ஜனாதி பதியை சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே இருப்பதாக தெரிவித்த அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான ரி. கனகசபை, அமெரிக்காவை பார்த்தாவது இலங்கை பக்குவப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் கூட்டமைப்பின் மறைந்த எம்.பி.யான கே. சிவநேசனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையில் பேசும்போதே கனகசபை இவ்வாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்; சிவநேசன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படு முன்னரே நான் அவரை அறிந்திருந்தேன். அவர் எனது சிறந்த நண்பர். அரசியல் மற்றும் தென்னை, பனை வளங்களை பெருக்குவது என்பவையே அவரது பிரதான இலக்குகளாக இருந்தன. அதற்கேற்றாற் போல் அவர் தென்னை, பனை வள அபிவிருத்தியிலும் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.
அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாக கூறுகின்றது. எனவே, இப்போது பந்து அரசாங்கத்தின் பக்கமே இருக்கிறது. அரச தரப்பினரே தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலான தீர்வை கொண்டுவர வேண்டும். இதேநேரம், நாம் எப்போதும் ஜனாதிபதியை சந்திக்க தயாராகவே இருக்கிறோம். உரிய நேரம் வரும்போது, நாம் அதை செய்வோம்.
அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை கறுப்பு இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நிலவிவந்தன. ஆனால், இன்று அமெரிக்காவின் சிறுபான்மையினமான கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அந்நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். அமெரிக்கர்களின் பெருந்தன்மையை இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். இந்த பக்குவம், பெருந்தன்மை இங்கு பெரும்பான்மையின மக்களுக்கும் வர வேண்டுமென்பதே எமது அங்கலாய்ப்பாக இருக்கிறது என்றார்.