ரீதியாக திறந்துவைத்துள்ளார். சனிக்கிழமை சேருவில விகாரையை திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்; சரத் என். சில்வாவும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தசாப்த காலங்களாக நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டார். குழப்பமான தருணங்களில் எல்லாம் பிரதம நீதியரசர், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு உதவியதாக அவர் தெரிவித்தார். சிறைச்சாலையில் இருந்து தனது தாயாரின் இறுதிக் கிரியைக்கு அச்சமயம் இளம் அரசியல்வாதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ செல்வதற்கு போக்குவரத்து வசதிகளை அச்சமயம், அரசு சட்டவாதியாக இருந்த சரத் என். சில்வா ஏற்படுத்திக் கொடுத்ததாக பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் அதிகாரத்தைப் பகிர ஐ.தே.க. ஆதரவளிக்கும் : அமைச்சர் ராஜித நம்பிக்கை

rajetha.gif“அரசிய லமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதற்கும், அதன் பின்னர் அதற்கு அப்பால் சென்று அதிகாரத்தைப் பகிரவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. செனட் சபை ஒன்றை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கும் என்றும் நம்புகிறோம்” என பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை தயாரித்துவிட்டது. இறுதி ஆவணம் எனக்குக் கிடைத்துள்ளது. விரைவில் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன, ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, டிலான் பெரெரா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த குழுவின் இணைப்பாளர் என்ற வகையில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:  தற்போது அரசியலமைப்பில் ஓர் அங்கமாக இருக்கின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராந்து வருகின்றோம். அது தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதில் நானும் அங்கத்துவம் வகிக்கின்றேன். தற்போது நாங்கள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையைத் தயாரித்துள்ளோம். இறுதி ஆவணம் என்னிடம் உள்ளது. அதனை தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளோம். முக்கியமாக 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாக சில அதிகாரங்களை வழங்க வேண்டியுள்ளது. அதாவது தேசிய வைத்தியசாலைகள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளன. ஆனால் போதனா வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்துக்கு கீழேயே இருக்கும். அதுபோன்று தேசிய பாடசாலைகள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளன.

மேலும் பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளோம். அதாவது குறைந்த அளவிலான அதிகாரம் கொண்ட பொலிஸ் விடயதானம் வழங்கப்படும். மாகாண சபையிலிருந்து பிரதி பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார். ஆனால் அவர் முதலமைச்சருக்கு கீழேயே செயற்படுவார். அவ்வாறு காணி அதிகாரங்களும் வழங்கப்படவுள்ளன.

இவற்றை நடைமுறைப்படுத்துவது சவாலான விடயமல்ல. காரணம் இவை அரசியலமைப்பில் உள்ள விடயமாகும். ஆனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டி சென்று செனட் சபை ஒன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. அதில் மாகாணத்துக்கு 4 பிரதிநிதிகள் வீதம் ஒன்பது மாகாணங்களிலும் 36 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஆனால் இதனைச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையாகும். ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. எனவே ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவின் மூலம் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்வதுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியும் என்று அரசாங்கம் நம்புகின்றது

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு

dengu_1.gifஇவ்வருட ஜனவரி முதலாம் திகதி முதல் இது வரையும் டெங்கு காய்ச்சல் காரணமாக 116 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட காலப் பகுதியில் 8087 பேர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

மே மாதத்தில் மடடும் 3937 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் 52 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார். இந்த நோயால்  பீடிக்கப்பட்டவர்களினதும்  உயிரிழந்தவர்களினதும் எண்ணிக்கை  கடந்த மே மாதத்திலேயே அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவும் பிரதேசங்களாக 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைசசு தெரிவிக்கின்றது.

கண்டி,  கொழும்பு,  களுத்துறை, குருணாகல், கேகாலை, கம்பஹா, திருமலை,  மட்டக்களப்பு,  ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளே டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் பிரதேசங்களாக இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கெப்டன் அலி கப்பல் நேற்று விடுவிப்பு

vanangaaman-captainali.jpgஇலங் கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்ததன் காரணமாக கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கெப்டன் அலி எனும் வெளிநாட்டுக் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த 4ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த இக்கப்பல் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

விசாரணைகளையடுத்து இக்கப்பலுடன் தொடர்புபட்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர்  நேற்று வத்தளைப் பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.  இக்கப்பலில் இருந்த பொருட்கள் எதனையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாததோடு இக்கப்பலை இலங்கையின் எந்தத் துறைமுகங்களுக்கும் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவுமில்லை.

