இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 10-வது நாளாக ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்களில் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட 5 பேரை இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்தனர். இது குறித்து தெரியவருவதாவது:-
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பொது இடத்தில் உண்ணா விரதம் இருக்க அவர்களுக்கு அனுமதி தராததால் ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
10-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்களில் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட 5 பேரை கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் சென்ற 100-க்கும் மேற்பட்ட பொலிஸார் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கைது செய்து வானில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.கைது செய்யப்பட்ட லோகநாயகி, ஜெயமணி, சுமதி, சித்ரா தேவி, தங்கமணி ஆகிய 5 பெண்களுக்கும் பொலிஸார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.