29

29

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இலங்கையில் தான் தண்டனை வழங்கப்பட வேண்டும் – கருணா அம்மான்

Karuna Colஇலங்கை இராணுவத்தால் கைது செய்யப்படும் சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படக் கூடாது என அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு யுத்த குற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பல்வேறு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருணா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவருக்கு இலங்கையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பின்னர் இந்தியாவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகின்றது: பா.நடேசன்

nadesan-10.jpgவிடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ‘த ஸ்ரேற்ஸ்மன்’ இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அப்பேட்டியில், ‘’தற்போதைய இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளும், செயற்பாடுகளும் எமக்கு ஏமாற்றத்தையே தருகின்றன.

இந்தியாவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில்,  இந்தியாவின் இயற்கையான கூட்டாளிகள் யார் என்பதை அறிவதில் இன்றைய இந்திய அரசு தவறி விட்டது; அது ஈழத் தமிழர்கள் தான்’’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், ’’இந்தியா ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றது. இதனை கண்டு நாம் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். போரை நிறுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காணும் முயற்சிகள் எதனையும் இந்தியா மேற்கொள்ளவில்லை.  கடந்த சனிக்கிழமை சிங்கள வான்படையின் வானூர்திகள் நான்கு தடவைகள் மக்கள் அதிகமாக வாழும் பாதுகாப்பு வலயத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தின.

பீரங்கி தாக்குதல்களும் கடுமையாகத் தொடர்கின்றன. இந்திய அதிகாரிகளின் கொழும்பு பயணத்தின் பின்னரே இவ்வாறான தாக்குதல்கள் உக்கிர நிலையை எட்டியுள்ளன.  விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தவில்லை, இராணுவத்தினரே படையெடுப்பினை மேற்கொள்ளும் போது மக்களை மனித கேடயங்களாக முன்னால் நகர்த்தி முன்னேறுகின்றனர்.

தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் மேற்கொள்ளப்படும் இன அழிப்புக்களின் உண்மைத் தன்மையை அனைத்துலக சமூகம் இப்போது மெதுவாக உணரத் தொடங்கியுள்ளது. தமது மண்ணில் சுதந்திரமாக வாழ்ந்து, தமது தாயகத்தை தாமே அளும் நியாயமான அரசியல் அவாக்கள் எமது மக்களுக்க உள்ளன. அந்த அரசியல் அவாக்களை வென்றெடுப்பதற்கு விடுதலைப் புலிகளையே அவர்கள் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் விருப்பத்திற்கான போராட்டம் அவற்றை அவர்கள் அடையாதவரை முடிவுக்கு வராது.  எனவே, இங்கு தமிழ் மக்கள் மனிதப்பேரவலம் ஒன்றை சந்தித்துள்ள இன்றைய வேளையில், உலக சமூகம் உடனடியாத் தலையிட்டு அவர்களைக் காக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை சிவாஜிலிங்கம் எம்.பி’யின் பிரச்சாரம் இந்திய சட்டத்துக்கு எதிரானது: வயலார் ரவி

sivajilingam0.jpgவெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை மத்திய அமைச்சர் வயலார் ரவி, சென்னையில் இன்று  முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30நிமிடங்கள் நீடித்தது. சந்திப்புக்கு பின் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து என்ன பேசினீர்கள்?

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததற்கு வாழ்த்து தெரிவித்தேன். அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு, அவ்வளவுதான்.

இலங்கை அரசின் போர் நிறுத்தம் குறித்து?

இந்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. உலக நாடுகளும் இதை வலியுறுத்த வேண்டும் என்று நாங்கள் கூறினோம்.  இதனை ஏற்று உலக நாடுகளும் இலங்கை அரசை வற்புறுத்தியது. இந்தியா மற்றும் உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த போர் நிறுத்தத்தால் இலங்கை தமிழர்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் அதில் மகிழ்ச்சி தான்.

வேறு நாட்டு எம்.பி. இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா?

இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் இந்திய அரசை விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. அவரின் இந்த தேர்தல் பிரச்சாரம் இந்திய சட்ட திட்டத்துக்கு எதிரானது.

இலங்கை மோதல்கள் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் எச்சரிக்கை

img_canada.jpgவிடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பிற்கு இலங்கை அரசாங்கம் பதில் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளாவிடின் இன்னும் ஓரிரு தினங்களில் அங்கு குருதிப்பெருக்கு ஏற்படும் என கனேடிய தமிழர்கள் அஞ்சுவதாகத் தெரிவித்த கனேடிய தமிழ் காங்கிரஸ் இது தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் ஹர்பருக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.  புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை ஏற்கும்படி இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரொறொன்டோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடியன் தமிழ் காங்கிரஸால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக அதன் தலைவர் ஸ்ரீ ரஞ்சன் தெரிவிக்கையில்; புலிகளின் யுத்த நிறுத்தத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை கனடா வலியுறுத்த வேண்டும். அரசியல் உறவு மற்றும் பொருளாதார உறவுகளை துண்டிப்பதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும்.

மேலும் கனடா அரசாங்கத்தை, இலங்கைப் பிரச்சினையில் தலையிடும் படி வலியுறுத்தும் படி கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும். கொழும்பை அரசியல் பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதன் மூலம் அரசியல் தீர்வுக்கு அதனை இட்டுச்செல்ல வேண்டும். இதுவே தமிழ் மக்களின் விருப்பு என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளின் படி பாதுகாப்பு வலயத்தில் 6500 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்த கனேடியத் தமிழர் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை மேலும் தெரிவிக்கையில்; உலகின் வல்லமை மிக்க அமைப்புகளான ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய யூனியன், ஜி8 என்பனவும் ஏனைய அரசாங்கங்களும் அறிக்கைகளை வெளியிட்டனவே தவிர வேறு எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை . இவை அனைத்தும் இலங்கைத் தமிழரைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளன.

கனடா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐ.நா, ஜி8 மற்றும் மேற்கத்திய அரசாங்கங்களின் அறிக்கைக்கு செவிமெடுத்த விடுதலைப்புலிகள் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்பொழுது பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முடிவிலேயே தங்கியுள்ளது.

இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன்: ஜெயலலிதா

j-j-j.jpg நாமக்கலில் அதிமுக  வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ’’எங்களுடைய சொல்லைக் கேட்கும் புதிய மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அண்மையில் சொல்லி இருந்தேன். 
 
இதற்கு ஒரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்,இந்த அம்மாவுக்கு சர்வதேச சட்டம் தெரியவில்லை.   எப்படி இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியும்? இலங்கை என்ன இந்தியாவின் மாவட்டமா? காலனியா?என்று வினவியிருக்கிறார். இதிலிருந்து இவர் தான், விவரம் புரியாத ஒரு மனிதர் என்பது தெரிகிறது.
 
இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது, கிழக்கு பாகிஸ்தான் மீது படையெடுத்து பங்களாதேசுக்கு விடுதலை வாங்கித் தரவில்லையா! இந்திரா காந்திக்கு சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்?

1971 ஆம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் போரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மறந்துவிட்டார் போலும்!   இனவெறியை தடுப்பதற்காகத்தான் இந்தப் போரை இந்திரா காந்தி நடத்தினார் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 
 
பிறகு, இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி இந்திய நாட்டின் பிரதமாக இருந்த போது, இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பவில்லையா? அவருக்கும் சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்?
 
இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி, பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ,
 
ராஜீவ் காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பினாரோ; அதே சர்வதேச சட்டத்தை பின்பற்றித் தான், அதே தர்ம நியாயங்களை பின்பற்றித் தான், நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால்,  இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொல்கிறேன்’’ என்று பேசினார்

பேராதனை வைத்தியசாலை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

doctor.jpgபேராதனை பல்கலைக்கழகம் இணைந்து சுகாதார கற்கை நெறிக்கான மாணவர்களுக்கு செயலமர்வு பயிற்சிக்காக பேராதனை போதனா வைத்தியசாலையினை உபயோகிக்க அனுமதிக்காமையை எதிர்த்து பேராதனை போதனா வைத்தியசாலையை சேர்ந்த 186 மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், நேற்றுமுன்தினம் முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெளிநோயாளர் பகுதியிலும் நோயாளர்களை பார்வையிடவில்லை. இதனால் நோயாளர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.எனவே சுகாதார அமைச்சு இதற்கு தீர்வு காணவேண்டுமென மருத்துவர்கள் கோரியுள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் அபாயம் இலங்கையும் முன்னெச்சரிக்கை

swine-flue.jpgமெக்ஸிக்கோ உள்ளிட்ட பல நாடுகளில் அதிவேகமாகப் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியன முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரச தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் இந்நோய் தொற்றாமல் தடுப்பதற்கு சகல சுகாதார நிலையங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அரச தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

* பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன அது எங்கிருந்து தோற்றம் பெற்றது?

சுவாச உறுப்புகளில் ஒருவகைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒருவிதமான காய்ச்சலே பன்றிக் காய்ச்சல் ஆகும்.

இக்காய்ச்சல் பொதுவாக பன்றிகளுக்கே ஏற்படும் ஆனாலும் மனிதர்களுக்கும் தொற்றக் கூடிய தன்மை கொண்டது.

இவ்வாறு மெக்ஸிகோவில் பன்றி ஒன்றில் தாக்கி வைரஸ் மனிதர்களையும் தாக்க ஆரம்பித்தது இதுவே பன்றிக் காய்ச்சலின் ஆரம்பமாகும்.

* பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து முகமூடிகள் பாதுகாத்துக் கொள்ளுமா?

பன்றிக் காய்ச்சலிலிருந்து முகமூடிகள் அணிவதன் மூலம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் சாத்தியம் உள்ளது. இருந்தாலும் அதன் முடிவுகள் சர்ச்சைக்குரியது.

* பன்றிக் காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் என்ன?

சாதாரண காய்ச்சலுக்கு எவ்வாறான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அவையே பன்றிக் காய்ச்சலுக்கும் தோன்றும்.

அதாவது இருமல், தடிமன், தலையிடி, உடல்வலி, நடுக்கம், சோர்வு ஆகியவற்றுடன் சில வேளைகளில் வயிற்றுப் போக்கு வாந்திபேதி என்பனவும் காணப்படலாம்.

* பன்றிக் காய்ச்சலுக்குள்ளானவர்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்பது தொடர்பாக எவ்வாறு அறிய முடியும்?

மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுடன் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தில் வசிப்பவராகவோ அல்லது மெக்ஸிகோவிலிருந்து அண்மையில் வந்திருந்தவராகவோ இருந்தால் கட்டாயம் மருத்துவ அறிவுரையை பெற வேண்டியது அவசியம்.

ஆனால், இந்நோய் தோற்றுவதைத் தடுக்காமல் இருக்க நோயாளர் வீட்டை விட்டு வெளியேறாமல் மருத்துவரை வீட்டுக்கு அழைத்து சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம்.

* பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா?

ஆம், ரமிபுளு அல்லது ரிலன்ஹா மருந்து மூலம் சிகிச்சையளிக்க முடியும் ஆனால், காய்ச்சலுக்கான வழமையான மருந்துகளால் சிகிச்சையளிக்க முடியாது.

* பன்றிக் காய்சலுக்கு ஊசி மருந்து உள்ளதா?

இல்லை, ஓர் ஊசி மருந்தினைக் கண்டு பிடிக்க 3 முதல் 6 மாதம் வரையான காலப்பகுதி தேவைப்படலாம்.

* பன்றிக் காய்ச்சலிலிருந்து எம்மை நாமே பாதுகாக்க முடியுமா?

பொதுவான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதாவது தும்மும் போதோ இருமும் போதோ திசுக்களால் முகத்தை மூடி தும்மியபின் திசுக்களை உடனடியாக வேறு இடங்களிற்கு அப்புறப்படுத்த வேண்டும்.

நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்கள் வீடுகளிலேயே தங்கிக் கொள்ள வேண்டும். சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் தொடர்பாக மேற்குறிப்பிட்ட தகவல்கள் அரச தொற்று நோய் தடுப்புப் பிரிவால் பொதுமக்களின் நலன்கருதி வெளியிடப்பட்டதாகும்.

சென்னையில் மர்ம ஆசாமி ஓட்டிய ரயில் -சரக்கு ரயில் மோதல்: 7 பேர் பலி

29-train.jpgசென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை ஒரு மர்ம நபர் இயக்கினார். அந்த ரயில் வியாசர்பாடி அருகே நின்று கொண்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் ரயில் மீது மோதியதில் இரு ரயில்களும் தீப் பிடித்துக் கொண்டன. இதில் 7 பேர் பயணிகள் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் பயணிகள் ரயிலை இயக்கிய நபரும் பலியானார்.

சென்னை-திருவள்ளூர் இடையில் இயக்கப்படும் பயணிகள் மின்சார ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.15 கிளம்பத் தயார் நிலையில் இருந்தது. ஆனால், 4.50 மணியளவி்ல் ரயிலின் டிரைவர் அதில் ஏறும் முன்பே திடீரென அந்த ரயில் கிளம்பியது. அப்போது அந்த ரயிலில் 20 பயணிகளே இருந்தனர். இதைக் கண்ட பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ரயிலின் டிரைவர், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். வேகமாகச் சென்ற அந்த ரயில் சென்ட்ரலை அடுத்த பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது.

இதையடுத்து அந்த ரயில் படுவேகத்தில் 5.00 மணியளவில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது தண்டையார்பேட்டையில் பெட்ரோலியம் நிரப்புவதற்காக டேங்கர் சரக்கு ரயில் ஒன்று லூப்லைனில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தது.

எதிர் திசையில் பயங்கர வேகத்தில் ரயில் வருவதை பார்த்த சரக்கு ரயிலின் டிரைவர் ஆறுமுகம், உதவி டிரைவர் பிரதாப், கார்டு கில்பர்ட் ஆகியோர் ரயிலிலிருந்து குதித்து ஓடினர். அவர் ஓடிக் கொண்டிருந்தபோதே டேங்கர் ரயில் மீது பயங்கர வேகத்தில் பயணிகள் ரயில் மோதியது. இதில் இரு ரயில்களும் தீப் பிடித்துக் கொண்டதோடு தடம் புரண்டன. மோதிய வேகத்தில் மின்சார ஒயர்கள் அறுந்து அந்தப் பகுதியில் மின்சாரமும் தடைபட்டது.

பயணிகள் ரயிலை இயக்கியது ரயில்வே என்ஜின் டிரைவரோ, ரயில்வே மெக்கனிகல் ஷெட் ஊழியரோ இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அந்த ரயிலை இயக்கிச் சென்று விபத்தை ஏற்படுத்திய நபர் தீவிரவாதியா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது

இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும்: டி.சுதர்சனம்

sivajilingam0.jpgபிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு முதல் அமைச்சர் கருணாநிதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம் தந்தி அனுப்பியுள்ளார்.

அதில், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் என்பவர் ஓர் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதியைப் போல தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் நேரடியாக பங்கேற்று ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்திய அரசியல் சாசன சட்டப்படியும், சர்வதேச பாஸ்போர்ட் விதிகளின்படியும் ஒரு நாட்டைச் சேர்ந்த எவரும் வேறொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. இந்த அடிப்படை நெறிமுறையை மீறி சிவாஜிலிங்கம் என்ற இலங்கை எம்.பி. தற்போது தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் இல.கணேசனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

அதோடு மட்டுமில்லாமல், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றியும், மத்திய மற்றும் தமிழக அரசுகள் பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது பிரசாரத்தில் விமர்சனங்கள் செய்து வருகிறார். அவரது இச்செயல் இந்திய அரசு அமைப்பு சட்டத்திற்கும், சர்வதேச பாஸ்போர்ட் விதிமுறைக்கும் முற்றிலும் எதிரானதும், கடுமையான தண்டனைக்கு உரியதும் ஆகும்.

எனவே, இந்தியாவில் குழப்பம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள சிவாஜிலிங்கத்தின் பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது

ஆம் நாங்கள்தான் சிங்கள ராணுவத்தை வழி நடத்தினோம்- பிரணாப் முகர்ஜி

pranabl.jpgசிங்கள ராணுவத்திற்கும், தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது,

கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும், தமிழக அரசியல்வாதிகளும் கூறிவந்தனர்.

ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான எ.கே.அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.

இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்தபடி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது.   தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா, சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது.  இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

சிங்கள அரசாங்கம் எங்களது நண்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு.  போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுறுத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயுத உதவிகள் வழங்கி வந்தோம்.  இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயுதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்க ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரை வழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கும் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிர நடவடிக்கைகளில் ஏன் ஈடுபடக்கூடாது?

இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரணாப் முகர்ஜி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.