கிளி நொச்சியிலுள்ள சிறுவர் இல்லத்தில் இருக்கும் 349 இடம்பெயர்ந்த சிறுவர்களைத் தங்க வைப்பதற்காக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் இல்ல கட்டிடம் எதிர்வரும் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படுமென சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் வலுவூட்டல் அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேன தெரிவித்தார்.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் சுமார் 50 ஆயிரம் சிறுவர்கள் காணப்படுகிறார்கள். இவர்களுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெற்றோரை இழந்த சுமார் 850 சிறுவர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இந்தச் சிறுவர்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டு அவர்களின் பெற்றோரைக் கண்டுபிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நலன்புரி முகாம்களிலுள்ள பெண்களை சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுத்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.