June

June

விமானப்படையினரைக் கெளரவித்து பாராட்டு விழா

air22222.jpgபயங் கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு அர்ப்பணிப்போடு செயற்பட்ட விமானப் படையினரைக் கெளரவிக்கும் வெற்றி பாராட்டு விழா நேற்றுக் காலை கட்டுநாயக்கவில் இடம்பெற்றது.

விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவின் தலைமையில் கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்ட இந்த வைபவத்திற்குப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விமானப் படையின் சகல உயர் அதிகாரிகள் உட்பட பயங்கர வாதத்திற்கு எதிராக வடக்கு, கிழக்கில் முன்னெடுக் கப்பட்ட மனிதாபி மான நடவடிக்கைகளின் போது முன்னணி வகித்த விமானப் படையின் சகல அதிகாரிகளும், விமான ஓட்டிகளும் அவர்களது உதவியாளர்களும் கலந்து கொண்டனர்.

அதேசமயம், மனிதாபிமான நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மற்றும் விமானப் படையினருக்குச் சொந்தமான சகல விமானங்களும் இங்கு கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கட்டுநாயக்க விமானப் படைத் தளத்திலுள்ள தாக்குதல் விமானங்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்தில் மேடை அமைக்கப்பட்டு பிரதான வைபவம் இடம்பெற்றது.

விசேட ஹெலி மூலம் கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தை வந்திறங்கிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க வரவேற்றார். அதன் பின்னர் வைபவம் நடைபெறும் இடத்திற்கு விசேட வாகன பவனிக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டார்.

தேசிய கீதத்துடன் வைபவம் ஆரம்பமானதைத் தொடர்ந்து இந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த விமானப் படை வீரர்களை கெளரவித்து நினைவு கூரும் வகையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

விமானப்படையினரின் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சிறந்த முறையில் வழிகாட்டல்களை வழங்கிய பாதுகாப்புச் செயலாளரை கெளரவிக்கும் வகையில் விமானப் படைத் தளபதி தங்க முலாம் பூசப்பட்ட விமானம் ஒன்றை ஞாபகார்த்தமாக வழங்கினார்.

கட்டுநாயக்க விமானப் படைத் தளத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப் படைக்குச் சொந்தமான சகல விமானங்கள் ஹெலிகொப்டர்கள் மற்றும் தாக்குதல் விமானங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

விமானப் படைத்தளபதி ஒவ்வொரு விமானங்களையும் விமான ஓட்டி தலைமையிலான குழுவினர்களையும் பாதுகாப்புச் செயலாளருக்கு அறிமுகப்படுத்தினார். ஒவ்வொன்றையும் பார்வையிட்டதுடன் அதனை படை நடவடிக்கைகளின் போது முன்னெடுத்து விமான ஓட்டிகளுக்கும் அவர்களது உதவியாளர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் நன்றினை தெரிவித்தார்.

விசேடமாக கிபீர், எம்.ஐ-24, போன்ற தாக்குதல் விமானங்களிலும் பீச் விமானம் என்றழைக்கப்படும் படம் பிடித்து வீடியோக்களை பதிவு செய்யும் விமானங்களும் பாதுகாப்புச் செயலாளர் ஏறிச் சென்று பார்வையிட்டார். விபரமாக கேட்டறிந்துக் கொண்டார்.

பி.ரி-06, கொஸ்னா – 150, கே – 8 ஆகிய பயிற்சி விமானங்கள், பெல் – 206, பெல் – 212, பெல் – 412, எம் – ஐ – 17, எம் – ஐ 24 ஆகிய தாக்குதல் ஹெலிகள், (எண்டனோ) ஏ. என் – 32, சீ – 130, வை – 12 ஆகிய போக்குவரத்து விமானங்கள், எப் – 7 கிபீர், மிக் – 27 ஆகிய தாக்குதல் விமானங்களும், பீச் – பி – 200ரி, மற்றும் ஆளில்லா ஏரியல் விமானங்களான விமானங்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பல்வேறு வகையான விமான எதிர்பு ஏவுகணைகள், ராடார் கருவிகள் மற்றும் உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

விமானப் படையின் சகல விமானங்களும் ஒரே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தமை இதுவே முதற் தடவையாகும். பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளருக்கும், தலைமைவகித்த விமானப் படைத்தளபதிக்கும் கெளரவம் செலுத்தி தமது வெற்றியை கொண்டாடும் வகையில் கிபிர், மிக் – 27 போன்ற சகல தாக்குதல் விமானங்களும் கட்டுநாயக்க விமானப் படைத் தளத்திலிருந்து வானுக்கு அனுப்பப்பட்டு வானிலிருந்து பல்வேறு சாகசங்களை காண்பித்தனர்.

நாட்டில் தொழில் புரிகின்ற அனைவரையும் பாதுகாக்க புதிய சட்டமூலம் -பாராளுமன்றத்தில் அமைச்சர் அதாவுத செனவிரத்ன

parliament-of-sri-lanka.jpgதொழில் புரியும் அனைத்து மக்களினதும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான புதிய சட்டமூலம் ஒன்றை வரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக தொழில் உறவுகள் மற்றும் மனித வலு அமைச்சர் அதாவுத செனவிரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவன சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் நேற்று இதனைக் குறிப்பிட்டார்.

1942 இல் நிறைவேற்றப்பட்ட தொழிற்சாலைக் கட்டளைச் சட்டத்தின் மூலம் தொழில் புரிகின்ற 25 இலட்சம் பேர் பயன்பெறுகின்றனர். எனினும் உத்தேச புதிய சட்டத்தின் மூலத்தின் ஊடாக நாட்டில் தொழில் புரிகின்ற 80 முதல் 90 இலட்சம் பேர் நன்மை அடைவர் என அமைச்சர் மேலும் கூறினார்.

களனி பல்கலை மாணவர்கள் குடியிருப்பாளருடன் மோதல் பீடங்கள் மூடப்பட்டன

university-of-kelaniya.jpgகளனி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்குமிடையே நேற்று மூண்ட கடும் மோதலையடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களுமே காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதுடன் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் விசேட பஸ்கள் மூலம் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் அப்பகுதியிலிருந்த இரண்டு கடைகளையும் இரண்டு வாகனங்களையும் அடித்து சேதமாக்கியுள்ளனர். இதனால் மாணவர்களுக்கும் கிராமவாசிகளுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டது. இம்முறுகல் நேற்று கடும் மோதலாக வெடித்தது. மாணவர்களும் கிராமவாசிகளும் கற்களை எறிந்தும் பொல்லுகள் மற்றும் தடிகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்கலைக் கழக நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியது.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவினரும் மூன்று பொலிஸ் குழுக்களும், கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவத்தின் போது காயமடைந்த நால்வரும் கிரிபத் கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.தே.க. ஜனாதிபதிக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது – அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தமது கட்சித் தலைவர்களை நினைவுகூரும் ஐ.தே.க. புலிகளை ஒழித்துக்கட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புலிகளுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டுää அவர்களைப் போஷித்து வளர்த்த ஐ.தே.க. வின் தலைவர் இன்று அதே புலிகளால் கொல்லப்பட்ட தமது கட்சியின் மூத்த உறுப்பினர்களை நினைவுகூர்ந்து வருகிறார். இவ்வாறு பயங்கரவாதத்துக்கு இரையான தமது கட்சியின் மூத்த உறுப்பினர்களை நினைவுகூர ஐ.தே.க. தலைவருக்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்தது? அவர் புலிகள் அழியும் வரை காத்திருந்தார் போலும்.

புலிகள் அமைப்பு பலம் பெறுவதற்கு எல்லா வழிகளிலும் உதவிய ஐ.தே.க. தமது கட்சியைச் சேர்ந்த ஜானக பெரேராவின் கொலைக்கு புலிகள் தான் காரணம் ஒருபோதும் குற்றஞ்சாட்டவில்லை.

பயங்கராவதம் ஒழிக்கப்பட்ட நிலையில் தமது கட்சியின் மூத்த தலைவர்களை நினைவுகூர சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு ஐ.தே.க. ஜனாதிபதிக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார். 

வட இலங்கை முகாம்களில் மக்கள் நீண்ட நாட்கள் தங்க நேரிடலாம் என்று ஐ. நா அதிகாரி கவலை

இலங் கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில் இடம் பெயர்ந்த பொதுமக்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இடைத்தங்கல் முகாம்களில் நீண்ட நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடும் என்று தாங்கள் கவலைப்படுவதாக, இலங்கையின் பணிபுரியும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் இருக்கக்கூடிய இடம்பெயர்ந்த பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அரசு குறிப்பிட்டிருக்கும் ஆறு மாத காலத்துக்குளேயோ அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள்ளோ தமது சொந்த இடங்களுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு இருப்பதாக இலங்கை இராணுவம் எதிர்பார்க்கவில்லை என்று இலங்கையில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியான மார்க் கட்ஸ் தெரிவிக்கிறார்.

இந்த இடம்பெயர்ந்த நிலையிலிருக்கும் மக்கள் ஆறு மாதங்களுக்குள்ளோ அல்லது இந்த ஆண்டின் முடிவுக்குள்ளோ இந்த மக்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்வார்கள் என்று அரசு தங்களுக்கு உறுதியளித்துள்ள போதிலும், தமக்கு இது தொடர்பில் மாறுபட்ட சமிக்னைகளே கிடைக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.

தற்போது அங்கிருக்கும் கூடாரங்களை நிரந்தர கட்டிடங்களாக மாற்றியமைக்கும்படி அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் தம்மிடம் தெரிவிக்கிறார்கள் என்றும், மூத்த இராணுவ அதிகாரிகளும்கூட, அடுத்த ஆறு மாதங்களில் பெருமளவிலான மக்கள் தமது இடங்களுக்கு திரும்புவார்கள் என்று தமக்கு தோன்றவில்லை என்று கூறுவதாகவும் ஐக்கிய நாடுகளின் அதிகாரியான மார்க் கட்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

இரானின் அதிபர் தேர்தல் விறுவிறுப்படைகின்றது

rab-sanjani.jpgஇரானில் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில், அங்கு நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான இறுதிக் கூட்டங்களில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னாள் அதிபர்களில் ஒருவரும், சக்தி மிக்க மதகுருவுமான, அக்பர் ஹஷெமி ரப்சஞ்ஞானி, முன்னெப்போதும் இல்லாத வகையில் தலையிட்டு, அதிபர் மஃமுட் அஹ்மதிநெஜாத் அவர்கள் பொய் சொல்வதாக குற்றஞ்சாட்டி, அவரைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை, அதியுயர் மதத்தலைவர் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அஃமதிநெஜாத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் சமூக அமைதியீனத்துக்கு வழி செய்யும் என்று ரவ்சஞ்ஞானி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது பங்குக்கு, அதிபர் அஃமதிநெஜாத் அவர்கள், தனது போட்டி மறுசீரமைப்புவாத வேட்பாளரான, மிர் குசைன் மொசாவி, வாக்குகளை பெறுவதற்காக இரானிய பொருளாதாரம் பிரச்சினையில் இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இடம்பெயர்ந்தோர் சுகாதார நலன்: உலக வங்கி 12 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தோரின் சுகாதார வசதிகளை மேம்படுத்த உலக வங்கி 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாகவும், இது தொடர்பான கூட்டம் நேற்று திருமலையிலுள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றதாகவும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன் தெரி வித்தார்.

கிட்டத்தட்ட 220 மில்லியன் ரூபா நிதியை வழமையாக வழங்கி வரும் சுகாதார அபிவிருத்தித் திட்டத்திற்கு மேலதிகமாக வழங்க முன்வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இன்றைய நிதி வழங்கல் சம்பந்தமான விசேட கூட்டத்தில் வடக்கு, கிழ க்கு பிரதம செயலாளர்கள், கிழக்கு சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதி திட்டமிடல் செயலாளர்கள், மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள், நிதி ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர், ஆலோசகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வடகொரியாவுக்கு எதிராக ஐ நா தீர்மானம்?

misyl.jpgவட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்கு பதில் தரும் முகமாக அந்த நாட்டிற்கு எதிரான தடைகளை விரிவாக்கும் வரைவு தீர்மானத்துக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து நாடுகளும் ஒத்துக் கொண்டுள்ளதாக ஐ நாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ நா பாதுகாப்பு சபையில், சுழற்சி முறையில் பதவி வகிக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்துள்ள வரைவு தீர்மானம் ஐ நா பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அவையில் விவாதிக்கப்படும் என்று ராஜ தந்திரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

சல்வாருடன் பிரவேசித்த தங்கேஸ்வரி எம்.பி. சபையிலிருந்து வெளியேற்றம்

‘சல்வார்’ உடையணிந்து சபைக்குள் பிரவேசித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிர்காமநாதன் படைக்கள சேவிதரால் வெளியேற்றப்பட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று முதலீட்டுச் சபை திருத்தச் சட்டமூலம் மற்றும் வாழ்க்கை தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவகம் சட்ட மூலம் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவ்வேளையில் வெளிர் மஞ்சள் நிற சல்வார் உடையணிந்தபடி தங்கேஸ்வரி எம். பி. சபைக்குள் வந்தார்.

அப்போது சபையிலிருந்த உதவி படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ, ‘பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணாக உடையணிந்து வந்துள்ளீர்களே, இந்த உடையுடன் சபையில் அமர முடியாது’ என்று தெரியப்படுத்தினார். இதனையடுத்து தங்கேஸ்வரி எம். பி. சபையிலிருந்து வெளியேறிச் சென்றார்.

ஈழத்தமிழர் மறு வாழ்வுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் – திமுக கோரிக்கை

karunanithi.jpg ஈழத் தமிழர் மறு வாழ்வுக்கு மத்திய அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை இரு தலைவர்களையும் நேரில் சந்தித்த திமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

கருணாநிதி நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப்பிறகு டெல்லி சென்ற போது பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து இலங்கையில் ராணுவ தாக்குதலால் வீடிழந்தும் உடைமைகளை இழந்தும் தவிக்கும் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் மறுவாழ்வுக்காகவும் மத்திய அரசு குறைந்தது 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.