March

March

புலிகளுக்கு ஆதரவான உள்ளூர் அமைப்பு விசாரணை நடத்துகிறது கம்போடிய அரசு

cambodia.jpgவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் அமைப்பு தொடர்பாக விசாரணை நடத்துவது குறித்து கம்போடிய அரசாங்கம் பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டு ஊடகமொன்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக கம்போடிய வெளிவிவகார அமைச்சு உள்துறை அமைச்சர் சார் கெங்கிற்கு கடிதமொன்றை அனுப்பியிருப்பதாக கம்போடியா தினசரி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் மன்றமொன்று கம்போடியாவில் இயங்குவதாக அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து கடிதமொன்று வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்துள்ளது. பெப்ரவரி 26 ஆம் திகதியிடப்பட்ட கடிதமென பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“இந்த அமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவும்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்மன்றமொன்று கம்போடியாவில் இயங்குகின்றதா என்பது பற்றிய விபரம் அதில் தெரிவிக்கப்படவில்லை.

2007 ஜூலையில் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களை வெளியிடும் சஞ்சிகையான “ஜேன்ஸ் இன்ரலிஜன்ஸ் ரிவியூ’ வெளியிட்ட தகவலில் புலிகளுக்கு ஆயுதங்களை பெற்றுக்கொள்ளும் குறிப்பிடத்தக்க இடமாக கம்போடியா விளங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெற்றுக்கொள்ளும் வட்டாரங்கள் தொடர்பாக குறிப்பிட்டிருக்கவில்லை. அதனை அச்சமயம் கம்போடிய அரசாங்கம் மறுத்திருந்தது.

அனுராதபுரத்தில் நாய், பூனைகளால் கடியுண்டோருக்கு 17 ஆயிரம் ஊசி மருந்து

dogs.jpg அனுராதபுரம் மாவட்டத்தில் கடந்த வருடம் நாய்கள் மற்றும் பூனைகள் என்பவற்றால் கடியுண்டவர்களுக்காக 17 ஆயிரம் ஊசி மருந்துகள் பாவிக்கப்பட்டிருப்பதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டபிள்யூ.எம்.ரி. விஜேகோன் தெரிவித்தார். இதேவேளை, இவ்வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் இவ்வாறு நாய் போன்ற பிராணிகளின் கடிக்கு ஆளாகியவர்களுக்கு 2,212 ஊசி மருந்துகள் ஏற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த பணிப்பாளர் விஜேகோன் பூனைகள், அணில், கரடி, நரி மற்றும் வெளவால் என்பவற்றினால் கடியுண்டவர்களும் இவர்களில் அடங்குவதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் வட மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தின் அநுராதபுர மாவட்ட பொதுச் சுகாதரப் பரிசோதகர் டபிள்யூ. ஏ. ரஞ்சித் தெரிவிக்கையில்;

அநுராதபுர மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான கட்டாக்காலி நாய்கள் காணப்படுகின்றன. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசிய கொள்கையின் பிரகாரம் நாய்களைக் கொல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, நாம் நாய்களின் இனப் பெருக்கத் தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறோம். கடந்த வருடம் ஆயிரம் நாய்களுக்கு இன விருத்தித் தடைக்கான சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டோம். இவ் ஆண்டில் அத்தகைய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கென எமது திணைக்களத்திற்கு 10 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது என்றார்.

கட்டணங்களை குறைக்காவிடின் தனது வாடிக்கையாளரை இழக்க வேண்டிய நிலை ரெலிகொம் சேவைக்கு ஏற்படலாம் – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

lorries1.jpgஸ்ரீலங்கா ரெலிக்கொம் தனது வாடிக்கையாளரில் சிலரை இழக்க வேண்டிய நிலை சிலசமயங்களில் ஏற்படலாமென அதன் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொலைபேசி அழைப்புக்கான கட்டண அறவீட்டில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வரிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடுமென தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நிலையான தொலைபேசி அழைப்புக்காக இவ்வருடம் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட 10 சதவீத வரி அதிகரிப்பு மற்றும் தேச நிர்மாணத்துக்காக பெப்ரவரி முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சதவீத வரி அதிகரிப்பும் வாடிக்கையாளரை மிகவும் பாதித்துள்ளதாக ரெலிக்கொம் சேவைகள் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் உடனடியாக தனது தொலைபேசி அழைப்புக் கட்டணங்களைக் குறைக்காவிடின் ஏனைய தொலைபேசி சேவைகளுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்படுமென தொழிற்சங்கத்தின் தலைமைச் செயலாளர் பி.எஸ்.பி.ஜெயசுந்தர தெரிவித்தார்.

