புதுக் குடியிருப்பு- புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரே நேரத்தில் கூடுதலான பொது மக்கள் வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரலாமென எதிர்பார்க்கப்படுவதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இவ்வாறு ஒரே நேரத்தில் வரும் கூடுதலான மக்களைத் தங்க வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கென வவுனியாவில் பாடசாலைகள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரச அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்ததாக அமைச்சர் கூறினார்.
பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறுவதற்கு மக்கள் தயாராகி வருவதாக அரசாங்கத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. நேற்று முன்தினமும் சுமார் இரண்டாயிரம் பேர் வெளியேறி வந்துள்ளார்கள், என்று தெரிவித்த அமைச்சர் பதியுதீன், ஒரே தடவையில் பெருந்திரளானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
இவர்களைத் தங்க வைப்பதற்கு நிவாரணக் கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகக் கூறிய அமைச்சர் ரிஷாட், சிலவேளை, மக்கள் வருவதற்கு முன்னர் இந்தத் தற்காலிகக் குடியிருப்புகளான வீடுகளை நிர்மாணித்து முடிக்கலாமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி முகாம்களிலும் தங்கியுள்ள மக்களின் நலன்கள் குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வவுனியாவில் அரச அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போதே, வெளியேறி வரவிருக்கும் மக்களைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கின்றார்.
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைப் படையினர் முழுமை யாகக் கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அங்கிருந்து பொதுமக்கள் முற்றாக வெளியேறியதன் பின்னரே, புலிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடருமெனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலைமையின் தற்போது புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியே ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அங்குள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன மேற்கொண்டு வருகிறார் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.