புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தமது கட்சித் தலைவர்களை நினைவுகூரும் ஐ.தே.க. புலிகளை ஒழித்துக்கட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
புலிகளுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டுää அவர்களைப் போஷித்து வளர்த்த ஐ.தே.க. வின் தலைவர் இன்று அதே புலிகளால் கொல்லப்பட்ட தமது கட்சியின் மூத்த உறுப்பினர்களை நினைவுகூர்ந்து வருகிறார். இவ்வாறு பயங்கரவாதத்துக்கு இரையான தமது கட்சியின் மூத்த உறுப்பினர்களை நினைவுகூர ஐ.தே.க. தலைவருக்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்தது? அவர் புலிகள் அழியும் வரை காத்திருந்தார் போலும்.
புலிகள் அமைப்பு பலம் பெறுவதற்கு எல்லா வழிகளிலும் உதவிய ஐ.தே.க. தமது கட்சியைச் சேர்ந்த ஜானக பெரேராவின் கொலைக்கு புலிகள் தான் காரணம் ஒருபோதும் குற்றஞ்சாட்டவில்லை.
பயங்கராவதம் ஒழிக்கப்பட்ட நிலையில் தமது கட்சியின் மூத்த தலைவர்களை நினைவுகூர சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு ஐ.தே.க. ஜனாதிபதிக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.