யாழ்.மாவட்ட பொலிஸ் நிலையங்களில் தமிழ் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை

images-poli.jpgயாழ்.  மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ்ப் பொலிஸார் நியமிக்கப்படுவார்கள். இதற்கான பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும். இதன்மூலம் மக்களுக்குப் பொலிஸாரின் சேவைகளை முழுமையாக வழங்கக் கூடியதாக இருக்குமென்று மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற கிராம சேவையாளர்கள் மற்றும் பொது மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் வடபகுதியில் இதுவரை யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காரணத்தால் பொலிஸார் வெளியே வந்து செயற்பட்டு மக்களுக்கான சேவைகளை வழங்க முடியாமலிருந்தது. ஆனால், தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளதால் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் நான் பொலிஸ் சேவையில் இணைந்த போது பொலிஸிலிருந்த தமிழ் அதிகாரிகளே எனக்குப் பொலிஸ் நடைமுறைகளைக் கற்றுத்தந்தார்கள். அன்றைய காலத்தில் யாழ்ப்பாண மக்கள் தொடர்பாக நான் வித்தியாசமான கருத்துகளையே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தற்போது யாழ்ப்பாணத்திற்கு வந்து பணியாற்றுகின்ற போது அந்த மக்கள் மிகவும் நல்லவர்கள் என்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது.

பொலிஸாரின் சேவைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ். குடாநாட்டு மக்களிடையே தெளிவான விளக்கங்கள் ஏற்படவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் மத்தியிலான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறிப்பாக பிரதேச மட்டங்களிலான கசிப்பு ஒழித்தல், கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தல், போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்குபடுத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்குப் பொதுமக்கள் பொலிஸாருடன் ஒத்துழைக்க வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து விதிமுறைகளை அறிவுறுத்துவதற்காக பொலிஸார் பாடசாலை அதிபர்களுடன் இணைந்து செயற்படவுள்ளனர். இந்தச் செயற்திட்டங்களை இலகுவாக மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையங்கள் தோறும் பொலிஸாருக்குத் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.

பிரதேச மட்டங்களில் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது தமிழ்மொழி தெரிந்த ஆண்,பெண் பொலிஸாரும் அதில் இடம்பெற ஆவன செய்யவேண்டுமென்று பொதுமக்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இனிவரும் காலங்களில் குடாநாட்டில் சுற்றிவளைப்புத் தேடுதல்களை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாதென்று தெரிவித்தார். இக் கலந்துரையாடலுக்கு பொன்னாலை, சுழிபுரம், வட்டுக்கோட்டை மற்றும் வட்டு. தென் மேற்கு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த கிராம சேவையாளர்களும் பொதுமக்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *