June

June

விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும்: திருமாவளவன்

07thirumavalavan.jpgஇலங் கையில் விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநில சுயாட்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், திரிகோணமலையில் சீனா ராணுவ தளம் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும். தற்போது இந்தியாவை இலங்கை அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவு, மருத்துவம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். 4 வது ஈழப் போர் முடிந்துள்ளது. விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்றார்.

தேக்கம் காட்டில் இளைஞர் பயிற்சி நிலையம் அங்குரார்ப்பணம்

basil.jpgவடக்கில் வசந்தம் இளமைக்கு உதயம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கனடிய உலக பல்கலைக்கழக நிதி உதவியுடன் சுமார் 30 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இளைஞர் பயிற்சி நிலையத்தினை திறந்து வைக்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இன்று செவ்வாய் மாலை 3 மணிக்கு வவுனியா வரவுள்ளார்.

தேக்கம்காடு இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலைய வளவினுள் நிர்மாணிக்கப்பட்ட இந்த பயிற்சி நிலைய திறப்பு விழாவில் இளைஞர் விவகார அமைச்சர் பிவித்திரா வன்னியாராச்சி, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் உட்பட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொள்வார்கள்.

தொழில் வாய்ப்பினை முன்னேற்றும் நோக்குடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பல பயிற்சி நெறிகளை நடத்தி வருகின்றது. இதேபோன்றதொரு பயிற்சி நிலையம் மன்னாரில் 20ம் திகதி திறந்துவைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது

யாழ்.மாவட்ட பொலிஸ் நிலையங்களில் தமிழ் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை

images-poli.jpgயாழ்.  மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ்ப் பொலிஸார் நியமிக்கப்படுவார்கள். இதற்கான பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும். இதன்மூலம் மக்களுக்குப் பொலிஸாரின் சேவைகளை முழுமையாக வழங்கக் கூடியதாக இருக்குமென்று மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற கிராம சேவையாளர்கள் மற்றும் பொது மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் வடபகுதியில் இதுவரை யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காரணத்தால் பொலிஸார் வெளியே வந்து செயற்பட்டு மக்களுக்கான சேவைகளை வழங்க முடியாமலிருந்தது. ஆனால், தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளதால் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் நான் பொலிஸ் சேவையில் இணைந்த போது பொலிஸிலிருந்த தமிழ் அதிகாரிகளே எனக்குப் பொலிஸ் நடைமுறைகளைக் கற்றுத்தந்தார்கள். அன்றைய காலத்தில் யாழ்ப்பாண மக்கள் தொடர்பாக நான் வித்தியாசமான கருத்துகளையே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தற்போது யாழ்ப்பாணத்திற்கு வந்து பணியாற்றுகின்ற போது அந்த மக்கள் மிகவும் நல்லவர்கள் என்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது.

பொலிஸாரின் சேவைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ். குடாநாட்டு மக்களிடையே தெளிவான விளக்கங்கள் ஏற்படவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் மத்தியிலான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறிப்பாக பிரதேச மட்டங்களிலான கசிப்பு ஒழித்தல், கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தல், போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்குபடுத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்குப் பொதுமக்கள் பொலிஸாருடன் ஒத்துழைக்க வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து விதிமுறைகளை அறிவுறுத்துவதற்காக பொலிஸார் பாடசாலை அதிபர்களுடன் இணைந்து செயற்படவுள்ளனர். இந்தச் செயற்திட்டங்களை இலகுவாக மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையங்கள் தோறும் பொலிஸாருக்குத் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.

பிரதேச மட்டங்களில் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது தமிழ்மொழி தெரிந்த ஆண்,பெண் பொலிஸாரும் அதில் இடம்பெற ஆவன செய்யவேண்டுமென்று பொதுமக்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இனிவரும் காலங்களில் குடாநாட்டில் சுற்றிவளைப்புத் தேடுதல்களை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாதென்று தெரிவித்தார். இக் கலந்துரையாடலுக்கு பொன்னாலை, சுழிபுரம், வட்டுக்கோட்டை மற்றும் வட்டு. தென் மேற்கு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த கிராம சேவையாளர்களும் பொதுமக்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

“ஜனாதிபதியை சந்திக்க எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்’

parliament-of-sri-lanka.jpgஜனாதி பதியை சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே இருப்பதாக தெரிவித்த அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான ரி. கனகசபை, அமெரிக்காவை பார்த்தாவது இலங்கை பக்குவப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் கூட்டமைப்பின் மறைந்த எம்.பி.யான கே. சிவநேசனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையில் பேசும்போதே கனகசபை இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; சிவநேசன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படு முன்னரே நான் அவரை அறிந்திருந்தேன். அவர் எனது சிறந்த நண்பர். அரசியல் மற்றும் தென்னை, பனை வளங்களை பெருக்குவது என்பவையே அவரது பிரதான இலக்குகளாக இருந்தன. அதற்கேற்றாற் போல் அவர் தென்னை, பனை வள அபிவிருத்தியிலும் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.

அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாக கூறுகின்றது. எனவே, இப்போது பந்து அரசாங்கத்தின் பக்கமே இருக்கிறது. அரச தரப்பினரே தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலான தீர்வை கொண்டுவர வேண்டும். இதேநேரம், நாம் எப்போதும் ஜனாதிபதியை சந்திக்க தயாராகவே இருக்கிறோம். உரிய நேரம் வரும்போது, நாம் அதை செய்வோம்.

அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை கறுப்பு இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நிலவிவந்தன. ஆனால், இன்று அமெரிக்காவின் சிறுபான்மையினமான கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அந்நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். அமெரிக்கர்களின் பெருந்தன்மையை இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். இந்த பக்குவம், பெருந்தன்மை இங்கு பெரும்பான்மையின மக்களுக்கும் வர வேண்டுமென்பதே எமது அங்கலாய்ப்பாக இருக்கிறது என்றார்.

அதிபர் தேர்தல் முடிவு குறித்து விசாரணை நடத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

president-ahamadinejad.jpgஇரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மோசடிகள் இடம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.  இந்தத் தேர்தல் நடைபெற்ற விதம் குறித்து பல்வேறு எதிர்கட்சி வேட்பாளர்கள் வெளியிட்டுள்ள கவலைகளை இரான் அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

அங்கு நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று வர்ணித்துள்ள பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர்கள், அரசின் இந்த நடவடிக்கையினை விமர்சித்தும் உள்ளனர்.

‘எனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது’- சிவநாதன் கிஷோர் எம்.பி.

kishore.jpg“எனக் கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் நான் எந்த கட்சியையும் சாராதவன்” என பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். அதேவேளை, எனது மாவட்டத்து மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் நான் எனது ஒத்துழைப்பை வழங்குவேன். நாளை வவுனியாவிலும் அடுத்து மன்னாரிலும் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வதும் உறுதியென அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் மீதான பிரேரணையின் போது நடுநிலை வகித்ததால் கிஷோர் எம்.பி.க்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளதாக சில பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையடுத்து அதுபற்றி அவரிடம் கேட்ட போதே கிஷோர் எம். பி. இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கஷ்டப்பட்ட மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே தாம் அவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்த அவர்; அவ்வாறு தமக்கெதிராக எவரும் விசாரணை நடத்த முடியாதெனவும் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,இதுவரை காலமும் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அதனால் அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய தேவையொன்றிருந்தது. இப்போது அத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை.

எமது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் அவர்களிற்கான இயல்பு வாழ்க்கை தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே நான் செயற்பட்டு வருகிறேன். கொழும்பிலேயோ வெளிநாடுகளிலேயோ இருந்து கொண்டு எமது மக்களுக்கு எம்மால் சேவை செய்ய முடியாது. அதனால் நான் மக்களோடு எனது மாவட்டத்தில் இருக்கிறேன். அவர்கள் இனியும் அல்லல்பட விடமுடியாது. அவர்களுக்கான கெளரவமான எதிர்காலம் அவசியம்.

நான் கட்சி விட்டு விலகப் போவதில்லை, அமைச்சர் பதவி இருந்தால்தான் மக்களுக்குச் சேவை செய்ய முடியுமென்பதில்லை. நான் செஞ்சிலுவைச் சங்கத்தின் இருந்து கொண்டே மக்களுக்குச் சேவை செய்தவன். தேசியம் தேசியம் என பிடிவாதம் செய்து இனியும் எதுவும் சாதிக்க முடியாது.  நமது மக்களின் நலன் நமக்கு மிக முக்கியம். தேசியம் பேசிய எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் போராட்டம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் பூஜ்ஜியமாகவே போனது, பிரபாகரனின் போராட்டமும் பூஜ்ஜியமாகி மக்களை நடுத்தெருவிற்கே கொண்டுவந்துவிட்டது.

அதனால் எமது மக்களின் எதிர்காலத்தை சுபீட்சம யமாக்க எமது மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதென தீர்மானித்துள்ளேன் எனவும் கிஷோர் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

சவுதியில் கொல்லப்பட்ட 5 இலங்கையருக்கு நஷ்டஈடு தலா மூன்று இலட்சம் வழங்க முடிவு

சவூதி அரேபியாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் கொல்லப்பட்ட ஐந்து இலங்கையர்களினதும் குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபா வீதம் நஷ்டஈடு வழங்க உள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

கடந்த வாரம் இடம் பெற்ற பஸ் விபத்தில் 5 இலங்கையர் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வர பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு இறந்தவர்கள் சார்பாக பணியகத்தினூடாக காப்புறுதி நஷ்டஈடும் சவூதி அரேபியாவில் இருந்து நஷ்டஈட்டுத் தொகையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இறந்த ஐவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினூடாக பதிவு செய்தே சவூதி அரேபியா சென்றுள்ளனர். இவர்களது சடலங்களை கொண்டுவருவது குறித்தும் இறுதிக் கிரியைகளை நடத்துவது குறித்தும் பணியகம் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதோடு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகமும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.

20-20 கிரிக்கெட்: மேற்கிந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

t20-world-cup.jpgஇங்கி லாந்தில் நடக்கும் டுவென்டி 20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 போட்டியின் 2வது ஆட்டத்தில் ’இ’ பிரிவில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து மேற்கிந்திய அணிகள் மோதியன.

டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 9 ஓவராக குறைக்கப்பட்டு 80 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கு 80 ஓட்டங்கள் என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய அணி 8.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. சர்வான் சந்திரபால் ஜோடி அற்புதமாக ரன் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். சர்வானுக்கு (19*) ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பாலியல் சேஷ்டை குற்றச்சாட்டில் பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருக்கும் இளைஞன்

பிரிட்டனில் ஹீலி என்ற இடத்தில் பெண்கள் மீது பாலியல் இம்சையை மேற்கொண்ட நான்கு குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட அச்சல தத்தலாகே என்ற இலங்கை இளைஞனை நாடுகடத்துமாறு பிரிட்டிஷ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பருக்கும் ஜனவரிக்கும் இடையில் ஹீலி பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று தடவைகள் 27 வயதுடைய இந்த இளைஞன் பாலியல் இம்சைக் குற்றங்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகள் நடந்துவரும் போது இவர் பாலியல் ரீதியான சேஷ்டைகளை புரிந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. நியூ ஹாசில் எனுமிடத்தில் ஹீலி வீதியில் வசிக்கும் அச்சல டிசம்பர் 23 இல் தேவாலயம் அருகே 2 பெண்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவர் கார் தரிப்பிடத்திற்கு செல்லும் படிக்கட்டில் 17 வயதுடைய பெண்ணொருவர் மீது அங்க சேஷ்டை மேற்கொண்டுள்ளார். பிரதிவாதியான அச்சல ஹீலி பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணி கற்கைநெறியை பயின்று வருகிறார். 4 பாலியல் சேஷ்டை குற்றச்சாட்டுகள் இவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவரைக் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நீதிபதி ரொபர்ட் ரிவர் ஜோன்ஸ், அச்சலவுக்கு 22 மாதகால சிறைத்தண்டனை வழங்கியதுடன் அவர் தன்னாலான விதத்திலே நாடுகடத்தப்பட உள்ளார் என தெரிவித்திருக்கிறார். அத்துடன், 10 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளிகள் டாப்பில் அவர் கைச்சாத்திட வேண்டுமென நீதிபதி பணித்துள்ளார். .

டெங்கு நோயால் நேற்றுவரை 134பேர் பலி; 9400பேர் பாதிப்பு

dengu_1.gifடெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் நோய்பரவுகைத் தடுப்பு பிரிவு மருத்துவ அதிகாரியான மனோரி கீத்தாஞ்சலி நேற்றுத் தெரிவித்தார்.

இக்காய்ச்சல் காரணமாக நேற்று வரையும் 134 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 9400 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.இக்காய்ச்சலுக்கு மே மாதத்தில் மாத்திரம் நாலாயிரம் பேர் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் கண்டி, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, கேகாலை போன்ற 12 மாவட்டங்களில் இக்காய்ச்சல் தொடர்ந்தும் தீவிர நிலையில் காணப்படுகின்றது என்றும் கூறினார்.

இதன் காரணத்தினால் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஒழித்து சுற்றாடலை சுத்தமாகவும், உலர் நிலையிலும் வைத்திருப்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவே நுளம்புகள் பரப்புகின்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரிதும் உதவும் எனவும் அவர் கூறினார்.