இலங் கைக்கு விஜயம் செய்யும் மியன்மார் பிரஜைகளுக்கு வீசா நடைமுறைகள் தளர்த்தப்பட உள்ளன. இதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது. தற்போது மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த உடன்படிக்கையுடன் இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு மியன்மாரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளார்.
ஜனாதிபதி நேற்றுக் காலை இலங்கையில் இருந்து மியன்மார் புறப்பட்டுச் சென்றார். மியன்மார் பிரதமர் விடுத்த அழைப்பொன்றை ஏற்றுத் தற்போது ஜனாதிபதி அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியாக உள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மியன்மார் விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் அவரது பாரியார் சிராந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகபெரும, தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் மியன்மார் சென்றுள்ளனர்.
கடும் போக்கு கொண்ட இராணுவ ஆட்சியாளர்களினால் ஆளப்படும் மியன்மாரில் ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் மியன்மார் ஜனநாயக செயற்பட்டாளர்களைச் சிறையில் அடைத்து, ஜனநாயக நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசு தடை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மியன்மாரின் ஜனநாயகத் தலைவியான ஹான் சான் சூசியைப் பல வருடங்களாக அந்த நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
இவற்றைத் தவிர அண்மையில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற விசேட கூட்டத்தில், மியன்மார், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. தென்கிழக்காசியாவில் உள்ள பௌத்த நாடான மியன்மார் தலைநகர் ரங்கூன் உள்ளிட்ட பல பகுதிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியுலக, ஊடக தொடர்புகள் இன்றி வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது