22

22

இலங்கை பிரச்சனை பற்றி ஆலோசனை நடத்த பிரதமர் தலைமையில் அவசரக்கூட்டம்

இலங்கை பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு பிரதமர் மன்மோகன் தலைமையிலான அவசர கூட்டம் இன்று இரவு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே., நாரயணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஜெயலலிதாவே, என்னையா வரலாறு மன்னிக்காது – எம்.ஜி.ஆர்., ஈழ விசயத்தில் உம்மைத்தான் வரலாறு மன்னிக்காது: கலைஞர்

20-karunanithi.jpgஇலங்கை பிரச்சனை பற்றியும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பற்றியும் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் …..
 
’’இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் குறித்து அங்கே உடனடியாக நிரந்தரப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்தி தந்திக்கு மேல் தந்தி கொடுத்தும்- கடிதங்கள் எழுதியும் – அறிக்கைகள் கொடுத்தும் கடந்த 3 நாட்களாக நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இலங்கையிலே போர் நிறுத்தம் நிரந்தரமாக ஏற்படவும், அதற்கு ஆவன செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்திடவும் நாளைய தினம் (23.4.2009) அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் அறிக்கையினை நேற்றிரவு விடுத்ததோடு, இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நாளேடுகளுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், திரைப் படத்துறையினருக்கும் நேற்று நான் கொடுத்த அறிக்கையின் நகலை இணைத்து இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
 
அந்த வேண்டுகோள் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கும், அவருடைய தோழமைக் கட்சிகளுக்கும், அவருடைய தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், அவரது பத்திரிகைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
 
அந்தக் கடிதத்திலே நானே கையெழுத்திட்டு கட்சி சார்பின்றி அந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழர் உயிரைக் காப்பாற்றுவதற்காக வேலை நிறுத்தம் செய்திடலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். ஆனால் இவ்வளவிற்கும் பிறகும் ஜெயலலிதா இன்று அவசர அவசரமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வேலை நிறுத்தம் என்பது கபட நாடகம் என்றும், வரலாறு என்னை மன்னிக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.
 
* இலங்கைத் தமிழர்களுக்காக 1956 முதல் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக குரல் கொடுத்து வருகிற என்னை வரலாறு மன்னிக்குமா? என்று கேட்கிற ஜெயலலிதாவே, இலங்கையில் இப்போது ராஜபக்சே நடத்தும் யுத்தம் தமிழர்களை எதிர்த்து அல்ல, விடுதலைப்புலிகளைத் தான் என்று அபாண்டமாக பொய் சொன்னீரே, உம்மை வரலாறு மன்னிக்கும் என்று கனவு காண்கிறீரா?
 
* ஒரு போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான். அது போல் தான் இலங்கையிலே அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதில் என்ன குற்றம் என்று கேட்டீரே, உம்மை மாத்திரம் வரலாறு மன்னித்து விடும் என்று மனப்பால் குடிக்கிறீரா?
 
* பிரபாகரனை கைது செய்து, இந்தியாவிற்குக் கொண்டு வரவேண்டு மென்று தமிழக சட்டமன்றத்திலே தீர்மானத்தை முன் மொழிந்தீரே, அப்போது உம்மை வரலாறு மன்னித்து விடும் என்று தானே எண்ணிக் கொண்டு செயல்பட்டீர்.
 
* அனைத்து கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் இலங்கைப் பிரச்சினைக்காக சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தீரே, உம்மை வரலாறு என்ன வாழ்த்திக் கொண்டா இருக்கின்றது?
 
* உம்மையும் வைகோவையும் தவிர மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் அடாது பெய்த மழையில் விடாது மனித சங்கிலி நடத்தினார்களே, அதை கபட நாடகம் என்று கூறினீரே, அந்த எட்டப்ப துரோகத்தை எப்படி அம்மா வரலாறு மன்னிக்கப் போகிறது?
 
* தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவரும் இலங்கைப் பிரச்சினைக்காக டெல்லி சென்று போர் நிறுத்தக் கோரிக்கை வைத்த போது, அவர்களோடு போக மறுத்தீரே, அதற்காக உம்மை வரலாறு மன்னிக்கப் போகிறதா?
 
* எம்.ஜி.ஆருக்கு நீர் செய்த துரோகங்களை வரலாறு மன்னித்தாலும் மன்னிக்கும். இலங்கைத் தமிழர்களுக்காக நீர் அடுக்கடுக்காக செய்து வரும் துரோகங்களை எந்தக் காலத்திலும் வரலாறு மன்னிக்காது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்க என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு இட்சம் பேர் வெளியேற்றம்: இராணுவம்

puthu.jpg புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு இலட்சம் பேர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மூன்றாவது நாளாக இன்றையதினம் பாதுகாப்பு வலயத்திலிருந்து 21,000 பேர் வந்திருப்பதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்திருக்கும் மக்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசிய உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி கடல் மற்றும் தரை மார்க்கமாக யாழ் குடாநாட்டுக்குச் சென்றிருக்கும் 3,000ற்கும் அதிகமானவர்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களைத் தங்கவைப்பதற்காக முதலாம் தவணைக்காக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை எதிர்வரும் 4ஆம் திகதிவரை மூடிவைத்திருப்பதற்கு யாழ் வலயக் கல்விப் பணிமனை கல்வி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது.

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருந்த பெண்களில் 5 பேர் பொலிஸாரால் கைது

20-fast.jpgஇலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 10-வது நாளாக ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்களில் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட 5  பேரை இன்று அதிகாலை  பொலிஸார்  கைது செய்தனர்.  இது குறித்து தெரியவருவதாவது:-

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பொது இடத்தில் உண்ணா விரதம் இருக்க அவர்களுக்கு அனுமதி தராததால் ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.

10-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்களில் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட  5 பேரை   கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் சென்ற 100-க்கும் மேற்பட்ட பொலிஸார் இன்று அதிகாலை 5.45 மணியளவில்  கைது செய்து வானில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.கைது செய்யப்பட்ட லோகநாயகி, ஜெயமணி, சுமதி, சித்ரா தேவி, தங்கமணி ஆகிய 5 பெண்களுக்கும் பொலிஸார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இயற்கைச் சுற்றாடலின் சமநிலையைப் பாதுகாப்போம்: இன்று ஏப்ரல் 22ம் திகதி, சர்வதேச புவிதினம் – புன்னியாமீன்

earth-day.jpgமனிதர்களில் அலட்சியப்போக்கு காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், கைத்தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல் சனத்தொகைப் பெருக்கம் ஆகிய காரணிகளால் சூழல் பல வகையாக மாசடைகிறது. நச்சு வாயுக்களால் வளிமண்டலம் நிரம்பியுள்ளது. காடழிப்பினால் இயற்கை மழையை புவி இழந்துள்ளது. போர்ச் சூழலினாலும் அணுப் பரிசோதனைகளாலும் அழிவுகளைப் புவி எதிர்நோக்குகின்றது. இத்தனைக்கும் மனிதனின் அலட்சியப்போக்கும், சுயநலமுமே காரணமாக இருக்கின்றது. இத்தகைய பேராபத்துகளில் இருந்து நாம் வாழும் புவியைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே சர்வதேச புவிதினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

சர்வதேச புவிதினம் என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். உலகளாவிய ரீதியில் புவியின் சூழல் மாசடைவதைக் கருத்திற்கொண்டு முதன் முதலாக ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச் சூழலியல் நிபுணரும் செனட்டருமான கேலோர்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ம் திகதியை தேர்ந்தெடுத்து அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டு தோறும் இந்நாள் உலகளாவிய ரீதியில் சர்வதேச பூமி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 5ம் திகதியை சர்வதேச சுற்றுச் சூழல் தினமாக அனுசரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பன மனித வாழ்க்கைக்காக இறைவனால் வழங்கப்பட்ட நன் கொடையாகும். புவியை அலங்கரித்துள்ள கடல், நதி, நீர்வீழ்ச்சிகள், காடு, கழனி, வனாந்தரங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் அனைத்தும் மனித வாழ்க்கைக்கு அத்தியவசியமானவை.

வானம் பூமி வளிமண்டலம் ஆதவனின் ஒளி சந்திரனின் குளிர்ச்சி, மலையின் சிருங்காரம், காலையின் கனிவு, மரம், செடி, கொடிகள், தரை வாழ், கடல் வாழ் உயிரினங்கள், பறவைகள், அத்தனையும் இயற்கையின் அணிகலன்கள். மனிதன் வாழ்க்கையை வளமாக நடத்துவதற்கு அத்தனையும் தேவையானவை. இந்தச் சுற்றாடல் தொகுதி புவியின் சமநிலையைப் பேணி வருகின்றது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் புவியின் தன்மையை மாற்றி விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

பூமி- மத்திய கோட்டுப் பகுதியில் தன் மீது போர்த்தி அழகு பார்க்கும் பச்சைக் கம்பளம்தான் இந்த எழில் கொஞ்சும் இயற்கை. குறிப்பாக அயன மண்டல மழைக்காடுகளைக் குறிப்பிடலாம் இந்த மழைக் காடுகளைத் தேசத்தின் மிகக் குறுகிய பரப்பில் கொண்டிருக்கும் நாடுகள் மீது: ஏனைய நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு மழைக்காடுகள் −இயற்கையின் புதையல்களாகவே இருக்கின்றன.

இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, பிரேசில், கொலம்பியா, பொலிவியா, பேரு, வெனிசுலா, மலேசியா… என்று விரல் விட்டு எண்ணக்கூடிய சில வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே மழைக்காடுகள் காணக் கிடைக்கின்றன.

இருந்தும் இந்த பூமியின் ஒட்டுமொத்த உயிரின வகைகளில் (இதுவரை பெயரிடப்பட்ட 104 மில்லியன் தாவர – விலங்கினங்களைத் தவிர பன்மடங்கு ஏராளமான ஜீவராசிகள் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ளன) பாதியளவு, சூரியன் நுழையவே தயங்கும் அடர்ந்த இந்தக் காடுகளில்தான் இராஜாங்கம் செய்கின்றன. அதிலும் இவற்றில் பெரும்பாலானவை உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காண முடியாத அளவுக்கு அந்தந்த நாடுகளுக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் மலேரியா நோய்க்குரிய ஒரேயொரு தீர்வாக இருந்த ‘குயினைன்’ பெறப்பட்ட தென் அமெரிக்காவின் சிங்கோனா மரம் தொடங்கி- குருதிப்புற்று நோய்க்கு மருந்தாகும் மடகாஸ்கரின் பட்டிப்பூ ஊடாக- இன்னமும் மனிதனை வதைத்துக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்தாகக் கண்டறியப்பட வேண்டிய ஏராளமான தாவரங்கள் வரையில் கொண்டிருக்கும் முழு உலகுக்குமான ‘மருத்துவ அலுமாரியாக இயற்கை, மழைக்காடுகளையே உருவாக்கியிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரானவை என அடையாளம் காணப்பட்ட 3000 க்கும் அதிகமான மூலிகைகளில் 70 சதவீதம் வரை இந்தக் காடுகளிலேயே காணப்படுகின்றன.

earth-day-02.jpgஉலகம் பூராவும் உள்ள மழைக் காடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இனக் குழுமங்களாக 140 மில்லியன் பழங்குடியினர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கலாசாரமும் வாழ்க்கை முறையும் மழைக் காடுகளின் நிலைத்திருத்தலில் வசிக்கும் பங்கு பிரதானமானது. ஏராளமான இரகசியங்களைப் பொத்தி வைத்திருக்கும் மழைக்காட்டின் ‘சாவி’ காடுகளின் பாதுகாவலர்களாகிய இந்தப் பழங்குடியினரின் கைகளிலேயே இருக்கிறது. பல நூற்றாண்டு காலப் பட்டறிவின் ஊடாக இவர்கள் தேர்வு செய்து பயன்படுத்தும் மழைக்காட்டுத் தாவர- விலங்கினங்களே புதிய ரக இனங்களாக வெளியுலகுக்கு ஆராய்ச்சியாளர்களால் அறிமுகம் செய்யப்படுகின்றன. தாய்லாந்தின் லுஆ (Lua) பழங்குடியினர் மாத்திரமே 75 விதமான உணவுப் பயிர் வகைகளையும் 25 வகையான மூலிகைகளையும் இனங்கண்டு பயிரிடுகிறார்கள் என்றால் உலகம் பூராவும் உள்ள மழைக்காட்டுப் பழங்குடிகளிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய மரபணு வளங்களைக் கற்பனை செய்ய இயலாது.

ஆண்டுக்கு 120 தொடக்கம் 235 அங்குலம் வரையும் மழை வீழ்ச்சியைப் பெறும் மழைக் காடுகள் நீர்ச்சுழற்சியில் பங்கேற்பதன் மூலம் பூமியின் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிப்பதில் பிரதான பங்களிப்பைச் செய்கின்றன. மழைக்காடுகளுக்கு வெளியே பூமியின் பிற பகுதிகளில் உள்ள உயிரினங்களின் தொடர்ச்சியான இருத்தலுக்கும் இன்றியமையாத ஒரு காட்டுத்தொடர்தான் இந்த மழைக்காடுகள்.

