13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் அதிகாரத்தைப் பகிர ஐ.தே.க. ஆதரவளிக்கும் : அமைச்சர் ராஜித நம்பிக்கை

rajetha.gif“அரசிய லமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதற்கும், அதன் பின்னர் அதற்கு அப்பால் சென்று அதிகாரத்தைப் பகிரவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. செனட் சபை ஒன்றை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கும் என்றும் நம்புகிறோம்” என பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை தயாரித்துவிட்டது. இறுதி ஆவணம் எனக்குக் கிடைத்துள்ளது. விரைவில் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன, ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, டிலான் பெரெரா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த குழுவின் இணைப்பாளர் என்ற வகையில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:  தற்போது அரசியலமைப்பில் ஓர் அங்கமாக இருக்கின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராந்து வருகின்றோம். அது தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதில் நானும் அங்கத்துவம் வகிக்கின்றேன். தற்போது நாங்கள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையைத் தயாரித்துள்ளோம். இறுதி ஆவணம் என்னிடம் உள்ளது. அதனை தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளோம். முக்கியமாக 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாக சில அதிகாரங்களை வழங்க வேண்டியுள்ளது. அதாவது தேசிய வைத்தியசாலைகள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளன. ஆனால் போதனா வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்துக்கு கீழேயே இருக்கும். அதுபோன்று தேசிய பாடசாலைகள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளன.

மேலும் பொலிஸ் அதிகாரம் தொடர்பிலும் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளோம். அதாவது குறைந்த அளவிலான அதிகாரம் கொண்ட பொலிஸ் விடயதானம் வழங்கப்படும். மாகாண சபையிலிருந்து பிரதி பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார். ஆனால் அவர் முதலமைச்சருக்கு கீழேயே செயற்படுவார். அவ்வாறு காணி அதிகாரங்களும் வழங்கப்படவுள்ளன.

இவற்றை நடைமுறைப்படுத்துவது சவாலான விடயமல்ல. காரணம் இவை அரசியலமைப்பில் உள்ள விடயமாகும். ஆனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டி சென்று செனட் சபை ஒன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. அதில் மாகாணத்துக்கு 4 பிரதிநிதிகள் வீதம் ஒன்பது மாகாணங்களிலும் 36 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஆனால் இதனைச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையாகும். ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. எனவே ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவின் மூலம் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்வதுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியும் என்று அரசாங்கம் நம்புகின்றது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *