உயிழிழந்த பொதுமக்கள் 20 000
காயமடைந்த பொதுமக்கள் 60 000
உயிரிழந்த சிறுவர்கள் 3600 (மார்ச் வரை)
காயமடைந்த சிறுவர்கள் 7650 (மார்ச் வரை)
உயிரிழந்த இராணுவத்தினர் 6200
காயமடைந்த இராணுவத்தினர் 30 000
உயிரிழந்த வி புலிகள் ?
காயமடைந்த வி பு ?
புனர்வாழ்வு முகாம்களிலுள்ளோர் 7500
இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ளோர் 275000
‘300 000 வன்னி மக்களுக்கும் மரணத்துள் வாழ்வு’ என்ற தலைப்பில் பெப்ரவரி 11ல் வெளியான லண்டன் குரலில் முன் பக்கச் செய்தியை வெளியிட்டு 10 000 வரையான பொது மக்கள் கொல்லப்படலாம் என்றும் அச்சம் வெளியிட்டு இருந்தோம். அந்த அச்சம் நிஜமானது மட்டுமல்ல கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 000க்கும் அதிகம் என ஐநா செய்மதிப் புகைப்படங்களை ஆராய்ந்தும் ஏனைய தகவல்களின் மூலமும் யுகே ரைம்ஸ் பத்திரிகை ஆய்வுகளை வெளியிட்டுள்ளது.
பெப்ரவரி முற்பகுதியிலேயே விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாததைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி இலங்கை இராணுவத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வன்னி மக்களை மரணத்தின் விளிம்புக்கு தள்ளி உள்ளது என்பதையும் எச்சரித்து இருந்தோம். யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பொதுமக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் கொண்டிருக்கவில்லை.
பெப்ரவரி முற்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து அரசியல் தீர்வுக்கு முன்வர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் இவைபற்றி கருத்தில் எடுக்காமல் இந்தியத் தேர்தல் முடிவுக்காக காத்திருந்து அனைத்தும் முடிவுக்கு வந்தபின் சரணடைந்து தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் புலிகளின் தலைமை. இவர்களின் முட்டாள்தனமான அரசியல் முடிவுகளுக்கு 20 000 பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதனைப் போன்று பல மடங்கினர் காயத்திற்குள்ளாகி உள்ளனர். ஒட்டுமொத்த வன்னி மக்களும் 275 000 பேர் அகதிகளாக்கப்பட்டு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணை மூடிக்கொண்டு பாழ்ங் கிணற்றில் வீழ்தது மட்டுமல்ல அதற்கு முன் வன்னி மக்களை அப்பாழ்ங்கிணற்றில் தள்ளிவிட்டுள்ளனர். புலிகள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுக்களும் குறிப்பாக புலி ஆதரவு ஊடகங்கள் இந்த அழிவுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
யுத்தப் பிரதேசத்தின் யதார்த்த நிலையை விளங்கிக் கொள்ளாமல் புலிகளின் தலைமைக்கு எதுவெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அவற்றை மட்டுமே தொலைக்காட்சியில் காட்டியும் வானொலியில் முழங்கியும் பத்திரிகையிலும் இணையங்களிலும் எழுதியும் வந்தனர். ‘வன்னி மக்கள் பெரும் அவலத்திற்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக் கூடாது. இலங்கை அரச படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மக்கள் கொல்லப்படுவார்கள். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.’ என்ற எண்ணம் இந்த ஊடகங்களிடம் இருக்கவில்லை. மாறாக கொல்லப்பட்டவுடன் அதனைப் பிரச்சாரப்படுத்தி அரசியல் செய்யவே முற்பட்டனர்.
இந்த மக்களின் குருதியில் அரசியல் பிரச்சாரம் செய்த ஜி ரிவி தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் மற்றும் புலிகளின் ஊது குழல்களான ஊடகங்கள் மக்களின் உயிரிழப்புகளும் அவலமும் தவிர்க்க முடியாதது என்ற வகையிலும் அவ்வாறான அழிவுகளே தமிழீழ உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்றும் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டன.
வன்னி மக்கள் எதிர்நோக்கிய மரண வாழ்வுக்கும் அவலத்திற்கும் இலங்கை இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம பொறுப்புடையவர்கள் என்பதே சுயாதீன அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் இதனை முற்றாக மறைத்து வன்னி மண் பூர்வீக மண். அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று ஐரோப்பிய மற்றும் மேற்குநாடுகளில் உள்ள இந்த ஊடகங்கள் வன்னி மக்களை மரண வாழ்வுக்குள் இருக்க நிர்ப்பந்தித்தனர். இந்த மக்களின் அவலத்தில் புலிகளுக்கும் சம பொறுப்பு இருப்பதை தட்டிக் கேட்காமல் புலிக் கொடிகளையும் எங்கள் தலைவர் பிரபாகரன் என்று பிரபாகரனின் படத்தையும் தாங்கி நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு வக்காலத்து வாங்கினர்.
இலங்கை இராணுவம் மூர்க்கத்தனமான செல் தாக்குதலை நடத்த அதிலிருந்து தப்பி ஓடும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றனர். இங்குள்ள ஊடகங்கள் இதனைக் கண்டு கொள்ளவேயில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் திருப்திப்படுத்த இவர்கள் செய்த ஆய்வுகளும் விமர்சனங்களும் கானல் நீர் போலாக இன்று புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு வன்னி மக்களும் அவலத்திற்குள் தள்ளி விடப்பட்டுள்ளனர்.
புலிகளின் தலைமை அழிப்பதற்கு இருபத்திநான்கு மணிநேரத்திற்கு முன்னரும் தமிழீழத்தை அடைவதற்கு நெருங்கிவிட்டோம் என்று ஆய்வுகளும் விமர்சனங்களும் செய்த இந்த ஊடகங்களால் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது என்பதைக் கூடச் சொல்ல முடியவில்லை.
புலிகளை தட்டிக்கொடுக்கும் இடத்தில் தட்டிக்கொடுத்து இடித்துரைக்க வேண்டிய இடத்தில் இடித்துரைத்து இருந்தால் புலிகளின் தலைமையும் காப்பாற்றப்பட்டு இருக்கும் வன்னி மக்களும் இந்த அவலத்திற்கு உட்பட்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் காட் விற்பனையையும் விளம்பரத்தையும் மட்டும் நோக்காகக் கொண்டு சிற்றின்பத்திற்காக ஜி ரிவி தீபம் ஐபிசி ஒரு பேப்பர் போன்ற ஊடகங்கள் புலிகளுடன் செய்த கூட்டுக்கலவியே புலிகளுக்கு உயிராபத்தான நோயை ஏற்படுத்தியது. இறுதியில் சடுதியான அழிவையும் ஏற்படுத்தியது.
இந்நோய் புலிகளின் மூளையின் நரம்புத் தொகுதியைத் தாக்கி அவர்களின் சிந்தனைத் திறனை அழித்து கற்பனையுலகில் உலாவிட்டது.
இந்நோய்குரிய அறிகுறிகள் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் ஜனனி ஜனநாயகத்திலும் தென்படுகிறது. ஊடகங்களுடனான இந்தக் கூட்டுக் கலவியில் இருந்து விலத்தி யதார்த்தை புரிந்துகொண்டு செயற்படுவது ஜனனியின் அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.