பயங் கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு அர்ப்பணிப்போடு செயற்பட்ட விமானப் படையினரைக் கெளரவிக்கும் வெற்றி பாராட்டு விழா நேற்றுக் காலை கட்டுநாயக்கவில் இடம்பெற்றது.
விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவின் தலைமையில் கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்ட இந்த வைபவத்திற்குப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விமானப் படையின் சகல உயர் அதிகாரிகள் உட்பட பயங்கர வாதத்திற்கு எதிராக வடக்கு, கிழக்கில் முன்னெடுக் கப்பட்ட மனிதாபி மான நடவடிக்கைகளின் போது முன்னணி வகித்த விமானப் படையின் சகல அதிகாரிகளும், விமான ஓட்டிகளும் அவர்களது உதவியாளர்களும் கலந்து கொண்டனர்.
அதேசமயம், மனிதாபிமான நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மற்றும் விமானப் படையினருக்குச் சொந்தமான சகல விமானங்களும் இங்கு கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கட்டுநாயக்க விமானப் படைத் தளத்திலுள்ள தாக்குதல் விமானங்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்தில் மேடை அமைக்கப்பட்டு பிரதான வைபவம் இடம்பெற்றது.
விசேட ஹெலி மூலம் கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தை வந்திறங்கிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க வரவேற்றார். அதன் பின்னர் வைபவம் நடைபெறும் இடத்திற்கு விசேட வாகன பவனிக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டார்.
தேசிய கீதத்துடன் வைபவம் ஆரம்பமானதைத் தொடர்ந்து இந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த விமானப் படை வீரர்களை கெளரவித்து நினைவு கூரும் வகையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விமானப்படையினரின் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சிறந்த முறையில் வழிகாட்டல்களை வழங்கிய பாதுகாப்புச் செயலாளரை கெளரவிக்கும் வகையில் விமானப் படைத் தளபதி தங்க முலாம் பூசப்பட்ட விமானம் ஒன்றை ஞாபகார்த்தமாக வழங்கினார்.
கட்டுநாயக்க விமானப் படைத் தளத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப் படைக்குச் சொந்தமான சகல விமானங்கள் ஹெலிகொப்டர்கள் மற்றும் தாக்குதல் விமானங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
விமானப் படைத்தளபதி ஒவ்வொரு விமானங்களையும் விமான ஓட்டி தலைமையிலான குழுவினர்களையும் பாதுகாப்புச் செயலாளருக்கு அறிமுகப்படுத்தினார். ஒவ்வொன்றையும் பார்வையிட்டதுடன் அதனை படை நடவடிக்கைகளின் போது முன்னெடுத்து விமான ஓட்டிகளுக்கும் அவர்களது உதவியாளர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் நன்றினை தெரிவித்தார்.
விசேடமாக கிபீர், எம்.ஐ-24, போன்ற தாக்குதல் விமானங்களிலும் பீச் விமானம் என்றழைக்கப்படும் படம் பிடித்து வீடியோக்களை பதிவு செய்யும் விமானங்களும் பாதுகாப்புச் செயலாளர் ஏறிச் சென்று பார்வையிட்டார். விபரமாக கேட்டறிந்துக் கொண்டார்.
பி.ரி-06, கொஸ்னா – 150, கே – 8 ஆகிய பயிற்சி விமானங்கள், பெல் – 206, பெல் – 212, பெல் – 412, எம் – ஐ – 17, எம் – ஐ 24 ஆகிய தாக்குதல் ஹெலிகள், (எண்டனோ) ஏ. என் – 32, சீ – 130, வை – 12 ஆகிய போக்குவரத்து விமானங்கள், எப் – 7 கிபீர், மிக் – 27 ஆகிய தாக்குதல் விமானங்களும், பீச் – பி – 200ரி, மற்றும் ஆளில்லா ஏரியல் விமானங்களான விமானங்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பல்வேறு வகையான விமான எதிர்பு ஏவுகணைகள், ராடார் கருவிகள் மற்றும் உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
விமானப் படையின் சகல விமானங்களும் ஒரே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தமை இதுவே முதற் தடவையாகும். பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளருக்கும், தலைமைவகித்த விமானப் படைத்தளபதிக்கும் கெளரவம் செலுத்தி தமது வெற்றியை கொண்டாடும் வகையில் கிபிர், மிக் – 27 போன்ற சகல தாக்குதல் விமானங்களும் கட்டுநாயக்க விமானப் படைத் தளத்திலிருந்து வானுக்கு அனுப்பப்பட்டு வானிலிருந்து பல்வேறு சாகசங்களை காண்பித்தனர்.