ஸ்ரீலங்கா ரெலிக்கொம் தனது வாடிக்கையாளரில் சிலரை இழக்க வேண்டிய நிலை சிலசமயங்களில் ஏற்படலாமென அதன் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொலைபேசி அழைப்புக்கான கட்டண அறவீட்டில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வரிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடுமென தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
நிலையான தொலைபேசி அழைப்புக்காக இவ்வருடம் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட 10 சதவீத வரி அதிகரிப்பு மற்றும் தேச நிர்மாணத்துக்காக பெப்ரவரி முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சதவீத வரி அதிகரிப்பும் வாடிக்கையாளரை மிகவும் பாதித்துள்ளதாக ரெலிக்கொம் சேவைகள் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்ரீலங்கா ரெலிக்கொம் உடனடியாக தனது தொலைபேசி அழைப்புக் கட்டணங்களைக் குறைக்காவிடின் ஏனைய தொலைபேசி சேவைகளுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்படுமென தொழிற்சங்கத்தின் தலைமைச் செயலாளர் பி.எஸ்.பி.ஜெயசுந்தர தெரிவித்தார்.
தற்போது வாடிக்கையாளரை கவரும் வகையில் பல தொலைபேசி நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் தனது தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை குறைக்காவிடின் எதிர்காலத்தில் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படுமென அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிர்வாகமும் அதன் தொழிற்சங்கங்களும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தன.
ஆனால், தொலைத் தொடர்புகள் ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு இக்கட்டண குறைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
வாடிக்கையாளரைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் ரெலிக்கொம் தனது கட்டணங்களைக் குறைப்பதற்கான தீர்மானத்தினை எடுக்கும் சந்தர்ப்பத்தில் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிவிப்பு எவ்வித பிரயோசனமும் இல்லாத ஒரு தீர்மானமாகும்.
இந்தப் போக்கு தொடர்ச்சியாக அனுமதிக்கப்படுமாயின் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியாது போய்விடுமெனவும் ஜெயசுந்தர மேலும் தெரிவித்தார்.