கிழக்கு மாகணத்தில் 25 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது ஆயுதங்களைக் களைந்து ஜனநாயக நீரோட்டத்தில் முழுமையாக ஈடுபடுவது, இம்மாகாணத்தில் இனங்களிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்குப் பலமாக அமையும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கின்றார்.
நேற்று திங்கட்கிழமை ஏறாவூர் ரகுமானியா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை முற்றாகக் களைந்திருப்பதை நினைவுபடுத்தியே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது :
“கடந்த ஆண்டு 34ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாணம், வட மாகாணம் கலந்து கொள்ளாத நிலையில் 8ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் 35 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் 7ஆவது இடத்தையாவது கிழக்கு மகாணம்பெற வேண்டும்” என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.