நேற்று விடுவிக்கப்பட்ட இக்கப்பல் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் வரை கடற்படை வீரர்கள் அவதானித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘ருவன்டி-20’ கிரிக்கட் தொடரில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி – தொடரிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேற்றம்

muralitharan-sri-lankas.jpgஇங்கி லாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கட் சுற்றுத் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. இத்தொடரில் நேற்று தனது முதலாவது போட்டியில் பலம்வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரின் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதேவேளை, தனது முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்தியதீவுகளிடம் தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணி நேற்று இலங்கையிடமும் தோல்வியடைந்தததால் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் அஜந்த மெண்டிஸ் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

160 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றியீட்டியது. இலங்கை அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் 53 ஓட்டங்களையும் அணித் தலைவர் குமார் சங்கக்கார ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் பெற்றனர். இதுதவிர ஜெஹான் முபாரக் 11 பந்துகளுக்கு முகம்கொடுத்து 2 சிகஸர்கள் மற்றும் ஒரு 4 ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணியின் புதிய கப்டனாக நியமிக்கப்பட்ட குமார் சங்கக்கார தலைமையில் இலங்கை அணி பங்கேற்ற நேற்றைய முதலாவது போட்டியின் ஆட்ட நாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும். 

மனித உரிமை, பிரதேச அபிவிருத்தி பற்றிய பிரபாவின் கைத்தடி கருணாவின் உபதேசம். : முன்னாள் போராளி.

Karuna(கட்டுரையாளர் தேசம்நெற்றுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். ஆயினும் தன்னை இனம் காட்டுவது இன்றைய சூழலில் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதுவதால் அவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லை. கட்டுரையாளர் மட்டு அம்பாறையைச் சேர்ந்த முன்னாள் ரெலோ போராளி.)

மட்டக்களப்பு சென்றல் கல்லூரியில் பாடசாலையில் படித்த கருணா ஒழுங்காக பாடசாலைக்கு சமூகமளிக்காது தில் சாகசங்களில் விருப்புக் கொண்ட கருணா சிறு வயதிலேயே ஆயுதக் கலாச்சாரத்தில் இணைந்து கொண்டார். இவர் பிரபாகரனின் நன்மதிப்பை பெறுவதற்காக எல்ரிரிஈ க்குள் குள்ளநரி வேலைகளையும்; துதி பாடுதல்களையும் காட்டிக் கொடுப்புக்களையும் ஈவிரக்கமற்ற கொலைகளையும் புரிந்தே பெற்றுக் கொண்டார்.

இவர் மட்டு தளபதியாக உருமாறிய பின் தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நாட்டுவதற்கு மட்டக்களப்பில் இருந்த கல்விமான்களையும் முற்போக்கு சிந்தனையாளர்களையும் சுட்டு பொசுக்கி மட்டக்களப்பு மக்களை ஒரு அடிமைத்தனத்திற்குள் தள்ளினார்.

பாலங்கள் அரச கட்டடங்கள் வருவாய ஏற்படுத்திக் கொடுக்கும் அரிசியாலைகள் முதல் ஏனைய நிறுவனங்களையும் குண்டு வைத்து தகர்த்ததில் தளபதிகளில் முதன்மையானார். அது மட்டுமல்ல எந்த மாவட்டத்திலும் நிகழாத அளவிற்கு ஏழை முதல் பணக்காரர் வரை கடத்தி கப்பம் பெறுவதில் முன்னோடியானார். ஏழை மீன்பிடி தொழிலாளர்களிடம் இருந்து மீனகளைப் பறிக்கும் அளவிற்கே இவரது கொடுங்கோல் ஆட்சி நிலவியது.

முஸ்லிம் தமிழர்களுக்கு இடையில் ஏற்பட்ட இன முரண்பாடுகளையும் கலகங்களையும் இவர் காத்தான் குடி பள்ளிவாசல் படு கொலை மூலமும் ஏறாவூர் படுகொலை மூலமும் நிரந்தர இனப்பகையை ஏற்படுத்தினார். இவர் இந்த படுகொலைகளை தானே முன்னின்று உத்தரவிட்டு கொலை செய்ய கட்டளை இட்டதற்கான ஆதாரங்களும் அதை நியாயப்படுத்த சொன்ன கதைகளும் ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்கு இன்றும் சாடசிகள் உள்ளன.

மட்டக்களப்பில் தனக்கென்றே ஒரு படையணியை உருவாக்குவதற்கு பலவந்தமாக பள்ளிச் சிறுவர்களில் இருந்து வறியகுடும்பங்களின் வருமானத்தை ஏற்படுத்தி கொண்டிருந்த உழைப்பாளர்கள் வரை கடத்திச் சென்று ஆயுதப்பயிற்சி கொடுத்தவர் இதை எதிர்த்த பெற்றோர்கள் முதல் கல்வியாளர் வரை அடித்து நையப்புடைத்தார். தாய்மார் என்றும் பாராது அவமானப்படுத்தினார். பாடசாலை முதல் கோயில் திருவிழா வரை சுற்றி வளைத்து சிறுவர் சிறுமியரை கடத்தி சென்றவர். இவரது கட்டாய ஆயுதப் பயிற்சியில் இருந்து தப்பி வந்தவர்களை சுட்டு கொன்று மற்றவர்களை பயமுறுத்தியவர். இந்த பிள்ளை பிடிப்பில் இருந்து தப்பிச் செல்வதற்காக பிறமாவட்டங்களுக்கு செல்ல முயன்றவர்களை வழிமறித்து நடு வீதியிலேயே அவர்களுக்கு சிறுமிகள் என்றும் பார்க்காது தலைமுடியை வெட்டியதை மட்டக்களப்பு மக்கள் மறக்க மாட்டார்கள்.

தன்னை ஒரு ராணுவ திட்டமிடுதலில் திறமையானவர் என தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் கருணா வவுணதீவு ராணுவ முகாமை தான்தோன்றித்தனமாக தாக்கியதில் பல நூறுக்கணக்கான அப்பாவி போராளிகளை பலி கொடுத்ததுடன் முழு தோல்வியை தழுவிக் கொண்ட கருணாவின் ராணுவ அறிவு சம்மந்தமாக  இன்றைய பிதற்றல்களை புரிந்து கொள்ளுங்கள். இவரது முழு பலமும் கல்வியறிவற்ற கிராமப்புற பின்தங்கிய இளைஞர்களையும் யுவதிகளையும் பயிற்சி கொடுத்து விட்டில் பூச்சிகள் போல் ராணுவ முகாங்களுக்கு அனுப்பியதே ஆகும். இதனாலேயே இவர் புலிகளுக்குள் முன்னோடியாகவும் பிரபாகரனிடம் நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டார். மொத்தத்தில் இவர் மட்டக்களப்பு சின்னஞசிறுசுகளை அழியவிட்டு மட்டு அம்பாறை மக்களை மடையர்களாக்கி தனது சுய பெயரை பொறித்துக் கொண்டார்.

சமாதான உடனபடிக்கையின் காலத்தில் கூட கட்டாய ஆட்சேர்ப்பை நிறுத்தாது அரசியல் எதிரிகளை சுட்டு கொன்று சமாதான உடன்படிக்கையை முதன்முதலில் மீறியவர் இவரே. இவரது மாமனார் (மனைவியின் தந்தையார்) ஒரு சாதாரண கூலி தொழிலாளியாக இருந்தும் இவர்களது பெயரில் ஏராளமான சொத்துக்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதையும் இவரது தனிப்பட்ட ராணுவ கட்டமைப்பின் பெருக்கத்தையும் விசாரிக்க முற்பட்டபோதே முரண்டு பிடித்தார். இவருக்கு எதிராக குற்றம் கூறியவர்ளை தவறு என சொல்லி தான் பிரபாகரனுக்கு நேரடி பார்வையில் இயங்க தயாராக இருப்பதாகவும் பிரபாகனை தனது  கடவுள் போல் மதிக்கின்றேன் எனவும் தனது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமாறு பத்திரிகை துண்டுப்பிரசுரம் மூலம் மன்றாடி கேட்டார். ஆனால் இவர் எல்ரிரி யில் இருந்து நீக்கப்பட்டவுடன் தனது விசுவாசிகளை கொண்டு ஊர்வலங்களும், கூட்டங்களும் நடத்தி குறிப்பாக மாமாங்க பிள்ளையார் கோவில் முன் ஒரு மாபெரும் கூட்டம் நடத்தி தனது ஆதரவாளர்கள் மூலம் மீண்டும் மட்டு அம்பாறை தளபதியாக நியமிக்குமாறு மன்றாடி கேட்டு கொண்டார். இவை அனைத்தும் சரிவராத பட்சத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுகிறது என பிரதேச அரசியல் செய்யத் தொடங்கினார்.

