April

April

உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்

david-milib.jpgஇலங்கையின் நிலைவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாகவும், உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சிவிலியன்கள் மீதான தாக்குதல் குறித்து அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டியது இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் இறுதி நிலப்பரப்பு முற்றுகையிடப்பட்டதாக அரசாங்கத் தரப்பு வெளியிட்டுள்ள செய்திகளைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன்களை மனித கேடயமாக புலிகள் பயன்படுத்துவதாக வெளியான தகவல்கள் குறித்து பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள் படையினர் பிரவேசித்துள்ளதாகவும், சிவிலியன் பாதுகாப்பு குறித்து பிரித்தானிய அரசாங்கம் பெரும் கவலை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.

முன்னொருபோதும் இல்லாதவாறு யுத்த நிறுத்தத்தின் அவசியம் அதிகரித்துள்ளதாகவும், சிவிலியன்கள் அபாயகரமான வலயத்திலிருந்து சுதந்திரமாக வெளியேற தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஒரேநேரத்தில் கூடுதல் பொது மக்கள் வெளியேறி வரலாமென எதிர்பார்ப்பு

badurdeen.jpgபுதுக் குடியிருப்பு- புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரே நேரத்தில் கூடுதலான பொது மக்கள் வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரலாமென எதிர்பார்க்கப்படுவதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இவ்வாறு ஒரே நேரத்தில் வரும் கூடுதலான மக்களைத் தங்க வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கென வவுனியாவில் பாடசாலைகள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரச அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்ததாக அமைச்சர் கூறினார்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறுவதற்கு மக்கள் தயாராகி வருவதாக அரசாங்கத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. நேற்று முன்தினமும் சுமார் இரண்டாயிரம் பேர் வெளியேறி வந்துள்ளார்கள், என்று தெரிவித்த அமைச்சர் பதியுதீன், ஒரே தடவையில் பெருந்திரளானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

இவர்களைத் தங்க வைப்பதற்கு நிவாரணக் கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகக் கூறிய அமைச்சர் ரிஷாட், சிலவேளை, மக்கள் வருவதற்கு முன்னர் இந்தத் தற்காலிகக் குடியிருப்புகளான வீடுகளை நிர்மாணித்து முடிக்கலாமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி முகாம்களிலும் தங்கியுள்ள மக்களின் நலன்கள் குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வவுனியாவில் அரச அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போதே, வெளியேறி வரவிருக்கும் மக்களைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கின்றார்.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைப் படையினர் முழுமை யாகக் கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அங்கிருந்து பொதுமக்கள் முற்றாக வெளியேறியதன் பின்னரே, புலிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடருமெனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலைமையின் தற்போது புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியே ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அங்குள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன மேற்கொண்டு வருகிறார் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் இவ்வேளையில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கலாம் – பிரதமர்

pm-srilanka.jpgசர்வதேச யுத்த ஒழுங்கு விதிகளை மீறி அப்பாவி பொது மக்கள் தங்கி இருக்கும் பாதுகாப்பு வலயத்தினுள் மறைந்திருந்தபடி புலிகள் படையினர் மீது தாக்குதல்களை நடாத்துவதாகப் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குற்றஞ்சாட்டினார்.புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து சவப்பெட்டிக்குள் அடக்கம் செய்யும் இறுதித் தருணம் நெருங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் இவ்வேளையில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கலாம். அதனால் முன்னெச்சரிக்கையோடு பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். புலிப் பயங்கரவாதம் காரணமாக மூன்று தசாப்தங்கள் பின்னடைந்த இந்நாட்டை இரண்டு மூன்று மடங்காக துரித மாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

புது வருடத்தை முன்னிட்டு விஷேட பஸ், ரயில் சேவை -இன்று முதல் அமுல்

udayathevi.gifதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. மேலதிகமாக சுமார் 400 இ.போ.ச பஸ்களும் 20 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு கூடுதலான தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதன்படி இன்று முதல் பதுளை, ஹட்டன், மஹவ, ரம்புக்கனை, காலி ஆகிய பகுதிகளுக்கு மேலதிக ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன. இது தவிர அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை, திருகோணமலை ரயில் சேவைகளுக்கு மேலதிக ரயில் பெட்டிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.

பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு மட்டுமன்றி மீண்டும் கடமைக்கு திரும்புவதற்காகவும் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. விசேட ரயில் சேவை எதிர்வரும் 19ம் திகதி வரை இடம்பெறும்.

இதேவேளை, பண்டிகையை முன்னிட்டு 400 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இ.போ.ச கூறியது. பதுளை, கண்டி, ஹட்டன், பொலன்னறுவை, ஹங்குரங்கெத்த, காலி, மாத்தறை, ஹம்பாந் தோட்டை உட்பட கொழும்பிலிருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் மேலதிக பஸ் சேவைகள் இன்று (8) முதல் ஈடுபடுத்தப்பட வுள்ளதாக இ.போ.ச பிரதி பொது முகாமையாளர் பி.ஏ. லிவினிஸ் கூறினார்.

இது தவிர சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தமது சொந்த இடங் களுக்குச் செல்வதற்காகவும் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர வர்த்தக வலயங்களில் இருந்து அநுராதபுரம், ஆனமடுவ போன்ற பகுதிகளுக்கு விசேட இ.போ.ச பஸ்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ரயில் சேவையுடன் இணைந்ததாக கூட்டு பஸ் சேவையொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா கவும் அவர் கூறினார். இதன்படி பொல்கஹ வல, குருணாகல் போன்ற பிரதான ரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்து விசேட இ.போ.ச பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

இதேவேளை, பண்டிகையை முன்னிட்டு கூடுதலான தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை கூறியது. கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக் குச் செல்லவும் திரும்பி கொழும்பு வரவும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. 20ம் திகதி வரை மேலதிக பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

மட்டு., வவுனியாவுக்கு விசேட ரயில்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவிற்கும் மட்டக்களப்பிற்கும் புதிதாக இரு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது-

இதன்படி கொழும்பிலிருந்து வவுனியாவிற்கு புதிதாக கடுகதி ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த யாழ்தேவி ரயில் தினமும் காலை 5.45 மணிக்கு கொழும்பிலிருந்து ஆரம்பமாகி காலை 9.10 மணிக்கு அநுராதபுரத்தையும் 9.40 மணிக்கு மதவாச்சியையும் 10.07 மணிக்கு வவுனியாவையும் சென்றடையும். மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்படும் யாழ்தேவி ரயில் இரவு 8.35 மணிக்கு கொழும்பை வந்தடையும். இந்த ரயில் பொல்கஹவல, குருணாகல், மஹவ, அநுராதபுரம், மதவாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நிறுத்தப்படும்.

இதேவேளை கொழும்பு-மட்டக்களப்புக் கிடையில் புதிதாக உதயதேவி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10.30 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் இந்த ரயில் 3.16 மணிக்கு கல்லோயாவையும் 6.30 மணிக்கு மட்டக்களப்பையும் வந்தடையும். இந்த ரயில் சேவையுடன் இணைந்ததாக கல்லோயா விலிருந்து தினமும் 3.20 மணிக்கு ரயில் சேவை யொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது 5.00 மணிக்கு திருகோணமலையை வந்தடையும். மீண்டும் இந்த ரயில் காலை 7.45 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து பயணமாகி பிற்பகல் 3.40 மணிக்கு கொழும்பை வந்தடையும். இந்த ரயில் பொல்கஹவல, குருணாகல், மஹவ, கலாவெவ, கெகிராவ, கல்ஓயா, ஹிங்குரா கொட, பொலன்னறுவை, மன்னம்பிட்டிய, பூனானை, வாழைச்சேனை, ஏறாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும்.

ருபெல்லா தொடர்பாக தவறான கருத்துக்கள்: தடுப்பு மருந்து வழங்கலுக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் – நிமல்

nimal-sri-pala.jpgருபெல்லா தடுப்பு மருந்து தொடர்பாகத் தவறான கருத்துக்களைப் பரப்பி தேசிய தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்திற்கு ஊறு விளைவிக்க வேண்டாம் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் மாத்தறை மாவட்ட எம்.பி. ஜினதாச கித்துலேகொடவின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மாத்தறையில் ருபெல்லா தடுப்பு மருந்து பெற்ற மாணவி உயிரிழந்தமைக்கு அம்மாணவியின் உடலில் காணப்பட்ட ஒவ்வாமையே காரணம். மாறாக குறித்த தடுப்பு மருந்து தரம் குறைந்ததோ, காலம் கடந்ததோ அல்ல.

இதனை உலக சுகாதார ஸ்தாபனத்தின் மருத்துவ நிபுணர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் இவ்விடயம் தொடர்பாக நடாத்திய விசாரணை மற்றும் பரிசோதனை தொடர்பான அறிக்கையை எமக்குக் கையளித்துள்ளனர். அதனை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கிறேன். அந்த அறிக்கையின் பிரதியை விரைவில் தருகின்றேன். ருபெல்லா தடுப்பு மருந்து இற்றைவரையும் இந்நாட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படியான சம்பவம் ஏற்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

இத்தடுப்பு மருந்து பெற்ற 25 மாணவிகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படக் காரணம் ஒருவர் உயிரிழந்ததால் ஏற்பட்ட உளரீதியான தாக்கமேயாகும். இதனையும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றார்.

ஆயூர்வேத சிகிச்சை முறையை பிரபல்யப்படுத்த இலங்கைக்கு வெளிநாடுகள் அழைப்பு!

tissa_karaliyaddda.jpgஇலங்கையின் ஆயுர்வேத வைத்திய முறையை  அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் கியுபா போன்ற நாடுகளில் பிரபல்யப்படுத்த அந்த நாடுகள் அழைப்பு விடுத்துள்ளதாக தேசிய வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரளியத்த தெரிவித்தார். இந்த அழைப்புக்கள் தோடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவில் நான்கு இடங்களில் ஆயர்வேத சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவற்றின் மூன்றின் ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் என அமைச்சின் ஆலோசகர் ஜயசிறி மெண்டிஸ் தெரிவித்தார். அவற்றுக்குத் தேவையான மூலிகைகள் மற்றும் உபகரணங்கள் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை அபுதாபி நகரிலும் எதிர்வரும் 24 ஆம் 25 ஆம் திகதிகளில் ஆயுர்வேத சிகிச்சை முகாம் ஒன்றை நடத்தவும் சிகிச்சை மத்திய நிலையம் ஒன்றை  திறந்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்றும் முதற்கட்ட நடவடிக்கை!

வடக்கி லிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்றும் முதற்கட்ட நடவடிக்கை இம்மாத இறுதியில் அல்லது மே மாத முதற்பகுதியில் மன்னாரில் ஆரம்மபிக்கப்படும் என மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்களின் தேவைகளை கண்டறியவும் அவர்களுக்கு தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படு;திக் கொடுக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்பேரில் நலன்புரி உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வட பகுதியிலிருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையின் பல பாகங்களிலும் சிதறி வாழ்கின்றனர். இவர்களுள் உள்ள வறிய மக்கள் புத்தளம் மாவட்டத்தில் உள்ள இடைத்தங்க்ல் முகாம்களில் செல்லொனாத் துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்

1 ஆம் தவணை கல்வி நடவடிக்கை இன்றுடன் நிறைவு

sri-lanka-students-01.jpgநாட்டின் சகல அரசாங்கப் பாடசாலைகளினதும் இந்த வருடத்திற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் யாவும் இன்று புதன்கிழமை யுடன் நிறைவடைய உள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கல்வியமைச்சின் கீழ் இயங்கும் தமிழ் – சிங்கள – முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படவுள்ளன. இரண்டாம் தவணைக் கல்வி
நடவடிக்கைகளுக்காக தமிழ் – சிங்கள பாடசாலைகள் இம் மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளன. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இம் மாதம் 20 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளன.

தமிழ் – சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஜுலை மாதம் 31 ஆம் திகதி நிறைவடைய உள்ளதுடன், முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளன.  இந்த வருடத்தின் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகள் யாவும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் கல்விமையமைச்சு அறிவித்துள்ளது.

மங்களவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாராளு மன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் ஆதரவாளர்கள் பலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்ததுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குப் பூரண ஆதரவு வழங்கவும் முன்வந்துள்ளனர். இவர்களுள் மாத்தறை மாவட்ட உள்ளூராட்சிச் சபைகளின் உறுப்பினர்களும் அடங்குவர். இச்சந்திப்பு நேற்று முன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்றது.

மங்கள சமரவீர எம். பி. யின் ஒரேயொரு இணைப்புச் செயலாளரைத் தவிர அவரது பிரத்தியேக நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் அனைவரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இதுவரை தாம் தனித்து விடப்பட்ட உணர்வைக் கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் உண்மை நிலையை உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதுடன் மாத்தறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக இணைந்து உழைப்பதாகவும் உறுதியளித்துள்ளனர். இந்நிகழ்வில் மாத்தறை மாவட்ட உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் கலந்து கொண்டார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா திடீர் பாக்தாத் விஜயம்

obama_ap.jpg

முன்னறிவிக்கப்படாத விஜயம் ஒன்றை மேற்கொண்டு அதிபர் ஒபாமா பாக்தாதுக்கு சென்றுள்ளார். துருக்கிக்கான நீண்ட விஜயத்தின் முடிவில், சிறிது நேரத்துக்கு முன்னர் இராக்கிய தலைநகருக்கு அவர் சென்று இறங்கியுள்ளார்.

அவர் அமெரிக்க படையினரையும், இராணுவ தளபதிகளையும் சந்திப்பார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.இராக்கிய அதிபர் ஜலால் தலபானியையும், பிரதமர் நூரி அல்மலிக்கியையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்த போதிலும், அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஹெலிக்கொப்டரில் செல்வதற்கு மோசமான கால நிலை இடம் கொடுக்காத காரணத்தினால், அநேகமாக அவர்களுடன் அவர் தொலைபேசியிலேயே உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.