களனி பல்கலை மாணவர்கள் குடியிருப்பாளருடன் மோதல் பீடங்கள் மூடப்பட்டன

university-of-kelaniya.jpgகளனி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்குமிடையே நேற்று மூண்ட கடும் மோதலையடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களுமே காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதுடன் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் விசேட பஸ்கள் மூலம் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் அப்பகுதியிலிருந்த இரண்டு கடைகளையும் இரண்டு வாகனங்களையும் அடித்து சேதமாக்கியுள்ளனர். இதனால் மாணவர்களுக்கும் கிராமவாசிகளுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டது. இம்முறுகல் நேற்று கடும் மோதலாக வெடித்தது. மாணவர்களும் கிராமவாசிகளும் கற்களை எறிந்தும் பொல்லுகள் மற்றும் தடிகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்கலைக் கழக நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியது.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவினரும் மூன்று பொலிஸ் குழுக்களும், கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவத்தின் போது காயமடைந்த நால்வரும் கிரிபத் கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *