இரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மோசடிகள் இடம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இந்தத் தேர்தல் நடைபெற்ற விதம் குறித்து பல்வேறு எதிர்கட்சி வேட்பாளர்கள் வெளியிட்டுள்ள கவலைகளை இரான் அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
அங்கு நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று வர்ணித்துள்ள பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர்கள், அரசின் இந்த நடவடிக்கையினை விமர்சித்தும் உள்ளனர்.