தான் தப்பி ஓடும் வரை பலாத்காரமாக பிடிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளை ராணுவத்தின் முன்னரங்குகளில் முன்நிறுத்தி வைத்திருந்தார். சில மனிதாபிமானிகள் இவ்வாறான சிறார்களை யுனிசெப் இல் இந்த சந்தர்ப்பத்திலாவது கையளிக்குமாறு மன்றாடி கேட்டனர். அதை மறுத்து தனது சுயநல, சுய பாதுகாப்பிற்காக புலிகளால் கொலை செய்யப்படுவதற்கு காரணமானார்.

உலகத்தின் எந்த நாட்டிற்கு சென்றாலும் வாழ முடியாததை உணர்ந்த கருணா ராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பு வேலை செய்வதற்கு முன் வந்தார். அத்துடன் புலிகளில் இருந்த போது கையாண்ட அதே பாணியில் கையாண்டு 2000ற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை கடத்தி தமக்கு என ஒரு படையணியை வெலிகந்தை காட்டுப் பகுதியில் நிறுவினார். ராணுவத்துடன் சேர்ந்து கிழக்கு மாகாண புலியழிப்பில் ஈடுபட்டார். ஆட்கடத்தல் கப்பம் அரசியல் எதிரிகளை கொல்லுதல் போன்றவற்றை செய்து கொண்டு இருக்கும் இவர் இன்று ஓரு அரசியல் கொமடியன் போல பல புதினமான கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றார். கிழக்கின் கல்வி மேம்பாட்டிற்கு உதவி வழங்க போகின்றாராம். போதாக்குறைக்கு இதை வடக்கிற்கும் விஸ்தரிப்பாராம்.

அபிவிருத்தி தந்த வழங்களை அழித்த இவர் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யப் போகின்றாராம்!

பள்ளி வாசல் முதல் முஸ்லிம் கிராமம் வரை நரமாமிச வேட்டையாடிய கருணா தமிழ் முஸ்லிம் உறவு பற்றி பிதற்றுகிறார்.

மட்டு நகர் அபிவிருத்திக்காக உழைத்த முன்னாள் அமைச்சர் தேவநாயகத்துடன் சேர்ந்தியங்கிய காரணத்தால் சித்தாண்டி சிவலிங்கம் ஆசிரியரை மின்கம்ப மரண தண்டனை கொடுத்ததுடன் வாசுதேவாவையும் (புளொட்) அவரது சகாக்களையும் பேச்சு வார்த்தைக்கென அழைத்து கபடமாக கொன்று குவித்ததையும் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்; நிமலன் சவுந்திர நாயகத்தை அழைத்து பேசிய பின் அவர் வீடு சென்று அவரை வழி மறித்து கபடத்தனமாக கொன்றதையும மட்டு மாநகர் முதல்வர் செழியன் பேரின்ப நாயகத்தை கொன்றதையும்  மட்டுநகர் முனன்னாள் அமைச்சர் கணேச மூர்த்தி (சந்திரிகா அரசில்) யின் சகோதரரை கொலை செய்ததையும்  ரெலோ உப தலைவரான மட்டுநகர் ரொபேட்டை (பிரதேச சபை தலைவராக சிறப்புடன் பணியாற்றிய) கொலை செய்ததையும் மறந்து இன்று தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்றும் மட்டு – அம்பாறையில் உள்ள பிரதேசங்கள் பின்தங்கியுள்ளதாக கருணா பிதற்றி திரிகின்றார்.

ஏனைய போராளி அமைப்புக்களையும் போராளிகளையும் கொன்று குவித்ததை எதிர்த்த புலி உறுப்பினர் கல்லாறு கடவுள் (தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கின்றார்) வெளியேறிய போதும் தொடர்ந்து இக்கொலைகளையும் கொலைக் கலாச்சரத்தையும் முன்னின்று எடுத்து நடத்திய எமனுடைய தூதன் கருணா இன்று போதனை புரிகின்றார்.

இந்திய ராணுவத்தின் வருகையின் பின் பலாத்காரமாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவத்தை இந்திய ராணுவம் கைவிட்டு சென்ற பின் அவர்களை கொன்று குவித்தது அன்று இவருக்கு தவறாகப் படவில்லை என இன்று மட்டு – அம்பாறை மக்களின் காதில் இன்று இவர் பூச்சூடுகிறார்.

புத்திஜீவிகள் முதல் சமூக முன்னோடிகள் பாடசாலை ஆசிரியர்கள் வரை சுட்டுக் கொன்ற இவர் நம் சமூகத்தில் (மட்டு -அம்பாறை) கல்விமான்கள் இல்லை என கதறுகிறார்.

புலியால் நீக்கப்பட்ட பின் பிரபாகரனை கடவுள் என கடிதம் கொடுத்து மீண்டும் தன்னை சேர்த்துக் கொள்ளச் சொன்னவர் இன்று பிரபாகரனுக்கு அரசியல் தீர்வுக்கு செல்லுமாறு அறிவுறுத்தயதாகவும் அதை அவர் கேட்காததாலேயே தாம் விடுதலைப் புலிகளிடம் இருந்து விலகியதாக கயிறு விடுகிறார். கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுவதாக ஆரம்பத்தில் புரளி கிளப்பிய இவர் தனது முன்சொன்ன கருத்துக்களில் முரண்படுகின்றார். பிரபாகரனின் உதவியுடன் மட்டு – அம்பாறை மக்களையும் அப்பாவி இளைஞர் யுவதிகளையும் அடிமைத்தனத்திற்குள் வைத்திருந்த இவர் இன்று ராஜபக்ஸ சகோதரர்களுடன் இணைந்து அதே நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றார். இவர் மட்டு – அம்பாறை மக்களை மீண்டும் மீண்டும் தனது அதிகார பசிக்காக பலி கொடுக்கிறார். ஆனால் மட்டு-அம்பாறை மக்கள் இதை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். துரதிஸ்டவசமாக புலம்பெயர்ந்த சிலர் இவரின் கடந்த காலத்தை கருத்திற்கெடாது கிழக்கின் விடிவெள்ளியாக உருவாக்க முனைகின்றனர்.

அது மட்டுமல்ல சில இணையத்தளங்கள் இவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தம் நலன்களில் (மட்டு – அம்பாறை மக்கள்) காட்டாது இருப்பதை இட்டு மட்டு – அம்பாறை விசனம் அடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்தி ஏற்படுத்தி தந்த ராஜன் செல்வநாயகம், தேவநாயகம் போன்ற மூத்த அரசியல்வாதிகளையே  அரசியல் உரிமைகளே முக்கியம் என புறந்தள்ளி விட்ட மக்களுக்கு அபிவிருத்தி பற்றி பிதற்றுகிறார். இவர் போன்ற அரசியல் சமூக அறிவற்றவர்கள் போராடச் சென்றதாலேயே எம்மக்களுக்கு இப்பேரழிவு ஏற்பட்டது என்பதை மட்டு அம்பாறை மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். எமது சமூகத்தில் இன முரண்பாட்டால் ஏற்பட்ட ஆயுதகலாச்சாரம் முனைப்பு பெற்றதால் சமூக நற்சிந்தனையாளர்களும் கல்வியாளர்களும், சாதாரண மனிதர்களும், அரசியலுக்கு வருவதை தவிர்த்தனர். சமூகத்தில் நன்மதிப்பை பெறாதவர்களும் சமூக விரோதிகளும், சுயநலவாதிகளும், ஊதுகுழல்களும் அரசியல் அதிகாரம் பெற்று பாராளுமன்றம் சென்றனர். இது பல தமிழ் தேசியகூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.

புலிகளைக் காட்டி சட்டத்தையும ஒழுங்கையும் நிலை நிறுத்துவதற்கு தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் தவறியமையே இதற்கு ஒரு காரணமாகும். புலிகளின் அழிவுடன் மீண்டும் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படும் சந்தர்ப்பத்தில் ஆயுத கலாச்சாரம் இல்லாத சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தமக்கான சரியான அரசியல் தலைமையை தேர்ந்தெடுக்க முன்வருவார்கள். புலம்பெயர் மக்கள் ஆயுத வன்முறைகளற்ற சட்டமும் ஒழுங்கும் நிலவுகின்ற ஒரு நிலையை இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் கொண்டு வருவதே அவர்கள் முன் உள்ள தலையாய கடமையாகும். இதை விடுத்து கொலைக் கலாச்சாரத்திலும், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை போற்றுவதையும் – முன்னிலைப் படுத்துவதையும் நிறுத்த வேண்டும். புலம் பெயர்ந்தவர்கள் எப்படி புலிகளை வளர்த்து மக்களை அழிவுக் உள்ளாக்கினார்களோ அதே போன்ற செயலை சில கிழக்கின் விடிவெள்ளிகளும், பல இணையத்தளங்களும்; சுயநலவாதிகளும் செய்வதை தவிர்ப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும்.

இவரின் பின்னால் அணிசேரும் சிலர் பிரதேச வாதத்தை கூறிக் கொண்டு மட்டக்களப்பு மக்களை ஏமாற்றி சூறையாடியதுடன், பல பெண்களின் கற்பை அதிகாரத்தை பயன்படுத்தி பறித்த சில மௌனமான (ஆ)சாமிகளும் மட்டு நகர் மக்களால் நன்கு அறியப்பட்டுள்ளனர்.

இனத்திற்குள்ளேயான விரிசல்களையும், இயக்கத்திற்குள்ளேயான விரிசல்களையும் பல கொலைகளைப் புரிந்ததன் மூலம் ஏற்படுத்திய கருணா இன்று தேசிய நல்லிணக்க அமைச்சராக உள்ளது நகைப்பிற்கிடமாக உள்ளது!!

பிரபாகரனை அண்ணே அண்ணே என உச்சாடனம் செய்து கொண்டு திரிந்த கருணா இன்று ராஜபக்சவை விநாடிக்கு விநாடி உச்சாடனம் செய்வதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். தலைவர் (கருணாவிற்கு) தமிழ்ஈழம்பெற்றுத் தருவார் என போதித்த கருணா அதை ஏற்க மறுத்தவர்களுக்கு அடியும் உதையும் கொடுத்து பங்கருக்குள் தள்ளி சித்திரவதை செய்தார். இன்று ராஜபக்ச சகோதரர்கள் தமிழ் மக்களுக்கு எல்லாம் பெற்று தருவார்கள் எனறு பிரச்சாரம் செய்கிறார். இந்த போதனைகளை ஏற்க மறுப்பவர்களை அவர் அதே புலிப்பாணியில் கையாள்கிறார்.

இவரது ஆயுத அடாவடித்தனத்தின் மூலம் எந்த மக்களுக்கு அநியாயங்களை புரிந்தாரோ அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்ய இன்றைய அரசு முயல்வதை மக்கள் வெறுத்து நிற்கின்றனர். அது மட்டுமல்ல எதிர் வரும் தேர்தல்களில் ஆயுத வன்முறைகள் மூலம் வாக்குப் பெட்டிகளை நிரப்புவதற்கு கருணாவும் அவரது அடியாட்களும் அரச இயந்திரத்தின் உதவியுடனும் தயாராகி வருவதை உணர்ந்தும் உள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களாக இருவர் இன்று பதவிப் பிரமாணம்

parliament.jpgபாராளு மன்ற உறுப்பினர்களாக இருவர் இன்று (09) சபாநாயகர் டபிள்யு. ஜே. எம். லொக்குபண்டார முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்றனர். மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக நந்திமித்ர ஏக்கநாயக்கவும், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சந்திம வீரக்கொடியும் பதவி ஏற்க உள்ளதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் டபிள்யு. பி. டி. தசநாயக்க கூறினார்.

மாத்தளை மாவட்ட ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் அலிக் அலுவிஹார மரணமடைந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஐ. தே. க. பட்டியலில் அடுத்து தெரிவாகியிருந்த நந்திமித்ர ஏக்கநாயக்க நியமிக்கப் பட்டுள்ளார். இவர் மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு உறுப்பினராக தெரிவு செய்யப் பட்டார். நீதி, சட்ட மறுசீர மைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் வெற்றிடத்துக்கு காலி மாவட்ட ஐ. ம. சு. மு. பட்டியலில் அடுத்து தெரிவான அரச ஈட்டு முதலீட்டு வங்கித் தலைவர் சட்டத்தரணி சந்திம வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றம் இன்று (09) கூடியதும் முதல் நிகழ்வாக இரு எம்.பிக்களும் பதவி ஏற்கும் வைபவம் இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் கூறினார்.

யாழ். மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் இறந்ததால் ஏற்பட்ட வெற்றிட த்துக்கு எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. புதிய உறுப்பினரின் பெயரை தமிழரசுக் கட்சி இதுவரை அறிவிக்கவில்லை என தசநாயக்க குறிப்பிட்டார்