ஆனால், இவ்வளவு இருந்தும் பொன் முட்டையிடும் வாத்தாக மழைக்காடுகள் படிப்படியாக சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலியற் படுகொலை இன்னமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதனை வேறு வார்த்தையில் கூறுவதாயின் மனிதன் படிப்படியாக இயற்கையை அழித்துக் கொண்டிருக்கின்றான்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பில் 12 சதவீதத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த அயன மண்டல மழைக்காடுகள் இன்று வெறும் ஐந்து சதவீதம் என்று கூறும் அளவிற்கு குறுகிப் போயிருக்கிறது. நிமிடமொன்றுக்கு 50 தொடங்கி 100 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இயற்கை மனிதனின் கொடுரப்பிடிக்குள் சிக்கி படிப்படியாக அழிந்து கொண்டே வருகிறது.

இயற்கையை அழிப்பதனால் அழிக்கப்படுவது ஆயிரக்கணக்கான தாவர விலங்கின வகைகளும் ஈடு செய்யப்பட முடியாத பாரம்பரியப் பொருளுமே தவிர வறுமை ஒழிப்பல்ல. மாறாக பூமி சந்தித்தது கோரப்புயல்களும்; இயற்கையோடு ஒட்டிய வகையில் பஞ்சம், பட்டினி என்று பொசுக்கிக் கொண்டிருக்கும் கடும் வறட்சி போன்றனவையுமே. அதாவது இயற்கையை அழிப்பதனால் புவிச்சமநிலைக் குலைவுகள் தான் ஏற்படுகின்றன.

‘பசியால் மரணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் தன்னுடைய அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முன்னால் எப்படிச் சூழல் பாதுகாப்பைப் பற்றிச் சிந்திக்க முடியும்? என்று நீங்கள் சிந்திக்கலாம். உங்கள் நாடுகள் வெளியேற்றும் கரிக்காற்றை ஜீரணிக்கும் சக்தி எங்கள் காடுகளுக்கு உண்டு என்று நீங்கள் நினைத்தால் எங்கள் காடுகளைக் காப்பாற்றுவதற்கும், காடுகளை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்களுக்காகவும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?’ சிந்திக்க வேண்டிய வினா தான். இதே வினாவைத்தான் வளர்ந்த நாடுகளை நோக்கி மூன்றாம் உலக நாடுகள் பிரேசிலில் 1992-ல் நடந்த பூமி உச்சி மாநாட்டிலிருந்து இன்னமும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன.

அமிலப்படிவுகள் மண்ணின் வளத்தை நச்சாக்கி விடுகின்றது. கைத்தொழில் வாயுக்கள் வளிமண்டலத்தைக் குறிப்பாக ஓசோன் படலத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் புவி உஸ்ணமடைவதுடன் சூழலையும் பாதிக்கின்றது. சுற்றாடல் மாசடைவதைத் தவிர்ப்பதன் மூலம் புவியை நாம் பாதுகாக்க முடியும்.திட்டமிடாத காடழிப்பு மண் அகழ்வு விவசாயத்தில் அளவுக்கதிகமாக நச்சுத்திரவத்தை பயன்படுத்தல் இரசாயனப் பசளைகளைப் பயன்படுத்தல் தொழிற்சாலைக் கழிவுகளையும் வீட்டுக் கழிவுகளையும் பாதுகாப்பாக அகற்றாமை ஆகிய செயற்பாடுகளால் சூழல் மாசடைகிறது.

மனிதன் சூழலைப் பாதுகாக்கும் அக்கறையுடன் இருந்தால் மட்டுமே இத்தகைய ஆபத்துக்களில் இருந்து புவியைப் பாதுகாக்கலாம்.

இது தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆழமாக பதிய வேண்டும்.அவ்வாறு இல்லாமல் எத்தகைய கோசங்கள் இடுவதாலும், எத்தகைய பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

நாம் உலகளாவிய ரீதியில் சிந்திக்காமல் எம்ரமைச்சூழவுள்ள வளங்களையாவது பாதுகாப்பதற்கு திட சங்கற்பம் பூணுவோம்.

மேல் மாகாணசபை தேர்தலில் இடதுசாரி முன்னணிக்கு வாக்களியுங்கள்: எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள்

sivajilingam0.jpgகொழும்பு உட்பட மேல் மாகாண சபைத் தேர்தலில் மேசைச் சின்னத்தில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு (லங்கா சம சமாஜக் கட்சி) வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களிற்கான குரலை கொழும்பில் ஓங்கி ஒலிக்கச்செய்ய முடியும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்தில் 1658 பொதுமக்களை இராணுவம் கொன்றதாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை – ரம்புக்வெல மறுப்பு

keheliya_rambukwella.jpgகடந்த சில தினங்களில் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பொதுமக்களுள் 1658 பேர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற தகவல் முற்றிலும் பிழையானதாகும். இது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்ரீகாந்தா எம்.பி. பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு நான் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

நான் சபையில் அமர்ந்திருக்காத நேரத்திலேயே ஸ்ரீகாந்தா எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளியே உள்ள தொலைக்காட்சி மூலம் இதனை அவதானித்த நான் உடனடியாக சபைக்குள் சென்று அதற்கான ஆதாரம் என்னவென அவரிடம் கோரினேன். தான் வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றின் மூலம் அத்தகவலைப் பெற்றதாக அவர் கூறினார்.

புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களை ஊடகங்கள் எனக் கூற முடியாது. இது முற்றிலும் பொய்யான தகவலாகும். பாராளுமன்றத்துக்குள் இன்னும் பிரிவினை வாதத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும். பாராளுமன்ற விஷேட உரிமைகளைப் பயன்படுத்தி இவ்வாறான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை அவலம்-ஐநாவில் விளக்க மறுத்த நம்பியார்

vijaynambiar.jpg இலங்கையின் வட பகுதியில் நிலவி வரும் மனிதப் பேரவலம் குறித்து இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஐ.நா. திரும்பியுள்ள ஐ.நா. இணை செயலாளர் விஜய் நம்பியார், தான் சென்று பார்த்தது, அறிந்தது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விளக்க மறுத்து விட்டார்.

இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக ஐ.நா. செல்லாமல் இடையில் இந்தியாவில் தங்கிச் சென்றுள்ளார் விஜய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கி மூன்தான், இலங்கை மனிதப் பேரவலம் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்காக நம்பியாரை அனுப்பி வைத்தார். அவரும் கொழும்பு சென்று ராஜபக்சே, கோதபாய ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் தான் போய் பார்த்து விட்டு வந்ததை விளக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதுகுறித்து விளக்கம் அளிக்க விஜய் நம்பியார் பிடிவாதமாக மறுத்து விட்டாராம்.

இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், நம்பியாருடன் பேச ஒப்புக் கொண்டனர். ஆனால், நான் இலங்கை சென்றது ஒரு மீடியேட்டராக மட்டுமே. அங்கு அதிபர் ராஜபக்சேவுடன் பேசியது குறித்து நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. அது ரகசியமானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலாக இருந்தாலும் கூட சொல்ல முடியாது என கூறி விட்டாராம் நம்பியார்.

நம்பியாரின் இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஐ.நா.வின் இணை செயலாளர் ஒருவர் பாதுகாப்பு கவுன்சிலிடம் விளக்கம் தர முடியாது என்று கூறியிருப்பது குறித்து அவர்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.

சிவானந்தன் உடலுக்கு புலிகள் கொடி போர்த்தி அஞ்சலி – போலீசார் விசாரணை

22-sivanandhan.jpg
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் தீக்குளித்து இறந்து போன சிவானந்தத்தின் உடலுக்கு விடுதலைப் புலிகளின் கொடியைப் போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவரான சிவானந்தன் (46) சென்னையில் பெயிண்டாரக பணியாற்றி வந்தார்.

கரூரைச் சேர்ந்த இவர் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் நின்றபடி, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

இறுதி ஊர்வலத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பாமக தலைவர் ஜி.கே. மணி, மக்கள் புதிய தமிழகம் நிறுவனத் தலைவர் துரையரசன், இலங்கை எம்பி சேனாதிபதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அதற்கு முன்பாக சிவானந்தன் உடலுக்கு போலீசார் முன்பாகவே விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ புலிக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் கொடி போர்த்தப்பட்டது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கரூர் காவல் துறை தகவல் தந்தது. இதையடுத்து க்யூ பிராஞ்ச் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

22-sivanandhan.jpg

விடுவிக்கப்பட்ட சிவிலியன்களுக்கு விமானம் மூலம் சமைத்த உணவு – விமானப் படைப் பேச்சாளர் தகவல்

mcns_j_nanayakkara.jpgபாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் இன்று கொழும்பிலிருந்து எம்.ஐ.17 ரக விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் விங்கொமான்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு விமானப் படைப் பேச்சாளர் மேலும் கூறியதாவது,

புலிகளிடமிருந்து சிவிலியன்களை விடுவிக்கும் போராட்டத்தில் விமானப் படை மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. வான் வழியாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மூலம் படையினரின் முன்நகர்வுகளுக்குத் தேவையான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு வலயத்தில் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்த 238 பேர் விமானம் மூலம் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விமானப் படையினரால் பனிஸ் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.