தற்போது வாடிக்கையாளரை கவரும் வகையில் பல தொலைபேசி நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் தனது தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை குறைக்காவிடின் எதிர்காலத்தில் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படுமென அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிர்வாகமும் அதன் தொழிற்சங்கங்களும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தன.

ஆனால், தொலைத் தொடர்புகள் ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு இக்கட்டண குறைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

வாடிக்கையாளரைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் ரெலிக்கொம் தனது கட்டணங்களைக் குறைப்பதற்கான தீர்மானத்தினை எடுக்கும் சந்தர்ப்பத்தில் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிவிப்பு எவ்வித பிரயோசனமும் இல்லாத ஒரு தீர்மானமாகும்.

இந்தப் போக்கு தொடர்ச்சியாக அனுமதிக்கப்படுமாயின் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியாது போய்விடுமெனவும் ஜெயசுந்தர மேலும் தெரிவித்தார்.

ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தால் இன நல்லுறவு பலமடையும் : ஹிஸ்புல்லாஹ்

hisbullah.jpgகிழக்கு மாகணத்தில் 25 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது ஆயுதங்களைக் களைந்து ஜனநாயக நீரோட்டத்தில் முழுமையாக ஈடுபடுவது, இம்மாகாணத்தில் இனங்களிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்குப் பலமாக அமையும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கின்றார்.

நேற்று திங்கட்கிழமை ஏறாவூர் ரகுமானியா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை முற்றாகக் களைந்திருப்பதை நினைவுபடுத்தியே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது :

“கடந்த ஆண்டு 34ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாணம், வட மாகாணம் கலந்து கொள்ளாத நிலையில் 8ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் 35 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் 7ஆவது இடத்தையாவது கிழக்கு மகாணம்பெற வேண்டும்” என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். 

ஹிலாரி-மேனன் சந்திப்பு-இலங்கை குறித்து பேச்சு

hillary-clinton.jpgஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார். அப்போது பாகிஸ்தான், தீவிரவாதம், தலிபான்களின் பரவல், இலங்கை பிரச்சனை ஆகிய விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.

நான்கு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார் மேனன். அதிபர் ஒபாமா அரசு பதவியேற்ற பின் இந்திய மூத்த அதிகாரி ஒருவரை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒபாமாவை சந்திக்கும் மன்மோகன்:

இதற்கிடையே வரும் ஏப்ரல் 2ம் தேதி லண்டனில் நடக்கும் ஜி-20 நாடுகள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் பங்கேற்கவுள்ளார். அப்போது அதிபர் ஒபாமாவை அவர் சந்தித்துப் பேசுவார். இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள மன்மோகன் முதலில் இக் கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. ஆனால், இதில் பிரதமர் பங்கேற்பது நிச்சயம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘உலக உணவுத் திட்டம்’ வழங்கிய அதி உயர்ந்த போஷாக்கு பிஸ்கட் புலிகளிடம்.

sl-army.jpgமுல்லைத்தீவு சாலைப் பிரதேசத்தில் படையினருடனான மோதலில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர் ஒருவரிடமிருந்து உலக உணவுத்திட்ட நிறுவனம் வழங்கிய அதி உயர்ந்த போஷாக்கு கொண்ட பீ.பி. 100 பிஸ்கட் பெக்கட் ஒன்றை படையினர் கண்டெடுத்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இவரிடமிருந்து ரி. 56 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்களும் மூன்று வரைபடங்களும் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26.01.2008 இல் மதவச்சி சோதனை முகாமில் வவுனியா நோக்கிச் சென்ற லொறியொன்றில் தேடுதல் நடத்திய பொலிஸார் 39000 கிலோ கிறேம் அதி உயர்ந்த போஷக்கு கொண்ட பீ.பி. 100 பிஸ்கட் பெக்கட்டுக்களைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அனுப்பப்பட்ட பிஸ்கட் தொகைகள் புலிகளைச் சென்றடைந்திருக்கலம் என்ற சந்தேகம் இப்பேது ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபிகளாரின் முன்மாதிரி எமக்கு எடுத்துக்காட்டாகும் – மீலாத் தின செய்தியில் பிரதமர்

pmsrilanka.jpg‘சமாதானத்தின் பக்கம் முழுமை யாகத் திரும்புங்கள்’ என்ற அல்- குர்ஆனின் கட்டளைக்கு ஏற்ப சகோதர த்துவத்துடனும், சமாதானத்துடனும் வாழ்ந்து காட்டிய முஹம்மத் (ஸல்) அவர்களின் முன்மாதிரி எமக்கோர் எடுத்துக் காட்டாகும் என பிரதமர் ரத்ன சிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மீலாதுன் நபி விழாவின் நிமித்தம் விடுத்துள்ள செய்தியிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அச்செய்தியில் மேலும் கூறப்பட்டிரு ப்பதாவது:- இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் மாற்று மதத்தலைவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வது சமாதானமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ வழி வகுக்கும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நீங்கி அமைதி, சமாதானம் ஏற்படவென முஸ்லிம்கள் இந்நாளில் பிரார்த்த னையில் ஈடுபட வேண்டும். முஹம்மத் (ஸல்) அவர்களின் வழி காட்டல்களை எடுத்து நடப்பதன் மூலம் மனிதா பிமானமும் சுபீட்சமும் நிறைந்த ஒரு நாட்டை கட்டியெழு ப்ப முடி யும் என்றும் அச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி முனைப்புப் பெறும் போது ஆயுதங்கள் தாமாகவே கீழே விழுவது நிச்சயம் – ஜனாதிபதி

mahinda.jpgபாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு கபினட் அந்தஸ்தற்ற அமைச்சராக நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வு நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றதுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்த சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெறுவதற்கு சற்று முன்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த மேலும் இரண்டாயிரம் பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விநாயக மூர்த்தி முரளிதரனுடன் மேற்படி இரண்டாயிரம் பேரும் ஜனாதிபதியிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டனர்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, ஏ. எச். எம். பெளஸி, டி. எம். ஜயரட்ன, சுசில் பிரேம ஜயந்த, டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்துவப் பத்திரத்தை வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். ஜனாதிபதி தமதுரையில் தெரிவித்ததாவது :- அபிவிருத்தி முனைப்புப் பெறும் போது ஆயுதங்கள் தாமாகவே கீழே விழுவது நிச்சயம். ஆயுதந்தாங்கும் துன்பகரமான ஒரு நாடு இனியும் நமக்கு வேண்டாம். அமைதி சுபிட்சம் சமத்துவத்துடன் அச்சம், சந்தேகமின்றி ஒருதாய் மக்களாக சகல இன, மத மக்களும் வாழும் நாட்டை உருவாக்க ஒன்றிணைந்து செயற்படுவோம்.

கிழக்கு மாகாணம் தூரமாக இருந்த போதும் அப்பிரதேச மக்கள் மனதால் எம்முடன் நெருக்கமாகவே உள்ளனர். அதை நான் அறிவேன். வட பகுதி மக்களும் அவ்வாறே உள்ளனர். தமிழ் மக்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதியதல்ல. ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவ பெருமளவு வாக்குகளைப் பெற்ற தொகுதி யாழ்ப்பாணமே.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழ் மக்களுடன் நெருக்கமான கட்சி. கிழக்கு மக்களின் சிறந்த தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இரண்டாயிரம் பேர் இன்று இக்கட்சியில் இணைந்துள்ளனர். இம் மக்களை நாம் மனதார வாழ்த்தி வரவேற்கிறோம். விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் முக்கிய பொறுப்பொன்றையும் வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கிழக்கு மாகாணம் எவ்வாறிருந்தது என்பது சகலருக்கும் தெரியும். அம் மக்கள் எதிர்காலமற்றவர்களாகவே வாழ்ந்தனர். அந்நிலை மாற்றமடைந்து இன்று கிழக்கு மாகாணம் மேல் மாகாணத்தைப் போன்று முன்னேற்றமடைந்து வருகிறது. ‘கிழக்கின் உதயம்’ கிழக்கை விரைவான அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்றது என்பதை இம்மக்களின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் புரிந்துகொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. கிழக்கின் உதயம் போன்றே வடக்கின் உதயமும் விரைவில் நடைமுறைக்குவரும். பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து வடக்கு மக்களும் விடுவிக்கப்படும் காலம் வெகு தூரத்திலில்லை. இன்று நாளையே அது இடம்பெறலாம்.

கிழக்கில் சிறந்த நிர்வாகம் இன்றுள்ளது. கடந்த மூன்று வருட காலத்தில் 300 பேர் பொலிஸ் துறையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் அங்குள்ள தமிழ் இளைஞர்கள் மேலும் பொலிஸில் இணைத்துக்கொள்ள ப்படவுள்ளனர். இதற்கு வசதியாக மட்டக்களப்பு, கல்லடி தமிழ் பொலிஸ் பயிற்சி நிலையம் புனரமைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் அபிவிருத்தியை நோக்குகையில் கிழக்கிலேயே அதிகளவு அபிவிருத்தி இடம்பெற்று வருகிறது.

தற்போது நாட்டின் முற்போக்கு கட்சிகள், அமைப்புகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே இணைந்து கொண்டுள்ளன. தமிழர், முஸ்லிம்கள், சிங்களவரென நம் அனைவரினதும் தாய்நாடு இலங்கை. இது எமது நாடு இந்நாட்டில் பயமின்றி, சந்தேகமின்றி வாழ சூழல் ஏற்படுத்தப்படும். இதைவிட நமக்கு வேறென்ன வேண்டும். உங்கள் எதிர்காலம் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால த்தையும் சுபிட்சமானதாக நாம் இணைந்து உருவாக்குவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

உலக பொருளாதார நெருக்கடியை தெற்காசியா எதிர்கொள்வது எப்படி?

market-share.jpg
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய குறுகிய, நீண்டகால நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உலகபொருளாதார நெருக்கடியிலிருந்தும் தெற்காசிய நாடுகள் குறிப்பாக இலங்கை, இந்தியா ஆகியவை தாக்குப்பிடிக்க முடியுமென ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.  நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கி இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

உலக பொருளாதார நெருக்கடி மோசமடைகையில் மூலதனத்தில் பாதிப்பும் பொருட்களின் விலைகளில் தாக்கமும் ஏற்படும் அத்துடன் ஏற்றுமதியில் வீழ்ச்சியும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் நிதி குறைவடைவதும் ஏற்படும். இந்த விளைவுகளை தெற்காசியா எதிர்கொள்ள நேரிடும் என்று “உலக பொருளாதார பின்னடைவு தெற்காசியாவில் ஏற்படுத்தும் தாக்கம்’ என்ற தலைப்பிலான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்காக குறுகியகால நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன நாணயக்கொள்கையில் தளர்வு, நிதி அதிகரிப்பு திட்டங்கள் இந் நடவடிக்கைகளில் அடங்கும். அதேசமயம் வட்டி வீதக்குறைப்புக்கு இன்னமும் இடம் இருக்கின்றது. குறிப்பாக இந்தியா, இலங்கை நாடுகளில் வட்டி வீதக்குறைப்புக்கு இடமுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலுள்ள பணியாளர்கள் உள்நாட்டுக்கு பணத்தை அனுப்புவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்ளவேண்டும்.

விசேட சேமிப்புக் கணக்குகள் மற்றும் நாணய மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாட வேண்டும். தமது நிதி நடவடிக்கைகளை ஸ்திரமானதாக வைத்திருக்க இவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்டகால அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் தமது நிதிப்பற்றாக்குறைகளை தெற்காசிய நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளது. தமது பொருளாதாரத்தை வெவ்வேறானதாக விரிவுபடுத்துவதும் உள்சார் கட்டமைப்பு முதலீடுகளை அதிகரிப்பதுடன், பிராந்தியங்களுக்கிடையிலான வர்த்தகத்தையும் விரிவுபடுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் சில நாடுகள் நெருக்கடி தொடர்பாக ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே வெளிப்படுத்திக் காட்டுகின்றன. மூலதனப்பாய்ச்சல் தொடர்பாக மோசமான பாதிப்பு குறித்து அவை வெளிப்படுத்துவது குறைவானதாகவே உள்ளது. தெற்காசியாவில் 45 கோடி மக்கள் நாளொன்றுக்கு 1.25 டொலரிலேயே உயிர் வாழ்கின்றனர். ஆதலால் பொருளாதார வளர்ச்சி விடயத்தில் தளர்வான அணுகுமுறையானது கவலைக்கு காரணமாகிவிடும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஹருகிசோ குரூடோ தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களின் பின் குடாநாட்டில் மழை

climate.jpgயாழ். குடாநாட்டில் கடந்த மூன்று மாத காலமாக நிலவி வரட்சிக்குப் பின் நேற்றுக் காலை நல்ல மழை பெய்துள்ளது. சுமார் இருபது மில்லிமீற்றர் மழை பெய்திருப்பதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதகாலமாக குடாநாட்டின் வெப்பநிலை முப்பத்திநாலு சென்றிகிறேற் ஆக பதிவாகியிருந்தது.

குடாநாட்டில் நல்ல மழை பெய்திருப்பதால் விவசாயிகள் சிறுதானிய செய்கையில் ஈடுபட வாய்ப்பு உருவாகியிருப்பதாக விவசாயத்திணைக்களம் தெரிவித்துள்ளது. மிளகாய், புகையிலை, வெங்காயம், மரக்கறி செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் பெய்துள்ள மழை பெரும் வரப்பிரசாதமாகும். குடாநாட்டில் மழைவேண்டி ஆலயங்களில் விஷேட பூஜைகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.