தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான இரு பிரேரணைகள் மீதான விவாதம் இன்று

parliament.jpgமத்திய மாகாண சபைக்கு உட்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற இரண்டு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக மத்திய மாகாணசபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு பிரேரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை இந்தச்சபையின் விவாதத்துக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ் கணேஷன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

இன்று தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது பாரிய பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச சம்பளமே கிடைத்து வருகின்றது. இதனால், தோட்டத் தொழிலாளர் சமூகம் தொடர்ந்து பல்வேறுவகையில் ஏனைய சமூகங்களை விட பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது. இந்த நாட்டுக்கு பொருளாதார வளத்தினைப் பெற்றுத்தருகின்ற தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளவுயர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

ஆகவே தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளவுயர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டுமென்பதை மத்திய மாகாணசபையின் ஊடாக அழுத்தமொன்றைக் கொண்டு வருவதற்குத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக மத்திய மாகாணசபையில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளேன்.

அத்துடன், அரசாங்கத்தின் எந்தவொரு வறுமை நிவாரணமும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. உலக வங்கி தனது அறிக்கையொன்றில் மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் 32 வீதமான வறுமையுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அரசாங்க வரவுசெலவுத்திட்டப் பிரேரணையிலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்குச் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படாதுள்ளமை பாரியதொரு அநீதியாகும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர்களும் சமுர்த்தி நிவாரணத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவதற்கு மத்திய மாகாணசபையின் ஊடாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொண்டு வரும் வகையில் மேலும் ஒரு பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளேன். ஆகவே, இந்தப் பிரேரணைகளை மத்திய மாகாணசபையில் நிறைவேற்றுவதற்கு கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் முன்வரவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *