சவூதி பஸ் விபத்து இலங்கையர் ஐவர் பலி: நால்வர் முஸ்லிம், ஒருவர் சிங்களவர்

சவூதி அரேபியாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் கொல்லப்பட்ட ஐந்து இலங்கையர்களினதும் சடலங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

29 பேரை பலிகொண்ட இந்த விபத்தில், மரணமடைந்த இலங்கையைச் சேர்ந்த ஐவரில் நான்கு முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் அடங்குவர். இவர்களில் நால்வர் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் வழங்கப்படும் காப்புறுதி நஷ்டஈடும், அதேபோன்று சவூதி அரேபியாவிலுமிருந்தும் நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று – 06ஆம் குறிச்சி, இலக்கம் 412, அலியார் மரிக்கார் வீதியைச் சேர்ந்த ருபீன் முபீஸ், நிந்தவூர் இலக்கம் 219/1, பதுரிய்யா வீதியைச் சேர்ந்த சேகு ஆதம்பாவா மீராலெப்பை, அட்டாளைச்சேனை இலக்கம் 64 பி, எம்.பி.சீ.எஸ். வீதியைச் சேர்ந்த மொஹம்மட் ஆமிர் ஹப்ஸான், சம்மாந்துறை இலக்கம் 357 இரண்டாம் குறுக்கைச் சேர்ந்த சுலைமான் லெப்பை அப்துல் கபூர் மற்றும் சவூதியில் இவர்களுக்கு பொறுப்பாக இருந்த விதானகமகே மென்டிஸ் அப்புஹாமி ஆகிய ஐவருமே பலியானவர்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

இந்த விபத்துச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்ப உறவினர்களுக்கு தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சடலங்களை அவர்களது இடங்களுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக அதிகாரி போப்பிட்டிய தெரிவித்தார்.

இவர்களுக்கு மேலதிக நஷ்டஈட்டுத் தொகையை சவூதி அரேபியாவிடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் கவுன்ஸிலர் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சவூதி அரேபியாவிலுள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் வண்டி ரியாத் நகருக்கும் தமாம் நகருக்கும் இடையில் வைத்து திடீரென ட்ரெக் வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ் வண்டி திடீரென மோதியவுடன் தீப்பிடித்துக் கொண்டுள்ளது. பஸ் வண்டியின் தன்னியக்க கதவுகளும், யன்னல்களும் பூட்டப்பட்டுக் கொண்டதில் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து இலங்கையர்கள், நான்கு சவூதி அரேபியர்கள், மூன்று இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர், ஒரு எகிப்தியர், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும், சூடான் நாட்டைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *